திசெம்பர், 2010 க்கான தொகுப்பு

மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள்


உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.

புலிகள்  இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும்,  இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர்.  இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்).   மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)

இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)


ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.  இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.

தரவுகள்:
1) http://www.indianexpress.com/news/ltte-plans-to-attack-pm-home-minister-tn-cm-dgp/725210/
2)http://www.dnaindia.com/india/report_mdmk-leader-vaiko-s-plea-against-ltte-ban-centre-directed-to-file-counter-affidavit_1481127

ந‌ற்ற‌மிழ‌ன்.

Advertisements

இராசீவ் காந்தியை கொலை செய்ய முயற்சி….


1987 சூலை 30 புத‌ன் கிழ‌மை கையெழுத்தாகும் இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை எதிர்த்து சூலை 29, 30 ஆகிய இர‌ண்டு நாட்க‌ளும் சிங்க‌ள‌ ம‌க்கள் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவ‌தாக‌வும், அதிலும் குறிப்பாக‌ த‌னி நாடு கோரும் போராளி குழுக்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவதாக‌ த‌வ‌றாக‌ க‌ருதிய‌தாலும்,  இந்திய‌ விரிவாதிக்க‌ கொள்கையின் ஒரு ப‌குதியாக‌ இந்திய‌ அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ருவதையும் சிங்கள மக்கள் எதிர்த்தார்க‌ள்.  இந்த‌ இர‌ண்டு நாள் போராட்ட‌த்தில் ம‌ட்டும் 40 சிங்க‌ள‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ இல‌ங்கை அர‌சு கூறிய‌து(1).

 இந்த‌ எதிர்ப்பு போராட்ட‌த்தின் ஒரு ப‌குதியாக‌ இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையில் இருந்த‌ மூவ‌ர் இராசீவ் காந்தியை கொலை செய்ய‌‌ திட்ட‌மிட்டார்கள்.  உங்க‌ளுக்கு எல்லாம் விய‌ப்பாக‌ இருந்தாலும் நான் சொல்வ‌து உண்மை தான், ஆம் இராசீவ் காந்தியை கொலை செய்ய‌‌ திட்ட‌ம் தீட்டினார்கள். ஒருவர் தனது கையிலுள்ள துப்பாக்கியின் கனமான பின்புறத்தின் மூலம் இராசீவின் தலையில் அடித்து கீழே தள்ளவேண்டும், முதலில் அடிப்பவரின் இரு புறமும் இருப்பவர்கள் இராசீவ் காந்தியை மேலும் தாக்கி கொல்லவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கார‌ண‌த்தினால் முத‌லில் தாக்கிய‌வ‌ரின் இரு புற‌மும் இருப்ப‌வ‌ர்க‌ள் திட்ட‌மிட்ட‌ப‌டி இராசீவை தாக்க‌வில்லை. ஒரு வேளை அவ‌ர்க‌ள் இருவ‌ரும் இராசீவை தாக்கியிருந்தால் ப‌ல‌த்த‌ காய‌த்துடனோ அல்லது அவ‌ர் இறந்து போயிருக்கவும் கூடும். இந்த‌ திட்ட‌ம் மிக‌வும் இர‌க‌சிய‌மாக‌வே வைக்க‌ப்ப‌ட்ட‌து. வ‌ழ‌க்கு விசார‌ணையில் இதை விச‌ய‌முனிங்க‌ ரோக‌ன டி சில்வா ஒப்புக்கொண்டார்.  இந்த கொலை முயற்சியில் பங்குகொண்ட முக்கிய குற்றவாளியான விச‌ய‌முனிங்கவிற்கு ஆறு வருட சிறை த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌து. பின்னர் பிரேமதாசா அதிபரானவுடன் விசயமுனிங்காவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. (1)

கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுடாமல் ஏன் தாக்கினார்கள் என உங்களுக்கு கேள்வி எழுவது இயற்கையே. நாட்டின் பிர‌த‌ம‌ர், அதிப‌ர் போன்றோர் வ‌ருகையில் அதில் ப‌ங்குகொள்ளும் ப‌டை வீர‌ர்க‌ளுக்கு வழ‌ங்க‌ப்ப‌டும் துப்பாக்கியில் இர‌வைக‌ள்(Bullet) இருக்காது, ஒரு வேளை அவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டிருந்தால் ??????
 

 உங்க‌ளுக்காக‌ அந்த‌ காட்சி.

இந்த கொலைமுயற்சியைப் ப‌ற்றிய‌ சில‌ர‌து க‌ருத்தைப் பார்ப்போம்.

அதிப‌ர் செய்வ‌ர்தனே முத‌லில் ச‌மாளிப்ப‌த‌ற்காக‌க் கூறிய‌ வார்த்தைக‌ள் “சற்று மயக்கத்தில் இருந்ததால் அவர் துப்பாக்கியை நிலை தடுமாறி கீழே போட்டுவிட்டார்”.(1)
இராசீவ் “சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் நகர்வதைப் பார்த்ததால் நான் சற்று தலையை கீழே குனிந்து விட்டேன், இருப்பினும் எனது இடது புற தோள்பட்டையையும், இடது செவியையும் சற்றே பதம் பார்த்துச் சென்றது அந்தத் துப்பாக்கி. நான் ந‌ன்றாகத் தான் உள்ளேன், உங்க‌ளுக்கு என‌து ச‌ட்டையை க‌ழ‌ற்றி காட்ட‌ வேண்டுமா” என மிகக் கோபத்துடன் கேட்டார் இராசீவ். இந்த நிகழ்வை கொலை முயற்சி எனச் சொலவதா அல்லது ஒரு தாக்குதல் நிகழ்வு எனச் சொல்வதோ எல்லாம் உங்கள்(ஊடகவியலாளர்களின்) விருப்பம் எனவும் இராசீவ் கூறினார். (1)

சோனியா “இந்த‌ ஒப்ப‌ந்த‌ம்(1987 இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌ம்) சிங்க‌ள மக்களில் ஒரு பிரிவினரிடையே கோப‌த்தை உண்டாக்கிய‌து. 30 சூலை (1987) அன்று அவ‌ர் சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ வ‌ர‌வேற்பு பெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு க‌ட‌ற்ப‌டை சிப்பாய் ச‌ற்று ந‌க‌ர்ந்து அவ‌ரை குறிபார்த்து த‌ன‌து துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌த்தால் தாக்கினான். இந்த‌ தாக்குத‌லில் அவ‌ர‌து த‌லை த‌ப்பிய‌து, ஆனால் துப்பாக்கியின் முழு விசையும் அவ‌ர‌து இட‌து தோள்ப‌ட்டையை ப‌ல‌மாக‌ தாக்கிய‌து.

திடீரென‌ இந்த‌ நிக‌ழ்வு ந‌ட‌ந்ததால் அந்த‌ இட‌த்தில் இருந்த‌ ஒரு சிலருக்கே அங்கு என்ன நடந்தது எனப் புரிந்தது. ஆனால் பல நாட்களுக்கு அவரால் தனது தோள்பட்டையை சுல‌பமாக‌ சுற்ற‌ முடிய‌வில்லை, இட‌து புறமாக‌ அவ‌ரால் ப‌டுத்து தூங்க‌க்கூட‌ முடிய‌வில்லை”.(1)

இல‌ங்கைக்கான‌ இந்தியத் தூதுவ‌ர் சே.என்.திட்சித் கூறுகையில்,

1) இது திட்ட‌மிட்ட(தவறிவிட்ட) கொலை முய‌ற்சி
2) இந்த‌ தாக்குத‌லினால் ஒன்று தெளிவாக‌ புரிகின்ற‌து. இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை முத‌ன் முத‌லில் எதிர்த்த‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளே, இத‌ன் விளைவே இந்த‌ தாக்குத‌ல்.

இந்த கொலை முயற்சிக்கு மூலகாரணமான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகள்.

1) இலங்கை அரசமைப்பில் 13ஆவது திருத்தத்தை உருவாக்குவதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிக்கின்றது.  வ‌ட‌க்கு கிழ‌க்கு ப‌குதியை இணைத்து ஒரு தற்காலிகமான தமிழ் மாகாணம் உருவாக்கப்படும். இது தொடர்வதா? இல்லையா? என தீர்மானிப்பதற்கு கிழக்கு பகுதி மக்களிடம் ஓராண்டுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.

2) 1987 சூலை 31ல் இருந்து இல‌ங்கை அர‌சிற்கும் போராளிக‌ளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருகின்றது

3) போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் போராளி அமைப்புக‌ள் தங்களிடமுள்ள ஆயுத‌ங்க‌ளை இந்திய அமைதி ப‌டையின‌ரிட‌ம் கைய‌ளிக்க‌ வேண்டும்.

4) ஆகத்து 31, 1987 அன்று முதல் வடக்கு கிழக்கில் அவசர காலச்சட்டமும், இராணுவ ஆட்சியும் நீக்கப்படும்.

5)அர‌சிய‌ல் கைதிகளுக்கும், குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ போராளிக‌ளுக்கும் பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. இத‌ன் மூல‌ம் கைதான‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் விடுவிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். (2)

இதில் இந்திய, இலங்கை அரசின் நலன் சார்ந்த பகுதிகளும் உள்ளன. இவை ம‌க்க‌ளுக்கு காட்ட‌ப்ப‌டாத‌ ப‌குதிக‌ள்.

இந்திய‌ அர‌சின் ந‌ல‌ன் சார்ந்த‌வை:

1) இலங்கையின் கிழக்கு பகுதியின் உள்ள திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் நலனை பாதிக்கக்கூடிய வகையில் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் வழங்கக்கூடாது.(3)

2)இலங்கையின் எந்த பகுதியையும் வேறு எந்த நாடும், இராணுவமும் பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை இசைவு(permission) அளிக்க‌‌க்கூடாது.(3)

3) வெளிநாட்டு ஒலிபரப்பு நிலையங்கள், இராணுவ ரீதியான அச்சுறுத்தல் உள்ள ஒளிபரப்புகளை இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ளக்கூடாது.(3)

4) திரிகோண‌ம‌லை எண்ணெய் கிண‌றுக‌ளை இந்தியாவிற்கு த‌ர‌ வேண்டும்.(3)

இல‌ங்கை அர‌சின் ந‌ல‌ன் சார்ந்த‌வை:

1)இந்தியா இல‌ங்கை அரச‌ ப‌டையின‌ருக்கு ப‌யிற்சியையும், படைக்கலன்களும் தொடர்ந்து வழ‌ங்கப்பட‌ வேண்டும்.(3)

2) இந்தியாவில் உள்ள‌ போராளி அமைப்புக‌ளை சார்ந்த‌வ‌ர்க‌ள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட‌ வேண்டும்.(3)

அரசியல் அனுபவம் இல்லாமல் இராசீவ் செய்த இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்.

1)இந்திய‌ அமைதிப்ப‌டை த‌மிழ‌ர் ப‌குதிக‌ளில் இருந்த‌தால், இல‌ங்கை இராணுவ‌ம் சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் அர‌சுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டது, இதனால் கிளர்ச்சியில் ஈடுபட்ட‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள்.(4)

2)இந்திய‌ அமைதிப்ப‌டையினரின் தாக்குதலினால் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பொதும‌க்க‌ள் சுட்டுக்கொல்ல‌ப்பட்டார்க‌ள், நூற்றுக்கும் அதிக‌மான‌ பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ல்லுறவுக்குள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.(5)

3) போராளிகளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஆயிர‌த்திற்கும் அதிக‌மான‌ இந்திய‌ பாதுகாப்பு ப‌டையின‌ர் உயிரிழ‌ந்தார்க‌ள். இப்ப‌டி மூன்று த‌ர‌ப்பு ம‌க்க‌ளும் இந்த‌ ஒப்ப‌ந்தத்தால் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். அதே நேரம் இந்த‌ ஒப்ப‌ந்தத்தால் ப‌ல‌ன‌டைந்த‌து சிங்க‌ள‌ ஆளும் வர்க்கமும், இந்திய‌ ஆளும் வர்க்கமும் அத‌ன் விரிவாதிக்க‌ கொள்கை (முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன் தான் விரிவாதிக்க‌ கொள்கையின் சாராம்ச‌ம்) ம‌ட்டுமே.(5)

த‌ர‌வுக‌ள்:

(1)http://www.sangam.org/taraki/articles/2006/07-28_JVP_Rajiv.php?print=sangam

(2)http://www.ipcs.org/pdf_file/issue/1226731325IPCS-IssueBrief-No50.pdf

(3) வெடித்த‌ நில‌த்தில் வேர்க‌ளைத் தேடி ‍ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம்

(4)http://en.wikipedia.org/wiki/1987%E2%80%9389_JVP_Insurrection

(5)http://en.wikipedia.org/wiki/Ipkf

ந‌ற்ற‌மிழ‌ன்.

“இந்துத்துவ‌ இந்திய‌ர்க‌ளின் ஆன்மா சாந்திய‌டைந்த‌து” – ந‌ற்ற‌மிழ‌ன்


   இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா கடந்த திங்களன்று (29/11/10) வெளியான நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாந்தியடைந்துள்ளது. ஆம், ஒக்டோபர் 21, 2010 அன்று தில்லியில் நடைபெற்ற “விடுதலை(Azadi) தான் ஒரே வழி” என்ற கருத்தரங்கில் அருந்ததிராய் ஆற்றிய உரையைக் கேட்டு கொந்தளித்தது இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா. வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அருந்ததி ராய், கிலானி மீது பின்வரும் வழக்குகள் தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது(1).

1) பிரிவு 124 அ (தேசதுரோகம்)
2) பிரிவு 153 அ (இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குதல்)
3) பிரிவு 153 ஆ (தேச‌ ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த‌ல்)
4) பிரிவு 504    (அமைதியை சீர்குலைத்த‌ல்)
5) பிரிவு 505    (த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்பி ம‌க்க‌ளை க‌ல‌வ‌ர‌ப்ப‌டுத்துத‌ல்)

  மேற்கூறிய‌ பிரிவுக‌ள் எல்லாம் பிணையில் வெளிவ‌ர‌ முடியாத‌ பிரிவுக‌ள் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. கைது செய்யப்ப‌ட்ட‌ பின்ன‌ர் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர் நீதிம‌ன்ற‌த்தில் பிணை கேட்டு விண்ண‌ப்பிக்க‌லாம். இந்த‌ பிரிவுக‌ளில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குற்ற‌ம் நீருபீக்க‌ப்ப‌டின் அவ‌ர்க‌ளுக்கு அதிக‌மான‌ த‌ண்ட‌னையாக‌ “ஆயுட்கால‌ சிறை” த‌ண்ட‌னை கொடுக்க‌முடியும். அனேக‌மாக‌ எல்லா இந்துத்துவ‌ இந்திய‌ர்க‌ளின் ஆன்மாவும் இதை தான் வேண்டிக்கொண்டிருக்கும் என‌ நான் எண்ணுகிறேன்.

(குறிப்பு: நீங்கள் இதுவரை காசுமீர் இந்தியாவுடைய ஒரு மாநிலம் என்று எண்ணிக் கொண்டிருந்தால், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும் ஏனென்றால் உண்மை அதுவல்ல. இதுவரை உங்களுக்கு கற்பிக்கப்பட்டது தவறான வரலாறு என்று எனது இந்த ஆய்வு கூறுகின்றது.)

 ச‌ரி இப்ப‌டி இந்த‌ இந்துத்துவ‌ இந்திய‌ர்க‌ள் எல்லாம் கோப‌ம் கொள்ளுமாறு அவ‌ர் எண்ண‌ பேசினார் என‌ப் பார்ப்போம். “காசுமீர் எப்பொழுதுமே இந்தியாவின் ஒரு ப‌குதியாக‌ இருக்க‌வில்லை”, “இந்தியா காசுமீருக்கு விடுத‌லை கொடுக்க‌ வேண்டும்” என‌ அவ‌ர் கூறிய‌ க‌ருத்துக‌ளை க‌ண்டித்து நீதிம‌ன்ற‌ம் இந்த‌ தீர்ப்பை வ‌ழ‌ங்கியுள்ள‌து. அருந்த‌தி ராய் என்ற‌ ஒரு ந‌ப‌ர் தான் இப்ப‌டியான‌ ஒரு க‌ருத்தை ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில் வைக்கின்றாரா என்றால், உண்மை அவ்வாறு இல்ல‌வே இல்லை.இத‌ற்கு முன் இதே க‌ருத்தை காந்தியும், நேருவும் கூறியுள்ளார்க‌ள். இதோ அவ‌ர்க‌ளின் க‌ருத்துக‌ள்,

“பாகிசுதானுட‌ன் சேர்ந்து கொள்ள‌ வேண்டாம், இந்தியாவுட‌ன் சேர்ந்து கொள்ளுங்க‌ள் என்று நான் மன்ன‌ருக்கு ஆலோச‌னை கூற‌ மாட்டேன். ஒரு தேச‌த்தின் இறையாண்மை என்ப‌து அந்த‌ தேச‌த்தில் வாழும் ம‌க்க‌ளைச் சார்ந்த‌தே அன்றி அதை ஆளும் ஆட்சியாள‌ரைச் சார்ந்த‌து அல்ல‌. காசுமீரி ம‌க்க‌ளிட‌ம் நீங்க‌ள் இந்தியாவுட‌ன் சேர்ந்து வாழ‌ விரும்புகின்றீர்க‌ளா, பாகிசுதானுட‌ன் சேர்ந்து வாழ‌ விரும்புகின்றீர்க‌ளா அல்ல‌து சுத‌ந்திர‌மாக‌ வாழ‌ விரும்புகின்றீர்க‌ளா என‌ கேட்க‌ வேண்டும், அவ‌ர்க‌ள் என்ன‌ விரும்புகின்றார்க‌ளோ அதன் ப‌டியே ந‌ட‌க்க‌ட்டும் . ஆக‌த்து முத‌ல் வார‌ம் 1947 சிரீந‌க‌ரில் காந்தி ஆற்றிய‌ உரை இது (2).

“காசுமீரின் ம‌க்க‌ள் இந்தியாவுட‌ன் சேர‌ விருப்ப‌மில்லை என்றால் நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் விருப்ப‌த்திற்கு மாறாக‌ அவ‌ர்க‌ளை க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ போவ‌தில்லை”. நேரு 1946

    இந்த‌ க‌ருத்துக‌ளை அவ‌ர்க‌ள் வெளியிட்ட‌ கால‌க‌ட்ட‌ம் மிக‌வும் முக்கிய‌மான‌து, இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் ம‌ன்னன் ஹரிசிங்கை “காசுமீரை விட்டு வெளியேற‌ சொல்லும்” இய‌க்க‌ம் த‌ன‌து போராட்ட‌த்தை தீவிர‌ப்ப‌டுத்திய‌து, இந்த‌ இய‌க்க‌த்திற்கு ஆதர‌வாக‌வும், ம‌ன்ன‌னுக்கு எதிராக‌வும் வாதாடிய, சிறையில் அடைக்கப்பட்டார் நேரு என்ப‌து குறிப்பிட‌த்த‌க்கது. இத‌ன் மூல‌ம் நேரு ம‌ன்ன‌னின் ஒடுக்குமுறை அர‌சை எதிர்த்தார் என்ப‌து புல‌னாகின்ற‌து.

  பிரிட்ட‌னின் ஆட்சியில் த‌ற்போதைய‌ இந்தியா, பாகிசுதான் போன்ற‌ தேச‌ங்க‌ள் இருந்த‌ பொழுது, காசுமீர் டோக்ரா ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியின் கீழ் இருந்தது (அம்ரிசுதர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காசுமீரை பிரிட்டன் 75 இலட்சம் ரூபாய்க்கு டோக்ரா மன்னரிடம் ஒப்படைத்து விட்டது). இந்தியாவிற்கும், பாகிசுதானிற்கும் பிரிட்ட‌ன் விடுத‌லை வ‌ழ‌ங்கிய‌ போது காசுமீர் ஒரு சுத‌ந்திர‌ தேசமானது(பிரிட்டன் சென்று விட்டதால், பிரிட்டன் போட்ட ஒப்பந்தங்கள் காலவதியாகிவிட்டது, மன்னர் வழி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வழமை போல‌ விதிமுறைகளுக்கு புறம்பாக மன்னன் காசுமீரை ஆட்சி செய்தான்).
                                                                                      காசுமீர் ஆக‌த்து 17,1947லிருந்து ஒக்டோப‌ர் 26,1947 வ‌ரை ஒரு சுத‌ந்திர‌ தேச‌மாக‌ இருந்த‌து என்ற‌ தீர்ப்பை ச‌ம்மு காசுமீர் நீதிம‌ன்ற‌ம் 1953 அன்று மேக‌ர் சிங் எதிர் ச‌ம்மு காசுமீர் அர‌சு வ‌ழ‌க்கில் வ‌ழ‌ங்கிய‌து(3). அதாவ‌து ஒக்டோப‌ர் 26, 1947அன்று ம‌ன்ன‌ன். ஹ‌ரிசிங், இந்தியாவின் க‌வ‌ர்ன‌ர் சென‌ர‌லாக‌ இருந்த‌ ம‌வுண்ட்பேட்ட‌ன் பிர‌புவிட‌ம் Instrument of Access என்ற‌ ஒப்ப‌ந்த‌ம் போட்ட‌திலிருந்து அது இந்தியாவின் வ‌ச‌மான‌து என‌ப் பொருள் (குறித்துக் கொள்ளுங்க‌ள், அந்த‌ கால‌க‌ட்ட‌த்திலும் க‌வ‌ர்ன‌ர் சென‌ர‌ல் ம‌வுண்ட்பேட்ட‌ன் தான் 1947 ஆகத்து 15ற்கு பிறகு அவர் ஒன்றும் பிரிட்டனுக்கு சென்று விடவில்லை, பின்ன‌ர் இராஜாஜி 1950 ச‌ன‌ரி 20 வ‌ரை க‌வ‌ர்ன‌ர் சென‌ர‌லாக‌ இருந்தார் (4)).
   நேரு இந்த‌ ஒக்டோப‌ர் 26 ஒப்ப‌ந்த‌திற்கு பிற‌கும் கூட‌ காசுமீர் ம‌க்க‌ள் தான் யார் ப‌க்க‌ம் இணைய‌ வேண்டும் என முடிவு எடுக்க‌ வேண்டும், நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ ம‌ட்டுமே சென்றுள்ளோம் என‌ ப‌ல‌ உரைக‌ளில் குறிப்பிட்டுள்ளார் (5). இருந்தாலும் இந்துத்துவ‌ இந்திய‌ர்க‌ளுக்காக‌ அந்த‌ ஒப்ப‌ந்த‌தில் இருந்து சில‌ வ‌ரிக‌ள்…
 இந்த‌ ஒப்ப‌ந்த‌தில் இருக்கும் எந்த‌ ச‌ர‌த்தும் என‌து அர‌சின் இறையாண்மையையோ, என‌து அதிகார‌த்தையோ க‌ட்டுப்ப‌டுத்தாது. மேலும் அது என‌து அர‌சின் த‌ற்போதைய‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளையும் க‌ட்டுப்ப‌டுத்தாது.

  Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this state, or, save as provided by or under this Instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State (6).
 
 ஆனால் இன்று வ‌ரை நேரு கூறிய‌ அந்த‌ பொதும‌க்க‌ளின் சுய‌ நிர்ண‌ய‌ உரிமை கோரும் வாக்கெடுப்பை ந‌ட‌த்த‌வே இல்லை, என்ப‌து உல‌கின் மிக‌ப்பெரிய‌ ம‌க்க‌ளாட்சி நாடாக‌ த‌ன்னை காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு அசிங்க‌ம் ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌ ஒன்றாகும். அன்று காந்தி காசுமீர் பற்றி கூறிய‌து இன்றும் பொருந்த‌க் கூடிய‌து, ஆம் அந்த‌ தேச‌த்தின்(ம‌க்க‌ளின்) இறையாண்மை இன்னும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வே இல்லை. அத‌ற்கு நேர்மாறாக‌ அன்று நேரு எதிர்த்த‌ அதே ம‌ன்ன‌னின் ப‌ணியை இன்று அவ‌ர‌து வ‌ம்சாவ‌ளியின‌ர் தொட‌ர்ந்து கொண்டுள்ளார்க‌ள்.

  அன்றிலிருந்து இன்று வ‌ரை காசுமீர் ம‌க்க‌ளின் முழ‌க்க‌ம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. ஆக்கிர‌மிப்பாள‌ர்க‌ளே காசுமீரை விட்டு வெளியேறுங்க‌ள், எங்க‌ளுக்கு விடுத‌லை கொடுங்க‌ள்.
 இதை கூறிய‌த‌ற்காக‌ அருந்த‌தி ராயை கைது செய்கின்றார்க‌ள் என்றால், காசுமீரில் ம‌ட்டும‌ல்ல‌ இராணுவ‌ ஆட்சியும், இந்துத்துவ‌ வெறியும், அது இந்தியா முழுவ‌துமே உள்ள‌து என‌ ந‌ம‌க்கு அவ‌ர்க‌ள் உர‌த்து கூறுகின்றார்க‌ள்.
 த‌மிழ‌க‌த்திற்கு தேச‌ பாதுகாப்பு வ‌ழ‌க்குக‌ள் ஒன்றும் புதிய‌வை அல்ல, கொள‌த்தூர் மணியும், வைகோவும், இன்ன பிறரும் அந்த‌ வழ‌க்குக‌ளை ப‌ல‌ முறை ச‌ந்தித்து வெறறியும் பெற்றவ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ஏன் இப்பொழுது ந‌டை பெற்றுக் கொண்டிருக்கும் சீமானுக்கு எதிரான‌ வழ‌க்கில் அர‌சு த‌ர‌ப்பு வ‌ழ‌க்கறிஞ‌ர் நீதிம‌ன்ற‌த்திற்கு வ‌ந்தால் வழ‌க்கு முடிந்துவிடும் ஆனால் அர‌சு த‌ர‌ப்பு தான் இந்த‌ வ‌ழ‌க்கில் வாதாட‌ ச‌ற்றே அஞ்சுகின்ற‌து.


   நான் வாழ‌க்கூடிய நாட்டின் அரசாங்கம் ஒரு த‌வ‌று செய்தால் அதை சுட்டி காட்டி ந‌ல்வ‌ழிக்கு கொண்டுவ‌ருவ‌து தான் அந்த‌ தேச‌த்தில் வாழும் குடிம‌க‌னின் க‌ட‌மை அன்றி, அந்த‌ அரசாங்கம் செய்ய‌க்கூடிய‌ எல்லாவ‌ற்றையும் நான் எந்த‌ ஒரு கேள்வியும் எழுப்பாம‌ல், அவ்வாறு கேள்வி எழுப்புவ‌ர்க‌ளை தேச‌ துரோகி என‌க் கூறுவ‌து தேச‌ வெறியே அன்றி தேச‌ ப‌க்தி அல்ல. காசுமீர் நிக‌ழ்விலும், ப‌ழ‌ங்குடிக‌ளுக்கு எதிராக‌வும், இன்ன‌ பிற‌ நிக‌ழ்வுக‌ளிலும் இந்த அரசு செய்யக் கூடிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டிக் காட்டி விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌தை தான் அருந்த‌தி ராய் செய்துகொண்டிருக்கின்றாரே த‌விர‌ அவ‌ர் செய்வ‌து ஒன்றும் தேச‌ துரோக‌ம‌ல்ல.  மேலும், இந்தியாவில் வாழும் மக்களை நேசிப்பதும் இந்திய அரசை நேசிப்பதும் ஒரு சேர நடக்க முடியாது என்பதே உண்மை. இன்றைய நிலையில்., ஒன்றை நேசித்தால் இன்னொன்றை எதிர்த்தாக வேண்டும்.  மக்களை நேசிக்க வேண்டுமானால் இந்த அரசை எதிர்த்தாக வேண்டும். அதை தான் அருந்ததிராய் செய்தார். அவரை தேச துரோகி என்கின்றது இந்த இந்துத்துவ அரசு.”

 குறிப்புக‌ள்:

   1) Times od India, Bangalore Edition, date:29/10/2010.

   2) http://www.searchkashmir.org/2008/07/eminent-visits-kashmir-political.html

   3) Conveyor Magazine August 2009 Edition, 16th Page
      Also in International Crisis group report on Kashmir dated 21 Nov 2002.   Page no 3.

   4) http://en.wikipedia.org/wiki/Dominion_of_India
 
   5) http://www.thehindu.com/news/national/article918002.ece

   6) House of Commons Library research paper on Kashmir 30th Mrach 2004 
      Page no 47. Also available in below link   
      http://www.parliment.uk  

பின் குறிப்பு: இந்த‌ க‌ட்டுரையின் த‌லைப்பு இவ்வாறு வைக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கான‌ கார‌ண‌ம் youtubeல் அருந்த‌திராயின் இந்த‌ காணொளிக்கு காண‌கிடைக்கும் பின்னூட்ட‌ங்க‌ளும், இந்துத்துவ‌ ஊட‌க‌ங்க‌ள், வெறிய‌ர்களின் அருந்ததிராயின் மீதான‌ தாக்குத‌ல்க‌ளே..

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
%d bloggers like this: