ஜனவரி, 2011 க்கான தொகுப்பு

தியாக தீபம் முத்துக்குமரனும், தின்று செரித்த‌ திருமாவும்…….


 

        ஈகைச்சுடர் முத்துக்குமரனின் மலர்த்தூண்

  தியாக தீபம் முத்துக்குமரனின் தியாகத்தை திருமா தின்று செரித்தார் (இதைப் பற்றி விரிவாக அண்ணன்.இராம் எழுதியுள்ள வலைப்பக்கத்தைப் பார்க்கவும் http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_19.html     , இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டதால் இந்த துரோகத்தை நானும் நேரில் கண்டேன் ). அன்று தின்றது போதாது என்று இன்றும் முத்துக்குமரனின் நினைவு தினங்களில் அவனது தியாகத்தை தின்று கொண்டிருக்க்கின்றார்கள் திருமாவும், அவரது கட்சியினரும். நண்பர்களுக்காக சில படங்கள்..

வீரவணக்கத்திற்கோ அல்லது நினைவேந்தலுக்கோ எவ்வாறு பதாகைகள் வைக்க வேண்டும் என்பதை மேலிருக்கும் பெரியார் திராவிடக்கழகப் பதாகையை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எவ்வாறு எல்லாம் பதாகைகள் வைக்கக்கூடாது என்பதை கீழிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் பதாகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெரியார் திராவிடக் கழகம் வைத்த‌ பதாகையில் ஒரு வரி மட்டுமே அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகளோ ஒரு வரி மட்டும் தான் “முத்துக்குமரனுக்கு”…


  அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய விடுதலை சிறுத்தை கண்மணிகளே, இன்ன பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கண்மணிகளே தயவு செய்து இன்றிலிருந்து நீங்கள் வீரவணக்கத்திற்கோ, நினைவேந்தலுக்கோ வைக்கக்கூடிய பதாகைகளை பெரியார் திராவிடக்கழகம் வைத்துள்ள பதாகையைப் போல வைய்யுங்கள், அவ்வாறு உங்களால் இயலாதென்றால் தயவு செய்து நீங்கள் வீரவணக்கம் கூறும் அல்லது நினைவு கூறும் நபரின் புகைப்படத்தையோ அல்லது அவரின் பெயரையோ மறந்தும் கூட அந்த பதாகைகளில் வைத்து விடாதீர்கள், அப்படி வைப்பது நீங்கள் அவர்களது தியாகத்தை செருப்பாலடிப்பதற்குச் சமம்.

 
  முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வில் பதாகைகள் வைத்துள்ள எல்லா கட்சியனருக்கும் இது பொருந்தும்.

உங்களை தியாகமெல்லாம் செய்யச் சொல்லவில்லை, தயவு செய்து துரோகமாவது செய்யாமல் இருங்கள்.

 நற்றமிழன்.ப.

Advertisements

“இலங்கா இரத்னா” இந்து இராமும், மகிந்த இராசபக்சேவும் பேசினா ? மொழியாக்க‌ம் – ந‌ற்ற‌மிழ‌ன்.


 

நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைப்பேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமைப் பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள் ஊடகங்களுக்கு உள்ளாக‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின் அடிப்ப‌டைக‌ளை மீறும் வேண்டாத‌ க‌ளைக‌ள் எல்லாம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்துள்ளார்.

ஆனால் இங்குள்ள‌ பிர‌ச்சி‌னை என்ன‌வெனில் திரு.இராமே அவ‌ர் வைத்திருக்கும் இந்த‌ ஊட‌க‌ நேர்மை என்ற‌ வார்த்தைக்கு கூட‌ ம‌திப்ப‌ளித்த‌தே இல்லை என்ப‌து தான். வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் முதல், த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து. எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு. மேலும் இது ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் இந்த‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளில் பங்கு கொண்டிருக்கும் இந்துத்துவ‌வாதிக‌ளைப் ப‌ற்றி விசாரிக்க‌க்கூட‌ ம‌றுத்து வ‌ருகின்ற‌து.


 “ச‌ர்வ‌தேசிய‌வாதியான” திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்றுவிடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, த‌ன‌து ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் எல்லாம் வ‌ருகின்ற‌ன‌. இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ர்சிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே! இவர்கள் என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .
    நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு(Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம். புனைவுச் செய்திக‌ளை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து நாளித‌ழ் போல் நாங்க‌ள் அல்ல‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌தை ப‌திவு செய்ய‌ எங்க‌ளுக்கு உரிமை இல்லை என்ப‌தாலும், இந்த‌ தொலைப்பேசி உரையாட‌ல் முழுமையாக‌ எங்க‌ளால் புனைய‌ப்ப‌ட்ட ஒன்றே என்று உங்க‌ள் எல்லோரிட‌மும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

……

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து,  இராச‌ப‌க்சே தனக்கு நல்வாய்ப்பு தரும்  எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.
இராம்:  உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும்  நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .
இராச‌ப‌க்சே: பொறுக்கி என்ற‌ சொல்லைக் கூட‌ எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் ஊட‌க‌ நேர்மையை அட‌கு வைத்து விட்டு ஒரு ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருக்க‌ எவ்வ‌ள‌வோ முய‌ன்றிருக்கின்றீர்க‌ள். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்ல‌வோ நீங்கள்.  நான் உங்க‌ளின் பெய‌ரை விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் சேர்த்திருக்கின்றேன்.
இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான்.  அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது.  நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.
இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4” தொலைக்காட்சியில் எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே:  நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், எப்பொழுதும் ம‌னித‌ உரிமை விதிக‌ளை மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

 
இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது  கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி)த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைப்பேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த பல நிபுணர்கள் உள்ளார்கள்.

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது  இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம்,  இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது  மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால்  அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்கு என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.
இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா?  க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்:நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும், மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான  கவர்ச்சிக்கும், இடையே மிக‌ப்பெரிய போர் நடைபெற்று வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.
இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது,  உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியும் என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை திறமையாக செய்துகொண்டிருக்கின்றான்.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது..

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

இராச‌ப‌க்சே: இனிய‌ இர‌வு இராம், உங்களின் மேம்படுத்தப்பட்ட‌ விவரணத்தை (Updated Curriculam Vitae)  நான் குறிப்பிட்ட‌ அந்த‌ விபிசன விருதிற்காக‌ அனுப்ப‌ ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

இராம்: இனிய‌ இர‌வு அதிப‌ர் அவ‌ர்க‌ளே. உங்க‌ள‌து கெட்ட‌ க‌ன‌வுக‌ள் எப்பொழுதும் பலிக்காம‌லே இருக்கவேண்டும்.
 
முற்றும்…..

இந்த புனைவை எழுதிய ச‌த்ய‌ சாக‌ர் ஒரு எழுத்தாள‌ர், இய‌க்குந‌ர். இவ‌ர் தில்லியில் வ‌சித்துவ‌ருகின்றார். இவ‌ரை நீங்க‌ள் sugarnama@gmail.com  என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

நன்றி: வினவு

நன்றி: திருமுருகன், மே 17 இயக்கம்

மொழியாக்க‌ம். ப.ந‌ற்ற‌மிழ‌ன்.

மூல‌ப்ப‌திவு : http://www.countercurrents.org/sagar091210.htm

கலைஞரின் பொற்கால ஆட்சியில்(!) மூன்றாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை…….


 

  க‌லைஞ‌ர் க‌ருணாநிதியின் பொற்கால‌ ஆட்சியில் (2005சனவரியிலிருந்து 2009 திச‌ம்ப‌ர் வ‌ரை) 3797 விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்துள்ளாகள் என தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் கூறுகின்ற‌து.   ஆனால் த‌மிழ‌க‌ அர‌சின் புள்ளிவிவ‌ரமோ 3 விவ‌சாயிக‌ள்  ம‌ட்டுமே இந்த காலகட்டத்தில் த‌ற்கொலை செய்துள்ளார்க‌ள் என்கின்ற‌து.  பொய் சொன்னாலும் பொருந்த‌ சொல்ல‌னும், இப்படியா ஈவு,  இர‌க்க‌மே இல்லாம பொய் சொல்றது. வாச‌க‌ர்க‌ளுக்காக தேசிய‌ குற்ற‌விய‌ல் ப‌திவாணைய‌த்தின் புள்ளி விவ‌ர‌மும், த‌மிழ‌க‌ அர‌சின் புள்ளி விவ‌ர‌மும். இவ்விர‌ண்டு புள்ளி விவ‌ர‌ங்க‌ளும் த‌க‌வ‌ல‌றியும் உரிமைச் ச‌ட்ட‌த்தின் மூல‌மாக‌ பெற‌ப்ப‌ட்ட‌வையே.(1)

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள்

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள்

  இதை ப‌ற்றி வீர‌பாண்டிய‌ ஆறுமுக‌த்திட‌ம் கேட்க‌ (அதாங்க‌ விவசாய‌த்துறை அமைச்சர்)அவ‌ரு சொல்றாரு தேசிய‌ குற்ற‌விய‌ல் ப‌திவாணைய‌த்தின் புள்ளிவிவ‌ர‌ம் த‌ப்பாம் ?.    மேலும் மேலும் த‌மிழ‌க‌ அரசு காவ‌ல் துறை த‌லைமை இய‌க்குந‌ரிட‌மிருந்து ஆறு மாத‌ங்க‌ளுக்கு ஒரு முறை விவசாயிக‌ளின் த‌ற்கொலைப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் பெற்றுவ‌ருவ‌தாக‌வும் அவ‌ர் கூறினார்.  ச‌ரி இந்த‌ தேசிய குற்ற‌விய‌ல் ப‌திவாணைய‌ம் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை எங்கிருந்து வாங்குகின்ற‌து என‌ பார்த்தோமேயானால் அதே த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ காவ‌ல் துறை அலுவல‌க‌த்தில் இருந்து தான் அவ‌ர்க‌ளும் இந்த‌ப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைப் பெறுகின்றார்க‌ள்.   இந்த‌ப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றி க‌ட‌ந்த‌ எட்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ நாட்டில் ந‌டைபெறும் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைக‌ளை ஆராய்ந்து வ‌ரும் நாக‌ராச் (அபிவிருத்திக் கல்லூரி சென்னை) கூறுகையில் தேசிய குற்ற‌விய‌ல் ப‌திவாணைய‌த்தின் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் ந‌ம்ப‌த்த‌குந்தைவையே,  மேலும் இந்த‌ப் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் எல்லாம் இந்த‌ த‌ற்கொலைக‌ளை ப‌திவு செய்யும் உள்ளூர் காவ‌ல்துறையின் மூல‌மே பெற‌ப்ப‌ட்ட‌வையே என்கின்றார் . (1)
    இந்த‌ நிலையில் என‌க்கு அண்மையில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு ஒன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து க‌ருணாநிதி அவ‌ர்க‌ளே. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விசயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து தங்களது இலவசத் திட்டத்திற்கு சாட்டையடி கொடுத்தாரே, அது தான் அந்த நிகழ்வு. இப்பொழுது அந்த நிகழ்விலிருந்து சில வரிகள்….

 கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விசயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விசயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

     அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,தொலைக்காட்சியை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

        அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதை விட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?.      துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

 தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

           அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

          விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும்…. என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் தொலைக் காட்சியையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விசயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் பேசிய விசயகுமார்…

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விசயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

  ……………..

   அதே போல‌ கருணாநிதி அவ‌ர்க‌ளே வெறும் எந்திரன், இளைஞ‌ன் மாதிரி ப‌ட‌ங்கள‌ ம‌ட்டும் பார்த்துட்டு இருக்காதீங்க‌ அப்ப‌ப்ப‌ பீப்ளீ நேர‌லை (Pepli Live) போன்ற‌ ப‌ட‌ங்க‌ளையும் பாருங்க‌ அப்ப‌த்தான் விவ‌சாயிக‌ளோட‌ பிர‌ச்ச‌னை என்ன‌ன்னு புரியும்.
                    
          இந்த‌ ஏழை விவ‌சாயி கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் உங்க‌ளுக்கு உண‌ர்த்தும் த‌மிழ‌க‌ அர‌சின் புள்ளிவிவ‌ர‌ம் ச‌ரியா? அல்ல‌து தேசிய‌ குற்ற‌விய‌ல் ப‌திவாணைய‌த்தின் புள்ளிவிவ‌ர‌ம் ச‌ரியா? என‌..
தரவுகள்.
1) Source: New Indian Express, Sunday Express, 09.01.2011 /
http://epaper.expressbuzz.com/NE/NE/2011/01/09/index.shtml

ந‌ற்றமிழ‌ன்

…………..

அம்பேத்கர், பகத்சிங், கார்ல் மார்க்சு புத்தகங்கள் படிப்பதாலே நீங்கள் சிறை செல்ல நேரிடலாம் !


 

   என்ன அம்பேத்கர், பகத் சிங் போன்ற தேச தலைவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டார்களா? எந்த நாட்டில் இப்படி ஒரு கொடும் நிகழ்வு நடந்து வருகின்றது? அங்கு சனநாயகம் கண்டிப்பாக செத்திருக்கும், மக்கள் ஒரு கொடுங்கோலாட்சியின் கீழ் தான் வாழ்ந்து வருவார்கள். இதில் கார்ல் மார்க்சுமா? என்ன கொடுமை ஐயா இது என நீங்கள் அதிர்ச்சியோடு கேட்கலாம். ஆனால் இது தான் உண்மை அம்பேத்கர், பகத்சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டு அதிக நாட்களாகி விட்டது, இப்பொழுது அந்த வரிசையில் கார்ல் மார்க்சும் சேர்ந்திருக்கின்றார். அந்த‌ நாட்டின் பெய‌ர் “இந்தியா”.

 
   பாபா சாகேப் அம்பேத்கர், இந்தியாவிற்கான‌ ச‌ட்ட‌த்தை உருவாக்கிய அமைப்பின் த‌லைவ‌ர் இன்று இந்தியாவில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளார், ஆம் அவ‌ர‌து க‌ருத்துக‌ளை, அவ‌ர‌து நூல்க‌ளை ப‌ர‌ப்புவ‌த‌ற்காக‌ நீங்க‌ள் இந்த‌ இந்துத்துவ அர‌சால்  கைது செய்ய‌ப்ப‌ட்டு சிறையில‌டைக்க‌ப்ப‌டுவீர்க‌ள். கேட்ப‌த‌ற்கு ச‌ற்று அதிர்ச்சியாக‌ இருந்தாலும், இது உண்மை தான். “ஏழ்மையான‌ குடும்ப‌த்தில் பிற‌ந்திருந்தாலும் நான் முதுக‌லை த‌த்துவ‌ப்(M.Phil) படிப்பிற்கான நுழைவுத் தேர்வை முடித்த‌து என‌க்கு ம‌ன‌நிறைவை த‌ந்த‌து, ஆனால் இந்த‌ சிறை நாட்க‌ள் மீண்டும் என்னை ஒரு இருளுக்குள் த‌ள்ளுகின்ற‌ன. அம்பேத்காரிய‌வாதிக‌ள் எல்லாம் சேர்ந்து 1857ல் ந‌ட‌ந்த‌து போல‌ க‌ல‌க‌ம் செய்ய‌ப் போகின்றீர்க‌ளா? என‌ காவ‌ல‌ர்க‌ள் எனனைப் பார்த்துக் கேட்டார்க‌ள்” என‌ கூறுகின்றார் தின்க‌ர் காம்பிளி. இவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ வ‌ழ‌க்கு மிக‌வும் விசித்திர‌மான‌ ஒன்று.

அனில் ம‌ம்மானே, வ‌ய‌து 27, ச‌மூக‌விய‌ல் பேராசிரிய‌ர் (முதுக‌லையில் த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம்)

 தின்க‌ர் காம்பிளி வ‌ய‌து 23, முதுக‌லை த‌த்துவ‌ம், முத‌லாமாண்டு (முதுக‌லை தத்துவ நுழைவுத் தேர்வில் இர‌ண்டாமிட‌ம்)

 பாபு ப‌ட்டீல் வ‌ய‌து 20, இள‌ங்க‌லை முத‌லாமாண்டு

 பாபாசாகேப் சேமோத்தி வ‌ய‌து 27, முதுக‌லை வ‌ணிக‌விய‌ல் ப‌டித்த‌வ‌ர்.

   இவ‌ர்க‌ள் நால்வ‌ரிட‌மும் இருந்து கைப்ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ளில் இருக்கும் க‌ருத்துக‌ள் க‌ண்டிக்க‌த‌க்க‌வை, மேலும் இந்நூல்க‌ள் ம‌க்க‌ளைத் தூண்டிவிட்டு ந‌க்ச‌ல்க‌ளுட‌ன் சேர‌த்தூண்டுப‌வை” என‌ இவ‌ர்க‌ள் நால்வ‌ர் மீதும் வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌து காவ‌ல்துறை.    இதில் முத‌ல் இருவ‌ர் ம‌ட்டும் தான் இந்த‌ப்புத்த‌க‌ங்க‌ளை விற்ப‌னை செய்வ‌த‌ற்காக‌ கொண்டு சென்ற‌வ‌ர்க‌ள், மூன்றாவ‌து, நான்காவ‌து ந‌ப‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்த‌ தொட‌ர் வ‌ண்டியில் இவ‌ர்க‌ள் அருகில் அம‌ர்ந்து ப‌ய‌ண‌ம் செய்த‌ குற்ற‌த்தை செய்த‌வ‌ர்க‌ள். இதில் ந‌கைச்சுவை என்ன‌வெனில் பாபுவிற்கு எதிராக‌ காவ‌ல்துறை நீதிம‌ன்ற‌த்தில் காட்டிய‌ ஆதார‌ம் அவ‌ர் ப‌டித்து வ‌ரும் இள‌ங்க‌லை பாட‌ப் புத்த‌க‌ங்க‌ள். அப்படி என்னதான் புத்தகங்களை அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்றால் கயர்லாஞ்சி நிகழ்வைப் பற்றிய புத்தகம், அம்பேத்கர், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்கள். (1)
  பாபுவிற்கும், தின்க‌ரிற்கும் நீதிம‌ன்ற‌ம் பிணை வ‌ழ‌ங்கிய‌து, ஆனால் அனிலுக்கும், பாபாசாகேப்பிற்கும் நீதிம‌ன்ற‌ம் பிணை வ‌ழ‌ங்க‌ ம‌றுக்க‌, அவ‌ர்க‌ள் உண்ணாவிர‌தம் ந‌ட‌த்தினார்க‌ள். மேலும் சமூகப் போராளிகளான அன்னா கசாரே போன்றோரும் அரசின் இந்த தவறான நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க, மேலும் 14நாட்க‌ள் உண்ணாவிர‌த்த‌த்திற்கு பிற‌கு தான் பிணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ஒரு த‌வ‌றான‌ வ‌ழ‌க்கில் இருந்து பிணை பெற‌வே சாதார‌ண‌ ம‌க்க‌ள் மிக‌க்க‌டுமையாக‌ போராட‌ வேண்டியுள்ள‌து.(1)

அனில் மம்மானே

அனில் மம்மானே

தனேந்திரா

தனேந்திரா

  இதே போல‌ இன்னொரு வ‌ழ‌க்கும் உண்டு. த‌னேன்திர பூரிலே, ந‌ரேசு ப‌ன்சூத் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அம்பேத்க‌ர் இந்து அடிமைத்த‌ன‌த்தில் இருந்து  வெளியேறி பௌத்ததை தழுவிய‌‌‌ தீட்சா பூமிக்குச் சென்று ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌ செய‌ல்க‌ளைச் செய்ய‌ திட்ட‌மிட்டார்க‌ள் என்ப‌தே அவ்வ‌ழ‌க்கு. இவ்வ‌ழ‌க்கு எவ்வித‌ ஆதார‌மும் அற்ற‌து என‌ கூறி இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் பிணை வ‌ழ‌ங்கிய‌து உய‌ர் நீதிம‌ன்ற‌ம், ஆனால் இந்த‌ தீர்ப்பின் மீது உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் இடைக்கால‌த் த‌டை பிற‌ப்பித்து இவ‌ர்க‌ளை மீண்டும் சிறையில‌டைத்த‌து. இவ‌ர்க‌ள் மாவோயிசுட்டுக‌ள் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்டார்க‌ள். “என்னை த‌லைகீழாக‌ க‌ட்டித்தொங்க‌ விட்டு, அம்பேத்க‌ராக‌ இருக்க‌ முய‌ன்றால் இது தான் உன‌க்கு கிடைக்கும் என‌ ஒரு காவ‌ல‌ர் அடிக்க‌டி கூறுவார்” என்கிறார் ப‌ன்சூத். மேலும் அவர் கூறுகையில்,  த‌லித்துகள் பொதுவாக‌ லெனின், கார்க்கி போன்றோரின் எழுத்துக‌ளைப் ப‌டிக்க‌மாட்டார்க‌ள், அப்ப‌டி த‌ப்பித்த‌வ‌றி அவ‌ர்க‌ள் ப‌டித்து விட்டால்  அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் இங்கே ந‌க்ச‌லைட்டுக‌ள், குற்ற‌வாளிக‌ள். மேலும் அவ‌ர் த‌ன்னிட‌ம் உள்ள‌ அம்பேத்க‌ர் நூல்க‌ளின் தொகுப்பையும் ந‌ம்மிட‌ம்(தெக‌ல்கா) காட்டுகின்றார். இறுதியாக‌ மூன்று வ‌ருட‌த்திற்கு பிற‌கு இவ‌ர்க‌ள் மேல் போட‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு த‌ள்ளுப‌டி செய்ய‌ப்ப‌ட்ட‌து. (1)

 

   ப‌க‌த்சிங் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார். ச‌ந்திராப்பூர் என்ற‌ ஊரில் மாணவர்களுக்கு ப‌க‌த் சிங், ஜோதிபா பூலேவைப் ப‌ற்றி பாட‌ம் எடுத்த‌த‌ற்காக‌ ப‌த்து மாண‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். கார‌ண‌ம் இத‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுக்கின்றார்க‌ள் என்ற‌து காவ‌ல்துறை. என்ன‌ புரிய‌லையா, அதாவ‌து ப‌க‌த்சிங் ச‌மூக‌த்தில் ந‌டைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுத‌ம் ஏந்திய‌ புர‌ட்சியை முன்வைத்தார், ப‌க‌த்சிங்கை ப‌டித்து அவ‌ர‌து கொள்கைக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு ஏற்ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் தாங்கிய‌ புர‌ட்சியை நோக்கி செல்வார்க‌ள் என்கிற‌து காவ‌ல்துறை.(1) இப்ப‌டியாக‌த் தான் ப‌க‌த்சிங்கும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார்.
  இறுதியாக‌ இன்று பினாய‌க் சென் வ‌ழ‌க்கின் மூல‌மாக‌ கார்ல் மார்க்சும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார். ஆம் பினாய‌க் சென் ஒரு மாவோயிசுட்டு ஆத‌ரவாள‌ர் என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ காவ‌ல்துறை கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேச‌துரோகி என‌க் கூறி ஆயுட்கால‌ சிறைத் த‌ண்ட‌னை வழங்கியது நீதிமன்றம்.(2) 

              ஆதலால் இந்தியாவின் தேசபக்தர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களைப் புறக்கணியுங்கள். அதே போல தேசதுரோகிகள் எல்லாம் அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களை ஆதரியுங்கள். நீங்கள் தேசபக்தரா அல்லது தேசவிரோதியா என்பது உங்களின் கையில் தான் உள்ளது (நான் உங்கள் கையில் இருக்கப்போகும் புத்தகத்தைப்பற்றிச் சொல்கின்றேன்). மேலும்  உங்கள் வீட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை வைத்துக்கொள்ளாதீர்கள் அதுவே நாளைக்கு உங்களுக்கு எதிரான ஆதாரமாகி விடலாம்.  சுதந்திரத்திற்கு முன்னான ஆங்கிலேய கால‌னீய‌ ஆக்கிர‌மிப்பில் தான் இதுபோல‌ புத்தகங்களை தடை செய்வார்கள் என நீங்கள் கருத தழைப்பட்டால் நீங்கள் ஒரு தேச துரோகி ஆகக் கூடும், ஆதலால் அது போன்ற எண்ணங்களையும் தவிர்த்து விடுங்கள். 

 நன்றி –  தெகல்கா வார இதழ்.

ந‌ற்றமிழன்.

தரவுகள்:
1) http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810bhagatsingh.asp

2) http://www.hindu.com/2010/12/25/stories/2010122567001600.htm

கமல்…நீங்கள் வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?


 

 மன்மதன் அம்பு என்ற படத்தில் நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டே செருப்பால் அடிக்கின்றீர்களே. இது என்ன புது வித்தை. இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள் நண்பர்.கமல் அவர்களே.

 ம‌ன்ம‌த‌ன் அம்பு அருமையான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டிய‌து. ஆனால் நீங்க‌ள் வைத்த‌ சில‌ க‌ருத்துக‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தின் மீது எச்சில் உமிழ்வ‌து போல‌ உள்ள‌து. இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ப‌ட‌த்தின் க‌தை, திரைக்க‌தை, வ‌ச‌ன‌த்தை எழுதிய‌து நீங்க‌ள் தான் என்ப‌தை நான் முத‌லில் உங்க‌ளைத் தொட‌ரும் இர‌சிக‌க‌ண்ம‌ணிக‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்க‌ள் இதில் ந‌டித்த‌வ‌ர் ம‌ட்டுமே, இந்த‌ப்ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌த்தில் எல்லாம் உங்க‌ளுக்கு எந்த‌ ஒரு தொட‌ர்பும் இல்லாம‌ல் இருந்திருக்கலாம் என‌ அவ‌ர்க‌ள் எண்ண‌க்கூடும்.

காசுமீரிகளின் தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌த்தில் நீங்க‌ள் முத‌லில் எச்சில் உமிழ ஆர‌ம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிர‌வாதிக‌ள் ஒருவ‌ன் தான் ப‌ட‌த்தில் உங்க‌ளின் க‌தாநாய‌கியையும், அவ‌ர‌து த‌ந்தையையும் க‌ட‌த்தி வைத்திருப்ப‌தாக‌ கூறுகின்றீர்க‌ள். ப‌ட‌த்தின் க‌தைப்ப‌டி இது ஒரு மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் ந‌ட‌க்கின்ற‌து. அதாவ‌து 2009ல் நீங்க‌ள் இந்த‌க் க‌தையை எழுதியிருந்தால் 2006ல் அப்ப‌டி ஒரு நிக‌ழ்வு காசுமீரில் ந‌ட‌ந்திருக்க‌ வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

 விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969 கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

 வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

 அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

 பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912

              அதே போல படத்தில் வரும் ஒரு வசனம் விருமாண்டியின் தொடர்ச்சி என நினைக்கின்றேன். இனிமேல் இந்தியா பாகிசுதானுக்கு இடையே சண்டை கிடையாது, இருவருமே நட்பு நாடுகள் ஆகிட்டோம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம், நான் என் நண்பனை (சண்டையில்)கொன்ன பாகிசுதான் இராணுவ வீரனை தேடி போயி கொல்ல முடியாதில்லை என நீங்கள் சொல்வீர்கள். இதே கேள்வியை அங்க இருக்கிற பாகிசுதானைச் சேர்ந்த இராணுவ வீரனும் கேட்கலாமே. இந்தக் கேள்வி உங்கள் தரப்பில் சரி என்றால், அவர்களது தரப்பிலும் சரி தானே. நான் தெரியாம தான் கேட்கிறேன் இதுக்கும் அந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு. இந்தப் படத்தில் வரும் மேற்கூறிய இரு காட்சிகளின் கருத்தியலில் தான் இந்துத்துவ மதவெறியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படின்னா நீங்க யாரு நண்பர்.கமல் அவர்களே? உங்களை எல்லாம் நாத்திகவாதி எனக் கூறுகின்றார்களே. அதெல்லாம் பொய், நீங்கள் ஒரு இந்துத்துவ வெறியர் அப்படின்னு இந்த இரண்டு காட்சிகள் சொல்லுதே, இதற்கு உங்கள் பதில் என்ன நண்பர். கமல் அவர்களே. 

 அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதியே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை  கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்)
உங்களையும் சூடு, சொரணையோடு அய்ஃபா (iifa) விருதுகள் வ‌ழ‌ங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நடத்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநர் பதவியில் இருந்து விலகக்கோரி சென்னையில் மே 17  இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின, அதை திரித்து உங்களை பத்ம சிறீ விருதை திருப்பித்தர சொல்லுகின்றார்கள் எனக்கூறினீர்களே, மேலும் அவர்களை நீங்கள் சிறு அலை எனக் கூறியதும் என் நினைவில் வருகின்றன‌. இதெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியப்படும் கமல். திரித்துக்கூறுவதில் முனைவர்.பட்டமே உங்களுக்கு வழங்கலாம். உங்களிடம் கேட்டது என்ன, காசுக்காக நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் இனப்படுகொலையுடன் கை கோர்க்கின்றது என்றால், உங்களுக்கு தந்த விருதை திருப்பித் தரச் சொல்லுகின்றார்கள் என்கிறீர்கள். சூடு, சொர‌ணை இருந்திருந்தால் பதவி விலகி, விருதையும் கூட‌ நீங்கள் திருப்பி தந்திருப்பீர்க‌ள். ஆனால் நீங்க‌ள் தான் க‌யிறு திரிக்கின்றீர்க‌ளே ந‌ண்ப‌ர்.க‌ம‌ல்.  ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17  என்ற மூன்று நாட்களில் மட்டும்  ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.

  எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். ம‌ற்றுமொரு உதார‌ண‌ம் எங்க‌ள் ச‌மூக‌த்திலும் இப்பொழுது ப‌டித்த‌ ஆட்க‌ளெல்லாம் இருக்கின்றார்க‌ள் என‌ த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்தில் நீங்க‌ள் கூறுவீர்க‌ள். உங்க‌ள‌து இந்த‌க் கூற்றின் ப‌டி முன்னாட்க‌ளில் அந்த‌ ச‌மூக‌ம் ப‌டிப்ப‌றிவில்லாத‌ ச‌மூக‌ம், அத‌ற்கு அவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ சொல்ல‌ வ‌ருகின்றீர்க‌ள். மெத்த‌ ப‌டித்த‌ உங்க‌ளைப் போன்ற‌ ‘ப‌குத்த‌றிவுவாதி’ இப்ப‌டி சொல்வ‌து முறையா? 1937வ‌ரை ம‌ருத்துவ‌ நுழைவுத் தேர்வு சம‌சுகிருத‌த்தில் இருந்த‌து உங்க‌ளுக்கு தெரிந்திருக்குமே ந‌ண்பர்.க‌ம‌ல். அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ச‌ம‌சுகிருத‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் ம‌ருத்துவ‌ம் ப‌டித்திருப்பார்க‌ள் ? ஒரு ச‌மூக‌த்தை நீங்க‌ள் குறிவைத்து தாக்குகின்றீர்க‌ளோ என‌ என்னுள் அச்ச‌ம் எழுவ‌தை என்னாள் த‌விர்க்க‌ முடிய‌வில்லை ந‌ண்ப‌ர்.க‌ம‌ல் அவ‌ர்க‌ளே. உட‌னே உங்க‌ள் ந‌ற்ப‌ணி ம‌ன்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள்( அதாவ‌து இர‌சிக‌ர்க‌ள்), இத‌ற்கும் க‌ம‌லுக்கும் என்ன‌த் தொட‌ர்பு, அவ‌ர் வெறும் ந‌டிக‌ர் தானே என‌ விரைந்தோடி வ‌ந்து என்னைக் கேட்க‌லாம். த‌சாவ‌தார‌ ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌து அவ‌ர் தான், உன்னைப் போல் ஒருவ‌ன் பட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌ குழுவில் க‌ம‌லும் ஒருவ‌ர். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் நீங்க‌ள் ஒரு ப‌குத்த‌றிவுவாதியா ? என‌ உங்க‌ளை நான் கேட்ப‌து ச‌ரி என்று உங்க‌ளுக்கு தெரியும். அப்ப‌டியே உங்க‌ள் க‌ண்ம‌னிக‌ளுக்கும் சொல்லிவிடுங்க‌ள்.

பின்குறிப்பு: இந்த‌ த‌லைப்பு உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்த‌வோ, அல்ல‌து உங்க‌ள் இர‌சிக‌ க‌ண்ம‌ணிக‌ளின் உள்ள‌த்தை புண்ப‌டுத்த‌வோ நான் வைக்க‌வில்லை. நீங்க‌ள் என்ன‌ கார‌ண‌த்திற்காக உங்க‌ள் ப‌ட‌த்தில் ஒரு ஈழ‌த்த‌மிழ‌ர் கூறுவ‌தாக‌ இப்ப‌டி ஒரு வ‌ரியை வைத்தீர்க‌ளோ, அதே நோக்க‌த்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக‌ நான் திரைப்ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி எழுதுவ‌து கிடையாது,  ஆனால் இந்த‌ப் ப‌திவு நீங்க‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ங்க‌ளைக் கொச்சைப்ப‌டுத்திய‌ கார‌ண‌த்தினாலும், குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை நீங்க‌ள் தொட‌ர்ந்து தாக்கி வ‌ருவ‌தாலும்  இதைப்ப‌ற்றி நான் எழுத‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன்.

Notes:

1) http://news.bbc.co.uk/2/hi/south_asia/2223364.stm.

ந‌ட்புட‌ன்
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

சென்னையில் நான் பார்த்த முதல் திரைப்படம்.


  பட்டய படிப்பு முடிந்து பொறியியல் படிப்பு கலந்தாய்விற்காக நான் சென்னைக்கு வந்த நாளில் இருந்து தொடங்குகின்றது சென்னைக்கும் எனக்குமான நட்பு. குறிப்பாக கடந்த இரு வருடங்களாக பெரும்பாலான என் வார இறுதிகளை நான் சென்னையில் தான் செலவழித்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டு கால என் சென்னைப் பயணத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் “அம்பேத்கர்”. இந்தத் திரைப்படம் ஒருவேளை தமிழகத்தின் பிற பகுதிகளில் வெளியாகி இருந்திருந்தால் நான் எனது சொந்த ஊரான கருவூரில் பார்த்திருப்பேன். ஆனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர வேறெங்குமே வெளிவராம‌ல் கவனமாக பார்த்துக் கொண்டார் “அம்பேத்கர் சுடர்” விருது (!) பெற்ற  தமிழக கங்காணி. கங்காணியின் திரைக் கதை வசனத்தில் வரும் குப்பைப் படங்களெல்லாம் தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் பலவந்தமாக ஓட்டப்படும் போது உலகத்தரம் வாய்ந்த இந்தப் படம் ஏன் ஒரு சில இடங்களில் மட்டும் வெளியிடப்பட்டது?

 அவருக்கு அந்த விருதை வழங்கிய எழுச்சி தமிழரும் இந்தத் திரைப்படம் தமிழகமெங்கும் வெளிவர அவருக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. இறையாண்மை மாநாட்டை ஒட்டி அவரது ஒளிப்படம் தாங்கிய விளம்ர பலகை வைத்த காசை மட்டும் அம்பேத்கர் படத்திற்காக செலவு செய்திருந்தால் தமிழகத்தில் பகுதி இடங்களில்  அம்பேத்க‌ர் திரைப்பட‌த்தை வெளியிட்டிருக்கலாம். இதை எல்லாம் எதிர்த்து அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த ஒரு தலித் கட்சியினரும் போராடியதாக என் நினைவில் இல்லை. அடேங்கப்பா அம்பேத்கர் மேல் உங்களுக்குத் தான் என்ன ஒரு பாசம். இவர்களை வைய்யுகின்ற அதே நேரத்தில் திரைக்கு வந்து பத்து வருடங்களாகிய இந்தப் திரைப்பட‌த்தை வெளியில் கொண்டுவர முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் இந்தப் படத்தை பரவலாக கொண்டு சேர்க்க பல அமைப்புகள் முயற்சி செய்து கொண்டுள்ளன. பல அமைப்புகள் ஒரு சில காட்சிகளுக்கான மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டு தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.


  “அம்பேத்கர்” ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ என‌து பார்வையை உங்க‌ளுட‌ன் இங்கே நான் ப‌கிர்ந்துகொள்கின்றேன். இந்த‌ப் பட‌த்தை இய‌க்கிய‌ சாப‌ர் ப‌ட்டேலின் க‌டுமையான‌ உழைப்பு ப‌ட‌த்தில் ந‌ன்றாக‌ தெரிகின்ற‌து. “அம்பேத்க‌ராக‌” ந‌டிக்காம‌ல் வாழ்ந்து உள்ளார் ந‌டிக‌ர். ம‌ம்முட்டி. அம்பேத்‌க‌ரின் துணைவி இரமாபாயாக‌ வாழ்ந்து உள்ளார் ந‌டிகை சோனாலி குல்க‌ர்னி. ப‌ட‌த்திற்கு இசை முதுகெலும்பு என்றால் அத‌ற்கு மாற்றுக் க‌ருத்து இருக்காது என்று நினைக்கின்றேன். ஏனெனில் அம்பேத்க‌ரைத் தொடர்ந்து அவ‌ர‌து வாழ்நாள் முழுதும் ப‌ய‌ணிக்கின்ற‌து இசை. மிக‌க் குறிப்பாக சொல்ல‌ வேண்டுமானால் த‌ன‌து துணைவியாரை இழ‌ந்து த‌விக்கும் அவ‌ர‌து த‌னிமைக்கு இசையே அரும‌ருந்தாக‌ அமைகின்ற‌து. இசைய‌மைப்பாள‌ர் அம‌ர் க‌ல்திப்பூருக்கு என் நன்றிக‌‌ள். ஒரே ஒரு வ‌ருத்த‌ம் என்ன‌வெனில் பாட‌ல்க‌ள் த‌மிழில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட‌வில்லை. இங்கு  பாட‌ல்க‌ளும் ப‌ட‌த்தின் க‌தையை எடுத்துச் செல்லும் முக்கிய‌ க‌ருவியே அன்றி வேற‌ல்ல‌. ஒரு காட்சியில் ஒரு பாட‌லைக் கேட்டுக்கொண்டிருக்கும் சில‌ இளைஞ‌ர்க‌ளை அம்பேத்க‌ர் இந்த மூடநம்பிக்கையில் இருந்து நீங்க‌ள் என்று தான் திருந்த‌ப் போவீர்க‌ள் என‌க் கேட்பார். அந்த‌ வ‌ச‌ன‌த்தை வைத்து தான் அது ஒரு மூட‌ந‌ம்பிக்கைப் பாட‌ல் என்றே தெரிய‌ வ‌ருகின்ற‌து.

 மொழி பெய‌ர்ப்பில் ஒர் காட்சியில் முக்கிய‌மான‌ பிழை ஒன்று உள்ள‌து. அம்பேத‌க‌ர் இல‌ண்ட‌னில் உள்ள‌ த‌ன‌து தோழிக்கு க‌டித‌ம் எழுதும் போது தாழ்ந்த‌ குல‌த்தில் பிற‌ந்து விட்ட‌தால் வ‌ழ‌க்குரைஞ‌ராக‌ ப‌ணிபுரிவ‌து ச‌ற்று சிர‌மமாக‌ உள்ளது(அதாவது மற்ற சாதியினர் தனக்கு வழக்குகளை வழங்காததைப் பற்றி குறிப்பிடுகின்றார்) என‌க் கூறுவ‌தாக‌ வ‌ருகின்ற‌து.  தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ என‌ இருக்க‌ வேண்டிய‌ அந்த‌ச் சொல் தாழ்ந்த‌ என‌ வ‌ருகின்ற‌து. இது த‌வ‌றான‌ பொருளை கொடுக்கின்ற‌து. ஆனால் இதே வார்த்தை ப‌ட‌த்தின் பிற‌ காட்சிக‌ளில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ என‌ ச‌ரியாக‌ மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.


  அதே போல‌ ம‌க‌ர் ந‌க‌ர‌க்குள‌த்தில் நீர‌ருந்த‌ச் செல்லும் முன்பாக‌ ந‌ட‌க்கும் பொதுக்கூட்ட‌த்தில் அம்பேத்க‌ர் “இந்து ம‌தத்தின் அடிப்ப‌டையில் (சாதி)பிரிவுக‌ள் இல்லை, மனு உருவாக்கிய சட்டமே இந்தப் பிரிவுகளை உண்டாக்கியது” என்ப‌தாக‌ வ‌ருகின்ற‌து. இதை நான் மொழிபெய‌ர்ப்பில் உள்ள‌ பிழையாக‌ பார்க்க‌முடியாது. இந்து ம‌த‌த்தை காப்ப‌த‌ற்காக யாரோ ஒருவ‌ர் செய்த சித்து வேலை தான். ஏனெனில் இந்து ம‌தத்தில் அடிப்ப‌டையாக‌ க‌ருத‌ப்ப‌டும் வேத‌ங்களில்(ம‌னுவுக்கு முந்தைய‌) அவ‌ர்க‌ள் செய்துள்ள‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையே அம்பேத்க‌ர் ஆய்வு செய்து ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் எழுதியுள்ள‌ நிலையில் இவ்வாறான‌ ஒரு க‌ருத்தை அம்பேத்க‌ர் சொல்லியிருக்க‌ மாட்டார் என்ப‌து என் திண்ண‌ம். காந்தியின் முகத்திரையை கிழித்தெறிந்தவர் அம்பேத்கர். எங்கே அந்த மகாத்மாவின் கோவணம் காற்றில் பறந்து விடுமோ என இறுதியில் இந்தியச் சட்டத்தை எழுத அவர் அம்பேத்கரை நேருவுக்கு பரிந்துரைப்பது போல காட்சி வருகின்றது. ஆனால் நீங்கள் காந்தி, நேரு இருவரில் யார் வரலாற்றை புரட்டினாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எங்குமே இருக்காது.

  இப்ப‌ல்லாம் யாருங்க‌ சாதி பாக்குறான்னு கேட்கின்ற (சென்னையிலுள்ள)அதிமேதாவிக‌ளை, நீங்க‌ள் எல்லோரும் அம்பேத்க‌ர் ப‌ட‌ம் பார்த்தீர்க‌ளா என‌க் கேட்டால் தெரியும், சாதி யார் பார்க்கின்றார்கள் என்று. அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தின் த‌லைவராக ம‌ட்டும் ஒடுக்கியது இந்துத்துவம். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவரல்ல, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எல்லா சமூகங்களுக்குமான தலைவர் அம்பேத்கர். இந்த‌ தேச‌த்தின் த‌லைவ‌ர் அவ‌ர். பெரியார் த‌ன‌து வாழ்நாளில் த‌லைவ‌னாக‌ ஏற்றுக் கொண்ட‌ ஒரே ம‌னித‌ர் அம்பேத‌க‌ர். அவ‌ர‌து நினைவு நாளை யாரும் கொண்டாட‌ முடியாத‌ப‌டி க‌ல‌வ‌ர‌ நாளாக‌ மாற்றிய‌து இந்துத்துவ‌ம். உங்களுக்கு இது அதிர்ச்சியாக‌ இருக்க‌லாம், ஆனால் இது தான் உண்மை. அம்பேத்க‌ரின் நினைவு நாளான‌ திச‌ம்ப‌ர் ஆறாம் திக‌தியன்று திட்ட‌மிட்டு தான் பாப‌ர் ம‌சூதியை தாக்கிய‌து‌ இந்துத்துவ‌ம்.

இறுதியாக‌ இதை வாசிக்கும் வாச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள் உங்க‌ளால் முடிந்த‌ அள‌விற்கு இந்த‌ திரைப்ப‌ட‌ம் தொட‌ர்பான‌ செய்திக‌ளை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். முடிந்த‌வ‌ரை உங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை பார்க்கும்ப‌டி செய்யுங்க‌ள்.இய‌க்குந‌ர் இராமும், வெற்றிமாற‌னும் நீயா நானா தொலைக்காட்சி நிக‌ழ்வில் கூறிய‌து போல‌ இந்த‌ திரைப்ப‌ட‌த்தை மாணவ‌ர்க‌ள் எல்லோரும் சென்று பார்க்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.

ந‌ட்புட‌ன்
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
%d bloggers like this: