தீவிரவாதிகள் ‍. இலங்கையின் இனவெறி கொடுமைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு. ப‌குதி 4/5. தமிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.


தீவிரவாதிகள் ‍. இலங்கையின் இனவெறிக் கொடுமைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு
 ப‌குதி 4/5. தமிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.

  ” தீவிர‌வாத‌ம் குறித்த‌ செனீவா தீர்மான‌ம் 1987 மே 29 அன்று ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. “இன, பிராந்திய ரீதியில் மக்களை பாரபட்சமாக அணுகும் அரசுகளே தீவிரவாதிகள் என்று இந்தத் தீர்மான‌ம் கூறுகின்ற‌து. இந்த‌ அறிக்கை தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌  கால‌த்தில் அர‌ச‌ தீவிர‌வாத‌ செயல்க‌ளில் ஈடுப‌ட்டுள்ள‌ நாடுக‌ளாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்ட‌வை ” வட‌அமெரிக்கா, இசுரேல், தென் ஆப்பிரிக்கா ம‌ற்றும் ச‌ர்வாதிகாரிகளின் கீழுள்ள இல‌த்தின் அமெரிக்க‌ நாடுகள் ”.

 அர‌ச தீவிரவாதத்தின் கூறுகளாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை: தனது சொந்த மக்களுக்கு எதிரான‌ காவல் அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களை பயத்திலேயே இருக்கும் படி செய்தல், பொதுக் கூட்டங்களை தடை செய்தல், பத்திரிகைத் துறைக்கு கட்டுப்பாடுகள் விதித்தல், பொது மக்களை அடித்தல், துன்புறுத்துதல், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி பெருமளவில் மக்களை கைது செய்தல், வதந்திகளைப் பரப்புதல், பெயருக்காக விசாரணை நடத்துதல், மரண தண்டனை விதித்தல், தொடர்ச்சியாக‌ படுகொலைகளைச் செய்தல்.

“பாதிக்கப்படும் மக்களுக்காக போராடும் குழுக்களின் வன்முறை செயல்களை விட‌, ஒடுக்குமுறை அரசுகள் தங்களிடம் உள்ள படை பலத்தாலும் அதி நவீன ஆயுதங்களாலும் மக்களை அழித்தொழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகரித்து வந்துள்ளது என்பது கண்கூடு”. “….தங்கள் சுய நிர்ணய உரிமையை பெறுவதற்காக ஒரு போராட்டக் குழுவை கட்டமைத்து சர்வதேச மனித உரிமை விதிகளுக்குட்பட்டு காலனீய ஆதிக்கத்திற்கு எதிராகவும், வந்தேறிகளுக்கு எதிராகவும், இனவெறி அரசுகளுக்கு எதிராகவும் போராட ஒடுக்கப்பட்ட‌ மக்களுக்கு உரிமை உண்டு”. (36)

   1983லிருந்து இல‌ங்கை அர‌சு மேற்கொண்ட‌ ந‌ட‌வடிக்கைக‌ளுக்கும், த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளுக்கும் இந்த‌ தீர்மானத்திலுள்ள‌ வாசகங்கள் சாலப் பொருந்தும்.  த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ள் ஒரு குறிப்பிட்ட‌‌ கால‌த்திற்குப் பிற‌கு அனைத்துல நாடுகளின்‌ ம‌னித‌ உரிமை ச‌ட்ட‌ங்க‌ளுக்கு புற‌ம்பாக‌ ந‌ட‌ந்தார்க‌ள்.
  ”தீவிர‌வாத‌ம்” என்ற பெயரால் குறிப்பிடப்படும் ப‌டுகொலைக‌ளும், வ‌ன்முறைக‌ளும் என்னை வ‌ருத்த‌திற்கு உள்ளாக்குகின்ற‌ன‌. இல‌ங்கையில் போரில் ஈடுப‌ட்டுள்ள‌ இர‌ண்டு த‌ர‌ப்புமே என்னை பொருத்த‌வ‌ரை தீவிர‌வாதிக‌ள் தான்.தான் கொலை செய்ய‌ப்ப‌டுவோம் என‌ முன்பே யூகித்த சிங்கள ப‌த்திரிகையாள‌ர் ம‌னிலால் விக்ர‌ம‌துங்க இல‌ச‌ந்தாவின் க‌டைசிக் க‌ட்டுரையை அவ‌ர் ப‌ணி புரிந்த‌ “தி ச‌ண்டே லீடர்” நாளித‌ழ் அவ‌ர் கொல்லப்பட்டு மூன்று நாள் க‌ழித்து வெளியிட்டிருந்த‌து. இவ‌ர‌து இந்த‌ வாச‌க‌ங்க‌ள் ப‌ல‌ முறை ப‌ல‌ ப‌த்திரிகைக‌ளால் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

 ” தீவிர‌வாதிக‌ளாலோ அல்லது அர‌சினாலோ மேற்கொள்ள‌ப்ப‌டும் தீவிர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எல்லாமே இந்நாட்க‌ளில் அன்றாட நிகழ்வாக‌‌‌ மாறி விட்ட‌து. படுகொலை என்பது விடுத‌லையின் க‌ர‌ங்க‌ளை வெட்ட‌ அர‌சின் பிரதான‌ க‌ருவியாக மாறிவிட்டது……”

  “இல‌ங்கை வெளிப்ப‌டையான‌, ம‌த‌ச்சார்ப‌ற்ற‌, சுத‌ந்திர‌ ச‌ன‌நாய‌க‌ நாடாக‌ வேண்டும் என்பதே எங்க‌ள‌து நோக்க‌ம் . நான் ம‌த‌ச் சார்பின்மை அவசியம் என்று கருதக் காரணம் இல‌ங்கை ப‌ல‌ இன‌, ப‌ல பண்பாடுகளைக் கொண்ட‌‌ ச‌மூக‌ங்களைக் கொண்ட நாடு. ம‌த‌ச்சார்பின்மையே எல்லா ம‌க்க‌ளும் ஒன்றாக‌ இணைய‌ உத‌வும் ஒரே த‌ளமாகும்”.

 ”….நாங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ பிரிவினைவாத‌ தீவிர‌வாத‌த்தை நீக்கவேண்டுமென‌‌ எங்க‌ள் கருத்தை வலியுறுத்தியுள்ளோம். அதே நேரம், தீவிர‌வாத‌த்தின் மூல‌ கார‌ண‌ங்க‌ளை கண்டறிவதவும், தமிழின‌ப் போராட்ட‌த்தை “தீவிரவாதம்” என்ற முத்திரை குத்தாமல் ஒரு வரலாற்றுப் பார்வை கொண்டு அணுக‌‌ வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். ”தீவிர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்” என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துள்ளோம். இல‌ங்கை என்ற‌ ஒரே ஒரு நாடு தான் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளின் மீதே தொட‌ர்ச்சியாக‌ குண்டுக‌ளை வீசி படுகொலை செய்துவருகின்றது என்ற கொடுமையையும் ஒளிவு ம‌றைவுமின்றிக் கூறுகின்றோம்”.

 “இந்த பூமியை அழிக்க வந்த “இரத்த வெறி பிடித்த, இரக்கமற்ற” தீவிரவாத இயக்கங்களுள் ஒன்று தான் புலிகள் அமைப்பும். அவ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ இந்த‌ மண்ணில் இருந்து துடைத்தெறியப்ப‌ட‌வேண்டும் என்ப‌தில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. அதே நேர‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமையை ப‌றித்து, அவ‌ர்க‌ளை துப்பாக்கியாலும், வெடிகுண்டுக‌ளாலும் ஈவு இரக்கமின்றி கொன்றழிப்பது தவறு மட்டுமல்ல‌, புத்த‌ரின்  வழிவந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு இது அவ‌மானமும் கூட‌. இது போன்ற படுகொலைக‌ள் ஊட‌க‌ங்க‌ளின் மீதான‌ த‌டையினால் நிரந்தரமாக‌ பொது ம‌க்களிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌…..”

“த‌மிழ் ம‌க்களை சுயமரியாதை அற்ற இர‌ண்டாம் த‌ர‌ குடிம‌க்க‌ளாக மாற்றி, அவ‌ர்க‌ள் வாழ்ந்த‌ வ‌ட‌க்கு, கிழக்கு பிராந்தியங்களில் நிரந்தர‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பை உள்ளாக்கிவிட்டீர்கள். அரசே இது போதாதா?….”

 ”நான் இர‌ண்டு முறை கொடூரமாக தாக்க‌ப்ப‌ட்ட‌தும், என‌து வீடு துப்பாக்கியால் ச‌ல்லடையாக‌ துளைக்க‌ப்ப‌ட்ட‌தும் நீங்க‌ள் எல்லாம் அறிந்த‌தே. அர‌சின் உறுதியான‌ உத்திர‌வாத‌த்தின் பின்னும் இந்த‌ கொடுஞ்செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் இன்னும் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட‌வில்லை அல்லது க‌ண்டுபிடிக்க‌ காவ‌ல் துறை எந்த‌ முய‌ற்சியும் எடுக்க‌வில்லை. இந்தக் கொலை முய‌ற்சிக‌ள் எல்லாம் அர‌சால் ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌வையே என்று கருத ஆதாரமிருக்கிறது. நான் ஒரு வேளை கொல்ல‌ப்ப‌ட்டால் என்னைக் கொன்ற‌து இல‌ங்கை அர‌சாக‌த் தான் இருக்கும்”.

 ”பொதும‌க்க‌ளுக்குத் தெரியாத இன்னொரு உண்மையும் உண்டு. இலங்கை அதிப‌ர் ம‌கிந்தாவும் நானும் கால் நூற்றாண்டு கால‌ நண்ப‌ர்க‌ள்….. என்ன‌ ஒரு வேடிக்கையான உண்மை ம‌கிந்தா! உங்க‌ள‌து இள‌மைக்கால‌த்தில் நீங்க‌ள் க‌ன‌வு க‌ண்ட‌ ந‌ம‌து தேச‌ம் உங்க‌ளால் மூன்றே ஆண்டுக‌ளில் முற்றிலுமாக‌ அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. இந்த‌ தேச‌த்தை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு நீங்க‌ள் ம‌னித‌ உரிமைகளை முற்றிலுமாக‌ குழி தோண்டி புதைத்து விட்டீர்க‌ள். மேலும் வரம்பற்ற ஊழலையும் வ‌ள‌ர்த்து விட்டீர்க‌ள், இதுவ‌ரை ப‌த‌வி வ‌கித்த‌ எந்த‌ ஒரு அதிப‌ரும் கொள்ளைய‌டிக்காத‌ அள‌விற்கு பொதும‌க்களின் ப‌ண‌த்தை நீங்க‌ள் கொள்ளைய‌டித்துள்ளீர்க‌ள்…..”(37)

இல‌ச‌ந்தாவின் ம‌ர‌ண‌ சாச‌ன‌மான‌ இந்த‌ த‌லைய‌ங்க‌ம் வ‌ருவ‌த‌ற்கு முன்பே அவ‌ர் வேலைக்கு வ‌ரும் வ‌ழியில் மோட்டார் வ‌ண்டியில் வ‌ந்த‌ நான்கு ந‌ப‌ர்க‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார். இந்த‌ திட்ட‌மிட்ட‌ கொலைக்குப் பின்னால் இருப்ப‌தாக கருத‌‌ப்ப‌டுப‌வ‌ர் இல‌ச‌ந்தாவின் ந‌ண்ப‌ரின் த‌ம்பியும் போர் செய‌ல‌ரும், வட‌அமெரிக்காவில் பிற‌ந்து  வ‌ள‌ர்ந்தவருமான கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சேவே. கோத்த‌ப‌யாவின் செய‌ல்க‌ளின் மீது விம‌ர்ச‌னம் செய்த‌தால் 2008 டிச‌ம்ப‌ரில் இவ‌ர் “ச‌ண்டே லீட‌ர்” ப‌த்திரிக்கைக்கு தடை விதித்திருந்தார். மேலும் அந்த‌ ப‌த்திரிகையில் ப‌ணிபுரியும் எழுத்தாள‌ர்களுக்கும், அதை விற்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொலை மிர‌ட்ட‌ல் விடுத்துள்ளார்.(38)

 இல‌ச‌ந்தாவின் கொலைக்கு ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர் தான் கோத்த‌ப‌யாவின் இராணுவ‌ம் த‌மிழீழ‌த்தின் த‌லைந‌க‌ரான‌ கிளிநொச்சி ப‌குதியை கைப்ப‌ற்றிய‌து. புலிக‌ள் அங்கிருந்து வெளியேறிய‌ பின்னர் கூட‌ பொது ம‌க்க‌ள் சில‌ர் வாழ்ந்து வந்தார்கள். இராணுவ‌ம் அங்கு வாழ்ந்து வந்த‌‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ம‌க்களைக் கொன்றொழித்த‌து. ஆக‌த்து 25, 2009 அன்று இங்கிலாந்து ஊட‌க‌மான‌ “சேன‌ல் 4″ இல‌ங்கை இராணுவ‌ம் ஒன்ப‌து த‌மிழ் இளைஞ‌ர்க‌ளை நிர்வாண‌மாக்கி சுட்டுக் கொன்ற‌ காணொளியை தனது செய்தி அறிக்கையில் ஒளிப‌ர‌ப்பிய‌து. இந்த வன்முறையை இராணுவ‌ வீர‌ர் ஒருவர் அவ‌ர‌து அலைபேசியின் மூல‌ம் படம் பிடித்துள்ளார். இல‌ங்கையில் ச‌ன‌நாய‌த்திற்காக‌ பாடுப‌டும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் (சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ‌ர்க‌ள்) இந்த‌ காணொளியைக் கைப்ப‌ற்றி “சேன‌ல் 4″ ற்கு அனுப்பி உள்ள‌ன‌ர். அவ‌ர்க‌ளும் காணொளியின் உண்மைத் த‌ன்மையை பரிசோதித்த‌ பின்னரே செய்தியில் வெளியிட்டுள்ளார்க‌ள்.

 வட‌அமெரிக்க‌ அர‌சாங்க‌ம் இல‌ங்கையின் இராணுவத் தாக்குதலைப் பாராட்டிய‌து.” கொழும்பில் உள்ள வட‌அமெரிக்க‌ தூத‌ர‌க‌ம் த‌ன‌து அறிக்கையில் ”வட‌அமெரிக்க‌ அர‌சு இல‌ங்கைக்கும் புலிக‌ளுக்கும் இடையே எந்த‌வித‌ ச‌ம‌ர‌ச‌ பேச்சுவார்த்தையும் ந‌டத்தும் படி வலியுறுத்தாது” என‌க் கூறியது.(39)

 போரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர் சில‌ ச‌துர‌ கிலோ மீட்ட‌ர் ப‌ர‌ப்புதான் புலிகள் வசமிருந்தது. ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் தங்க‌ள‌து வாழ்விட‌ங்க‌ளை விட்டு ச‌ன‌வ‌ரி 20, 2009அன்று இல‌ங்கை இராணுவம் ஏற்ப‌டுத்திய “பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளுக்கு” சென்றார்கள். ஆனால் இந்த முகாம்களோ மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தன‌(நான் இதை எழுதுகின்ற‌ நேர‌த்தில் ஏற‌க்குறைய‌ இர‌ண்டு இல‌ட்ச‌த்து ஐம்ப‌தாயிர‌ம் ம‌க்க‌ள் வாழ்வதற்கு தகுதியற்ற அந்த‌ முகாம்க‌ளில் இன்னும் உள்ளார்கள்). அவ‌ர்க‌ள் அங்கேயே இருக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.  எந்த‌ ஒரு அர‌சிட‌ம் இருந்தும் நிதி உதவியை பெறாத‌‌ நம்பகமான ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளில் ஒன்றான‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை அண்மையில் இந்த‌ முகாம்களைப் ப‌ற்றிய‌ ஆய்வ‌றிக்கை வெளியிட்டுள்ள‌து.

 ”இல‌ங்கை  அர‌சு ஐநாவின் இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட‌‌ மக்களுக்கான சர்வதேச‌ விதிமுறைக‌ளை மீறி இட‌ப்பெய‌ர்வு முகாம்க‌ளில் குடியுரிமைகளை மறுத்து பொதும‌க்க‌ளை அடைத்து வைத்துள்ள‌து”. (40)

போர்க்கால‌த்தில் அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளின் பொதுவான‌ க‌ருத்து:

 ” பொது ம‌க்க‌ளால் அங்கிருந்து ந‌க‌ர‌முடியாது என்க‌றிந்த‌ பின்னும் அர‌சு மீண்டும் எரிக‌ணை வீச்சுக‌ளை தொட‌ர்ந்துள்ளது. பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளில் இருந்தவ‌ர்களின் மீதும் எறிகணைகளை வீசியுள்ள‌‌து. அதிவேக‌ க‌ஃபீர் வ‌கை போர் விமான‌த்தின் சத்தத்தைக் கேட்ட‌ உட‌னே நாங்க‌ள் ஓடிச் சென்று ப‌துங்கு குழிக‌ள் ம‌றைந்துகொள்வோம். சில‌ மாத‌ங்க‌ளுக்கு ப‌துங்கு குழிக‌ளில் உட்கார்ந்திருப்பதே எங்கள் விதியாகிப் போனது…”

மேலும் சர்வதேச மன்னிப்பு சபை கூறுகையில் ”இல‌ங்கை அர‌சு வெளிநாட்டு பார்வையாளர்களை போர்ப் ப‌குதிக்குள் வ‌ருவ‌தை த‌டை செய்த‌த‌ன் மூல‌ம், போர்ப்ப‌குதியை மேலும் த‌னிமை ப‌டுத்திய‌து. 2008 செப்ட‌ம்ப‌ரில் போர் செய‌ல‌ர் கோத்த‌ப‌யா எல்லா ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் ம‌ற்றும் ஐநாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள‌து பொருட்களையும், வண்டிகளையும் எடுத்துக் கொண்டு போர்ப் ப‌குதியை விட்டு உடனே வெளியேறுமாறு அதிகார‌ பூர்வ‌ அறிக்கையை நேர‌டியாக‌வே வெளியிட்டார். மேலும் இந்த‌ அறிக்கையான‌து ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள், எதிர்க‌ட்சிக‌ள், ம‌ற்ற‌ ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் என எல்லா தரப்பினரையும் போர் ப‌குதியான‌ வ‌ன்னியை விட்டு வெளியேற உத்தரவிட்டது.(40)

இல‌ங்கையின் இந்த‌ த‌னிமை ப‌டுத்தும் திட்ட‌த்தை ஜான் பில்ஜ‌‌ர் இவ்வாறு கூறுகின்றார்.

 ” இல‌ங்கை அர‌சான‌து த‌ன‌து நவீன குருவான‌ இசுரேலிட‌ம் இருந்து ஒரு ப‌ழைய‌ பாட‌த்தைக் க‌ற்றிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு கொலையையோ, பாலிய‌ல் வ‌ன்கொடுமையையோ, ச‌ட்ட‌ விரோதச் செய‌லையோ செய்வ‌த‌ற்கு முன்ன‌ர் அந்தப் ப‌குதியிலிருந்து அன்னிய‌ர்க‌ளை வெளியேற்று என்ப‌தே அந்தப் பாடம். இதற்கு ஒப்ப‌ இல‌ங்கை அரசு த‌மிழ‌ரின் ப‌குதியான‌ முள்ளிவாய்க்காலில்(க‌டைசி க‌ட்ட‌ ச‌ண்டை ந‌டை பெற்ற‌ இட‌ம்) அந்நிய‌ர்க‌ளையும், அவ‌ர்க‌ள‌து ஊட‌க‌ங்களையும் த‌டை செய்த‌து. த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதியில் இய‌ங்கி வ‌ந்த‌ ம‌ருத்துவ‌மனையில் இருந்த 75பேரைக் கொன்றுள்ள‌து. இந்த கொலையை செய்தது த‌மிழ் த‌ற்கொலைப் போராளி தான் என்று‌ பொய் சொல்லியது” (12)

 2006-07 ல் அதிப‌ர் இராச‌ப‌க்சே நாட்டின் மொத்த‌ வ‌ர‌வு செலவு தொகையில்(75 கோடி டாலர்) ஐந்தில் ஒரு ப‌குதியான‌ 15 கோடி டால‌ரை போருக்காக‌ செல‌விட்டுள்ளார். த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌த்தில் பெரும்ப‌குதியை கைப்ப‌ற்றிய‌ இராணுவத்திற்கு இசுரேல், பாகிசுதான், ம‌ற்றும் சீனா, இந்தியா போன்ற‌ நாடுக‌ள் போர்க்க‌ருவிகளையும், போர்ப்ப‌யிற்சியையும் கொடுத்து மேலும் ப‌ல‌ப்ப‌டுத்தினார்கள். 2008ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து புலிக‌ளை வெல்லும் வ‌ரையிலும் இல‌ங்கை இராணுவ‌ம் தாங்க‌ள் உண்டாக்கிய‌ பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளில் வாழ்ந்த‌ த‌மிழ் பொது ம‌க்க‌ளின் மீது ச‌ட்ட‌ விரோத‌மாக‌ ப‌ல‌ முறை குண்டுகளையும், எறிகணைகளையும் வீசி ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை கொன்றுள்ள‌து.

“த‌மிழீழ‌த்தின் த‌லைந‌க‌ரான‌ கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு பின்ன‌ரும் அதி ந‌வீன‌ போர் க‌ருவிக‌ளையும், அதிக‌ எண்ணிக்கையிலான‌ வீர‌ர்ளையும் கொண்ட‌ இல‌ங்கை இராணுவ‌த்திற்கு புலிக‌ளின் இராணுவ‌த்தை வீழ்த்த‌ ஐந்த‌ரை மாத‌ங்க‌ள் தேவைப்ப‌ட்டுள்ள‌து. இதில் ப‌ல நேருக்கு நேரான‌‌ க‌ள‌முனைக‌ளும் உண்டு. இதில் சமராடிய புலிப் போராளிகள் மீதும், மீதப்‌ ப‌குதியில் வாழ்ந்த‌ பொதும‌க்க‌ள் மீதும் குண்டுவீச்சுக‌ளையும் தொலை தூர‌ எறிக‌ணை வீச்சுக‌ளையும் மேற்கொண்ட‌து இல‌ங்கை அர‌சு” என‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை குற்றம் சாட்டியுள்ளது.

“க‌டைசி க‌ட்ட‌ போரில் அங்கு வாழ்ந்த‌வ‌ர்க‌ள் உணவோ, குடி நீரோ, அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ உதவியோ இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்”. புலிகளும், அர‌ச‌ ப‌டைகளும்  சரி அனைத்துல மனித‌ விதிகளை பலமுறை மீறியுள்ளார்கள். இந்த சண்டையில் சிக்குண்ட பொது மக்கள் பயத்தோடும், படு காயங்களோடும் பல குடும்ப உறுப்பினர்களை இறந்த துயரத்துடனும், அல்லல்பட்டும் கொண்டிருந்தார்கள். ப‌ல‌ர் த‌ங்க‌ள் வாழ்வையே ப‌றிகொடுத்தும் வ‌ந்துள்ள‌ன‌ர். இல‌ங்கையின் தாக்குத‌லிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளை ம‌னித‌ கேட‌ய‌ங்க‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தியும், குழ‌ந்தைக‌ளை போரில் ஈடுபடுத்தியும் அங்கிருந்து வெளியேறும் ம‌க்க‌ளை தாக்கியும் உள்ள‌து புலிக‌ள் அமைப்பு. இல‌ங்கை அரசோ ம‌க்க‌ள் நெருக்கமாக இருந்த‌ ப‌குதிக‌ளில் எறிக‌ணை வீசியும், ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு வீசி அங்கிருந்த‌ நோயாளிகளையும், ம‌ருத்துவ‌ம‌னை ஊழிய‌ர்களையும், காயமடையவும், படுகொலை செய்யப்படவும் காரணமாயிற்று.(40)

 த‌மிழராக பிறந்த அனைவரையும் கொன்று இல‌ங்கையின் இராணுவ‌ம் வெற்றி பெற்றுள்ள‌து. ப‌ல‌ முத‌லாளித்துவ‌ நாடுகளும், சோச‌லிச‌ நாடுக‌ள் என்று த‌ங்க‌ளை கூறிக்கொள்ளும் நாடுகளும் வழங்கிய‌‌ த‌டையில்லாத இராணுவ‌ ஆத‌ரவே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. இங்கே இந்த போரின்‌ முக்கிய‌ ப‌ங்குதார‌ர்க‌ளை ப‌ற்றி கூறுகின்றேன்.

1) இந்தியா 1987லிருந்து இல‌ங்கைக்கு போர்க்க‌ருவிகள், கதுவி (Rador) ம‌ற்றும் போர் ப‌யிற்சியையும் வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌து. ஆனால் பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில் இந்தியா இல‌ங்கைக்கு என்ன‌ உத‌வி செய்த‌து என்ப‌தை இரகசியமாக வைத்தே வந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களின் மீது நடத்தி வந்த இனவெறி தாக்குதல்களால் இந்தியர்கள் கோபமுற்றொருந்ததே இதற்கு காரணமாகும். இதனால் கொஞ்ச காலத்திற்கு இலங்கைக்கு இராணுவ உதவியை நிறுத்தி வைத்த இந்திய அரசு, 2008ன் இறுதியில் இலங்கை அரசு தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் போரை தொடங்கியவுடன் பன்மடங்கு இராணுவ உதவியளித்தது. ஏப்ர‌ல் 2009ல் மூன்று அதிவிரைவு க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ளையும், ஒரு ஏவுக‌ணையை செலுத்தும் போர்க்க‌ப்ப‌லையும் 500 மில்லியன் டாலர் க‌டனை‌ இல‌ங்கைக்கு வழங்கியது. இவ்வாறு புலிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் உரிமை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. தெற்காசிய‌ பிராந்திய‌த்தில் அது வ‌ரை ஆதிக்க‌ம் செலுத்தி வ‌ந்த‌ இந்தியா வேக‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் சீனாவை ஒதுக்க திட்டமிட்டது. அதற்காகவே 1 விழுக்காடு ம‌க்க‌ள் ம‌ட்டுமே பின்பற்றி வந்த பௌ‌த்த ஆட்சி மதமாக கொண்ட‌ இல‌ங்கைக்கு த‌ன‌து உத‌வியை தொட‌ர்ந்து செய்துவந்தது.இந்தியாவிற்கு என்று திட்டமிட்ட வெளியுறவுக் கொள்கை என்று எதுவுமில்லை. எதிரியின் எதிரி என‌து ந‌ண்ப‌ன் என்ற கொள்கையை பின்பற்றியது இந்தியா.

2) வட‌அமெரிக்கா: பொருளாதார‌ ம‌ற்றும் இராணுவ‌ உத‌விக‌ளை இல‌ங்கைக்கு உள்நாட்டு போரின் ஆர‌ம்ப‌ கால‌க‌ட்ட‌த்தில் இருந்தே வழங்கி வ‌ருகின்ற‌து.(41) இந்து ம‌கா ச‌முத்திர‌ம் க‌ட‌ல் வ‌ழி ச‌ர‌க்கு போக்குவ‌ரத்திலும், எரிபொருள் போக்குவ‌ர‌த்திலும் ஒரு முக்கிய‌ பங்கு வ‌கிக்கின்ற‌து. இத‌னால் அமெரிக்கா 2007 மார்ச் 5ல் இல‌ங்கையுட‌ன் பத்தாண்டு கால‌‌ ப‌ரிவ‌ர்த்த‌னை ஒப்ப‌ந்தத்தில் கையெழுத்திட்ட‌து. வியாபாரத்திற்கும், பரஸ்பர சேவைக்கும் இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் வ‌ழிவ‌கை செய்கிறது. மேலும் வட அமெரிக்கா இராணுவ தளவாடங்களை நிறுத்தி வைக்கவும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கின்றது. ஏற்க‌ன‌வே வட‌அமெரிக்கா இல‌ங்கையின் திரிகோண‌ம‌லை ப‌குதியில் த‌னது வானொலி நிலைய‌மான  “அமெரிக்காவின் குர‌லை” அங்கு நிறுவி அத‌ன் மூல‌ம் தெற்காசிய‌ நாடுகளை உளவு பார்க்கும் வேலையையும் செய்து வ‌ருகின்ற‌து. குறைந்த‌ப‌ட்ச‌ம் 1990க‌ளிலிருந்து வட‌அமெரிக்கா இல‌ங்கைக்கு இராணுவ ப‌யிற்சியையும், போர் க‌ருவிகளையும் பதினைந்து இலட்சம் டாலர் பெருமான ஆயுதங்களை விற்று வ‌ந்துள்ள‌து. இது போர் நிறுத்த‌ கால‌மான‌ 2002ல் 2,60,000 டாலர் என்ற அள‌விற்கு குறைந்து போனது. இதுவும் கூட இராணுவ பயிற்சி கட்டணம் மட்டுமே. இலங்கையின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் புலகாங்கிதமடைந்த அதிபர்.புசு மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்குவதற்காக, கொழும்பிற்கு 29,00,000 டாலர் அளவிற்கு புதிய உதவியை வழங்கினார். வட அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான‌ பென்ட‌க‌ன் மூல‌ம் அரச‌ எதிர்ப்பு குழுக்க‌ளை அழிப்பதற்கான‌ ப‌யிற்சியையும், ஒரு கதுவி (Rador), பல ரோந்து கப்பல்களையும், சில‌ போர் விமான‌ங்க‌ளையும் இலங்கைக்கு வழங்கியது. புஷ்சின் இர‌ண்டாவ‌து ஆட்சி கால‌த்தில் வட‌அமெரிக்கா ஆப்கனிலும், ஈராக்கிலும் போரில் ஈடுப‌ட்டிருந்த‌தால் ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கான‌ உத‌விக‌ளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தமேற்பட்டது. இத‌ற்கு புல‌ம்பெய‌ர் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளின் எதிர் வினைக‌ளும் ஒரு கார‌ண‌மாகும். வட‌அமெரிக்க‌ காங்கிர‌சு சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறையையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்தது. அர‌சின் எல்லைபாதுகாப்பு ப‌டையில் குழ‌ந்தைக‌ளை ப‌ணிய‌ம‌ர்த்திய‌தையும் இது க‌ண்டித்த‌து. 2008ல் 1.45 மில்லியன் டாலர் மதிப்புள்ள‌ போர் க‌ருவிகளையும், ப‌யிற்சியையும் உள்ளிட்ட‌ 7.4 மில்லியன் டாலட் மதிப்பு கடனை இல‌ங்கைக்கு வழங்கிய‌‌து. போரின் இறுதி க‌ட்ட‌த்தில் ம‌ட்டுமே ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ந‌டைபெறுவ‌தாக‌ கூறியது வட‌அமெரிக்கா. மக்களை பாதுகாப்பதற்காக அல்லாமல் சீனவை இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரு நோக்கித்திற்காக தான் இதை கூறியது வட அமெரிக்கா. எந்த‌ ஒரு நேர‌த்திலும் போரை நிறுத்துவ‌ற்கான‌ முய‌ற்சியை வ‌ட‌அமெரிக்கா மேற்கொண்டதே இல்லை.
3) இசுரேல் இல‌ங்கை அர‌சின் அர‌சிய‌ல் ஆலோச‌க‌ராக‌ ப‌ல‌முறை கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. 1970க‌ளில் பாலசுதீன பகுதிகளில் இசுரேலில் விரிவாக்கத்தை கண்டித்து இசுரேலுடனான அரசுமுறை உறவுகளை இலங்கை துண்டித்து விட்டது. இருந்த போதிலும் இலங்கையிலுள்ள வட அமெரிக்க தூதரகத்தினுள் இசுரேலில் இரகசிய அலுவலகம் இயங்கி வந்தது. மே 2000ல் இலங்கை இசுரேலுடனான அரச உறவுகளை புதுப்பித்து கொண்டது. இல‌ங்கையில் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த‌‌ அர‌சுக‌ள் இசுரேலுட‌ன் மரைமுகமாக ந‌ட்புற‌வையே கொண்டிருந்த‌ன‌. இசுரேல் த‌ன‌து உள‌வுப‌டை வீர‌ர்க‌ளையும், தீவிர‌வாத‌ எதிர்ப்பு சிற‌ப்பு காவ‌ல்ப‌டை வீர‌ர்க‌ளையும் இல‌ங்கைக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து வ‌ந்த‌து. மொசாட் அமைப்பே இசுலாமிய‌ர்களுக்கும், த‌மிழ‌ர்க‌ளுக்கும் இடையே பிர‌ச்ச‌னையை தோற்றுவித்தது. இல‌ங்கை இராணுவ‌த்தின் யானையிர‌வு தோல்விக்கு பின்ன‌ர் இசுரேல் 16 க‌ஃபீர் வ‌கை அதிவேக‌ போர்விமான‌ங்க‌ளையும், கப்பலை தாக்கியழிக்கும் போர் விமானங்களையும், சில‌ செய‌ற்கைகோள் புகைப்ப‌ட‌ க‌ருவிகளையும், ஒரு சிற‌ப்பு ஆலோச‌னை குழுவையும், தொழில்நுட்ப‌ குழுவினரையும் இல‌ங்கைக்கு அனுப்பிய‌து. இசுரேலின் வீர‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ போரில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌த்தில் இடம் பெற்றிருந்தார்கள், இசுரேல் விமானிக‌ளே க‌ஃபீர் வ‌கை விமான‌ங்க‌ளை ஓட்டியுள்ளார்கள், அவற்றை ஓட்டுவதற்கான பயிற்சியை அளித்தும் வந்துள்ளார்கள். போரின் இறுதி க‌ட்ட‌த்தில் புலிக‌ள் ஒரு க‌ஃபீர் போர் விமான‌த்தை சுட்டு வீழ்த்தினார்கள். போரின் இறுதிக‌ட்ட‌த்தில் இல‌ங்கை பிர‌த‌ம‌ர் விக்ர‌நாய‌கே இசுரேலுக்கு சென்று பெருமளவு போர்க‌ருவிக‌ளை வாங்குவதற்கான‌‌ ஒப்ப‌ந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.(42)

4) பிரிட்ட‌ன் ம‌ற்றும் ஐரோப்பிய நாடுக‌ள்: இலங்கைக்கு போர்க்கருவிகளை வ்ழங்கியதால் பிரிட்டனின் ஏற்றுமதி 60% உயர்ந்ததாக‌ சான் பிளைஞ‌ர் கூறுகிறார்.(12) 2008ல் பிரிட்ட‌ன் அர‌சு 1.4 மில்லியன் பௌண்ட் பெறுமதியான‌ போர் க‌ருவிகளை இலங்கைக்கு ஏற்றும‌தி செய்ய‌ அங்கீகாரமளித்தது. பிரான்சு ரோந்து ப‌ட‌குக‌ளை வ‌ழ‌ங்கிய‌து. ம‌ற்ற‌ ஐரோப்பிய‌ நாடுகளும் சிறிய‌ அளவில் இருந்தாலும் தொட‌ர்ச்சியான இராணுவ உத‌வியை அளித்து வ‌ந்த‌ன. ஏற்கனவே இல‌ங்கை அரசின் முக்கிய‌‌ நட்பு நாடுகள் தேவையான‌‌ உதவியை அளித்திருந்ததால், ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு பெரிய‌ அளவில் உதவ‌ வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

5) இலங்கைக்கு பொருளாதார உதவி அளிப்பதில் முதலிடத்தில் சப்பானே இருந்து வந்தது. 2008.09ல் தான் சீனா அந்த இடத்தை பிடித்தது. சப்பான் தொழில்நுட்ப உதவியையும், பெரும் பணத்தையும் கடன்களாக இலங்கைக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்தது. குறிப்பாக‌ 1997ல் இது 52 மில்லியன் டாலர் க‌ட‌ன்க‌ளை வழ்ங்கிய‌து. கூட்டுத் தொழில் முயற்சிகளுக்காக 20 மில்லியன் டாலரை கொடுத்துதவியது. இது 2001ல் 310 மில்லியன் டாலர் அள‌விற்கு அதிக‌ரித்த‌து. மேலும் ச‌ப்பான் அர‌ச‌ தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ ரூப‌வாகினி அமைக்க‌ உத‌விய‌து. ச‌ப்ப‌னின் உத‌விக‌ள் போர் உத‌விக‌ள் அல்ல .ஆனால் இந்த‌ உத‌விக‌ள் மறைமுகமாக‌ இல‌ங்கையை த‌ன‌து வ‌ர‌வு செல‌வில் பெரும‌ள‌வு ப‌ங்கை போருக்காக ஒதுக்க‌ உத‌விய‌து.(43) ம‌ற்ற‌ ஆசிய‌ நாடுக‌ளும் ச‌ப்பானை போல‌வே பொருளாதார‌ உத‌விக‌ளை இல‌ங்கைக்கு வ‌ழ‌ங்கி வந்த‌ன‌.

6) ஈரான்: இல‌ங்கை அர‌ச‌ க‌ருவூல‌த்தின் செயல‌ர் உல‌க‌ வ‌ங்கியிட‌ம் உங்க‌ள் உதவி (இத்தனை நிபந்தனைகளுடன்) எங்க‌ளுக்கு தேவை இல்லை என‌ போன‌ வ‌ருட‌ம் கூறினார்.(44) புலம் பெயர்ந்த மக்களின் கண்டனக்குரல்கள் எழுந்த போது அனைத்துல நாடுகளாக‌‌ த‌ங்க‌ளை அடையாளம் காட்ட விரும்பும் வட அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் இலங்கைக்கு அதுவரை அளித்து வந்த‌ உத‌விக‌ளை குறைத்து கொண்டன. த‌மிழ் ம‌க்கள் மீதான வன்முறையை‌ கேள்வி கேட்க தொடங்கினார்கள். ஆனால் இல‌ங்கையோ ஒரு நாட்டை ம‌ற்றொரு நாட்டிற்கு எதிராக திருப்பிவிட்டு விளையாடியது. இந்தியாவை வை‌த்து பாகிசுதான்,சீனாவையும், சீனாவை வைத்து வட அமெரிக்காவையும், இசுரேல், ஈரானை வைத்து லிபியாவையும், அணிசேரா நாடுக‌ளை வைத்து மேற்குல‌குக்கு எதிராக‌வும் விளையாடிய‌து . ஈரான் இல‌ங்கையின் எண்ணைய் சுத்திக‌ரிப்பிற்காக 1.9 பில்லியன் டாலரை கடனாக வ‌ழங்கிய‌து. மேலும் நீர்மின் திட்ட‌த்திற்கு 450 மில்லியன் டாலரை தானமாக‌ வ‌ழ‌ங்கிய‌து. லிபியா அர‌சும் இல‌ங்கைக்கு 500 மில்லியன் டாலர் க‌ட‌னை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்த‌து. லிபியா ஈரானுக்கு எதிரான‌ கொள்கைகையை கொண்ட‌ அரசு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

7) பாகிசுதான் 2008ல் சீனா கொடுத்த தைரியத்தினால் இல‌ங்கையின் போர்ச் சிக்கலுக்குள் நுழைந்தது. 2009ன் ஆர‌ம்ப‌த்தில் 100 மில்லியன் டாலர் பெறுமானமான போர்க்க‌ருவிக‌ளை இலங்கைக்கு வழங்கியது. இல‌ங்கை சீனாவிலிருந்து புதிதாக‌ வாங்கிய‌ விமான‌ங்க‌ளை ஓட்ட பாகிசுதான் ப‌யிற்சி அளித்த‌து. பாகிசுதான் அமெரிக்காவுட‌ன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்க‌ன் போரில் வட அமெரிக்காவுடன் இணைந்து கொண்டது. இந்த‌ போரில் பாகிசுதான் கலந்து கொண்டதால் மக்களிடையே பிரிவினை ஏற்பட்டது. பாகிசுதான் கியூபா, ஆல்பா நாடுகளுக்கு தோழமை நாடாகும். ஒரே நேர‌த்தில் அணிசேரா கூட்ட‌மைப்பிலும், உல‌க‌த்திலேயெ பெரிய‌ தீவிர‌வாத‌ நாடான வட அமெரிக்காவுடன் இணைந்தும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்ற‌து பாகிசுதான்.

8) சீனா 2005ல் இல‌ங்கைப் போரின் பங்குதாரராக உள்ளே நுழைந்த‌து. சீனா வட‌ அமெரிக்காவை அடுத்தபடியாக எரிபொருள் பயன்பாட்டில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள நாடாகும். எண்ணெய் போக்குவ‌ர‌த்திற்கான‌ முக்கிய‌ பாதைக‌ள் ம‌ற்றும் க‌ட‌ல் வ‌ழிக‌ளை கைப்பற்ற‌ துவ‌ங்கிய‌து சீனா. அமெரிக்காவின் இல‌ங்கையுட‌னான‌ ஒப்ப‌ந்த‌த்திற்கு ஒரு மாதத்திற்கு பிற‌கு சீனாவின் “பாலி டெக்னால‌சி” என்ற‌ நிறுவ‌ன‌ம் 36.5 மில்லியன் டாலர் பெருமானமான போர் க‌ருவிக‌ளை இல‌ங்கைக்கு வழங்கியது. சீனாவின் உள‌வு நிறுவ‌ன‌த்துட‌ன் தொட‌ர்பு கொண்டுள்ள‌தாக‌ க‌ருத‌ப்ப‌டும் குவேய் நிறுவ‌ன‌ம் 150 மில்லியன் டாலர் அள‌விற்கு இல‌ங்கையுட‌ன் தொழில் ஒப்ப‌ந்த‌ம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி நாட்டின் எல்லா பகுதிகளிளும் அரசு மேற்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு பணிகளை குவேய் நிறுவனம் மேற்கொள்ளும். இதில் மிக‌ முக்கிய‌மான‌து. இல‌ங்கையின் தெற்கு துறைமுகப்ப‌குதியில் உள்ள ஹ‌ம்ப‌ன்தோட்டா என்ற‌ ப‌குதியில் சீனா த‌ன‌து எண்ணெய் போக்குவ‌ர‌த்திற்காக‌வும், க‌ட‌ற்ப‌டை க‌ப்பல்க‌ளை நிறுத்த‌வும், எரிபொருள் நிர‌ப்ப ஒரு துறைமுக‌த்தை க‌ட்டமைக்க பெரும் ப‌குதியை இல‌ங்கை வ‌ழ‌ங்கிய‌து.இந்த‌ திட்ட‌த்திற்கு இல‌ங்கை அனும‌திய‌ளித்த‌திலிருந்து புலிகளை வீழ்த்துவதற்காக இல‌ங்கையுட‌ன் ஒத்துழைக்க‌ ஆர‌ம்பித்த‌ சீனா 2007லிருந்து போர் க‌ருவிகளையும், கடன்களையும், அரசுமுறை ஒத்துழைப்பையும் மேற்குலகின் எதிர்வினை ப‌ற்றிய‌ க‌வ‌லையே இல்லாம‌ல் நல்கி வந்துல்ளது என‌ டைம்சு (பிரிட்ட‌ன்) நாளித‌ழ் எழுதியுள்ள‌து.(45) 2007ல் உத‌விய‌தை விட‌ ஐந்து ம‌ட‌ங்கு அதிக‌மாக‌ இல‌ங்கைக்கு உத‌விய‌து சீனா.இந்த உதவிகளை கொடுக்கும் போது சீனா இல‌ங்கை தொழிலாளர்களின் நிலை, சிறுபான்மையின‌ரின் நிலை ப‌ற்றிய‌ எந்த‌வித‌ கேள்வியையும் எழுப்பவில்லை. ஏப்ர‌ல் 2007ல் இல‌ங்கை சீனாவின் போர் க‌ருவிக‌ளை வாங்க‌ ஒப்ப‌ந்த‌ம் செய்த‌து. சீனா ஆறு எஃப் 7 இர‌க‌ போர் விமான‌ங்க‌ள், ஒரு நீர்மூழ்கி க‌ப்ப‌ல், விமான‌ எதிர்ப்பு பீர‌ங்கிக‌ள், ம‌ற்றும் டாங்கிக‌ள், கதுவிகள் உள்ளிட்ட போர்க்கருவிகளை வ‌ழ‌ங்கிய‌து. ஒரு எஃப் இர‌க‌ போர் விமான‌ம் போரின் இறுதி க‌ட்ட‌த்தில் புலிக‌ளால் சுட்டு வீழ்த்த‌ப்ப‌ட்ட‌து. போர் முடிவ‌டைந்த‌ பின் யூன் 2009ல் சீனா 891 மில்லியன் டாலர் செலவு பிடிக்கும் நோரோச்சோலை அனல் மின் திட்ட‌த்திற்கு இலங்கையும் ஒப்ப‌ந்தம் செய்த‌து. சீன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் 33 வ‌ருட‌ கால‌த்திற்கு பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ள் அமைக்க‌ இல‌ங்கையுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்த‌ன. 28 மில்லியன் டாலர் அள‌விற்கு மூன்று வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ கியூசென் நிறுவ‌ன‌ம் மிரிகாமா பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌த்தில் முத‌லீடு செய்ய‌ ஒப்ப‌ந்த‌மிட்ட‌து. இல‌ங்கையில் முத‌ல் முறையாக‌ ஒரு வெளிநாட்டு நிறுவ‌ன‌த்திற்கு ஒரு இட‌த்தை கொடுத்த‌து இதுவே முதல் முறை.‌ இல‌ங்கையில் பெரும‌ள‌வு திட்ட‌ங்க‌ளை சீனா தொட‌ர்ந்து வருவது வட‌அமெரிக்க இந்திய கூட்டிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

   போரின் க‌டைசி வார‌ங்க‌ளில் இல‌ங்கை இராணுவ‌ம் சீன‌ போர்க‌ருவிக‌ளை ப‌ய‌ன் ப‌டுத்தி மீத‌முள்ள‌ த‌மிழர் ப‌குதிக‌ளில் திட்ட‌மிட்டு‌ குண்டுக‌ளை வீசிய‌து. இறுதி ஐந்து நாட்க‌ளில் ம‌ட்டும் 20,000 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ கூறுகின்ற‌து பிரிட்ட‌ன் ஊட‌க‌ம் ஒன்று. ஆனால் அதிப‌ர் இராச‌ப‌க்சேவோ “பொது ம‌க்க‌ள் மீது இராணுவ‌ம் குண்டே வீச‌ வில்லை என்றும், ஒரு தமிழர் கூட இற‌க்க‌‌வில்லை என்றும் கூறிவ‌ருகின்றார். (46)

ஏகாதிப‌த்திய‌ சார்பு ஊட‌க‌மான‌ டைம்சின் கூற்று ப‌டி ” செய்மதி(satelite) புகைப்ப‌ட‌ங்க‌ள், அர‌ச‌ ஆவ‌ண‌ங்க‌ள் , நேரில் க‌ண்ட‌வ‌ர்க‌ளின் சாட்சிய‌ங்களைக் கொண்டு இலங்கையை ப‌ற்றிய‌ புதிய‌ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியில் 5 ச‌துர‌ கிலோமீட்ட‌ர் ப‌ர‌ப்புக்குள் வாழ்ந்த‌ மூன்று இல‌ட்ச‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் மீது அர‌சு தொட‌ர்ச்சியாக‌ இறுதி மூன்று வார‌ங்க‌ள் குண்டு வீசியுள்ள‌து. இந்த‌ மூன்று வார‌த்தின் ஒவ்வொரு நாளிலும் ஏற‌க்குறைய‌ 1,000 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான‌ புலி த‌லைமைக‌ள் வீழ்ந்த‌பின் ச‌ர‌ண‌டைந்த‌ புலிக‌ளையும், பெரும்பாலான‌ ம‌க்க‌ளையும் அர‌சு படுகொலை செய்துள்ள‌து.

 டைம்சு ஊட‌க‌த்திற்கு செய்தி சேக‌‌ரித்து கொடுப்ப‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ அருட்த‌ந்தை. அம‌ல்ராச் மே 16 வ‌ரை போர் ந‌ட‌ந்த‌ ப‌குதியில் இருந்துள்ளார். இந்த கட்டுரை வெளிவரும் மே 29 அன்று மானிக்ஃபார்ம் எனப்படும் இராணுவ முகாமில் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

 ஏகாதிப‌த்திய‌ சார்பு ஊட‌க‌மான‌ “பிரிட்ட‌னின் போர்குழுக்க‌ள்” ப‌த்திரிகையின் ஆசிரிய‌ர் இல‌ங்கை அர‌சே இட‌ப்பெய‌ர்ந்து முகாம்க‌ளுக்கு சென்ற‌ ம‌க்க‌ளை கொன்ற‌து என்றும் கொன்றவர்கள் புலிக‌ள் அல்ல‌ என்றும் கூறியுள்ள‌து. இதை அர‌சு விமான‌ குண்டுவீச்சு மூல‌மும், த‌ரைப்ப‌டையின் மூல‌மும் ந‌ட‌த்தியுள்ள‌து.

“சீனா, எகிப்து, கியூபா, இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் ஆதரவைக் கொண்டு ஐக்கிய நாடுக‌ள் ச‌பையின் ம‌னித‌ உரிமைக் குழுவில் ம‌னித‌ உரிமை மீற‌ல்கள் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை பெற்றிபெற்றுள்ள‌‌து” என‌ த‌ன‌து அறிக்கையை முடிக்கின்ற‌து டைம்சு நாளித‌ழ்.

குறிப்புக‌ள்:
12. Ibid. John Pilger, “Distant Voices, Desperate Lives,” New Statesman, May 13, 2009.
36. htt://i-p-o.org/GDT.htm
37.http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm
38. http://en.wikipedia.org/wiki/Gotabhaya_Rajapaksa
39. http://www.globalresearch.ca/index.php?context=va&aid=11769
40. http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18368.
41. http://www.cdi.org/PDFs/CSBillCharts.pdf
42. http://www.dailymailnews.com/dmsp0204/dm44.html
http://niqnaq.wordpress.com/2009/05/10/wayne-madsen-on-israel-and-sri-lanka/ http://adamite.wordpress.com/2009/06/05/sri-lanka-israels-dirty-secrets/
43. http://www.tamilnation.org/tamileelam/aid/index.htm
44. http://ipsnews.net/news.asp?idnews=42075 and http://www.smh.com.au/opinion/sri-lanka-takes-a-step-to-the-east-20090522-bi83.html
45. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6207487.ece
46. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece and
http://www.channel4.com/news/articles/politics/international_politics/tamil+medic+describes+camp+conditions/3346512

மூல‌ப் பிர‌தி: http://www.ronridenour.com/articles/2009/1120-rr.htm

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: