சம உரிமை அல்லது சுயநிர்ணயம் . ப‌குதி 3/5 .தமிழாக்கம். நற்றமிழன்


சம உரிமை அல்லது சுயநிர்ணயம் .
ப‌குதி 3/5

  “1948ல் சுத‌ந்திர‌த்திற்குபின் ஆட்சிக்கு வ‌ந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் இன‌ங்க‌ளுக்கு இடையே பிரிவை ஏற்ப‌டுத்தி அத‌ன் மூல‌ம் சிங்கள‌ இன‌த்தின் பெரும்பான்மையான‌ வாக்குக‌ளை பெற‌ எல்லா செயல்க‌ளையும் செய்த‌ன‌ர். ஆனால் வறுமையை அவர்கள் முயலவே இல்லை. இங்கு தான் மொழி பிரிவினைவாதத்தின் ஒரு கருவியாக விதைக்கப்பட்டது”.என்று அண்மையில் எழுதிய‌ கட்டுரையில், எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான “சான் பிள்கர்” எழுதியுள்ளார்.(12)

பிரித்தானிய காலனீயவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தாங்களும் சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமையுடன் வாழமுடியும் என்று தமிழர்கள் எண்ணினார்கள். காலனீயவாதிகளிடம் இருந்து பிரிந்து சுதந்திரம அடைந்த காலகட்டத்தில் தமிழர்கள் தனித்தேசத்திற்கான கோரிக்கையை எழுப்பவில்லை.

 இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடுகளின் (செர்மனி, இத்தாலி,சப்பான்)  வீழ்ச்சிக்கு முன்னதாகவே பிரிட்டன் சிலோனிற்கு விடுதலை கொடுக்க எண்ணியது.1943ல் சிலோனின் காலனீய செயலர் இவ்வாறு கூறுகின்றார். “அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் சாசனம் வடிவமைக்கப்படும் என்றும், அதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்தார். அது என்னவெனில் அவ்வாறு உருவாகின்ற சிலோன் பாராளுமன்றம் எந்த ஒரு இனத்தையோ, மதத்தையோ ஒருதலை பட்சமாக நடத்தவதற்கான சட்டத்தை இயற்றக் கூடாது (அல்லது) ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் கட்டுபாடுகள் விதிக்க கூடாது”….சோல்பரி குழுவின் பரிந்துரை எண் 29 ஐ பார்க்கவும்.(15).

  பிரிட்ட‌ன்   “1944ல் சோல்ப‌ரி குழுவை நிர்ணிய‌த்த‌து. அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் மிக‌ முக்கியமான‌ சிங்க‌ள‌ அர‌சிய‌ல்வாதி சேன‌நாய‌கா ஆவார். இவ‌ர் விடுதலை கோரிக்கையை முன்வைத்து ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியை தோற்றுவித்தார். இவர் ஒரு பழமைவாதியும், வலதுசாரி முதலாளித்துவ கொள்கை கொண்டவருமாவார்.  பின்னாட்களில் இவர் இல‌ங்கையின் “தேச‌ த‌ந்தை” என்று அழைக்க‌ப்ப‌ட்டார். 1944ஆம் ஆண்டில் சிலோன் தேசிய தமிழர் காங்கிர‌சு க‌ட்சியை தோற்றுவித்த தமிழின தலைவரான பொன்னம்பலத்தை இவர் சமாதானபடுத்தி விடுதலை பேச்சுவார்த்தையில் ப‌ங்கெடுக்க‌ வைத்தார்.

 சோல்ப‌ரி குழுவின் இன்னொரு முக்கிய‌ ப‌ரிந்துரை “குறிப்பிட்ட ஒரு ச‌ட்ட‌ம் ஒரு இன‌த்திற்கோ (அல்லது) ம‌த‌த்திற்கோ எதிர்ப்பு கிளம்பினாலோ அல்லது கவர்னர் செனரலின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்ட இனத்தை ஒடுக்கக்கூடியதாகவோ அல்லது அநீதி இழைப்பதாகவோ இருக்குமானால் அந்த சட்டத்தை நீக்குவதற்கு அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு.(15)

” சுத‌ந்திர‌ இல‌ங்கைக்கான” ச‌ட்ட‌ம் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ போது அதை அனைத்து இசுலாமிய‌ உறுப்பின‌ர்க‌ளும், பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌, த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளும் ஆத‌ரித்து வாக்க‌ளித்த‌ன‌ர்.  இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பாத பிற சிறுபான்மை இன பிரதிநிதிகளில் சிலர் வாக்கெடுப்பு நாளன்று அவைக்கு வரவே இல்லை, வந்திருந்த சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இறுதியாக‌ 1945 செப்ட‌ம்ப‌ர் 8 ம‌ற்றும் 9 ஆம் திகதிகளில் சுத‌ந்திர‌ இல‌ங்கைக்கான அரசியலமைப்புச் சட்டம் விவாத‌த்திற்கு வ‌ந்த‌து. 51 வாக்குகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆத‌ர‌வாக‌வும், 3 வாக்குகள் எதிராக‌வும் ப‌திவாயின.வெற்றிக்கு தேவையாக‌ நான்கில் மூன்று ப‌ங்கு வாக்குக‌ளைப் பெற‌ வேண்டும் என‌ சோல்ப‌ரி குழு நிர்ண‌யித்திருந்த‌து. எல்லா இனக்குழுக்களும் அரசியலமைப்பு சட்டத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவே இந்த வாக்கெடுப்பு கருதப்பட்டது. பெரும்பான்மை இனத்தவரை போலவே சிறுபான்மை இனத்தவரும் தன்னாட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.(15)

 வாக்கெடுப்பிற்கு பிற‌கு பேசிய‌ சேன‌நாய‌கா சிறுபான்மைக‌ளின் கோரிக்கைக‌ளை ஏற்றுக்கொள்ளும் வித‌மாக‌ பேசினார். “விவாத‌த்தின் போது எல்லா நேர‌த்திலும் ஒன்று ம‌ட்டுமே எல்லா உறுப்பின‌ர்க‌ளின் ம‌ன‌தில் இருந்த‌து, அது அதிக‌ப‌ட்ச‌ விடுத‌லை என்ப‌தே. நாங்கள் கேட்பது சிங்க‌ள‌ மேலாதிக்கமல்ல ஒட்டு மொத்த‌ சிலோனின் மேலாதிக்கமே.

சிறுபான்மையின‌ருக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவ‌து போல‌ ந‌ம் ச‌ட்ட‌ம் மாற்ற‌ப்பட்டுள்ளது. ந‌ம‌து முக்கிய‌ குறிக்கோள் சிறுபான்மையின‌ரின் ந‌ல‌னை பாதுகாப்ப‌தே. எல்லா முக்கிய அதிகார‌ங்க‌ளும் கவர்னர் செனரலுக்கே அளிக்க‌ப்பட்டுள்ள‌‌‌து. சுதந்திரமான‌‌ அர‌சு ப‌ணியாள‌ர் தேர்வாணைய‌ம் ஒன்று உருவாக்க‌ப்ப‌டும் இத‌ன் மூல‌ம் ஒரு குறிப்பிட்ட‌ இன‌ம் ம‌ட்டுமே அர‌சு ப‌ணிக்கு தேர்வாவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டு எல்லா இன‌ங்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். நான் பொதுவாக ஒரு சிங்களவனாக ம‌ட்டும் பேசுவ‌தில்லை. அது போல‌வே இந்த‌ குழுவின் த‌லைவர் தன்னை சிங்க‌ளர்க‌ளின் பிர‌திநிதியாக எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை என கருதுகிறேன். ஆனால் நான் ஒரு சிங்களனாக பேசப் போகிறேன். நாமெல்லாம் எந்த மதமாக இருந்தாலும் ஒன்றே என்று எனது எல்லா அதிகாரங்களையும் கவனத்தில் கொண்டு ஒரு இனத்தின் நலன் என்பது அனைத்து இனங்களின் நலன்களை உள்ளடக்கியது என்று உறுதிபட கூறுகிறேன். (15)

  1947 ஆக‌த்து 23லிருந்து செப்டம்ப‌ர் 30 வ‌ரை இல‌ங்கையின் முத‌ல் தேர்த‌ல் ந‌டைபெற்ற‌து. இதில் 95 உறுப்பின‌ர்க‌ள் போட்டியிட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ளுக்கு 1,881,364 ம‌க்க‌ள் வாக்க‌ளித்த‌ன‌ர். ஆறு க‌ட்சிக‌ளும் பல சுயேட்சைக‌ளும் போட்டியிட்ட‌ன‌ர். முடிவு, (16)

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி 39.8% (42 உறுப்பின‌ர்க‌ள்)
லங்கா சம சமாச கட்சி 10.8% (10 உறுப்பின‌ர்க‌ள்)
போல்சுவிக் லெனினிசுட்டு இந்திய கட்சி 6% (5 உறுப்பின‌ர்க‌ள்)
சிலோன் த‌மிழ் காங்கிர‌சு 4.4%( 7உறுப்பின‌ர்க‌ள்)
சிலோன் இந்திய காங்கிரசு 3.8% (6 உறுப்பின‌ர்க‌ள்)
இல‌ங்கை க‌ம்யூனிசுட் க‌ட்சி 3.7% (3உறுப்பின‌ர்க‌ள்)
தொழிலாள‌ர் க‌ட்சி 1.4% (1உறுப்பின‌ர்)
சுயேட்சை 29%.

 “எந்த‌ இனத்தவரனாலும், ம‌தத்தவரானாலும் நாமெல்லாம் ஒன்றே” என்ற‌ உறுதிமொழியுட‌ன் சுத‌ந்திர‌ நாட்டின் தந்தையாக‌‌ சேன‌நாய‌கா ப‌தவியேற்றுக்கொண்டார். அதுவ‌ரை எல்லா இன‌ங்க‌ளும், ம‌த‌ங்க‌ளும் ச‌ம‌மாக‌ ம‌திக்க‌ப்படும் என்று எல்லோரும் எண்ணினர் ஆனால் புதிய‌ குடியுரிமை ச‌ட்டம் (New Citizenship act) கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌திலிருந்து அவ‌ர்க‌ளின் துரோக‌ம் வெளிப்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து.

                1948 பிப்ர‌வ‌ரி 4ஆம் நாள் புதிய‌ அர‌சு “சிலோன் குடியுரிமை ச‌ட்ட‌த்தை” பாராளும‌ன்ற‌த்தில்  தாக்க‌ல் செய்த‌து. மேலோட்ட‌மாக‌ பார்த்தால் ம‌க்க‌ளுக்கு குடியுரிமை வ‌ழ‌ங்குவ‌து தான் இத‌ன் நோக்க‌ம் போல‌ தோன்றினாலும் , அத‌ன் முக்கிய‌ நோக்க‌ம் இதுவ‌ரை இந்த‌ நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ அடிமையாக‌ உழைத்த‌ இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையை ப‌றித்து நாட‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆக்குவ‌தே. இது சிலோன் குடியுரிமைச ச‌ட்ட‌ம் எண் 18ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌ன் மூல‌ம் நாட்டின் 11விழுக்காடு ம‌க்க‌ள் நாட‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

     சிலோன் த‌மிழ் காங்கிர‌சு ஆர‌ம்ப‌த்தில் இதை எதிர்த்தாலும், ஆனால் இறுதியில் அவர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ அத‌ன் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சியிலிருந்து வெளியேறி செல்வ‌நாய‌க‌ம் த‌லைமையில் ஐக்கிய க‌ட்சியை ஆர‌ம்பித்த‌ன‌ர். ஒரு வ‌ருட‌த்திற்கு பின் கொண்டு வ‌ந்த‌ இந்திய‌ ம‌ற்றும் பாகிசுதான் ம‌க்க‌ள் வாழ்வுரிமை ச‌ட்ட‌ம் எண் 3 முற்றிலுமாக‌ எல்லா இந்திய வம்சாவழி த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையையும் ப‌றித்த‌து. அத‌ன் 7 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளையும் வெளியேற்றிய‌து இந்த‌ ச‌ட்ட‌ம். இத‌னால் 1952 பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் எந்த‌ ஒரு இந்திய‌ த‌மிழ‌ரும் போட்டியிட‌ முடிய‌வில்லை. 1988 வ‌ரை இந்த‌ நிலையே நீடித்த‌து. 2003ல் இந்திய‌ குடியுரிமை பெறாத‌  1,68,141 இந்திய வம்சாவழித் தமிழ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை குடியுரிமை வ‌ழ‌ங்கிய‌து.

 புதிய‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌மான‌ வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதியில் நில‌ங்க‌ளை வாங்குவ‌த‌ற்கு சிங்க‌ள‌வ‌ர்க‌ளை அனும‌தித்த‌து. கிராமம் முழுவதிலும் வாழ்ந்த‌ தமிழர்கள் வெளியேற்றப்ப‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ள் குடியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌த் தொட‌ர்பை துண்டிப்பதற்காக‌ மேற்கொள்ள‌ப்ப‌ட்ட இன அழித்தொழிப்பு நிக‌ழ்வு இது(17). இன அழித்தொழிப்பின் தொட‌க்க‌ நிலை இது. சிறிது கால‌த்திற்குள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌மான‌ வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முற்ப‌து விழுக்காடு நில‌ங்களும், வீடுகளும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட‌ன. இது போன்ற செயல்களை தான் இசுரேல் ஆரம்ப காலங்களில் பாலசுதீனத்தில் மேற்கொண்டது.

 1956ல் “சிங்களம்” ம‌ட்டுமே அர‌சின் அதிகார‌ மொழி என்ற‌ ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ந்த‌து. அந்த காலகட்டத்தில் 70 விழுக்காடு ம‌க்க‌ள் ம‌ட்டுமே சிங்க‌ள‌ மொழியை பேசினார்க‌ள்.

இந்த‌ ச‌ட்ட‌த்தை ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் காலனீய‌வாதிக‌ளிட‌மிருந்து விடுத‌லை பெற்று, த‌ங்க‌ளை வேறுப‌டுத்தி காட்டுவ‌த‌ற்காக‌ கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌தென்றார்கள், எதிர்த்த‌வ‌ர்க‌ள் மொழியினால் பெரும்பான்மையின‌ர், சிறுபான்மையின‌ரை ந‌சுக்குவ‌த‌ற்காக‌ கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ம் என்று இதைக் கூறினார்க‌ள். இந்த‌ ச‌ட்ட‌மான‌து  பெரும்பான்மை சிங்க‌ள‌ர்கள் இல‌ங்கையை ஒரு சிங்க‌ள‌ நாடு என்று அடையாள‌ப‌டுத்த உதவியது.த‌மிழினம் சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்டது. இந்த சட்டமே தமிழர்கள் பின்னாட்களில் தனிநாட் கோரிக்கை எழுப்புவதற்கும், முப்பது வருடத்திற்கும் மேலான விடுதலை போரை தொடருஅதகும் காரணமாயிற்று.(18)

       த‌மிழ‌ர்க‌ள் இந்த‌ இன‌வெறி ச‌ட்ட‌த்தை எதிர்த்து காந்திய‌ முறையில் அமைதி வழி உண்ணாவிர‌த‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தினார்கள். ஆனால் இதைக்கூட‌ பொறுக்க‌முடியாத‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் புத்த‌ துற‌விக‌ளின் த‌லைமையில் சென்று த‌மிழ‌ர்களை தாக்கினார்க‌ள்.

  சிறுபான்மை இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் மீது (சுத‌ந்திர‌த்திற்கு பின்) சிங்களவர்கள் ந‌டத்திய‌‌ முத‌ல் இனத் தாக்குதல் தான் “கால் ஓயா தாக்குதல்”, 1956 சூன் 11 அன்று ஆர‌ம்ப‌மான‌ இந்த‌ தாக்குதல் தொட‌ர்ந்து ஐந்து நாட்க‌ள் ந‌டை பெற்ற‌து. கால் ஓயா நிறுவ‌ன‌ ப‌ணியாள‌ர்க‌ளும், அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ சிங்க‌ள‌ காடைய‌ர் கும்ப‌லும் அரசாங்க‌ வாக‌ன‌ங்களில் வெடி ம‌ருந்துகளையும், ஆயுதங்களையும் ஏற்றிச் சென்று சிறுபான்மை த‌மிழர்களை படுகொலை செய்த‌ன‌ர்.இந்த தாக்குதலில் அண்ணளவாக(Approximately) 150 த‌மிழ‌ர்க‌ள் இற‌ந்திருக்க‌லாம் என்று கணக்கிடப்பட்டது. தாக்குதல் கால‌ங்க‌ளில் எதுவும் செய்யாத‌ காவ‌ல் ம‌ற்றும் இராணுவ‌ம் தாக்குதல் முடிந்த‌‌பின் நிலைமையை க‌ட்டுக்குள்(!) கொண்டுவந்த‌து.(19)

 த‌மிழ் அர‌சிய‌ல் த‌லைவ‌ர் செல்வ‌நாய‌க‌ம் ஒரு மிக‌ப்பெரிய‌ ச‌த்தியாகிர‌க‌ போர‌ட்ட‌த்தை(அமைதி வ‌ழி போராட்ட‌ம்)இந்த‌ ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ முன்னெடுத்தார். வ‌ன்முறைக‌ளை த‌விர்ப்ப‌த‌ற்காக‌ பிர‌த‌ம‌ர் சால‌ம‌ன் ப‌ண்டார‌நாய‌கா த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் பகுதிக‌ளில் தமிழும் அர‌ச‌ மொழியாக்கப்படும் என்று கூறும் ஒப்பந்தத்தை செல்வ‌நாய‌க‌த்துட‌ன் இணைந்து கையெழுத்திட்டார். இது சிங்க‌ளவ‌ர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மீண்டும் புத்த‌ துற‌விக‌ள் த‌லைமையிலான‌ சிங்கள காடையர்கள் த‌மிழ‌ர்க‌ளை தாக்கி சில‌ இட‌ங்க‌ளில் ப‌டுகொலையும் செய்த‌ன‌ர். மேலும் புத்த‌ துற‌விக‌ள் ப‌ண்டார‌நாய‌கேவின் வீட்டுக்கு சென்று அவரை பயமுறுத்தியதால், ப‌ண்டார‌நாயகே அந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை தானே கிழித்து எறிந்து விட்டார். இருப்பினும் 1958ஆம் ஆண்டு “சிங்களா ம‌ட்டும்” ச‌ட்ட‌த்தில் சிங்க‌ள‌ பாராளும‌ன்ற‌த்தில் சில‌ மார்க்சிய‌ ம‌ற்றும் டிராட்சிய‌ சிந்த‌னை கொண்ட‌ சிங்க‌ள‌ க‌ட்சியின‌ர் ஒரு ச‌ட்ட‌ திருத்த‌ம் செய்தார்க‌ள். இத‌ன் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் வ‌டக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்க‌ள‌த்துட‌ன் இணைந்து த‌மிழும் ஆட்சி மொழியான‌து. இத‌னால் கோப‌ம‌டைந்த‌ சிங்க‌ள காடைய‌ர்க‌ள் 200லிருந்து 300 த‌மிழ‌ர்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். இந்த‌ நேர‌த்திலும் சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழர்க‌ளுக்கு த‌ங்க‌ள் வீடுக‌ளில் த‌ஞ்ச‌ம் அளித்த‌ன‌ர். ப‌ல‌ த‌மிழ் பெண்க‌ள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள், த‌மிழ் ஆண்க‌ள் நிர்வாண‌மாக்க‌ப்பட்டு உயிருடன் கொளுத்த‌ப்ப‌ட்டார்க‌ள். இது வட‌அமெரிக்காவில் தெற்கில் வாழுந்த‌ வெள்ளைய‌ர்கள் க‌ருப்பின‌ ம‌க்க‌ளை உயிருட‌ன் கொளுத்திய‌ நிகழ்வை நமக்கு நினைவூட்டுகின்ற‌து.

   இல‌ங்கை பிர‌த‌ம‌ரான‌ ப‌ண்டார‌நாய‌கே த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌மாக‌ செல்வ‌தாக‌ எண்ணி அவ‌ர் மீது மிகுந்த‌ கோப‌ம் கொண்ட‌ன‌ர் பௌத்த துறவிகள். இறுதியில் 1959ல் ஒரு பௌத்த‌ துறவியே ப‌ண்டார‌நாய‌கேவை சுட்டுக் கொன்றார்.

        இந்த‌ மொழிச்ச‌ட்ட‌ம் த‌ன‌து பாதிப்புக‌ளை அர‌சு ப‌ணியாள‌ர் துறையில் காட்ட‌த் தொட‌ங்கிய‌து. ஏனெனில் கிருத்துவ‌ ம‌த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் மூல‌மாக‌ மேற்குல‌க‌ க‌ல்வி முறையை ந‌ன்கு ப‌யின்று 1955 ஆண்டுகளில் அர‌சு ப‌ணியில் அதிக‌மாக‌ த‌மிழ‌ர்க‌ள் இருந்த‌ன‌ர். இந்த‌ ச‌ட்ட‌மான‌து இவ‌ர்க‌ளை ப‌ணியிலிருந்து துற‌த்த‌வும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கே மீண்டும் எல்லா அதிகார‌ங்க‌ளையும் கொடுக்க‌வும் செய்த‌து. ஏனெனில் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் சிங்க‌ள‌ மொழி ம‌ட்டுமே அரசு ப‌ணித்துறையின் ஒரே மொழியான‌து. 1970க‌ளில் அர‌சு ப‌ணித்துறை மொத்த‌மும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் வ‌ச‌மான‌து. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் அர‌சு அதிகாரிக‌ள் ச‌ர‌ள‌மாக‌ சிங்க‌ள‌ம் பேச‌த் தெரியாத‌ ஒரே கார‌ண‌த்தால் தங்க‌ள் ப‌ணியிலிருந்து வெளியேற‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இதற்காக 1960க‌ளில் அர‌சாங்க‌ விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌ங்க‌ளைத்தும் சிங்க‌ளமான‌து , இத‌னால் இந்த அரசு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு இல்லை என்ற நிலை உருவானது. இது இல‌ங்கையில் ஒரு புதிய‌ இசுரேலை உருவாக்கிய‌து, சிங்க‌ள‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ளானார்க‌ள், தமிழ‌ர்க‌ள் பால‌சுதீனிய‌ர்க‌ளானார்க‌ள்.

    இங்கே நாம் புர‌ட்சிக‌ர‌ அர‌சுக‌ளான கூபா ம‌ற்றும் இல‌த்தின் அமெரிக்க‌ நாடுக‌ளுக்கெல்லாம் ஒரு செய்தியை வ‌லியுறுத்தி கூறுகின்றோம் இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ஒரு திட்ட‌மிட்ட‌, தொட‌ர்ச்சியான‌ வ‌ன்முறைக்கும், இனப்பாகுபாட்டிற்கும் ஆளாக்கப்பட்டார்கள். இலங்கையில் சிங்கள அரசுகள் தமிழர்களின் மேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், ஐ.நாவின் இனப்படுகொலைக்கான வரையறையில் காணப்படுகின்றன (“இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ நீதி” என்ற‌ முத‌ல் அத்தியாத்தில் நீங்க‌ள் இதை பார்க்க‌லாம்).

  உலகின் முத‌ல் பெண் பிர‌த‌ம‌ராக‌ சிரிமாவோ ப‌ண்டார‌நாய‌கே 1960ல் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து இலங்கையை உல‌க நாடுக‌ளின் த‌லைப்பு செய்திக‌ளில் கொண்டு சேர்த்த‌து. முன்னாள் பிர‌த‌ம‌ரும், சிறீல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியை தோற்றுவித்த‌வருமான, மறைந்த‌‌‌ ப‌ண்டார‌நாய‌கேவின் துணைவியார் என்பது இவருக்கு கூடுதல் பலன்கள் இருந்தன. இவ‌ர் ப‌த‌விக்கு வ‌ந்த‌தும் இல‌ங்கையை அணிசேரா நாடுக‌ளின் கூட்ட‌மைப்பில் சேர்த்தார். இந்த‌ கூட்ட‌மைப்பை இந்தியாவின் நேரு, எகிப்தின் நாச‌ர், யுகோசுலாவியாவின் டிட்டோ ம‌ற்றும் கானாவின் க்ரூமாக் போன்றோர்களினால் 1961ல் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த கூட்டமைப்பு அந்த காலகட்டத்தில் வ‌ல்ல‌ர‌சுக‌ளுட‌ன் அணி சேராத‌ நாடுக‌ளின் இறையாண்மை பாதுகாப்ப‌த‌ற்காக‌ உருவாக்க‌ப்பட‌ட‌து.(20)

  சிறீல‌ங்காவின் பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌ க‌ட்சிகளின் தலைவர்கள் எப்பொழுதும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் போன்ற‌ நாடுக‌ளுட‌ன் பொருளாதார‌ ம‌ற்றும் இராணுவ‌ உற‌வை தொட‌ர்ந்து பேணி வ‌ந்த‌னர். ச‌மூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள் முதலாளித்துவ மாதிரியிலேயே இல‌ங்கையில் ந‌டை பெற்று வந்தன. இதுவே புரட்சிகர முண்ணனி அரசுக்கு எதிராக போராட‌ காரணமாயிற்று. 1971ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ம‌லைய‌க‌ இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள் புதிய‌ த‌லைமையின் கீழ் ஒன்று சேர்ந்து, மார்க்சிய‌ க‌ட்சியான‌ ச‌ன‌தா விமுக்தி பேரமுனாவை உருவாக்கினார்க‌ள்.இதற்கு  த‌மிழில் ம‌க்க‌ள் விடுத‌லை முண்ண‌னி எனப் பொருள்.இவர்கள் பல இடங்களில் அரசை எதிர்த்து கலவரம் செய்தார்கள். இந்த கலவரங்களில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்  அரச படையால் கொல்லப்பட்டார்கள்.(21)

 ஆட்சிக்குவ‌ந்த‌பின் , சிறீமாவோவும் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ சிங்க‌ள‌ இன‌ப்ப‌டுகொலை திட்ட‌த்தை மாற்றாம‌ல் தொட‌ர்ந்து வ‌ந்தார். அரசமைப்பை மாற்றுவதன் மூலம் சாமர்த்தியமாக தமிழர்களை மேலும் இனஒடுக்குமுறைக்கு ஆட்படுத்த முயன்றார். மூன்று சிங்க‌ள‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை இணைத்து சிறீமாவோ 1970 தேர்த‌லில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அமலில் இருக்கும் 1948ஆம் ஆண்டு டொமினியன் அரச‌மைப்பை‌ மாற்றி இலங்கையை ஒரு குடிய‌ர‌சு நாடாக ஆக்க‌வேண்டும் என்ற‌ கோரிக்கையை இலங்கை மக்கள் முன்வைத்தார். இது ஏழு சிங்க‌ள‌ பிராந்தியங்களிலும் வெற்றி பெற்ற‌து. ஆனால் த‌மிழ‌ர்க‌ளின் வ‌டக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் படுதோல்வியை த‌ழுவிய‌து. இந்த பிராந்தியத்தில் இந்த‌ கோரிக்கைக்கு 14% வாக்குகள் மட்டுமே கிடைத்த‌ன‌.(22)

 சிறுபான்மை மக்க‌ளின் இன‌ ம‌ற்றும் ம‌த‌ அடையாள‌ங்க‌ளை பாதுகாக்கும் ச‌ட்ட‌ம் நீக்க‌ப்ப‌ட்டு புத்த‌ம‌த‌மே அர‌ச‌ ம‌த‌மான‌து.இலங்கை ஒரு முழு சிங்கள பௌத்த‌ நாடாக‌ இத‌ன் மூல‌ம் மாற்ற‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ ப‌குதியான‌ நொச்சிகுள‌த்தில் 50,000 குறுக்கம்(Acre) நில‌த்தை சிங்க‌ள‌ர்க‌ள் கைப்ப‌ற்றினார்கள். பின்னர் அந்த இடத்திற்கு “நொச்சியாகமா” என‌ சிங்க‌ளத்தில் பெயரிட்ட‌ன‌ர். அடுத்த ஆண்டு 10,738 சிங்க‌ள‌ குடும்ப‌ங்க‌ள் விதிமுறைகளுக்கு மாறாக‌‌ திரிகோண‌ம‌லை ப‌குதியில் குடியேற்றப்பட்டார்கள்.

   தனி இனமாக, தனித்த நிலப்பரப்பில், தனி மொழிய்டன் வாழ்ந்து வந்த தமிழனத்தின் இறையாண்மை பறிக்கப்பட்டது.(22)

   இந்த இழப்பிற்கு பின்னால் புத்துயிர் பெற்ற‌ சிலோன் தே‌சிய‌ காங்கிர‌சும், ஐக்கிய கட்சியும் 1972ல் ஒன்று சேர்ந்து த‌மிழ‌ர் ஐக்கிய‌ முண்ண‌னியை உருவாக்கின.  ஈழம் என்ற பெயரில் இலங்கையின் ஒரு தனி பகுதியாக‌ தனி நாடு அல்லது சுய‌நிர்ணய உரிமை என்ப‌து ஒவ்வொரு த‌மிழரினுடைய‌ கோரிக்கையான‌து. இந்த காலகட்டத்தில் முப்ப‌து த‌மிழ் போராளி‌குழுக்க‌ள் உருவாகியிருந்த‌ன‌.

இவ‌ர்க‌ளின் இய‌ங்கு த‌ள‌ம் த‌மிழீழ‌ம் ஆகும். அதாவ‌து ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ள் வாழும் ப‌குதி என‌ பொருள் கொள்ள‌லாம். ஈழ‌ம் என்ற‌ வார்த்தை ச‌ங்க‌ கால‌‌ த‌மிழ் இலக்கிய‌த்திலிருந்து தொட‌ர்ந்து வரும் ஒரு சொல்லாகும். ச‌ங்க‌ காலம் என்பது கி.மு 200லிருந்து கி.பி.250க்கும் இடைப்ப‌ட்ட‌ கால‌மாகும். இங்கே ஈழ‌ம் என்ப‌த‌ற்கு முழு இல‌ங்கை என்றே பொருள். ஏனென்றால் சிங்க‌ள‌ர்க‌ள் வ‌ரும் முன்பு த‌மிழ‌ர்க‌ளே இல‌ங்கை முழுவ‌தும் வாழ்ந்து வந்தார்கள்.(23)

 சிறீமாவோவின் இர‌ண்டாவ‌து ஆட்சி கால‌த்தில் த‌மிழ‌ர்க‌ளின் மேல் இன்னொரு பாத‌க‌மான‌ ச‌ட்ட‌ம் பாய்ந்த‌து. அது தான் “த‌ர‌ப்ப‌டுத்துத‌ல்” என்ற‌ ச‌ட்ட‌ம், இத‌ன் மூல‌ம் த‌மிழ் மாணவர்க‌ள் ப‌ல்க‌லை க‌ழ‌க‌ங்ளில் சேர‌ வேண்டுமானால் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌ ம‌திப்பெண் எடுக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு சிங்க‌ள மாண‌வ‌னுக்கு 50 ம‌திப்பெண்னும், த‌மிழ் மாண‌வ‌னுக்கு 75 ம‌திப்பெண்னும் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌து.

1970ஆம் ஆண்டு முழுவ‌தும் சிங்க‌ள‌ காடைய‌ர்க‌ள் இன அழித்தொழிப்பை தொட‌ர்ந்து ந‌ட‌த்தினார்கள். இது த‌மிழ‌ர்க‌ளின் மேல் ம‌ட்டும‌ல்ல‌ இசுலாமிய‌ர்க‌ளின் மீதும் தொட‌ர்ந்த‌து. 1976ல் இசுலாமிய‌ர்க‌ளின் 271 வீடுகளையும், 44 க‌டைகளையும் சிங்க‌ள‌ர்க‌ள் கொளுத்தினார்க‌ள். இதில் ப‌ல‌ இசுலாமிய‌ர்க‌ள் கொல்ல‌ப்பட்டார்கள்.

   1976ஆம் ஆண்டு வ‌ட்டுக்கோட்டையில் ந‌டைபெற்ற‌ மாநாட்டில் த‌மிழ‌ர் ஐக்கிய‌ முண்ண‌னி என்ற கட்சியின் பெய‌ரை த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி என‌  மாற்றி கொண்ட‌து. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாட்டுக்கான கோரிக்கையை மக்கள் முன் இந்த மாநாட்டில் கட்சியின் சார்பாக வைக்கப்பட்டது. இந்த தனிநாடு தமிழ் மக்களின் பூர்விக பகுதியான வ‌டக்கு மற்றும் கிழக்கில் அமையும் என்றும், இந்த நாடு “மதச்சார்பற்ற சோசலிச தமிழீழ நாடு” என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.(24)

 1975ல் த‌மிழ‌ர் போராளி‌க்குழுக்க‌ளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று அதிக‌மான‌து. வேலுபிள்ளை பிர‌பாக‌ர‌னின் த‌லைமையிலான‌ “த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள்” என்ற‌ அமைப்பு தோன்றிய‌து. இவர் தன்னை சேகுவேராவை பின்பற்றும் மார்க்சியர்கள் என்று அறிவித்து கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள்  இராணுவ‌த்துட‌ன் சிறிய‌ அள‌விலான மோதல்க‌ளில் ஈடுபட்டு வந்தார்கள்.

  வ‌ட்டுகோட்டை தீர்மான‌த்தை ம‌க்க‌ள் முன்வைத்து 1977 யூலை தேர்த‌லில் போட்டியிட்ட‌ த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி போட்டியிட்ட‌ 14 இங்க‌ளிலும் அமோக‌ வெற்றி பெற்ற‌து. இது இலங்கையின் மொத்த‌ வாக்குக‌ளில் 6.4% வாக்குக‌ளை பெற்ற‌து. செய‌வ‌ர்த்த‌னா த‌லைமையிலான‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியும் சிங்க‌ள‌ ப‌குதிக‌ளின் பெரும்பான்மையாக‌ வெற்றி பெற்ற‌து.அர‌சு அமைக்க‌ தேவையான‌ 168 இருக்கைக‌ளில் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சிக்கு மேலும் நான்கு உறுப்பின‌ர்க‌ள் தேவைப்ப‌ட்ட‌ன‌ர். இத‌ற்காக‌ இவ‌ர்க‌ள் த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியுட‌ன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்கள். த‌மிழ‌ர்கள் அதிகளவில்‌ வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவர்கள்(தமிழர்கள்) அமைதி வழியில் போராடியதன் கார‌ண‌மாக‌வும் கோப‌ம‌டைந்த‌ சிங்க‌ள‌ர்க‌ள் மீண்டும் புத்த‌ மத துறவிக‌ளின் த‌லைமையில் சென்று ம‌ற்றுமொரு இனதாக்குதலைத் தமிழ‌ர்க‌ளின் மேல் ந‌ட‌த்தினார்க‌ள். இந்த‌ இன‌க் க‌ல‌வ‌ர‌த்தில் 300 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளின் வீடுகளும், க‌டைகளும் கொளுத்த‌ப்ப‌ட்ட‌ன.

     1978 யூலை இல‌ங்கையின் பிர‌த‌ம‌ரான‌ செய‌வ‌ர்த்த‌னே இல‌ங்கையின் பெயரையும், அர‌ச‌மைப்பையும் மீண்டும் மாற்றினார்.  “சோச‌லிச‌ ச‌ன‌நாயக இலங்கை குடியரசு” என‌ அறிவித்தார். இதில் புதிதாக‌ ஒரு அதிப‌ர் ப‌தவியையும் உருவாக்கினார். அதிபர் தான் பிரதமரை நியமிப்பார் என்றும், பிர‌த‌ம‌ரை விட‌ அதிகார‌ங்க‌ள் அதிகம் அதிப‌ருக்கு உண்டு என்றும் வரையறுக்க‌‌ப்ப‌ட்ட‌து. அதிப‌ரே இராணுவ‌த்தின் த‌லைமை நிர்வாகியாக‌வும், பாராளும‌ன்ற‌த்தின் த‌லைவ‌ராக‌வும் ஆனார். அதிப‌ருக்கு பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்கும் ச‌ட்ட‌ அதிகார‌மும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

செய‌வ‌ர்த்த‌னே இலங்கையின் முத‌ல் அதிப‌ரானார். இவர் தனது கட்சியைச் சேர்ந்த‌ பிரேம‌தாசாவை பிர‌த‌ம‌ராக‌ நிய‌மித்தார். என்ன‌ தான் ” சோச‌லிச‌ ச‌ன‌நாய‌க‌  குடியரசு நாடு” என‌ப் பெய‌ர் மாற்றினாலும் அது முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ க‌ட்ட‌மைப்பையே பின்ப‌ற்றிய‌து. அர‌ச‌ நிறூவ‌ன‌ங்க‌ள் க‌லைக்க‌ப்ப‌ட்டு த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு முன்னுரிமை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

 1981 மே 31ல் த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌மான‌ யாழ்ப்பாண‌த்தில் ஒரு பேர‌ணி ந‌ட‌த்திய‌து. இதில் காவ‌ல‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை தாக்க‌ ப‌திலுக்கு காவ‌ல‌ர்க‌ளை த‌மிழர்கள் தாக்கிய‌தில் இர‌ண்டு காவ‌ல‌ர்க‌ள் இறந்தார்கள். அடுத்த‌ மூன்று நாட்க‌ளுக்கு சிங்க‌ள‌ காடைய‌ர்க‌ள், காவ‌ல‌ர்க‌ள், இராணுவ‌ம் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளை தாக்கினார்க‌ள். ப‌ல‌ த‌மிழ‌ர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள், த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியின் த‌லைமை அலுவ‌ல‌க‌ம், ப‌த்திரிக்கை அலுவ‌ல‌க‌ம், அச்சு அலுவ‌ல‌க‌ம் போன்ற‌வை சூறையாட‌ப்ப‌ட்ட‌ன‌. இதில் மிக‌வும் துய‌ர‌மான‌ நிகழ்வான 97,000 புத்த‌க‌ங்க‌ளையும், அரிய‌ வ‌ர‌லாற்று கைப்பிரதிகளைக் கொண்ட‌ யாழ்ப்பாண‌ நூல‌க‌ம் சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் தீவைத்து இர‌வோடு இர‌வாக‌ எரிக்க‌ப்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌ அர‌சு மற்றும் அத‌ன் அமைச்ச‌ர்க‌ளால் திட்ட‌மிட்டு த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதியில் இருந்த‌ இந்த‌ அறிவு சுர‌ங்க‌மான‌ யாழ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌மும் அத‌ன் நூல‌க‌மும் அழிக்க‌ப்ப‌ட்ட‌து. நூல‌க‌ம் எரிக்க‌ப்ப‌ட்ட‌தற்கு முந்தைய‌ இர‌வில் ப‌ல‌ சிங்க‌ள‌ அமைச்ச‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்தார்கள்.

  அடுத்த‌ நாள் வெளியான‌ எந்த‌ ஒரு தேசிய செய்திதாளிலும் யாழ்ப்பாண‌ நூல‌கம் எரிக்கப்பட்ட‌ செய்தி வெளியிடப்பட‌வில்லை. த‌மிழ‌ர்க‌ளின் வாழ்விட‌ங்க‌ளுக்கு துணை இராணுவ‌ம் அனுப்ப‌ப் ப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கும், த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் இல‌ங்கையில் வாழ‌ பிடிக்க‌வில்லையென்றால் தங்கள் தாய்நாடான இந்தியாவிற்கு சென்று வாழலாம் என‌ ஆளும் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் லோகுப‌ந்தாரா நேர‌டியாக‌வே கூறினார்.

  “இங்கே(இல‌ங்கையில்) த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌லைப‌ட்சமாக ந‌ட‌த்த‌ப்ப‌ட்டால் ஏன் இன்னும் அவ‌ர்க‌ள் இங்கேயே வாழ‌ வேண்டும். இது அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாடும் இல்லை. அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாடான இந்தியாவிற்கே(ம‌லைய‌க‌த்தில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள், வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்பவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முன்பிருந்தே இல‌ங்கையில் வாழ்ந்த பூர்வகுடிகள் என்ப‌தை நினைவில் கொள்க‌) சென்று வாழ‌லாமே?”. (25)

  இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு பின்னும்  யாழ்ப்பாண‌த்தின் 1981ஆம் ஆண்டு மேய‌ரான‌ ந‌ட‌ராசா நூல‌க‌ எரிப்பையும், அதில் ஒரு மாண‌வ‌ர் எரிந்ததும் இன்றும் த‌ன் க‌ண்முன்னே தெரிவ‌தாக‌ கூறியுள்ளார்.  பின்ன‌ர் இவ‌ரும் 2006ல் த‌லைந‌க‌ரான‌ கொழும்பில் அடையாள‌ம் தெரியாத‌ ஒருவ‌ரால் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார். (25)
 
விடுதலைக்கான‌ போரும், த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளும் :

       1983ன் கோடை கால‌த்தில் சிறிய‌ கொரில்ல‌ போர் இய‌க்க‌மான‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் தமிழர்களின் பூர்விக பகுதியான வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பான்மையான‌ ப‌குதிக‌ளில் ந‌ன்றாக‌ நிலை பெற்றுவிட்ட‌ன‌ர்.

  சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ல‌ இட‌ங்க‌ளில் க‌டுமையாக‌ தாக்கினார்கள். ஒரு உதாரணமாக திரிகோண‌மலையில் 1983ல் காவ‌ல் நிலைய‌த்தில் தடுப்பு காவலில் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் இற‌ந்தார். மே 31ல் நீதிம‌ன்ற‌ விசார‌ணையில் அவ‌ர் த‌ற்கொலை செய்து கொண்டார் என்று கூற‌ப்ப‌ட்ட‌து. இது ந‌ட‌ந்து மூன்று வார‌ங்க‌ளுக்கு பின் ஒரு புதிய‌ ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ந்த‌து.

 இந்த சட்டத்தின் மூல‌ம் காவ‌ல் துறை க‌ட்டுபாட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் இற‌ந்தால் அவ‌ர்க‌ளை எந்த‌ வித‌ பரிசோத‌னையுமின்றி காவ‌ல்துறை புதைக்க‌வோ (அ) எரிக்க‌வோ முடியும் என்றானது.
 
  ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை அதிப‌ர் செய‌வ‌ர்த்த‌னேவிட‌ம் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு இந்த‌ ச‌ட்ட‌த்திற்கு எதிரான‌ த‌ன‌து க‌ண்ட‌ன‌த்தையும் , இந்த‌ ச‌ட்ட‌ம் ம‌னித‌ உரிமையை அடியோடு அழித்துவிடும் என்றும், இதை உட‌னே இர‌த்து செய்ய‌வேண்டும் என‌ கேட்டுக்கொண்ட‌து. ஆனால் இத‌ற்கு நேர்மாறாக‌ 1983 யூன் 3 அன்று நாட்டில் அவ‌ச‌ர‌ நிலை பிர‌க‌ட‌ன‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அவ‌ச‌ர‌நிலை அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ அன்றே த‌மிழ‌ர்க‌ள் திரிகோண‌ம‌லை ப‌குதியில் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

  திரிகோண‌ம‌லை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரான‌ இரா.ச‌ம்ப‌ந்த‌ன் தமிழர்கள் மீதான இனத்தாக்குதலைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார், சிங்க‌ள‌ கும்ப‌ல் கிராம‌ம் கிராம‌மாக‌ சென்று த‌மிழர்க‌ளின் வீடுகளையும், க‌டைகளையும் எரித்தார்கள். த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளில் பெரும‌ள‌வில் ஆயுத‌ங்க‌ளை ப‌துக்கி வைத்திருப்ப‌தாக‌ கூறி அவ‌ர்களின் வீடுக‌ளை எந்த‌ வித‌ சோத‌னை அனும‌தி சீட்டும் இல்லாம‌ல் சோதனையிடலாம் என்ற ஒரு புதியதோர் அநியாயம் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு அவ‌ர்க‌ள் தேடிய‌தில் வீட்டிற்கு தேவையான‌ பொருட்க‌ளை த‌விர‌ எதுவும் அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌வில்லை. ஐய‌த்தின் கார‌ண‌மாக‌ ப‌ல‌ த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாவர்கள் வீடு திரும்பவே இல்லை. இது போல‌ பல திட்டமிட்ட‌ நிக‌ழ்வுக‌ள் ஒரு மாத‌ கால‌ம் ந‌டைபெற்றன‌. இதன் பின்னர் தான் இராணுவ‌த்திற்கு எதிரான‌ மிக‌ப்பெரிய‌ தாக்குதலை யாழ் வ‌ளைகுடா பகுதியில் புலிகள் யூலை 24 அன்று நடத்தினார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் க‌ண்ணி வெடிகணை வைத்து இராணுவ‌ வாக‌ன‌ங்க‌ளை தாக்கினார்கள். இதில் 15 பேர் இராணுவ‌ வீரர்க‌ள் இறந்தார்கள்.
 
தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ அன்று இர‌வு தொட‌ங்கி ப‌ல‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ள் தாக்கப்பட்டார்கள். குறிப்பாக‌ த‌லைந‌க‌ர் கொளும்பில் த‌மிழ‌ர்க‌ள் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு தீவைத்து எரிக்க‌ப்பட்டார்கள். இந்த “க‌ருப்பு யூலை” இனத்தாக்குதலில் 3000 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்பட்டார்கள். இதில் 53 அர‌சிய‌ல் கைதிக‌ளும் அட‌க்க‌ம். இந்த‌ அர‌சிய‌ல் கைதிக‌ளில் முக்கிய‌மானவராக கருதப்பட்டவர் குட்டி மணி. இவர் த‌ன‌து க‌ண்க‌ளால் சுத‌ந்திர‌ ஈழ‌த்தை பார்ப்பேன் என்று சூளுரைத்ததால் இவ‌ர‌து கண்களை தோண்டி எடுத்து சிங்க‌ள‌ காவல‌ர் த‌ன‌து காலில் போட்டு மிதித்தார். ஒரு இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வீடிழந்தார்கள். இவ‌ர்க‌ள் எல்லோரும் எதிலிக‌ளாக‌ இந்தியா,  க‌ன‌டா ம‌ற்றும்ஐரோப்பிய‌ நாடுக‌ளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள்.

 அமைதியான‌ முறையில் த‌மிழ‌ர்க‌ளின் சுத‌ந்திர‌த்திற்காக‌, த‌னித்தேச‌த்திற்காக‌ போராடிய‌  அர‌சிய‌ல் க‌ட்சியான‌ த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ணனியும் ச‌ன‌நாய‌க‌ அமைப்பிலிருந்து தூக்கியெறிய‌ப்ப‌ட்ட‌து. த‌னிதேச‌ம் கோரும் எல்லா ந‌ப‌ர்க‌ளையும் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வியிலிருந்து வெளியேற்றிய‌து ஆறாவ‌து ச‌ட்ட‌ திருத்த‌ம். இத‌னால் பாராளுமன்றத்தில் இருந்த‌‌ 16 த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளும் த‌ங்க‌ள் ப‌த‌வியை இழந்தார்கள். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் போராளி இய‌க்க‌ங்க‌ளில் சேர்ந்த‌ன‌ர். இந்த போராளி இயக்கங்களில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் ம‌ட்டும் க‌டுமையான‌ ஒழுக்க‌ விதிக‌ளுட‌ன் ஒழுங்காக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டிருந்த‌து.

  தமிழர்களின் பூர்விக பகுதியான வடக்கு மற்றும் கிழக்கில் 1980ற்க்கும் 1990க்கும் இடைப்ப‌ட்ட‌ ஆண்டுக‌ளில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் ஒரு நிர்வாக அரசை (De Facto Stae) உருவாக்கினார்க‌ள். இது “த‌மிழீழம்” என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌து. நீதி ம‌ன்ற‌ங்க‌ள், காவ‌ல்துறை, வ‌றுமையில் வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கு இலவசமாக அடிப்ப‌டைக் க‌ல்வி, மருத்துவ‌ உத‌விக‌ள் கொடுக்கும் ச‌மூக‌ ந‌ல‌த்துறை போன்ற‌வை அதன் அரசமைப்பில் இருந்த‌ன‌.இது ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் “வங்கி”, “ஒரு வானொலி நிலையம்” (புலிக‌ளின் குர‌ல்), “தொலைக்காட்சி நிறுவ‌னம்” என‌ எல்லாவ‌ற்றையும் க‌ட்ட‌மைத்து நிர்வ‌கித்து வ‌ந்தது. கெரில்ல‌‌ போர்க்குழு த‌லைவ‌ர்க‌ள் பார‌ம்ப‌ரிய‌ விவசாய‌ முறைப்ப‌டி சிறிய‌ கூட்டுற‌வு ப‌ண்ணைக‌ளையும் அமைத்தார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் சாதிய‌ க‌ட்ட‌மைப்பை அக‌ற்றினார்கள். பெண்க‌ளின் மீதான‌ வ‌ன்முறைகளைக் களைய புதிய‌ ச‌ட்ட‌ங்களை இய‌ற்றினார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் க‌ட்டுபாட்டின் கீழ் இந்த‌ அர‌ச‌ நிர்வாக‌ அமைப்பு இருந்த‌து. இங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ள் புலிக‌ள் அமைத்த‌ ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு அமைதியாக‌ வ‌ழ்ந்து வ‌ந்தார்க‌ள். இல‌ங்கை அர‌சு தான் அவ்வ‌ப்போது குண்டுவீசி அமைதியை சீர்குலைத்த‌து.

 இந்த காலகட்டத்தில் தான் சிறீல‌ங்காவின் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளில் பல கலவரங்கள் நடைபெற்றன. முற்போக்கு‌ சிங்க‌ள இளைஞர்களை உறுப்பினராக கொண்ட‌ ச‌ன‌தா விமுக்தி பேரமுனா சோச‌லிச‌த்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். 1987ல் மீண்டுமொரு முறை ச‌ன‌தா விமுக்தி பேரமுனா அர‌சுக்கு எதிரான கலவரத்தில் இற‌ங்கிய‌து. ஆனால் இது 1989ன் பிற்ப‌குதிக‌ளில் மோதலை கைவிட்டு பாராளும‌ன்ற‌ முத‌லாளித்துவ‌ அர‌சிய‌லில் 1994 பொதுத் தேர்த‌லில் முதல் முறையாக போட்டியிட்ட சனதா விமுக்தி பேரமுனா பழமைவாத சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து  போட்டியிட்ட‌து. இதிலிருந்து சனதா விமுக்தி பெரானாவும் த‌மிழ‌ர்களுக்கு ச‌மஉரிமை கொடுப்ப‌தை எதிர்க்க ஆரம்பித்தது.

 பிரேம‌தாசா பிப்ர‌வ‌ரி 1978லிருந்து ச‌ன‌வ‌ரி 1, 1989 வ‌ரை அதிப‌ர் செய‌வ‌ர்த்த‌னேவின் கீழ் பிர‌த‌ம‌ராக‌ இருந்தார். அத‌ன் பின்ன‌ர் அதிப‌ரான‌ பிரேம‌தாசா 1993 மேமாத‌ம் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டும் வ‌ரை அதிபர் ப‌த‌வியில் நீடித்தார். பெரும்பான்மையான‌ சிங்க‌ள மேல் தட்டு வர்க்கத்தினர் இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ச‌ம‌ர‌சமாக‌ செல்வதால், த‌ங்க‌ளுக்கு த‌லைவ‌ராக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ரென்று எண்ணினார்கள். பல முரணான கொள்கைகள்‌ இவ‌ர‌து ப‌த‌விகால‌த்தில் நடைமுறைபடுத்தப்பட்ட‌‌ன‌. மொழிக் கொள்கையில் மாற்ற‌ம், இன அழித்தொழிப்பு ம‌ற்றும் இந்தியாவின் இல‌ங்கை தலையீடு போன்றவை அவற்றில் சில‌. முத‌ல் முரண் “த‌மிழை வ‌டக்கு மற்றும் கிழ‌க்கில் சிங்க‌ள‌த்துக்கு இணையான‌ மொழியாக மாற்றினார். தேசிய‌ மொழியாக‌ சிங்களத்தையும், த‌மிழையும் மாற்றினார். அரசின் அதிகார‌ப்பூர்வ‌ மொழியாக‌ சிங்க‌ள‌த்தையும் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தையும் மாற்றி இவ‌ர் ச‌ட்ட‌திருத்தம் செய்தார்.

 இந்த சட்டத்திற்கு ஒரு குயுக்தியான‌(Double tongue) பொருள் உள்ளது. இது இர‌ண்டு மொழியையும் ச‌மாதான‌ப்படுத்திய‌து. இந்தியாவில் எல்லா மொழிக‌ளும் அர‌ச மொழிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌து போல‌ சிங்க‌ள‌மும், த‌மிழும் அர‌சின் மொழிகளாக‌ ச‌மமாக அறிவிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள்:
                   வட‌அமெரிக்க நூல‌க‌ காங்கிர‌சின் ஆய்வறிக்கையில் த‌மிழ‌ர்க‌ள் இலங்கையில் தனிமைப்படுத்த‌ப் பட்டு விடார்கள் என கூறுகின்ற‌து. “இலங்கை ஒரு ஆய்வு” என்ற இந்த அறிக்கை 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் “தனிமைப்படுத்த‌‌ப்பட்ட‌ த‌மிழர்கள்” என்ற பகுதியில் ஆய்வாசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார்.(27)

 ” தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளின் கொள்கைகளால் தமிழர்கள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்டார்கள். 1950ஆம் ஆண்டு “சிங்களம் ம‌ட்டுமே” அரசு‌ மொழி என்று ச‌ட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே சாதாரண தமிழ் மக்களும், போராளி இயக்கங்களும் சிங்கள அரசை ஐயத்துடனும், கோபத்துடனமே அணுகிவந்துள்ளார்கள்”.

 “தொடர்ந்து நடந்த இனப்பாகுபாட்டின் காரணமாக‌ இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்டார்க‌ள் என்பது வெளிப்படையானது. இதை எதிர்த்து போராடுவதற்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவளித்தார்கள். இதில் குறிப்பாக இளைஞர்கள் தரப்பின் ஆதரவு போராளி குழுக்களை உருவாக்கியது. ஆனாலும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் மொழியே அர‌ச‌ மொழியாக‌வும், அர‌ச ப‌ணிக‌ளில் ப‌ணியாற்ற‌ சிங்க‌ள‌ மொழி தேர்ச்சியும் தேவைப்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் விண்ண‌ப்ப‌ங்க‌ளுக்கே ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளிலும், அர‌ச‌ ப‌ணிக‌ளிலும் முன்னுரிமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இது ம‌ட்டுமல்லாம‌ல் ப‌ல‌ த‌மிழ‌ர் ப‌குதிக‌ளில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கட்டாயமாக குடியேற்றும் ப‌ணியையும் அர‌சு தொட‌ர்ந்து ஊக்க‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌து.

 ” தமிழர்களின் பூர்விகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அர‌சாங்க‌த்தால் ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள குடியேற்ற‌ங்க‌ள் அந்த பகுதிகளில் ந‌டைபெற்ற‌ இன‌க்குழு மோத‌லுக்கு முக்கிய‌ கார‌ணமாயின‌. 1980க‌ளின் ந‌டுப்ப‌குதியில் வ‌ட‌க்கின் வ‌ற‌ண்ட‌ ப‌குதிக‌ளில் 30,000 சிங்க‌ள‌ர்க‌ளை குடியேற்றி, அவ‌ர்களுக்கு வீடு க‌ட்ட‌ ப‌ண‌மும் கொடுத்து, அவ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்காக இயந்திர துப்பாக்கிகளையும் கொடுத்த‌து அர‌சு. த‌மிழ் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் செய்தித் தொட‌ர்பாள‌ர்க‌ள் அரசின் இந்த ந‌வ‌ காலனீய‌ செய‌ல்பாட்டை க‌ண்டித்தார்கள். ஆனால் செய‌வ‌ர்த்தனே அர‌சோ நாட்டின் எந்த ஒரு பகுதியும் ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ எந்த‌ ஒரு இன‌த்தின் பூர்விக‌ நில‌மும் அல்ல‌ என‌க்கூறி சிங்க‌ள‌ குடியேற்ற‌ங்க‌ளை அதிக‌ப்ப‌டுத்திய‌து. தமிழர்கள் பகுதிகளில் குடியேற வ‌றுமைகோட்டிற்க்கு கீழே வாழும் ஏழை சிங்க‌ளவர்க‌ள் நிர்ப‌ந்திக்கப்பட்டார்கள்.

  சேகுவேரா ம‌னித‌ர்க‌ள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌டுவ‌தை க‌ண்டித்தார்.(2)……. மனிதனை அந்நியபடுத்தலில் இருந்து விடுதலை பெறச் செய்வதே புரட்சியின் த‌லையாய நோக்கமாகும் என மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை குறித்த இந்தியாவின் ஊசலாட்டமான கொள்கை:

இல‌ங்கையின் உள்நாட்டு போரில் இந்தியாவின் ப‌ங்கு தான் மிக‌வும் முக்கியபிரச்சனையே. இந்திராவின் ம‌க‌னான பிரதமர் இராசீவ் முத‌லில் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை ஆத‌ரித்தார். இந்திய‌ விமான‌ ப‌டை 25 ஆயிர‌ம் கிலோ உண‌வு பொருட்க‌ளை யாழ்ப்பாண‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌குதியில் போட்ட‌து (பூமாலை திட்ட‌ம்). இத‌ற்கு ஒரு மாத‌த்திற்கு பின் இந்திய‌ இல‌ங்கை ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் இராசீவிற்கும், பிரதமர். பிரேமதாசாவுக்கும் இடையில் 1987 யூலை 29ல் கையெழுத்திட‌ப்ப‌ட்ட‌து. இதில் செய‌வ‌ர்த்த‌னேவுக்கு கீழே இருந்த‌ பிர‌த‌ம‌ர் பிரேம‌தாச‌விற்கு உட‌ன்பாடில்லை. செயவர்த்தனேவின் வற்புறுத்தலால் தான் பிரேமதாசா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்த‌ ச‌மாதான‌ உட‌ன்ப‌டிக்கை உள்நாட்டு போரை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது. த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ உரிமை கொடுப்ப‌த‌ற்கும், த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதிக‌ளில் நிலை கொண்டிருந்த‌ இராணுவ‌த்தை திரும்ப‌ பெறுவ‌த‌ற்கும் ஒப்புக்கொண்ட‌ அர‌சு இத‌ற்கு ப‌திலாக‌ போராளி இய‌க்க‌ங்க‌ளை ஆயுத‌ங்க‌ளை க‌ளையச் சொன்ன‌து. இந்த‌ ச‌மாதான பேச்சுவார்த்தை புலிகளின் ஒப்புதலும், பங்கேற்பும் இன்றியே நடந்தேறியது. புலிகள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இந்திய‌ ச‌மாத‌ன‌ப‌டையிட‌ம் த‌ங்க‌ள‌து ஆயுத‌ங்க‌ளை கையளித்தார்கள். இத‌ன் சில‌ மாத‌ங்க‌ளுக்கு பின் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் ஒருவ‌ர் மேல் ஒருவ‌ர் குறை கூற‌ ஆர‌ம்பித்தார்கள். இது மோதலாக‌‌ வெடித்த‌து இந்த‌ முறை த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இந்திய‌ ச‌மாத‌ன‌ ப‌டையை எதிர்த்து போராட‌‌ வேண்டிய‌தாயிற்று. போராளி இய‌க்க‌ங்க‌ளை விட‌ அதிக‌ அளவில் உயிரள‌ப்பு இந்திய‌ ச‌மாதான‌ ப‌டைக்கு ஏற்ப‌ட்ட‌து.  1500 பேர் கொல்ல‌ப்பட்டார்கள். 4500 பேர் காய‌ம‌டைந்தார்கள்.

   இந்திய‌ ச‌மாதான‌ ப‌டைக‌ள் மூன்று மாத‌த்தில் இல‌ங்கையை விட்டு வெளியேறும் என்று  கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற‌ பிரேம‌தாசா 1989 சனவரியில் இலங்கையின் அதிப‌ரானார். இந்திய‌ ச‌மாதான‌ப்டை இந்தியாவிலும் பெரும்பான்மையினாரால்‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. குறிப்பாக‌ ஐந்து கோடி த‌மிழ‌ர்க‌ளாலும் இது தீவிர‌மாக‌ எதிர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இராசீவ் சமாதான ப‌டையை திருப்பப் பெறவில்லை. இந்த‌ போரை முடிக்க‌ ஒரே வ‌ழியாக‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிகளுடன் அரசு ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது . ஆனால் இந்தியாவில் வி.பி.சிங் பிர‌த‌ம‌ரான‌வுட‌ன் அ‌வ‌ர் ப‌டைக‌ளை திரும்ப‌ பெற்றுக்கொண்டார்.

இந்திய அமைதி படை செய்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு ப‌ழிவாங்கும் ந‌ட‌வ‌டிக்கையாக‌ 1991 மே 21ல் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவ‌ர் மனித வெடிகுண்டாகி இராசீவை கொன்றார்.(28) 1992ல் இலங்கைக்கு முன்ன‌தாக‌வே இந்தியா த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளை தீவிர‌வாத‌ இய‌க்க‌மாக‌ அறிவித்த‌து.

  அதிப‌ர் பிரேம‌தாசா மீண்டும் உள்நாட்டு போரை தொட‌ர்ந்தார்.இது ஒரு முடிவிலியான‌து. பிரேமதாசவின் மேல் பலர் கடும் கோபம் கொண்டிருந்தார்கள். இதில் முக்கியமானவர் அதுலத்முதலி. இவர் 1991ல் பிரேமாதாசாவின் மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதுல‌த்முத‌லி யூத‌ இன‌வாத‌ கொள்கைக‌ளில் வெறி கொண்ட, இசுரேலிய சார்புடைய‌வ‌ர்.

  “இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ங்களுக்கு முன்பு அதுல‌த்முத‌லி பிரேம‌தாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த‌ போது, பிரேம‌தாசா இது இசுரேலின் உள‌வு நிறுவ‌ன‌மான‌ மொச‌ட்டின் சதிவேலையே என்று பாராளும‌ன்ற‌த்தில் குற்றம் சாட்டினார்”.

  ” நான் பாராளுமன்றத்தில் இருந்து இசுரேலிய‌ ஆத‌ரவு ஆற்றல்களை முற்றிலுமாக‌ நீக்கி விட்டேன். அத‌ன் ஒரு விளைவே நீங்க‌ள் காணும் இசுரேலிய‌ உளவு நிறுவ‌ன‌மான‌ மொசாட்டின் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ள். ந‌ம்முள்ளே இசுரேலிய‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளுக்கு சென்று அங்கே ப‌ணியாற்றி கறைபடிந்த ப‌ணத்தை ச‌ம்பாதித்த ப‌ல‌ துரோகிக‌ள் உள்ளார்கள்”. இது ச‌ச்சி காந்தாவினால் எழுத‌ப்ப‌ட்ட‌ ” பிரேம‌தாசா ப‌டுகொலை ஒரு மீளாய்வு” என்ற‌ புத்த‌க‌த்தில் கூறப்பட்டுள்ள‌து.(29)

ஏப்ர‌ல் 1993ல் அதுல‌த்முத‌லி கொலை செய்ய‌ப்ப‌ட்டார்.இது ந‌ட‌ந்த எட்டு நாட்க‌ளுக்கு பின் மே முத‌ல் தேதிய‌ன்று பிரேம‌தாசா ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இத‌ற்கு உரிமை கோர‌‌வில்லை. எனினும் சிங்க‌ள‌ பெரும்பான்மை ஊட‌க‌ங்கள் அவ‌ர்க‌ளையே இத‌ற்கு கார‌ண‌ம் என‌ சித்த‌ரித்த‌ன‌ர்.

   ” அதுல‌த்முத‌லி ஏப்ர‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போது அவ‌ர‌து க‌ட்சி உறுப்பின‌ர்க‌ள் பிரேம‌தாசா தான் அவ‌ரை கொன்றார் என‌ குற்ற‌ம் சாட்டினார்கள். பிரேம‌தாசாவின் ப‌டுகொலை இலங்கை அர‌சிய‌லில் த‌ங்க‌ள‌து முக்கிய‌ ஆத‌ர‌வளாரான‌ அதுல‌த்முத‌லியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இசுரேலின் உளவு நிறுவனமான மொசட் அமைப்பை பயன்படுத்தி செய்ய‌ப்பட்டுருக்கலாம்”.(29)

 இர‌ண்டாம் ஈழ‌ப்போர் 1989ல் தொட‌ங்கி 1994 ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை நீடித்த‌து. ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌நிதியான‌  ச‌ந்திரிகா ப‌ண்டார‌நாய‌கே குமார‌துங்க வெற்றி பெறும் வ‌ரை இது தொட‌ர்ந்த‌து. ஆனால் ச‌மாதான‌ பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் 1995ல் தொட‌ங்கி 2001ன் இறுதி வ‌ரை நீடித்த‌து. 2001ன் இறுதியில் போர் நிறுத்த‌ம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதுவும் கூட‌ இல‌ங்கையின் 2,30,00பேர் கொண்ட‌ இராணுவ‌த்திற்கு தாங்க‌ள் இணையான‌வ‌ர்க‌ள் என‌ 5,000 பேர் கொண்ட‌ கொரில்ல‌ போர் இய‌க்க‌மான‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் நிரூபித்ததன் காரணமாகவே. த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் ப‌ல‌ வெற்றிக‌ளுக்கு கார‌ண‌மான‌ கட‌ற்புலிக‌ள் அமைப்யும், வான்புலிகள் அமைப்பின் பங்கும் உள்ள‌து.புலிக‌ளின் க‌ட‌ற்ப‌டை கொள்ளைய‌டிப்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ ப‌ட‌குக‌ளை தாக்கி அழித்துள்ளார்க‌ள். அதே போல‌ உள்நாட்டு போக்குவ‌ர‌த்திற்காக‌ புலிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ விமான‌ங்க‌ளைக் கொண்டே ப‌ல‌ முறை இல‌ங்கை விமான‌ ப‌டை விமான‌ங்க‌ளை தாக்கியழித்து வெற்றி க‌ண்டுள்ளார்க‌ள்.

 இலங்கை இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் க‌ட்டுபாட்டுப‌குதியில் உள்ள‌ த‌மிழ் பொதும‌க்க‌ளின் மீது ப‌ல‌ முறை குண்டுவீசி தாக்கியுள்ள‌து. மேலும் த‌மிழ் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் விருப்ப‌த்திற்க்கு மாறாக புலிகளால் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் அரசு கூறிய‌து. பொதும‌க்க‌ளை பிணைக்கைதிக‌ளாக‌ புலிக‌ள் வைத்திருப்ப‌தாக‌ அர‌சு கூறிய‌தை மேற்குல‌கும், அத‌ன் பெரும்பான்மை ஊட‌க‌ங்க‌ளும் உண்மை என‌ ந‌ம்பின‌. மேலும் புலிக‌ள் குழ‌ந்தைக‌ளை க‌ட்டாய‌ப்ப‌டுத்தி படைகளில் சேர்க்கின்றார்கள் என்றும் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌து.

  1996 ச‌ன‌வ‌ரி 31ஆம் திக‌தி அன்று கொளும்பில் உள்ள மைய‌ வ‌ங்கியை வெடிக்க‌ச் செய்த‌த‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இலங்கையை விய‌ப்பில் ஆழ்த்தினர். இந்த‌ வ‌ங்கியில் தான் இல‌ங்கையின் முக்கியமான‌ வ‌ணிக‌ க‌ண‌க்குக‌ள் எல்லாம் இருந்த‌ன‌. 200 கிலோ வெடி பொருட்க‌ளுட‌ன் வ‌ந்த‌ த‌ற்கொலைபடையை சேர்ந்த‌ ஒருவ‌ர் வ‌ங்கியின் முக்கிய‌ வாச‌லில் குண்டை வெடிக்க‌ செய்தார். இதனால் வங்கியின் கட்டிடத்தில், பல மாடிகளும், அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன‌. அத‌ன் பின்ன‌ர் வாக‌ன‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் சிறிய வெடிகுண்டு எரிக‌ருவியின் மூல‌மும், துப்பாக்கிக‌ள் மூல‌ம் வ‌ங்கியை மேலும் தாக்கினார்கள். பெரிய‌ அள‌விலான‌ சொத்து சேத‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து, 53 பேர் உயிரிழந்தார்கள். 1400 பேர் வ‌ரை காய‌ம‌டைந்தார்கள். இதில் இறந்தவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே.
 
  யூலை 24, 1996 த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் பொது ம‌க்க‌ள் செல்லும் தொட‌ர்வ‌ண்டியை குண்டு வைத்து தகர்த்ததில் 70 சிங்க‌ள‌ பொதும‌க்க‌ள் இற‌ந்தார்கள். 1990க‌ளின் இறுதியில் இர‌ண்டு த‌ர‌ப்புமே ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பொதும‌க்க‌ளை கொன்றிருந்தார்கள். புலிக‌ள் இராணுவ‌ நிலைக‌ளின் மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்க‌ளின் போது ம‌ட்டுமே சில‌ பொதும‌க்க‌ள் இற‌ந்திருக்க‌லாம் என‌க்கூறினார்கள். ஆனால் தொட‌ர் வ‌ண்டி தாக்குத‌ல்க‌ள் போன்ற சில தாக்குதல்களை எல்லாம் ஏற்றுகொள்ள‌ இயலாது. இதும‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ற்ற‌ போராளி இய‌க்க‌ங்க‌ளையும், புலிக‌ளை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளையும் , த‌மிழ் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியின் சில‌ த‌லைவ‌ர்க‌ளையும் புலிக‌ள் கொன்றுள்ளார்கள்.(30)

ஏப்ர‌ல் 22, 2000 அன்று த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இல‌ங்கையின் யானையிற‌வு இராணுவ‌ முகாமை தாக்கி வெற்றி கொண்டார்க‌ள். இந்த‌ தாக்குத‌லில் 1000திற்கும‌திக‌மான‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் இற‌ந்தார்கள். பெரும‌ளவு ஆயுத‌ங்க‌ளும், வெடி ம‌ருந்துகளும் புலிக‌ளால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.

யூலை 24, 2001 அன்று த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இல‌ங்கையின் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌த்தை தாக்கி மீண்டும் உல‌கை விய‌ப்பில் ஆழ்த்தினார்கள். “காலை 03.30 ம‌ணிக்கு விமான‌த‌ள‌த்தின் மின்னிணைப்பை துண்டித்து எல்லையோர‌ த‌டுப்பு க‌ம்பிக‌ளை அறுத்து விமான‌ நிலைய‌த்தின் உள்ளே நுழைந்த‌ன‌ர் 14 க‌ரும்புலி த‌ற்கொலை ப‌டையின‌ர். இவ‌ர்க‌ள் கொண்டு வ‌ந்திருந்த‌ வெடிம‌ருந்துகளைப் பயன்படுத்தி ப‌தினொரு போர் விமான‌ங்க‌ளையும், இர‌ண்டு ப‌யிற்சி விமான‌ங‌க‌ளையும் இவ‌ர்க‌ள் தாக்கிய‌ழித்தார்கள். இந்த‌ தாக்குத‌லில் மொத்த‌மாக‌ 26 விமான‌ங்க‌ள் முற்றிலுமாக‌வோ (அல்லது) பகுதி‌ அள‌விலோ தாக்கிஅழிக்க‌ப்ப‌ட்ட‌ன‌”.(31)

எட்டு புலிக‌ளும் மூன்று விமான‌ப‌டை அதிகாரிக‌ளும் இந்த தாக்குத‌லில் உயிரிழ‌ந்தார்கள். மீத‌முள்ள‌ ஆறு புலிக‌ளும் அருகிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நுழைந்து ஆட்க‌ளில்லாத‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தை தாக்கினார்கள். இதில்  ஒரு A 340 விமானம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. A330 விமானம் எரிகுண்டினால் தகர்க்கப்பட்டது. மேலும் ஒரு A320 200, A340 300 விமானமும் இந்த சண்டையில் தகர்க்கப்பட்டன‌(31)

 “தாக்குத‌ல்க‌ளின் இறுதியில் 14 போராளிக‌ளும் கொல்ல‌ப்பட்டார்கள். இவ‌ர்க‌ளோடு ஆறு விமான‌ப்ப‌டை அதிகாரிக‌ளும், ஒரு இராணுவ‌ வீர‌ரும் கொல்லப்பட்டார்கள். ஒரு இர‌சிய‌ நாட்டை சேர்ந்த‌ பொறியாள‌ரும் ,12 இராணுவ வீரர்களும், மூன்று பொது ம‌க்க‌ளும் காயமடைந்தார்கள். இலங்கைக்கு ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தின் மூல‌ம் ம‌ட்டும் 350 பில்லியன் அமெரிக்க‌ டால‌ர்க‌ள் இழ‌ப்பு ஏற்ப‌ட்ட‌து. இந்த‌ தாக்குத‌லின் மூல‌ம் ஒட்டு மொத்த‌ இல‌ங்கையின் பொருளாதார‌மும் 1.4% வீழ்ச்சியடைந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டு இறுதியில் மொத்தம் 15.5% குறைந்திருந்த‌‌து.

போர்நிறுத்த‌ம்:

  இருபது ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தின் போது ப‌ல‌ முறை த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் அமைப்பு அமைதிக்காகவும், இனப்பாகுபாட்டை நீக்குவதற்காகவும் சில நிபந்தனைகளை  முன்வைத்து போர் நிறுத்த‌தை வ‌லியுறுத்தியனர். இந்த‌ இராணுவ‌ வெற்றி மூல‌ம் மீண்டும் அவ‌ர்க‌ள் போர் நிறுத்த‌திற்கு கோரிக்கை வைத்த‌ன‌ர். சில‌ தேசிய‌வாதிக‌ளும், ப‌ல‌ ச‌ர்வ‌தேசிய‌ நாடுக‌ளும் போர் நிறுத்த‌ம் வேண்டும் என‌ இல‌ங்கையை நிர்ப‌ந்தம் செய்த‌ன‌. நார்வே போர் நிறுத்த‌தை நோக்கி சில‌ உறுதியான‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொண்ட‌து. ஆனால் புலிக‌ளின் மாபெரும் வெற்றியும், அரசின் பொருளாதார‌ இழ‌ப்புமே இல‌ங்கையை பேச்சுவார்த்தையை நோக்கி த‌ள்ளிய‌து.

  பிப்ர‌வ‌ரி 22, 2002 அன்று பிர‌தம‌ர் ர‌ணில் விக்க‌ர‌மிசிங்கேயும், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிர‌பாக‌ர‌னும் போர் நிறுத்த‌ ஒப்ப‌ந்த்த‌தில் கையெழுத்திட்ட‌ன‌ர். ச‌ம‌ர‌ச‌ தூதுவ‌ரான‌ சான் பீட்ட‌ர்சன் நார்வேயின் வெளியுற‌வு துறை சார்பாக‌ கையெழுத்திட்டார்.

  இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் தாங்க‌ள் த‌ற்போது உள்ள‌ ப‌குதிகளே எல்லைப்ப‌குதியாக‌ குறிக்க வழிவகைசெய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. பெரும‌ள‌வில் ஆயுத‌ங்க‌ளை எடுத்த‌ச் செல்வ‌தோ, தாக்குவ‌தோ த‌டை செய்ய‌ப்ப‌டிருந்த‌து.

த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நிலத்தை நிர்வகிக்க‌ ஒரு இடைக்கால‌ அர‌சை உருவாக்க‌ வேண்டும், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என்ற‌ கோரிக்கைகளை வைத்தார்கள். இந்த‌ போர் நிறுத்த‌ம் “இல‌ங்கை மேற்பார்வைக் குழுவின்” மூல‌ம் க‌ண்காணிக்க‌ப்ப‌ட்ட‌து. இதன் மைய குழுவில் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐசுலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இந்த‌ குழுவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தோரும், வட‌அமெரிக்கா, பிரிட்ட‌ன் நாடுக‌ளைச் சேர்ந்தோரும் இருந்த‌ன‌ர். இத‌ன் த‌லைமைய‌க‌ம் கொழும்பில் நிறுவ‌ப்ப‌ட்ட‌து. அறுப‌து பார்வையாள‌ர்க‌ள் ஆறு பிராந்திய‌ங்க‌ளிலும், இர‌ண்டு க‌ட‌ற்கரை ப‌குதிக‌ளிலும் இருந்த‌ன‌ர். இந்த‌ குழு போர் நிறுத்த‌தை மீறுவ‌தை க‌ண்காணிக்க‌வும், அமைதி காக்க‌‌வும் நிர்ணிய‌க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இவ‌ர்க‌ளுக்கு இரு தரப்புகளை நிர்ப்பந்திக்கின்ற உரிமையோ, கண்டிக்கின்ற உரிமையோ இல்லை. மேலும் சர்வதேச நாடுகள் கொடுக்கும் நிதி உதவிகளை யாருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என ஆலோசனை கூறக் கூட உரிமை இல்லை. பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌ர்க‌ள் இந்த‌ குழு புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌வே க‌ருதினார்க‌ள். இந்த‌ போர் நிறுத்த கால‌த்தில் விவ‌சாய துறை பணிக‌ளும், பொதுக் க‌ட்ட‌மைப்பு வேலைக‌ளும் த‌மிழர் தாயகப்பகுதிகளில் மிகத்துரிதமாக ந‌ட‌ந்த‌ன‌. வெளிநாடுக‌ளை சேர்ந்தவ‌ர்க‌ள் பார்வையிட‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். தமிழீழ‌த்தின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் ந‌ல்ல‌ நிலை காண‌ப்ப‌ட்ட‌து. நிர்வாக‌ ரீதியாக‌வும், பொருளாதார‌ ரீதியாக‌வும் எல்லா பணிகளும் முறையாக நிறைவேற்றப்பட்டன‌‌. இந்த‌ நேர‌த்தில்  சில‌ர் பொதும‌க்க‌ளுக்கு கருத்துரிமையே வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌வில்லை என‌ புலிக‌ளை குற்ற‌ம் சாட்டினார்கள். புலிக‌ள் ஒரு ச‌ர்வ‌தேசிய‌ அர‌சிய‌ல் இய‌க்க‌த்தை இந்த‌ நேர‌த்தில் தோற்றுவிக்க‌வில்லை. பொருளாதார‌ உத‌விக‌ளை அவ‌ர்க‌ள் கோரினார்க‌ள். புல‌ம்பெய‌ர்ந்து வாழும் த‌மிழ‌ர்க‌ள் இத‌ற்கு பெரும‌ள‌வில் உத‌வினார்கள். கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களைக் கொண்ட சமூக நல அரசு உருவாவதை இல‌ங்கை தொட‌ர்ந்து எதிர்த்தால், இராணுவ ரீதியாக இலங்கையை வெற்றி கொள்வதென்று முடிவெடுத்துள்ளார்கள். புலிக‌ள் மிக‌வும் ம‌திக்க‌ப்ப‌ட்டார்க‌ள், அவ‌ர்க‌ள் நேரடியாகவே போர் க‌ருவிக‌ளை சில நாடுகளிடம் இருந்து வாங்கினர். ஆனால் அவர்கள் வட‌அமெரிக்கா/ ஐரோப்பிய‌ நாடுகளிடம் இருந்து நேரடியாக வாங்காமல், அவர்களை எதிர்த்து வந்த பாகிசுதான், சீனா, ஈரானிடமிருந்து நேரடியாக‌ ஆயுத‌ங்க‌ளை வாங்கின‌ர். 2009 மே 29 அன்று டைம்சு இணைய இதழ் ஒன்று புலிக‌ள் 11 வியாபார‌க் க‌ப்ப‌ல்கள் நிறைய‌ உக‌ரைன், சைப்ர‌சு, தாய்லாந்து போன்ற‌ நாடுக‌ளிட‌ம் இருந்து வாங்கிய‌ ஆயுத‌ங்க‌ளை கொண்டுவந்தார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது. 2005ல் அங்கீகரிக்கப்படாத தனி நாடு என்று “தமிழீழத்தை” உலக வங்கியின் இலங்கைக்கான செயலாளர் பீட்டர் கெரால்டு கூட ஒப்புக் கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் படிப்பதற்காக புலிக‌ள் ஒரு த‌மிழ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் க‌ட்டிக் கொண்டிருந்தார்க‌ள். புல‌ம் பெய‌ர்ந்து ஐரோப்பிய‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் சுற்றுப்புற‌ சூழ‌லிய‌லில் முதுக‌லை ப‌டித்து முனைவ‌ர் ப‌ட்ட‌ம் வாங்கிய‌  ஒருவரிடம் நான் பேசிய போது அவர் பின்வருமாறு கூறினார். நான் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என‌து தாய‌க‌த்திலிருந்து வெளியேறினேன். ஆரம்ப காலங்களில் நான் அடிக்கடி தாயக்ம் சென்று வந்தேன். இந்த‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்ட‌தும் அங்கு சென்று நான் விரிவுரையாள‌ர் ப‌ணியில் ஈடுபடலாம் என எண்ணியிருந்தேன் .

  அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. அமைதியான முறையில் போராடி விடுத‌லை அடைய முடியும் என்று நம்பும் போராளி அவர். மேலும் இவர் ஒரு கல்லூரி பேராசிரியரும் கூட‌. புலிக‌ள் ச‌மூக நிர்வாக அமைப்பில் ஆதிக்க‌ம் செலுத்துவ‌தாக‌வும், அவர்க‌ளை எதிர்த்து பேசாத வரையில் தமிழர் தாயக பகுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சிங்கள அரசு பல முறை குண்டு வீசி இந்த அமைதியை சீர்குலைக்கின்றது. புலிகள் தங்களுடைய கடந்த காலங்களில் வன்முறையை உபயோகித்துள்ளதையும், விமர்சனம் செய்த‌ அரசியல் தலைவர்களை கொன்று விடுவதாகவும் இவர் கூறினார். ஆனால் இந்த பேராசிரியர் புலிகள் குழ‌ந்தைகளை  படையில் சேர்த்ததாகவோ, பொது மக்களை ம‌னித‌ கேட‌யமாக பயன்படுத்தியதாகவோ கூறுவில்லை.

 ”புலிக‌ள் ந‌ல்ல அன்பானவர்கள், அறிவானவர்கள். மேலும் இவர்கள் இய‌ற்கை, ம‌க்க‌ள் மீது ப‌ற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள். ஆனால் சில‌ நேர‌ங்க‌ளில் இதற்கு நேர்மாறாகவும் செய‌ல்பட்டுள்ளார்கள். அவ‌ர்க‌ள் ஒரு விசித்திர‌மான‌ ம‌னித‌ர்க‌ளாவ‌ர்”.

போர்நிறுத்த‌ முடிவு:

    2004 டிச‌ம்ப‌ர் 26 அன்று உல‌க‌ம் மிக‌ மோச‌மான‌ ஆழிப்பேரலையையும், நில‌ந‌டுக்க‌த்தையும் ச‌ந்தித்த‌து. இது ரிக்ட‌ர் அள‌வுகோளில் 9.3 என்று ப‌திவாகிய‌து. இந்த ஆழிப்பேரலை தெற்காசியாவை மிகக்கடுமையாக பாதித்தது. இது தான் உல‌கிலேயே இது வ‌ரை ப‌திவான‌தில் அதிகவீரியம் கொண்ட நிலநடுக்கமாகும். மொத்த‌ம் 2,30,000 பேர் இற‌ந்த‌ன‌ர் (அல்லது) காணாம‌ல் போயின‌ர். இது இல‌ங்கையையும் மிக‌ மோச‌மாக‌ பாதித்த‌து. இல‌ங்கையில் ம‌ட்டும் 40,000 பேர் இறந்தார்கள் (அல்லது) காணாம‌ல் போயின‌ர்.15 இல‌ட்ச‌ம் பேர் வீடிழந்தார்கள். அனைத்துல நாடுகளின்‌ உத‌விக‌ள் வ‌ந்து குவிந்த‌ன‌. ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் எதிர்ப்பு கார‌ண‌மாக‌ இதில் அதிக‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌டக்கு மற்றும் கிழ‌க்கு ப‌குதிகளில் வாழ்ந்த‌ பெரும்பான்மையான தமிழருக்கு எந்த உத‌வியையும் அர‌சு செய்ய‌வில்லை. த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் த‌மிழ‌ர் ப‌குதியில் பாதிக்க‌ப்பட்டிருந்த‌‌ இல‌ட்ச‌க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளுக்கு உதவினார்கள். வெளிநாட்டு தன்னார்வ பணியாளர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக‌ புலிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக‌ளை பாராட்டியுள்ளார்கள். இதற்கு ப‌ல சான்றுகள் உள்ளன‌.(32)

  ம‌கிந்த‌ இராச‌ப‌க்சே 2004 ஏப்ர‌ல் 6ல் பிர‌த‌ம‌ராக‌ ப‌த‌வியேற்றார். பின்ன‌ர் இவ‌ர் 2005 ந‌வ‌ம்ப‌ரில் வெறும் 50.3% வாக்குகளை பெற்று அதிப‌ரானார். இவர் “ஐக்கிய‌ ம‌க்க‌ள் விடுத‌லைக் கூட்டணி” என்ற புதிய‌ கூட்ட‌ணியை உருவாக்கினார். இவர் போர் வெறி கொண்டவர். இவர் உருவாக்கிய புதிய கூட்டணியின் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தினார்.(31) த‌மிழ் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ஆழி பேர‌லையால் பாதிக்க‌ப்ப‌ட்ட தமிழர்களுக்காக பணம் கொடுத்த வெளிநாட்டு மீட்பு நிறுவனங்க‌‌ள் இந்த‌ ப‌ண‌த்தை தமிழர்களுக்காக‌ துளி கூட‌ கொடுக்காம‌ல் வேறு செல‌வுக‌ளுக்கு உபயோக‌ப‌டுத்தினார் என‌‌ ம‌கிந்தாவை குற்ற‌ம் சாட்டினார்கள். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஒரு துளி உதவியும் செய்யக்கூடாது என்றும், போர் நிறுத்த‌த்தை முடிவுக்கு கொண்டுவ‌ந்து புலிக‌ளை முற்றிலுமாக‌ அழித்து ஒழிக்க‌வேண்டுமெனவும் வலியுறுத்தியவர் தான். மார்க்சிய, டிராட்சுகிய‌ சிந்த‌னை கொண்ட‌ அர‌சியல்வாதிகளெனவும், அமைதி விரும்பும்(!) புத்த‌ம‌த‌ துற‌விகளெனவும் தங்களை அழைத்துக் கொண்ட‌வர்கள்.

ஐக்கிய‌ ம‌க்க‌ள் விடுத‌லை கூட்ட‌ணி ஐயத்திற்கிடமின்றி ஒரு மிக‌ப்பெரிய‌ கூட்ட‌ணியாகும். இந்த‌ கூட்ட‌ணி 2004ல் முத‌லாளிய‌ ச‌முதாய‌ க‌ட்ட‌மைப்பை காப்ப‌த‌ற்கும், தனிநாடு கோரும் போராளிகளை முற்றிலுமாக‌ அழிக்க‌வும் எல்லா தரப்பினரையும் இணைத்து உருவாக்க‌ப்பட்ட‌து. (33)

 இந்த‌ கூட்ட‌ணியில் முத‌லாளித்துவ‌‌ க‌ட்சிக‌ள், ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌ங்க‌ளை முற்போக்காளர்க‌ள் என்று கூறிக்கொள்ளும் க‌ட்சிக‌ளும் இருந்த‌ன‌. இல‌ங்கை விடுத‌லை க‌ட்சி, ச‌ன‌தா விமுக்தி பேரமுனா, இல‌ங்கை ம‌காச‌ன‌ ப‌க்ச‌யா, இசுலாமிய தேசிய ஐக்கிய கூட்ட‌மைப்பு, ம‌காச‌ன‌ ஏக்சாத் பேர‌முனா, ஐக்கிய‌ தேசிய‌ முண்ண‌னி, ம‌ற்றும் தேசா விமுக்தி ச‌ன‌தா போன்ற‌ க‌ட்சிக‌ள் தொடக்க காலத்தில் இந்த கூட்டணியில் இருந்தவை.

 இல‌ங்கையின் க‌ம்யூனிசுட்டு க‌ட்சி ம‌ற்றும் ல‌ங்கா ச‌ம‌ சாம‌ச்ச‌ க‌ட்சி இந்த‌ கூட்ட‌ணியுட‌ன் செய்து கொண்டதனால் இவ‌ர்க‌ளின் உறுப்பின‌ர்கள் இந்த‌ கூட்ட‌ணியின் சார்பில் போட்டியிட்டார்கள். பின்ன‌ர் இவ‌ர்க‌ளும் ஏப்ர‌ல் 2, 2004ல் இந்த கூட்ட‌ணியுட‌ன் முழுவ‌துமாக‌ இணைந்தார்கள். இந்த‌ கூட்ட‌மைப்பு 45.6 % வாக்குக‌ளை பெற்று 225 இடங்கள்  கொண்ட‌ பாராளும‌ன்ற‌த்தில் 105 இடங்க‌ளை பிடித்த‌‌து.
 
 புத்த‌ம‌த‌ க‌ட்சியான‌ சாதிக‌ க‌ள‌ உறுமய‌ க‌ட்சி 2004 பிப்ரவரியில் ஆர‌ம்பிக்க‌பட்டது , அதே‌ வ‌ருட‌த்தில் ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ஆறு விழுக்காடு வாக்குக‌ளை பெற்று ஒன்ப‌து இடங்க‌ளை கைப்பற்றிய‌‌து. இந்த கட்சி மேற்கூறிய‌ கூட்ட‌ணிக்கு த‌ன‌து ஆத‌ர‌வை வ‌ழ‌ங்கிய‌து. பின்ன‌ர் 2007ல் முழுமையாக‌ கூட்ட‌ணியுட‌ன் இணைந்து ஒரு அமைச்ச‌ர் ப‌த‌வியையும் பெற்ற‌து.

        ஏப்ர‌ல் 3, 2008ல் சாதிக‌ க‌ள‌ உறுமய‌‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் த‌மிழ‌ருக்கு எதிரான‌ போருக்கு தாங்கள் ஆதரவளித்ததற்கான கார‌ண‌ங்க‌ளை வட‌அமெரிக்கா அரசினால் நடத்த பெறும் வானொலி நிலைய‌மான “அமெரிக்காவின் குர‌லுக்கு” வ‌ழ‌ங்கிய‌ நேர்காண‌லில் பின்வருமாறு கூறினார். 

 இலங்கை பாரளுமன்றத்தில் சாதிக‌ க‌ள‌ உறுமய கட்சியின் தலைவரும், பௌத்த துறவியுமான அதுரிலிய ரத்னா கூறுகையில் “நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த போரை முடித்து, மக்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். புலிக‌ளுக்கு எதிரான அரசின் இராணுவ முன்னெடுப்பை நாங்க‌ள் ஆதரிக்கின்றோம்”.

 ”ம‌க்க‌ளின் அமைதி போராளிகுழுக்க‌ளால் சீர்குலைகின்ற‌து. அப்பொழுதெல்லாம் அர‌சிய‌ல் சாச‌ன‌ விதிக‌ளின் ப‌டி அந்த பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌த‌ற்கான‌ உரிமை அர‌சாங்க‌த்திற்கு இருக்க‌ வேண்டும். அரசியல் சாசன விதிப்படி த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் அமைப்பு ஒரு ச‌ட்ட‌விரோத‌ அமைப்பாக‌ இருப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு ஆயுத‌ம் ஏந்த‌ உரிமையில்லை. அவ‌ர்க‌ளை அக‌ற்றுவ‌தே அர‌சின் முத‌ல் வேலையென்றும், உங்க‌ள் வேலையை செய்யுங்க‌ள் என்றும் நாங்க‌ள் அர‌சை வ‌லியுறுத்துகின்றோம்.

” மேற்கூறிய‌ க‌ருத்துகளை வெளியிட்டதால் அவ‌ரை இல‌ங்கை ஊட‌கங்கள் “போரை விரும்பும் துறவி” என்ற முத்திரையை அவ‌ர் மீது குத்தின‌, ஆனால் பெரும்பாலான‌ சிங்க‌ள‌ர்க‌ள் இந்த‌ ம‌ன‌நிலையில் தான் இருந்தார்கள்”.
 
 ”அவ‌ர் பௌத்த சிங்கள இல‌ங்கையின் ஒரு பிர‌ப‌ல‌மான‌ அடையாள‌மாகிவிட்டார். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் உந்த‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ இளைஞ‌ர்க‌ள் 30,000 பேர் இராணுவ‌த்தில் சேர்ந்தார்கள்”. (34)

 இந்த‌ புதிய‌ கூட்ட‌ணியில் உள்ள‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் க‌ருத்துக்களும், பொருளாதார திட்டங்களும் ஒன்றுக்கொன்று எதிராக‌ இருந்த‌ன‌. சில‌ நேர‌ங்க‌ளில் யார் எந்‌த  கொள்கைக‌ளில் உள்ளார்கள், ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு அரசியலை மேற்கொள்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. ஒரு மாத‌ம் ஆய்விற்கு பின் என்னிட‌ம் தோன்றிய‌ கேள்வி எத‌ற்காக‌ த‌ங்க‌ளுக்குள் ப‌ல்வேறு க‌ருத்துக‌ளை கொண்ட‌ இவ‌ர்க‌ள் எல்லாம் புலிகளை அழிப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழனத்தையே அழிக்க வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள் என்ற கேள்வியெழுந்தது. பெரும்பான்மையான சிங்களர்களின் மனதில் வளர்த்து விட‌ப்பட்ட த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ இன‌வெறியே இதன் முக்கிய கார‌ண‌மாகும். ஆனால் இந்த சிங்கள வெறியர்களுடன் தமிழ் அரசியல் கட்சியான‌ ஈழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை க‌ட்சி எப்படி கூட்டணி வைக்க‌முடியும்? மேலும் இந்த‌ க‌ட்சிக்கென்று போராளி‌க்குழுவும் உண்டு. இவ‌ர்கள் இல‌ங்கை அர‌சோடு சேர்ந்து புலிக‌ளை எதிர்த்து வருபவர்கள். இந்த‌ க‌ட்சிக்கு ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரும் உள்ளார். இந்த‌ குழு ஏற்க‌ன‌வே ப‌ல‌ பொதும‌க்க‌ளையும், பி.பி.சி தொலைகாட்சி நிருப‌ரான‌ நிர்ம‌ல‌ராசன் மயில்வாகனம் என்பவரையும் படுகொலை செய்துள்ள‌து. (35)

 போர் நிறுத்த‌ உட‌ன்ப‌டிக்கை எதிர்பார்த்த‌‌ப‌டியே புதிய‌ அர‌சினால் தூக்கியெறிய‌ப்ப‌ட்ட‌து. மேலும் அரசு, இலங்கை மேற்பார்வையாள‌ர்க‌ள் குழு புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌வும் குற்ற‌ம் சாட்டிய‌து. ஆனால் நிலைமையோ த‌லைகீழ், சூன் 30, 2005 வரை அந்த‌ குழு புலிக‌ளின் மீது 3006 குற்ற‌ங்க‌ளையும், அர‌சின் மீது 133 குற்ற‌ங்க‌ளையும் பதிந்துள்ள‌து. மே 2006லிருந்து இந்த அமைப்பு கலைக்கப்பட்ட ச‌ன‌வ‌ரி 2008 வ‌ரை செய‌ல்ப‌ட்ட‌ இந்த‌ குழுவின் நடவடிக்கை ஒரு பக்க சார்பாகவும், ஊசலாட்டமானதாகவும் இருந்தது. மே 11, 2006ல் க‌ட‌ற்புலிகள் நடத்திய‌ தாக்குதலிலிருந்து இவ்வாறு அவ‌ர்கள் செயல்படத் தொடங்கினார்கள் எனக் கொள்ளலாம்.

 இதன் பிறகு தான் ஐரோப்பிய‌ யூனிய‌ன் புலிகள் அமைப்பை தீவிர‌வாதிகள் அமைப்பென்று த‌டை செய்த‌து. அதே சமயம் எந்த சட்டத்தையும் மதிக்காத இலங்கை அரசின் போக்கையும், அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலப்பரப்பில் நிலவும் வன்முறையை கட்டுபடுத்தாதையும் விமர்சித்தது. ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளும் புலிகள் அமைப்பை தீவிரவாதி பட்டியலில் சேர்த்தன. இதனால் புலிக‌ள் ஐரோப்பிய‌ யூனிய‌ன் நாடுக‌ளை சேர்ந்த‌ மேற்பார்வையாள‌ர்க‌ளை வெளியேற சொன்னார்கள், இவ‌ர்க‌ள் வில‌கிய பின்ன‌ர் நார்வே மற்றும் ஐசுலாந்தைச் சேர்ந்த‌ வெறும் இருப‌து உறுப்பின‌ர்க‌ளே க‌ண்காணிப்பு குழுவில் இருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளும் 2008ல் அர‌சால் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌தால் த‌விர்க்க‌ முடியாத‌ போர் தொட‌ங்கிவைக்க‌ப்ப‌ட்ட‌து.
உத‌விய‌ நூல்க‌ள்:
12. ibid” Distant voices, Desparate lives,” The Gaurdian, May 13,2009
15.http://en.wikipedia.org/wiki/solbury_commision
17.”The unspeakable truth” British tamil forum (www.tamilsforum.com), 2008, p.8
18. Http://en.wikipedia.org/wiki/sinhala_only_act
19. Http://en.wikipedia.org/wiki/gal_oya_riots
20.In 1976, Colombo was the summit site , In 1979, the Havana declaration ensured “the national independence, soverginity, heritage integrity and security of Non-aligned countries.
21.  Http://en.wikipedia.org/wiki/janatha_vimukthi_perana
22. www.tamilnation.org/self determination/tamil eelam /9202 revision htm
23. www.sangam.org/taraki/articles 3006/05-03__eelam_ilangai.php?uid=1707
24. Http://en.wikipedia.org/wiki/tamil_united_liberal_front.
My heading of tamil history shows many discrepancies in dates and events. different writing on the LTTE contend it was created at different times, either in 1972,1975 or 1976.
25. Http://en.wikipedia.org/wiki/Buring_of_jafana library
26. http://blackjuly83.com/further freading/htm
27.http://countrystudies.us/srilanka/71.htm
28. http:// Http://en.wikipedia.org/wiki/rajiv_gandhi
29. www.sangam.org/2008/05/Pramedhasa assassination.php?uid+2906.
30. http://www.wsws.org/articles/1999/aug1999/ltte-a2.shtml
31. http:// Http://en.wikipedia.org/wiki/bandaranaike airport attack and http://www.janes.com/security/international security/news/jir/jir010903_1_n.shtml
32. www.tamilnation.org/diaspora/t.sunami/sampavi2.htm
33. http://facebook.com/group.php?gid=111022131146 and http://en.wikipedia.org/wiki/united_peoples_freedon_aliance
34. http://www.voanews.com/english/archive/2008-04/2008-040-03-voa19cfm.
35. http:// Http://en.wikipedia.org/wiki/eelam_peoples_democratic_party and http://news.bbc.co.uk/2/hi/south_asia/2340433.stm

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: