சென்னையில் நான் பார்த்த முதல் திரைப்படம்.


  பட்டய படிப்பு முடிந்து பொறியியல் படிப்பு கலந்தாய்விற்காக நான் சென்னைக்கு வந்த நாளில் இருந்து தொடங்குகின்றது சென்னைக்கும் எனக்குமான நட்பு. குறிப்பாக கடந்த இரு வருடங்களாக பெரும்பாலான என் வார இறுதிகளை நான் சென்னையில் தான் செலவழித்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டு கால என் சென்னைப் பயணத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் “அம்பேத்கர்”. இந்தத் திரைப்படம் ஒருவேளை தமிழகத்தின் பிற பகுதிகளில் வெளியாகி இருந்திருந்தால் நான் எனது சொந்த ஊரான கருவூரில் பார்த்திருப்பேன். ஆனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர வேறெங்குமே வெளிவராம‌ல் கவனமாக பார்த்துக் கொண்டார் “அம்பேத்கர் சுடர்” விருது (!) பெற்ற  தமிழக கங்காணி. கங்காணியின் திரைக் கதை வசனத்தில் வரும் குப்பைப் படங்களெல்லாம் தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் பலவந்தமாக ஓட்டப்படும் போது உலகத்தரம் வாய்ந்த இந்தப் படம் ஏன் ஒரு சில இடங்களில் மட்டும் வெளியிடப்பட்டது?

 அவருக்கு அந்த விருதை வழங்கிய எழுச்சி தமிழரும் இந்தத் திரைப்படம் தமிழகமெங்கும் வெளிவர அவருக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. இறையாண்மை மாநாட்டை ஒட்டி அவரது ஒளிப்படம் தாங்கிய விளம்ர பலகை வைத்த காசை மட்டும் அம்பேத்கர் படத்திற்காக செலவு செய்திருந்தால் தமிழகத்தில் பகுதி இடங்களில்  அம்பேத்க‌ர் திரைப்பட‌த்தை வெளியிட்டிருக்கலாம். இதை எல்லாம் எதிர்த்து அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த ஒரு தலித் கட்சியினரும் போராடியதாக என் நினைவில் இல்லை. அடேங்கப்பா அம்பேத்கர் மேல் உங்களுக்குத் தான் என்ன ஒரு பாசம். இவர்களை வைய்யுகின்ற அதே நேரத்தில் திரைக்கு வந்து பத்து வருடங்களாகிய இந்தப் திரைப்பட‌த்தை வெளியில் கொண்டுவர முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் இந்தப் படத்தை பரவலாக கொண்டு சேர்க்க பல அமைப்புகள் முயற்சி செய்து கொண்டுள்ளன. பல அமைப்புகள் ஒரு சில காட்சிகளுக்கான மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டு தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.


  “அம்பேத்கர்” ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ என‌து பார்வையை உங்க‌ளுட‌ன் இங்கே நான் ப‌கிர்ந்துகொள்கின்றேன். இந்த‌ப் பட‌த்தை இய‌க்கிய‌ சாப‌ர் ப‌ட்டேலின் க‌டுமையான‌ உழைப்பு ப‌ட‌த்தில் ந‌ன்றாக‌ தெரிகின்ற‌து. “அம்பேத்க‌ராக‌” ந‌டிக்காம‌ல் வாழ்ந்து உள்ளார் ந‌டிக‌ர். ம‌ம்முட்டி. அம்பேத்‌க‌ரின் துணைவி இரமாபாயாக‌ வாழ்ந்து உள்ளார் ந‌டிகை சோனாலி குல்க‌ர்னி. ப‌ட‌த்திற்கு இசை முதுகெலும்பு என்றால் அத‌ற்கு மாற்றுக் க‌ருத்து இருக்காது என்று நினைக்கின்றேன். ஏனெனில் அம்பேத்க‌ரைத் தொடர்ந்து அவ‌ர‌து வாழ்நாள் முழுதும் ப‌ய‌ணிக்கின்ற‌து இசை. மிக‌க் குறிப்பாக சொல்ல‌ வேண்டுமானால் த‌ன‌து துணைவியாரை இழ‌ந்து த‌விக்கும் அவ‌ர‌து த‌னிமைக்கு இசையே அரும‌ருந்தாக‌ அமைகின்ற‌து. இசைய‌மைப்பாள‌ர் அம‌ர் க‌ல்திப்பூருக்கு என் நன்றிக‌‌ள். ஒரே ஒரு வ‌ருத்த‌ம் என்ன‌வெனில் பாட‌ல்க‌ள் த‌மிழில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட‌வில்லை. இங்கு  பாட‌ல்க‌ளும் ப‌ட‌த்தின் க‌தையை எடுத்துச் செல்லும் முக்கிய‌ க‌ருவியே அன்றி வேற‌ல்ல‌. ஒரு காட்சியில் ஒரு பாட‌லைக் கேட்டுக்கொண்டிருக்கும் சில‌ இளைஞ‌ர்க‌ளை அம்பேத்க‌ர் இந்த மூடநம்பிக்கையில் இருந்து நீங்க‌ள் என்று தான் திருந்த‌ப் போவீர்க‌ள் என‌க் கேட்பார். அந்த‌ வ‌ச‌ன‌த்தை வைத்து தான் அது ஒரு மூட‌ந‌ம்பிக்கைப் பாட‌ல் என்றே தெரிய‌ வ‌ருகின்ற‌து.

 மொழி பெய‌ர்ப்பில் ஒர் காட்சியில் முக்கிய‌மான‌ பிழை ஒன்று உள்ள‌து. அம்பேத‌க‌ர் இல‌ண்ட‌னில் உள்ள‌ த‌ன‌து தோழிக்கு க‌டித‌ம் எழுதும் போது தாழ்ந்த‌ குல‌த்தில் பிற‌ந்து விட்ட‌தால் வ‌ழ‌க்குரைஞ‌ராக‌ ப‌ணிபுரிவ‌து ச‌ற்று சிர‌மமாக‌ உள்ளது(அதாவது மற்ற சாதியினர் தனக்கு வழக்குகளை வழங்காததைப் பற்றி குறிப்பிடுகின்றார்) என‌க் கூறுவ‌தாக‌ வ‌ருகின்ற‌து.  தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ என‌ இருக்க‌ வேண்டிய‌ அந்த‌ச் சொல் தாழ்ந்த‌ என‌ வ‌ருகின்ற‌து. இது த‌வ‌றான‌ பொருளை கொடுக்கின்ற‌து. ஆனால் இதே வார்த்தை ப‌ட‌த்தின் பிற‌ காட்சிக‌ளில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ என‌ ச‌ரியாக‌ மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.


  அதே போல‌ ம‌க‌ர் ந‌க‌ர‌க்குள‌த்தில் நீர‌ருந்த‌ச் செல்லும் முன்பாக‌ ந‌ட‌க்கும் பொதுக்கூட்ட‌த்தில் அம்பேத்க‌ர் “இந்து ம‌தத்தின் அடிப்ப‌டையில் (சாதி)பிரிவுக‌ள் இல்லை, மனு உருவாக்கிய சட்டமே இந்தப் பிரிவுகளை உண்டாக்கியது” என்ப‌தாக‌ வ‌ருகின்ற‌து. இதை நான் மொழிபெய‌ர்ப்பில் உள்ள‌ பிழையாக‌ பார்க்க‌முடியாது. இந்து ம‌த‌த்தை காப்ப‌த‌ற்காக யாரோ ஒருவ‌ர் செய்த சித்து வேலை தான். ஏனெனில் இந்து ம‌தத்தில் அடிப்ப‌டையாக‌ க‌ருத‌ப்ப‌டும் வேத‌ங்களில்(ம‌னுவுக்கு முந்தைய‌) அவ‌ர்க‌ள் செய்துள்ள‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையே அம்பேத்க‌ர் ஆய்வு செய்து ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் எழுதியுள்ள‌ நிலையில் இவ்வாறான‌ ஒரு க‌ருத்தை அம்பேத்க‌ர் சொல்லியிருக்க‌ மாட்டார் என்ப‌து என் திண்ண‌ம். காந்தியின் முகத்திரையை கிழித்தெறிந்தவர் அம்பேத்கர். எங்கே அந்த மகாத்மாவின் கோவணம் காற்றில் பறந்து விடுமோ என இறுதியில் இந்தியச் சட்டத்தை எழுத அவர் அம்பேத்கரை நேருவுக்கு பரிந்துரைப்பது போல காட்சி வருகின்றது. ஆனால் நீங்கள் காந்தி, நேரு இருவரில் யார் வரலாற்றை புரட்டினாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எங்குமே இருக்காது.

  இப்ப‌ல்லாம் யாருங்க‌ சாதி பாக்குறான்னு கேட்கின்ற (சென்னையிலுள்ள)அதிமேதாவிக‌ளை, நீங்க‌ள் எல்லோரும் அம்பேத்க‌ர் ப‌ட‌ம் பார்த்தீர்க‌ளா என‌க் கேட்டால் தெரியும், சாதி யார் பார்க்கின்றார்கள் என்று. அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தின் த‌லைவராக ம‌ட்டும் ஒடுக்கியது இந்துத்துவம். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவரல்ல, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எல்லா சமூகங்களுக்குமான தலைவர் அம்பேத்கர். இந்த‌ தேச‌த்தின் த‌லைவ‌ர் அவ‌ர். பெரியார் த‌ன‌து வாழ்நாளில் த‌லைவ‌னாக‌ ஏற்றுக் கொண்ட‌ ஒரே ம‌னித‌ர் அம்பேத‌க‌ர். அவ‌ர‌து நினைவு நாளை யாரும் கொண்டாட‌ முடியாத‌ப‌டி க‌ல‌வ‌ர‌ நாளாக‌ மாற்றிய‌து இந்துத்துவ‌ம். உங்களுக்கு இது அதிர்ச்சியாக‌ இருக்க‌லாம், ஆனால் இது தான் உண்மை. அம்பேத்க‌ரின் நினைவு நாளான‌ திச‌ம்ப‌ர் ஆறாம் திக‌தியன்று திட்ட‌மிட்டு தான் பாப‌ர் ம‌சூதியை தாக்கிய‌து‌ இந்துத்துவ‌ம்.

இறுதியாக‌ இதை வாசிக்கும் வாச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள் உங்க‌ளால் முடிந்த‌ அள‌விற்கு இந்த‌ திரைப்ப‌ட‌ம் தொட‌ர்பான‌ செய்திக‌ளை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். முடிந்த‌வ‌ரை உங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை பார்க்கும்ப‌டி செய்யுங்க‌ள்.இய‌க்குந‌ர் இராமும், வெற்றிமாற‌னும் நீயா நானா தொலைக்காட்சி நிக‌ழ்வில் கூறிய‌து போல‌ இந்த‌ திரைப்ப‌ட‌த்தை மாணவ‌ர்க‌ள் எல்லோரும் சென்று பார்க்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.

ந‌ட்புட‌ன்
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
 1. அப்படி ஒரு படம் இருப்பதாக இன்றுதான் அறிகின்றேன். ஆனாலும் செய்தியின் சூட்சுமம் புரியவில்லை.

  • அன்பு நண்பர், பார்த்திபராசன், நீங்கள் எந்த ஊரில் வசிக்கின்றீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா? உங்கள் பதிவின் முதல் வரியே இந்தக் கேள்விக்கு காரணம்.
   இரண்டாவது வரி எனக்கு புரியவில்லை, நேரடியாகவே கேளுங்கள்.

 2. இந்த படத்தை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் காடிருக்க வேண்டும், ஆனா தமிழக அரசு இதை செய்யாமல் , அமைச்சர் ராசாவை தலித் என்கிறது.
  விட்டால் தமிழகத்தை முதல் அமைச்சர் போல் மாற்றி விடுவார்கள்.

  • கங்காணி தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியை சரியாக செய்கின்றது. அதே போல நாமும் நம் பணியைச் சரியாக செய்து கங்காணிகளை காட்டிக்கொடுக்க வேண்டும்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: