ஒக்ரோபர், 2010 க்கான தொகுப்பு

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?


  காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன.  கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.

 ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார். 
  என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..

……..

அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,

சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.

த‌ங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.

(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)
……………………………

  இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது.  அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
  பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து  காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.


  இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
  காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.  அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.

 அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
 இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.
நட்புடன்
ப.நற்றமிழன்.

Advertisements
Advertisements
%d bloggers like this: