சூழிய‌ல் குற்றவாளி ஸ்டெர்லைட்டுட‌ன் கைகோர்க்கும் நீதித்துறையும், அர‌சும். த‌மிழாக்க‌ம். ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.


சுற்றுச்சூழ‌ல் ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ திற‌க்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டெர்லைட் தூத்துக்குடி ஆலையை மூட‌க்கோரி ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு நேச‌ன‌ல் ட்ரஸ்ட் (National Trust) என்ற அமைப்பு பதிவு செய்த‌ வ‌ழ‌க்கின் இறுதி தீர்ப்பை செப்ட‌ம்ப‌ர் 29,2010 அன்று சென்னை உயர்நீதி ம‌ன்ற‌ம் வ‌ழ‌ங்கிய‌து. 1995ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ சுற்றுச்சூழ‌ல் ஆணைய‌த்தின் இசைவு(Permission) ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. சுற்றுச்சூழ‌ல் ச‌ட்ட‌த்தின் ப‌டி இந்த‌ ஆலையால் ஏற்ப‌டும் சுற்றுச்சூழ‌ல் மாறுபாடுக‌ளை க‌ண்ட‌றியும் க‌ணிப்பு ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வில்லை, மேலும் அங்கு பொதும‌க்களின் க‌ருத்து கேட்கும் கூட்ட‌மும் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வில்லை. மேலும் இவ்வாறு இந்த‌ ஆலைக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட உரிம விதிக‌ளையும் இந்த‌ ஆலை மீறியுள்ள‌து. இந்த‌ விதிமுறை மீற‌ல்க‌ள் சுற்றுச் சூழ‌ல் அமைச்ச‌க‌த்தாலும், மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தாலும் பலமுறை க‌ண்டும் காணாம‌ல் விட‌ப்ப‌ட்டுள்ளது.

  இந்த‌ ஆலைக்கும் எதிராக‌வும், பின்ன‌ர் அத‌னால் ஏற்ப‌ட்டு வ‌ரும் சுற்றுச்சூழ‌ல் மாசுபாடுக‌ளுக்கு எதிராக‌வும் போராடிவ‌ரும் தூத்துக்குடி ம‌க்க‌ளுக்கு இந்த‌ தீர்ப்பு ஓர‌ள‌வு ம‌கிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌தாகும். இந்த‌ ம‌கிழ்ச்சியும் கூட இவர்களுக்கு இர‌ண்டு நாட்கள் மட்டுமே நீடித்த‌து. ஒக்டோப‌ர் 1,2010 அன்று சென்னை உய‌ர்நீதி ம‌ன்ற‌ தீர்ப்பிற்கு உச்ச‌நீதிம‌ன்ற‌ம் த‌டையுத்த‌ர‌வைப் பிற‌ப்பித்த‌து. இப்பொழுதும் அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் த‌ன்முனைப்புட‌ன் (Self interest) போராடி வ‌ருகின்றார்க‌ள். உச்ச‌நீதி ம‌ன்ற‌த்தின் தீர்ப்பு எப்ப‌டி இருந்தாலும் இந்த‌ கிராம ம‌க்க‌ள் தான் அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌டுவார்கள். கிராம‌ ம‌க்க‌ள் கூறுகையில் “பாதி பாதிப்பை ஏற்கனவே செய்து விட்டார்க‌ள். எங்க‌ள‌து கிராம‌த்தின் நில‌த்த‌டி நீர் மாச‌டைந்து குடிப்ப‌த‌ற்கு உப‌யோக‌ம‌ற்ற‌ நிலையில் உள்ள‌து. உச்ச‌நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு வ‌ருவ‌த‌ற்கு முன்பு ஒட்டுமொத்த‌ தூத்துக்குடியின் குடிநீரும்(நிலத்தடிநீர்) மாச‌டைந்து தூத்துக்குடியில் மிக‌ப்பெரிய‌ குடிநீர் த‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். அப்பொழுது எங்க‌ளால் என்ன‌ செய்ய முடியும்? எங்க‌ள‌து நெஞ்சில் அடித்து அழுது கொண்டு இந்த‌ ந‌க‌ர‌த்தை விட்டு வெளியேற வேண்டிய‌து தான்.எங்க‌ளின் ந‌ல்ல‌ உட‌ல்நிலையை, தூய்மையான‌ குடிநீரை, நோய்வாய்ப்ப‌ட்டுப் போன‌ எங்க‌ள‌து குழ‌ந்தைக‌ளின் ந‌ல்ல‌ உட‌ல்நிலையை எந்த‌ நீதிம‌ன்ற‌த்தால் திருப்பி கொடுக்க‌ முடியும்?” என‌ கேட்கின்றார் மேல‌விட்டானைச்(ஆலைக்கு அருகில் உள்ள‌ கிராமம்) சேர்ந்த‌ முத்துராச். இவ‌ற்றை எல்லாம் ஒழுங்கு ப‌டுத்த‌ வேண்டிய சுற்றுச்சூழ‌ல் ஆணைய‌த்தின் த‌வ‌றுக‌ள், நீதிம‌ன்ற‌த்தின் ஒரு த‌லைப‌ட்ச‌மான‌ தீர்ப்புக‌ள் என‌ எல்லாம் சுற்றுச்சூழ‌லை மாச‌டைய‌ச் செய்துவ‌ரும் இந்த‌ ஆலைக்கு ப‌க்க‌ப‌ல‌மாக‌வே உள்ள‌து. இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் ஒட்டுமொத்த‌ ச‌மூக‌மும், சுற்றுச்சூழ‌லும், எதிர்கால‌ ச‌ந்தியின‌ர் என‌ எல்லா த‌ர‌ப்பின‌ரும் அர‌ச நிர்வாக‌த்தால் கைவிட‌ப்ப‌ட்டு ந‌டுத்தெருவில் நிறுத்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

     ஸ்டெர்லைட் ஆலையின் அருகில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் கூறுகையில் “சூழ‌ல் ச‌ட்ட‌ங்க‌ளை மீறும், சுற்றுச்சூழ‌லை மாசுப‌டுத்தும் இதுபோன்ற ஆலைக‌ள் மீது எந்த‌ ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காத‌ த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் தான் இவை அனைத்திற்கும் மூல‌ கார‌ண‌மாகும்” என்கின்றார்க‌ள். தூத்துக்குடியில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ விதிமுறை மீற‌லுக்கு எதிராக‌ போராடி வ‌ரும் புஷ்ப‌ராய‌ன் கூறுகையில் “மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம்” தான் இது போன்ற பெரிய‌ தொழிற்சாலைக‌ளின் பின்னால் நின்றுகொண்டு, அவ‌ர்க‌ளின் விதிமுறை மீற‌ல்க‌ளை க‌ண்டும் காணாம‌ல் இருந்தும். மேலும் சட்டத்திற்கு எதிராக இயங்கிவரும் இதுபோன்ற‌‌ தொழிற்சாலைகளுக்கு எந்தவித‌ பாதிப்பும் வ‌ராம‌ல் பாதுகாத்தும் வ‌ருகின்ற‌து” என்கின்றார். இந்த‌ ஸ்டெர்லைட் ஆலை 800 கோடி அமெரிக்க‌ டாலர் ம‌திப்புள்ள‌ வேதாந்தா குழும‌த்தைச் சேர்ந்த‌தென்ப‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

ஸ்டெர்லைடினால் தொட‌ரும் சுற்றுச்சூழ‌ல் சீர்கேடு:
                
                      ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நீங்க‌ள் சுற்றிப்பார்த்தால் சுற்றுச்சூழ‌ல் சீர்கெட்டு இருப்ப‌தை உங்க‌ளால் முழுவ‌துமாக‌ உண‌ர‌முடியும். அந்த‌ அள‌வு சுற்றுச்சூழ‌ல் சீர்கேட்டை ஸ்டெர்லை ஆலை நிக‌ழ்த்தியுள்ள‌து. தொழிற்சாலைக்கு அருகிலுள்ள‌ கிராம‌ங்க‌ளில் நாம் நுழையும் போதே ந‌ம‌க்கு வெள்ளை நிற‌ ஜிப‌ச‌க் க‌ழிவும், க‌ருப்பு நிற‌ இரும்பு க‌ழிவுக‌ளும் குவிக்க‌ப்ப‌ட்டு ம‌லை போல காட்சிய‌ளிப்ப‌தை நாம் காண‌லாம். அருகிலுள்ள‌ மேல‌விட்டான், தெற்கு வீர‌பாண்டிய‌புர‌த்தில் கிடைக்கும் நில‌த்த‌டி நீரின் நிற‌ம் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் இருப்ப‌தை நாம் அங்கு காண‌லாம்.

       சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ தீர்ப்பிற்கு ஒரு நாள் பின்பு செப்ட‌ம்ப‌ர் 30 அன்று அருகிலுள்ள‌ இருப்புப்பாதை ப‌ணியாள‌ர்க‌ள் குடியிருப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு சொந்த‌மான‌ 7 ஆடுக‌ள் ஆலையின் எல்லையோர‌ப்ப‌குதியில் இருக்கும் வாய்க்காலில் உள்ள‌ நீரை ப‌ருகிய‌தால் இற‌ந்துபோயின. இந்த‌ ஆலையில் விப‌த்துக‌ள் ஏற்ப‌டுவ‌து மிக‌வும் வ‌ழ‌மையான‌ ஒன்றாக‌ மாறிவிட்ட‌து. 1996லிருந்து 2004வரையிலான கால‌ப்ப‌குதியில் வெளியான‌ ஊட‌க‌ அறிக்கைக‌ள், ப‌ணியாள‌ர்க‌ளின் வாக்குமூல‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளின் படி, மேற்கூறிய காலகட்டத்தில் நடந்த‌ விப‌த்துக‌ளால் மட்டும் பாதிக்க‌ப்ப‌ட்டு படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 139பேரும், இற‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 13பேரும் இருக்க‌லாம் என‌ க‌ணிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

      1997ல் ந‌டைபெற்ற‌ ஒரு வெடிவிப‌த்தினால் அந்த‌ ஆலையில் ப‌ணியாற்றிய‌ இர‌ண்டு தொழிலாள‌ர்க‌ள் உருக்குலைந்து போனார்க‌ள். இது போன்ற‌ விப‌த்துக‌ள் எல்லாம் ஏதோ க‌ட‌ந்த‌ கால‌த்தில் ம‌ட்டும் ஏற்ப‌ட்ட‌ ஒன்று அல்ல‌. சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ தீர்ப்பு வ‌ருவ‌த‌ற்கு மூன்று நாட்க‌ள் முன்பு செப்ட‌ம்ப‌‌ர் 26, 2010 அன்று அமில‌க்க‌ரைச‌ல் ஏற்றி வ‌ந்த‌ ஒரு சுமையுந்தை(Lorry) தூய்மை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி நிகழ்விடத்திலேயே இற‌ந்து போனார். இன்னொருவ‌ர் ப‌டுகாய‌ம‌டைந்தார். பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ த‌ம‌து பெய‌ரை வெளியிட‌ விரும்பாத‌ ஒரு தொழிலாளி இந்த‌ விப‌த்தைப் ப‌ற்றி கூறுகையில் “இந்த‌ விப‌த்து ஆலையின் அமில‌ப் பிரிவிற்கு அருகில் ந‌ட‌ந்த‌து என்றும், இதில் ப‌டுகாய‌ம‌டைந்த‌ தொழிலாளி அருகில் உள்ள‌ AVM ம‌ருத்துவ‌ம‌னையில் இன்ன‌மும் தீவிர‌ சிகிச்சை பிரிவில் இருக்கின்றார் என்றும்” கூறினார்.

     ஸ்டெர்லைட் ஆலை “மிக‌வும் மோச‌மான‌ நிலையில்” இருக்கின்ற‌து என‌ த‌ன‌து தீர்ப்பில் சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் கூறியுள்ள‌து. மேலும் அந்த‌ தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலையே மிக‌வும் மோச‌மான‌ சுற்றுச்சூழ‌ல் சீர்கேட்டில் இருப்ப‌தாக‌வும், ஆலையிலிருந்து எடுத்த‌ ம‌ண்மாதிரிக‌ளில் இருக்கும் ஆர்ச‌னிக்கின் அள‌வை வைத்துப் பார்த்தால் இந்திய‌ த‌ர‌க்க‌ட்டுப்பாடு நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவுகளின் படி ஒட்டுமொத்த‌ ஆலையே “தீங்கு விளைவிக்கக்கூடிய‌ க‌ழிவாகும்”… மேலும் ஆலையிலும், அதைச் சுற்றியுள்ள‌ ப‌குதிக‌ளிலும் எடுக்க‌ப்ப‌ட்ட‌ நில‌த்த‌டி நீர் மாதிரிக‌ளில் உள்ள‌ தாமிர‌ம், ஈய‌ம், கேட்மிய‌ம், ஆர்ச‌னிக்கின் அள‌வு மிக‌ உய‌ர்ந்தும், குளோரைடு, ப்ளோரைடுக‌ளின் அள‌வு இந்திய‌ த‌ர‌க்க‌ட்டுப்பாடு நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு உயர்ந்த அள‌வில் உள்ள‌து” என்று நீதிப‌தி த‌ன‌து தீர்ப்பில் கூறியுள்ளார்.

      இந்த‌ சுற்றுச்சூழ‌ல் சீர்கேட்டின் விளைவுக‌ள் அருகிலுள்ள‌ கிராம‌ங்க‌ளில் புல‌ப்ப‌ட‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌. முத்துராச் கூறுகையில் “எங்க‌ள‌து கிராம‌ ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் சுவாச‌ம் தொட‌ர்பான‌ நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். குழ‌ந்தைக‌ளுக்கு மூட்டுவ‌லியும், பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு ஈறுக‌ள் உறுதிய‌ற்று ப‌ற்க‌ள் விழுந்து விடுகின்றன” என்றார்.

தொடக்கத்திலிருந்தே ச‌ட்ட‌த்திற்கு எதிரானது ஸ்டெர்லைட்:

    தூத்துக்குடி ந‌க‌ர‌த்தைச் சுற்றி ப‌ல‌ ப‌வ‌ள‌ப்பாறைத் தீவுக‌ள் உள்ள‌ன‌. முன்பு முத்துக்குளித்த‌ல் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ ஒரு தொழிலாக‌ இங்கு இருந்த‌து. முத்துராச் வீட்டின் மாடியிலிருந்து ஏழு கிலோமீட்ட‌ர் தொலைவில் தான் வ‌ந்தீவு, க‌சுல‌ர் என்ற‌ இர‌ண்டு ப‌வ‌ள‌ப்பாறைத் தீவுகள் உள்ள‌ன‌. க‌சுல‌ர் தீவு ம‌ன்னார் வ‌ளைகுடா உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ளைய‌த்திற்குள் உள்ள‌ ஒரு தீவாகும். மேலும் ஐ.நாவால் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ உயிரிய‌ல் பாதுகாப்பு ப‌குதியில் இந்தியாவில் உள்ள‌ ஐந்து தீவுக‌ளில் இந்த‌ க‌சுல‌ர் தீவும் ஒன்றாகும். வ‌ன‌த்துறை விதிப்ப‌டி இந்த‌ தீவுக‌ளில் இருந்து 25கிலோமீட்ட‌ர் சுற்ற‌ள‌விற்குள் சுற்றுச்சூழ‌லுக்கு மாசு விளைவிக்க‌க் கூடிய‌ எந்த‌வொரு ஆலையையும் க‌ட்ட‌க்கூடாது. ஆனால் இந்த‌ ஸ்டெர்லைட் ஆலையில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் அமில‌க்க‌ரைச‌ல்க‌ளும், காற்றில் வெளியேறும் நுண்ணிய‌ திட‌க் க‌ழிவுகளும் இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளை நேர‌டியாக‌ பாதிக்க‌க்கூடிய‌ பொருட்க‌ளாகும் .

   வ‌ன‌த்துறை விதிப்ப‌டி எல்லாம் ந‌ட‌ந்திருந்தால் 1995ல் ஸ்டெர்லைட் என்றொரு ஆலையே இங்கு க‌ட்டியிருக்க‌ முடியாது. சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌மும், த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌மும் கொடுத்த‌ உரிம‌த்தில் கூட‌ இந்த‌ 25 கிலோமீட்ட‌ர் சுற்ற‌ள‌வு நிப‌ந்த‌னை தெளிவாக‌ சுட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆனால் ஸ்டெர்லை ஆலை உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ளைய‌த்தில் உள்ள‌ இந்த‌ தீவுக‌ளின் 15கிலோமீட்ட‌ர் சுற்ற‌ள‌வுக்குள்ளேயே விதிமுறைக‌ளை மீறி க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌ ஆலையால் ஏற்ப‌டும் சுற்றுச்சூழ‌ல் மாறுபாடுக‌ளை க‌ண்ட‌றியும் க‌ணிப்பும், பொதும‌க்க‌ள் க‌ருத்து கேட்கும் கூட்ட‌மும் இங்கு ந‌டைபெற்றிருக்க‌ வேண்டும். ஆனால் ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ ஸ்டெர்லைட் ஆலைக்கு இதிலிருந்து வில‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

  “த‌மிழ‌நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌ம்” ம‌ட்டும் ஒழுங்காக‌ செய‌ல்ப‌ட்டிருந்தால் இந்த‌ ஆலை க‌ட்ட‌ப்ப‌டும் பொழுதே 25கிலோ மீட்ட‌ர் சுற்ற‌ள‌வு விதியை மீறிய‌த‌ற்காக‌ ஆலையை அப்பொழுதே மூடியிருக்க‌ முடியும். எங்க‌ள‌து எல்லா தொட‌க்க‌ கால‌ போராட்ட‌ங்க‌ளின் போதும் இதை நாங்க‌ள் ம‌க்க‌ளுக்கும், அதிகாரிக‌ளுக்கும் தெளிவாக‌ கூறியுள்ளோம். இது நீதிம‌ன்ற‌த்திற்கு சென்றிருக்க‌ தேவை இல்லை.” என கூறுகின்றார் மீன‌வ‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌ ஃபாத்திமா பாபு.

 
அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ திட்ட‌மிட்ட‌ மெத்த‌ன‌ போக்கினால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட இந்த ஆலை, எல்லா நிலைக‌ளிலும் விதிமுறைக‌ளை மீறியே செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்ற‌து. தனக்கு வழங்கப்பட்ட கண்காணிப்பு வேலையை சரியாக‌ செய்யாம‌ல் வெறுமனே உரிமம் மட்டும் வழங்கும் மாசு க‌ட்டுப்பாட்டு வாரியமும், சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌ அதிகாரிக‌ளும், நீதிம‌ன்ற‌ அலுவ‌ல‌க‌ அதிகாரிகளுமே இதற்கு மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாகும்.

காசு கொடுத்து வாங்க‌ப்ப‌ட்ட‌ அறிவிய‌ல்:
 
      சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ம் ஒக்டோப‌ர் 1998 அன்று நாக்பூரில் உள்ள‌ தேசிய‌ சுற்றுச்சூழ‌ல் ஆய்வு மைய‌த்தை (National Enviornment Enginerring Research Institute- NEERI)ஸ்டெர்லை ஆலையின் சுற்றுச்சூழ‌ல் நிலையை ஆய்வு செய்ய‌க் கோரிய‌து. ச‌ட்ட‌ விரோத‌ உரிம‌ம், உரிம‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌ அள‌வை விட‌ அதிக‌ அள‌வு உற்ப‌த்தி செய்த‌து,  சூழ‌லுக்கும், உயிரின‌ங்க‌ளுக்கும் தீங்கு விளைவிக்கும் க‌ழிவுக‌ள் தொட‌ர்பான‌ விதிமுறை மீற‌ல்க‌ளை செய்த‌து,  ச‌ரியாக‌ சுத்திக‌ரிக்க‌ப்ப‌டாத‌ நீரை வெளியேற்றிய‌து,  நில‌த்த‌டி நீரை மாசுப‌டுத்திய‌து,  மேலும் உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ளைய‌ப் ப‌குதியின் சூழிய‌லை சீர்குலைத்த‌து என‌ எல்லா புள்ளிவிவ‌ர‌ங்க‌ளையும் NEERI த‌ன‌து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள‌து.

  23 ந‌வ‌ம்ப‌ர் 1998 அன்று சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் ஸ்டெர்லைட் ஆலையை மூட‌ச் சொல்லி உத்த‌ர‌விட்ட‌து. இதுவும் கூட‌ ஒரு மாத‌த்திற்கு பின்ன‌ர் வ‌ந்த‌ தீர்ப்பில் இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தொழிற்சாலை செய‌ல்ப‌ட‌ இசைவு(Permission) என்றான‌து. மேலும் NEERI யை ஸ்டெர்லைட்டில் மேலும் ஆய்வுக‌ள் செய்து ஏதாவ‌து முன்னேற்ற‌ம் ந‌ட‌ந்துள்ள‌தா என‌க் கூறுமாறு கேட்டுக்கொண்ட‌து. அதே போல NEERI 1999 பிப்ர‌வ‌ரியில் த‌ன‌து இர‌ண்டாவ‌து ஆய்வ‌றிக்கையை அளித்த‌து. இரண்டு ஆய்வ‌றிக்கைகளின் புள்ளிவிவரங்களும் ஒன்றாக இருப்பினும் நகைமுரணாக‌ இந்த‌ அறிக்கையின் முடிவு முந்தைய‌ அறிக்கையிலிருந்து இருந்து முற்றிலுமாக‌ மாறுப‌ட்டிருந்த‌து. மேலும் ஆலையின் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் மிக‌வும் முன்னேற்ற‌ம் அடைந்துள்ள‌தாக‌வும் இந்த‌ அறிக்கை கூறுகின்றது. பிப்ர‌வ‌ரி அறிக்கையில் நிலைமை மிக‌ முன்னேறியுள்ள‌தாக‌ கூறியுள்ள‌து மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்று. உதார‌ண‌த்திற்கு சுத்திக‌ரிக்க‌ப்பட்ட‌ நீரில் உள்ள‌ ஆர்ச‌னிக், குரோமிய‌ம், ஈய‌ம், செலேனிய‌ம் போன்ற‌வ‌ற்றின் அள‌வு இந்திய‌ த‌ர‌க்க‌ட்டுப்பாடு நிறுவனம் ப‌ரிந்துரைத்துள்ள‌ அள‌வை விட‌ அதிக‌மாக‌ உள்ள‌தை மிக‌ தெளிவாக‌ காட்டுகின்ற‌து. ஆனால் இத‌ற்கு எல்லாம் நேர்மாறாக‌ NEERI யின் ஆய்வ‌றிக்கையின் முடிவுரை பின்வ‌ருமாறு இருப்ப‌து விசித்த‌ர‌மே “ஸ்டெர்லைட் ஆலை மாசு சுத்த‌க‌ரிப்பு பிரிவை ச‌ரிசெய்து, சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ நீரில் உள்ள‌ ஆர்ச‌னிக், குரோமிய‌ம், ஈய‌ம், செலேனிய‌ம் போன்ற‌வ‌ற்றின் அள‌வு தமிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் ப‌ரிந்துரைத்துள்ள‌ அள‌வுக‌ளுக்குள்ளாகவே ப‌ராம‌ரித்து வ‌ருகின்ற‌து. இது முழு பூச‌ணியை கைய‌ள‌வு சோற்றில் ம‌றைக்கும் ப‌ச்சை பொய் என்ப‌து அறிக்கையை ப‌டிக்கும் சிறு குழ‌ந்தைக்கு கூட‌ தெரியும்.

       NEERIயின் அலுவ‌ல‌ர்க‌ள் த‌க‌வ‌ல‌றியும் உரிமைச் ச‌ட்ட‌த்தின் மூல‌ம் பெற்ற‌ த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி 1998 ந‌வ‌ம்ப‌ர் அறிக்கைக்கு பின்ன‌ர் ஸ்டெர்லை ஆலை NEERIக்கு ஆலோச‌னை க‌ட்ட‌ண‌மாக 1.22 கோடி ரூபாய் வ‌ழ‌ங்கியுள்ள‌து.
அவ‌ல‌ நிலையில் இருக்கும் அர‌சு துறைகள்:

    ஸ்டெர்லைட்டின் விதிமுறை மீற‌ல்க‌ள் எண்ணில‌ட‌ங்காத‌வை. 1997லிருந்து 2005 வ‌ரை ம‌ட்டும் ந‌டைபெற்ற‌ விதிமுறை மீற‌ல்க‌ளை இந்த‌ க‌ட்டுரை ஆசிரிய‌ர் தொகுக்க‌ அது ஐம்ப‌து ப‌க்க‌ங்க‌ளை மீறிச் செல்கின்ற‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ஸ்டெர்லைட் தொட‌ர்ச்சியாக‌ உரிம‌விதிக‌ளை மீறியுள்ள‌து. அவற்றில் சில, உரிம‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌ உற்ப‌த்தி அள‌வை விட அதிக‌ அள‌வு உற்ப‌த்தி செய்துள்ள‌து. தீங்கு விளைவிக்கும் க‌ழிவுக‌ளை ச‌ரியாக‌ ப‌ராம‌ரிக்காம‌ல் க‌ண்ட‌ இட‌ங்க‌ளில் எல்லாம் வைத்துள்ள‌து, மேலும் சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌ம், த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தின் ஒப்புத‌ல் இல்லாம‌லே ஆலையை விரிவாக்க‌ம் செய்துள்ள‌து.
     2003 டிச‌ம்ப‌ரில் வேதாந்தா குழும‌ம் இல‌ண்ட‌ன் ப‌ங்கு ச‌ந்தையில் த‌ன்து குழும‌ நிறுவ‌ன‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிட்ட‌து. அதில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி தூத்துக்குடியில் உள்ள‌ ஆலையின் உற்ப‌த்தி ஆண்டுக்கு 1,80,000 ட‌ன்க‌ள் ஆனால் த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தின் உரிம‌ விதிப்ப‌டி ஆண்டுக்கு 1,36,850 ட‌ன்க‌ள் மட்டுமே அந்த‌ ஆலை உற்ப‌த்தி செய்ய‌ வேண்டும். அத‌ற்கு மேல் உற்ப‌த்தி செய்ய‌க்கூடாது. இந்த‌ அறிக்கையின் மூல‌ம் ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பாக‌ உற்ப‌த்தியை அதிக‌ரித்துள்ள‌தை வேதாந்தா குழும‌ம் ஒப்புக்கொண்டுள்ள‌து புல‌னாகின்ற‌து. மேலும் த‌ன‌து ப‌ங்குதார‌ர்க‌ளுக்கு பின்வ‌ரும் உறுதிமொழியையும் வேதாந்தா த‌ந்துள்ள‌‌து “3,00,000 ட‌ன்க‌ள் Smelter உற்ப‌த்தி செய்ய‌வும், 1,36,850 ட‌ன்க‌ள் இரும்புத் தாதுவை சுத்திக‌ரிப்பு செய்ய‌வும் 2003 டிச‌ம்ப‌ரில் ஸ்டெர்லைட் ஆலையால் முடியும்”. ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் ஆலையை விரிவ‌டுத்துவ‌த‌ற்காக‌ த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌த்திட‌மோ, சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌த்திட‌மோ இசைவு கோர‌வில்லை. ச‌ட்ட‌த்தை மீறிய‌தை த‌ன‌து அறிக்கையின் மூல‌ம் தெளிவாக‌ ஒப்புக்கொள்கின்றது ஸ்டெர்லைட்.
 செப்ட‌ம்ப‌ர் 21, 2004 அன்று முனைவ‌ர்.தியாக‌ராச‌ன் த‌லைமையிலான‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ ஆய்வு குழு ஸ்டெர்லை ஆலையை ஆய்வு செய்த‌து. “ஸ்டெர்லைட் ஆலை உங்க‌ளிட‌ம் இசைவு வாங்க‌ம‌லே ஆலை விரிவாக்க‌ப் ப‌ணிக‌ளை தொட‌ங்கி விட்டார்க‌ளா? என‌ த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தை கேள்வி கேட்ட‌து இந்த‌ குழு. மேலும் த‌ற்போது உள்ள உற்ப‌த்தி திற‌ம் மூல‌ம் உருவாகின்ற‌ க‌ழிவுக‌ளை சுத்திக‌ரிக்க‌வும், ப‌ராம‌ரிக்க‌வும் தேவையான‌ க‌ட்ட‌மைப்பு இந்த‌ ஆலையில் இல்லை. ஆத‌லால் இந்த‌ ஆலையின் விரிவாக்க‌ப்ப‌ணிக‌ளுக்கு சுற்றுச்சூழல் அமைச்ச‌க‌ம் இசைவு அளிக்க‌க்கூடாது என‌வும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்ப‌ப்பெறுமாறும் கேட்டுக் கொண்ட‌து”.
    இதில் மிக‌ப்பெரிய‌ கூத்து என்ன‌வென்றால் இந்த‌க் குழு ஆய்வு செய்த‌ அடுத்த‌ நாள் செப்ட‌ம்ப‌ர் 22, 2004 அன்று சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌ம் ஆலையின் விரிவாக்கப் ப‌ணிக‌ளுக்கு இசைவ‌ளித்துள்ள‌து.

     2004 ந‌வ‌ம்ப‌ர் அன்று த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தினால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ குழு ஸ்டெர்லைட் ஆலை ப‌ற்றிய‌ த‌ன‌து அறிக்கையை கொடுத்த‌து. உரிம‌ம் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ட‌ன்க‌ள் ஆனோடு உற்ப‌த்தியை விட‌ இரு ம‌ட‌ங்கு அதிக‌ உற்ப‌த்தியான‌ 1,64,236 ட‌ன்க‌ள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்ப‌த்தி செய்துள்ள‌தாக‌வும், மேலும் ஸ்டெர்லைட் ஆலை இர‌ண்டு உருளைவடிவ‌ தாங்கு உலைகளையும்(Furnace), க‌ழிவுக‌ளை தூய்மை செய்யும் ஒரு உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிச‌ன் பிரிவையும், ஒரு க‌ந்த‌க‌ அமில‌ப் பிரிவையும், ஒரு Castor பிரிவையும், ஓரு Convertorயையும் யாருடைய‌ ஒப்புத‌ல் இன்றியும் க‌ட்டியுள்ள‌து. மேலும் இர‌ண்டு பாஸ்ப‌ர‌ஸ் அமில‌ பிரிவுக‌ளும், சுத்திக‌ரிப்பு ம‌ற்றும் தொட‌ர்ச்சியான‌ Castor Rodயை உருவாக்கும் பிரிவை க‌ட்ட‌மைக்கும் ப‌ணிக‌ள் ந‌டைபெற்றுக் கொண்டிருந்த‌ன.
ச‌ட்ட‌த்திற்கு எதிரான‌வை எல்லாம் ச‌ட்ட‌பூர்வ‌மாக்க‌ப்ப‌டுத‌ல்:

  ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆலையின் மீது எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. நேர்மாறாக‌ 2005ல் வ‌ந்த‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ குழுவின் அறிக்கை விதிமுறை மீற‌ல்க‌ளை மிக‌வும் குறைத்து காட்டுகின்ற‌து. “…. சில‌ க‌ருவிக‌ள் ம‌ட்டுமே அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ஆலை விரிவாக்க‌ப் ப‌ணிக‌ள் எதுவும் ந‌டைபெற‌ வில்லை”. இது ந‌வ‌ம்ப‌ர் 2004ல் த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் கொடுத்த‌ அறிக்கைக்கு முற்றிலும் நேர் எதிராக‌ இருக்கின்ற‌து. த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் படி பெரும்பாலான பிரிவுகள் முற்றிலுமாகவோ அல்லது பகுதியளவிலோ கட்டமைக்கப்பட்டிட்ருந்தன. இவை எல்லாம் ம‌றைந்து விட்ட‌தா (!) அல்ல‌து உச்ச‌நீதிம‌ன்ற‌ குழு அறிக்கையில் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ன‌வா?. ஒக்டோப‌ர் 2004லிலேயே ச‌ட்டத்திற்கு எதிராக‌ க‌ந்த‌க‌ அமில‌ப் பிரிவு 50 விழுக்காடு க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து. 2005 மார்ச் அமில‌ உற்ப‌த்தி அறிக்கை இந்த‌ க‌ந்த‌க‌ அமில‌ப் பிரிவு உற்ப‌த்தி தொட‌ங்கிய‌தையும் தெளிவாக‌ காட்டுகின்ற‌து. உரிம‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌ 3,71,000 டன்க‌ள் க‌ந்த‌க‌ அமில‌ உற்ப‌த்தியை விட‌ அதிக‌மாக‌ 5,46,647ட‌ன்க‌ள் க‌ந்த‌க‌ அமில‌ம் 2004 ஏப்ர‌ல் 2005 மார்ச் வ‌ரை உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது உரிம‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அள‌வை விட‌ 47 விழுக்காடு அதிக‌மாகும்.

   ஏப்ர‌ல் 7,2005ல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவ‌ர்.இந்திராணி ச‌ந்திர‌சேக‌ர்‌ த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌த்திற்கு ஒரு ஆணை வெளியிட்டார். அதில் “உச்ச‌ நீதிம‌ன்ற‌ குழுவின் ப‌ரிந்துரைப்ப‌டி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் முடிவெடுக்க‌லாம்…”
  த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட பணியான ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைக‌ளை மீறி ந‌ட‌ந்துள்ளார்க‌ளா என்ற‌ ஆய்வு ப‌ணியை விட்டு விட்டு அதே ஆலையின் ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ விரிவாக்க‌ப் ப‌ணிக‌ளுக்கு ஒப்புத‌ல் அளிக்குமாறு ஒரு வேடிக்கையான முடிவை கூறியுள்ள‌து முனைவ‌ர்.தியாக‌ராச‌ன் த‌லைமையிலான‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌ குழு. திரு.தியாக‌ராச‌ன் அவர்க‌ளிட‌ம் நாம் கேட்ட‌ மின்ன்ஞ்ச‌ல் கேள்விக‌ளுக்கு இது வ‌ரை அவ‌ர் ப‌தில‌ளிக்க‌வில்லை. ஆனால் முனைவ‌ர்.இந்திராணி ந‌ம‌து கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்காம‌ல் ந‌ம்மை நோக்கி ஒரு கேள்வியை வைத்துள்ளார், “எது சட்ட‌ம், எது ச‌ட்ட‌மீற‌ல்? எதுவுமே ச‌ட்ட‌முமில்லை, எதுவுமே ச‌ட்ட‌மீற‌ல‌மில்லை. உச்ச‌நீதிம‌ன்ற‌ குழுவிற்கு ஆலோச‌னையை கூற‌ உரிமை உள்ள‌து. அந்த‌ ஆலோச‌னையை ஏற்றுக்கொண்டு ஸ்டெர்லைட்டின் (சட்ட‌த்திற்கு புற‌ம்பான‌) விரிவாக்க‌ப் ப‌ணிக‌ளுக்கு ஒப்புத‌ல் அளிப்ப‌தா வேண்டாமா, என்ப‌து த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தின் கையில் உள்ள‌ ஒன்று” என‌ அவ‌ர் கூறியுள்ளார். ஒரு வேளை ம‌டியின் க‌ன‌ம் வ‌ழியில் அச்ச‌த்தை ஏற்ப‌டுத்தி இருக்குமோ என்னவோ!.

   ஏப‌ர‌ல் 19,2005 என்று த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தின் த‌லைவ‌ரான‌ முனைவ‌ர்.கிரிஜா வைத்திய‌நாத‌ன் விதிமுறையை மீறி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஸ்டெர்லைட் ஆலையின் புதிய‌ பிரிவுக‌ளுக்கு உரிம‌ம் அளித்தார். சென்ற‌ வ‌ருட‌ம் த‌ன‌து குழு அளித்த‌ அறிக்கையும், ஆறு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌ ஸ்டெர்லைட்டின் செய‌ல்பாடுகளும் ஒரு வேளை அவ‌ர‌து நினைவிற்கு வராமல் போயிருக்க‌க்கூடும்.

 விதிமுறை மீற‌ல்க‌ளை ச‌ட்ட‌பூர்வ‌மாக்கிய‌தை நாம் கேள்வி கேட்க‌ முடியாதா? த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம், சுற்றுச்சூழ‌ல் அமைச்ச‌க‌ம், உச்ச‌ நீதிம‌ன்ற‌க் குழு என‌ எல்லா த‌ர‌ப்பு நிர்வாகிக‌ளும் சுற்றுச்சூழ‌லை மிக‌ப்பெரிய‌ அள‌வில் மாசு ப‌டுத்தும் இதுபோன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ப‌க்க‌ப‌லமாக‌ இருப்ப‌தால், இந்த‌ ஆலைக‌ள் எல்லாம் எதை ப‌ற்றியும் க‌வலைப்படுவதே இல்லை. த‌மிழ்நாட்டில் எல்லா ப‌குதிக‌ளிலும் இந்த‌ ந‌ச்சுக் கூட்ட‌ணி மிக‌ தெளிவாக இயங்குகின்றது. த‌ன‌து ஆலையால் ஏற்ப‌ட்ட‌ மெர்க்குரி சீர்கேட்டிலிருந்து த‌ப்பித்து செல்வ‌த‌ற்கு Hindustan Unilever நிறுவ‌ன‌த்திற்கு த‌மிழ்நாடு மாசுக‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் உத‌வுகின்ற‌து.  மேட்டூரில் ச‌ட்ட‌த்தை மீறி மால்கோ, செம்பிளாஸ்ட் நிறுவ‌ன‌ங்க‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ அன‌ல்மின் வாரிய‌த்திற்கு ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ ஒப்புத‌ல் அளித்துள்ள‌து. 2010 செப்ட‌ம்ப‌ரில் த‌மிழ்நாடு மாசு க‌ட்டுப்பாட்டு வாரிய‌ம் கொடுத்த அறிக்கையின் ப‌டி கூட‌லூரில் உள்ள‌ 28 தொழிற்சாலைக‌ளில் 16 தொழிற்சாலைக‌ள் உரிம‌ம் இல்லாம‌ல் இய‌ங்கிவ‌ருகின்ற‌ன‌. வேதாந்தா குழும‌த்தைச் சார்ந்த‌ ம‌ற்றொரு நிறுவ‌ன‌மான‌ மால்கோ நிறுவ‌ன‌ம் முன்னொரு கால‌த்தில் அழகுட‌ன் இருந்த‌ சேர்வ‌ராய‌ன் ம‌லைப்ப‌குதியில் த‌மிழ்நாடு மாசுக்க‌ட்டுப்பாட்டு வாரிய‌த்தின் ஒப்புத‌ல் இல்லாம‌லும், ம‌லைப்புற‌ வ‌ள‌ர்ச்சிக்குழுவின் த‌லைவ‌ரான‌ மாவாட்ட‌ ஆட்சித் த‌லைவ‌ரின் ஒப்புத‌ல் இல்லாம‌ல் வ‌ன‌ப்ப‌குதியில் சுமையுந்து மூல‌ம் பாக்சைட் தாதுவை க‌ட‌த்தி, அந்த‌ ம‌லைப் ப‌குதியையே இல்லாம‌ல் செய்து வருகின்றார்க‌ள்.

      இவை எல்லாம் இந்திய‌ குற்ற‌விய‌ல் ச‌ட்ட‌ப்ப‌டியும், சுற்றுச்சூழ‌ல் ச‌ட்ட‌த்தின் ப‌டியின் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ குற்ற‌ங்க‌ளாகும். ஆனால் எந்த‌ ஒரு காவ‌ல் துறை அதிகாரியோ, மாவ‌ட்ட‌ ஆட்சித் த‌லைவ‌ரோ, மாசு க‌ட்டுப்பாட்டு அதிகாரியோ இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ளை இன்னும் அம‌ல்ப‌டுத்தக் கூட இல்லை என்ப‌து த‌மிழ‌க‌த்தின் சாப‌க்கேடு. ஆனால் பொதும‌க்க‌ள் இந்த‌ பொது சொத்து திருடு போவதை த‌டுக்க‌ வேண்டும் என்று யோசித்தால் போதும் உங்க‌ளைத் தேடி காவ‌ல் துறையும், மாவ‌ட்ட‌ ஆட்சித் த‌லைவ‌ரும், மாசு க‌ட்டுப்பாட்டு அதிகாரிக‌ளும் வ‌ந்து உங்களைச் சிறையில‌டைத்து, ச‌ட்ட‌த்தை பொதும‌க்க‌ள் கையிலெடுப்ப‌து த‌வ‌று என்று உங்களுக்கு அறிவுரையும் கூறுவார்க‌ள். குற்ற‌மிழைப்ப‌வ‌ர்க‌ளின் உல்லாச‌ பூமியாக‌ ச‌ட்ட‌த்துறை மாறிவ‌ருவ‌து மிக‌வும் மோச‌மான‌ ஒன்று.

            சுற்றுச்சூழ‌ல் சீர்கேட்டை உருவாக்கும் குற்ற‌வாளிக‌ளை க‌ண்டித்து, அவ‌ர்க‌ளின் தொழிற்சாலையை மூடுவ‌த‌ற்கான‌ முன்னெடுப்பைச் செய்ய‌ நீதிம‌ன்ற‌ங்க‌ள் த‌வ‌றுகின்ற‌ன‌. வேதாந்தா குழும‌ நிறுவ‌ன‌ங்க‌ள் விதிமுறைக‌ளை மீறி க‌ட்ட‌ப்ப‌ட்டாலும், இன்றும் கூட‌ அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் செய‌ல்ப‌ட்டு வ‌ருவது, ச‌ட்ட‌ அமைப்பு குற்ற‌வாளிக‌ளுக்கு ஏற்ப‌ மாறிவிட்ட‌தை ந‌ம‌க்கு தெளிவாக‌ காட்டுகின்ற‌து. இத‌னால் ஏற்ப‌டும் விளைவுக‌ளை மட்டும் அந்த‌ப்ப‌குதியில் வாழும் ம‌க்க‌ளும், எதிர்கால‌ ச‌ந்த‌தியின‌ரும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

ந‌ன்றி. நித்தியான‌ந்த் செய‌ராம‌ன்.

மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளுக்கு கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இந்த் இணைய‌ ப‌க்க‌ங்க‌ளைப் பார்க்க‌வும்.

http://www.regjeringen.no/en/search.html?quicksearch=vedanta

http://www.crocodyl.org/wiki/sterlite_industries_india_limited

த‌மிழாக்க‌ம். ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

Advertisements
  1. Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

    http://www.ellameytamil.com

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: