மார்ச், 2011 க்கான தொகுப்பு

காசு கொடுத்து பொய்யை வாங்கும் பொன்னான(!) உலகம்……………த‌மிழாக்க‌ம் – ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.


 

ஒவ்வொரு ஞாயிற‌ன்றும் காசு கொடுத்து நீங்க‌ள் பொய்யை வாங்குகின்றீர்க‌ள் செய்திகளை அல்ல‌. ஆமாம் நீங்க‌ள் பொய்யை தான் வாங்குகின்றீர்க‌ள், அந்த பொய் தான் இங்கே ஊடகங்கள் செயல்படும் அச்சாக‌‌ இருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் பொய்யை காசுக்கு விற்கின்றார்கள் உங்களிடம், ஆம் அதே பொய் தான் இங்கே ம‌க்க‌ளாட்சி செயல்படும் அச்சாகவும் இருக்கின்றது. ஒரு வார‌த்திற்கு பிற‌கு அவ‌ர்க‌ள் உங்க‌ள‌து ம‌திய‌ உண‌வை அந்த நாளிதழில் சுற்றி த‌ருகின்றார்க‌ள். அதுவும் கூட‌ ஒருவ‌கையில் உங்க‌ள் ந‌ல்ல‌த‌ற்கே (!).

         இன்று பெரும்பாலான நாளிதழ்கள் வெறும் பொய்யை மட்டுமே செய்திகளாக‌ கூறிவருகின்றார்கள். இந்த பொருளாதார கட்ட‌மைப்பு ந‌மக்கு தேவையானவற்றை வழங்கும் வரை நாமும் எதைப் பற்றியும் கவலை கொள்ளப்போவதில்லை. அச்சு ஊடகங்கள், குறுஞ்செய்திகள், தொலைகாட்சி, வானொலி போன்ற ஊடகங்களினால் நமது மூளை முழுவதும் கதைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டே வருகின்றது. என்னதான் இருப்பினும் இன்னும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. வெற்று செய்தி அறிக்கைகளும் எப்போதாவது வரும் மெர்வின் சில்வா (அரசு ஊழியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த பெருமைக்குறிய(!) இலங்கை அமைச்சர்). ப‌ற்றிய‌ செய்திக‌ளுமே நாம் இந்த‌ நாளேடுக‌ளை அதிக‌மாக‌ வாங்க‌ போதுமான‌தாக இருக்கின்றது.

                                 அர‌சிய‌ல் ஊர்வலங்களில், மாநாடுகளில் கூட்ட‌ங்க‌ள் சேர்ப்ப‌த‌ற்காக‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் உங்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌(கையூட்டாக‌) உணவையும், முடிந்தால் ஒரு புட்டி ம‌துபான‌த்தையும் கொடுக்கின்றார்க‌ள். ம‌க்க‌ள் தங்க‌ள் இருக்கையை விட்டு எழுந்து செல்லாம‌ல் இருக்க‌ இவை அவர்களுக்கு உத‌வுகின்ற‌ன‌. இவ்வாறு ம‌க்க‌ள் தேவையை(அவர்கள் உருவாக்கிய தேவையை) அர‌சிய‌ல்வாதிக‌ள் காது கொடுத்து கேட்காம‌ல் போனால் மக்கள் அவ‌ர்களை ஆட்சி க‌ட்டிலில் இருந்து தூக்கியெறிந்து விடுவார்க‌ள். சில‌ கால‌த்திற்கு முன் நாம் ம‌கிந்த‌ இராச‌ப‌க்சேவுட‌ன் ஒரு ஒப்ப‌ந்த‌த்திற்கு வ‌ந்தோம். ந‌ம்மை பாதுகாப்பாக‌வும், ந‌ம‌க்கு தேவையான‌வ‌ற்றை அவ‌ர் ந‌ம‌க்கு கொடுத்து வ‌ரும் வ‌ரை நாம் அவ‌ர்(ம‌கிந்த‌) என்ன‌ சொன்னாலும் கேட்டுக் கொண்டிருப்போமென‌. இதனால் ந‌ம‌க்கு கிடைத்து தான் இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்கள்.

    ச‌ண்டே ஒப்ச‌ர்வ‌ர் (Sunday Observer) நாளித‌ழை எடுத்து கொள்ளுங்க‌ள் அத‌ன் மைய‌ அச்சாக‌ என்ன‌ இருக்கின்ற‌து?. வேலை வாய்ப்புக‌ள், திரும‌ண‌ வ‌ர‌ன்க‌ள், வீடு விற்ப‌னை தொட‌ர்பான‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள். ந‌ம் எல்லோருக்கும் தெரிந்த‌ செய்தியை காகித‌ குப்பைக‌ளில் அச்ச‌டித்து த‌ருகின்றார்க‌ள். ச‌ண்டே டைம்சு (Sunday Times) உங்க‌ளுக்கு தெரியாத எதாவது‌ ஒரு செய்தியையாவ‌து அவ‌ர்க‌ள் சொல்கின்றார்க‌ளா?. இன்றும் கூட‌ டைம்சு(Times) நாளிதழ் ஒரு விள‌ம்ப‌ர‌ இய‌ந்திர‌மாக‌த் தான் இருந்து வ‌ருகின்ற‌து. அவ‌ர்க‌ள் நாளித‌ழை பிரித்துப் பாருங்க‌ள் ந‌டுப்ப‌குதியில் உங்க‌ளுக்கு கிடைப்ப‌தென்ன? வெறும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள், வீடு, நில‌ம் விற‌ப‌னை தொட‌ர்பான‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள். இவ‌ர்க‌ள் கொடுக்கும் செய்திக‌ள் எல்லாம் செவிக்கான‌தா? இல்லை எல்லாம் உங்கள் வ‌யிற்றுக்கான‌வையே…. எல்லாம் வெறும் அரிசி சோறு தானே தவிர‌ செய்திகளே அல்ல‌.  
      டெய்லி மிர‌ர்(Daily Mirror) அல்ல‌து Ada derana விட‌மிருந்து உங்க‌ளுக்கு தின‌மும் கிடைக்கும் செய்தி அறிவிப்புக‌ள். இது என்ன‌ எல்லாம் மொறு மொறுப்பான நொறுக்கு தீனிக‌ள் இவைகளும் செய்திகள் அல்ல. இங்கே த‌ற்பொழுது என்ன‌ ந‌டைபெற்று கொண்டிருக்கின்ற‌தென‌ ம‌ட்டும் தான் கூறுவார்க‌ள். ஒரு பொழுதும் ஏன் இதெல்லாம் ந‌ட‌க்கின்ற‌தென‌ கூற‌மாட்டார்க‌ள்.  ஏதாவது ஒரு போராட்ட‌‌த்தினால் வாக‌ன‌ நெரிச‌ல் ஏற்ப‌ட்டால் அவர்கள் அந்த வாகன நெரிசலைப் பற்றிக்கூறுவார்களே தவிர‌. அது என்ன‌ போராட்ட‌ம், ஏன் ந‌ட‌க்கின்ற‌து என்றெல்லாம் கூற‌ மாட்டார்க‌ள். ஒருவ‌ர் வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு அழைத்துச் செல்ல‌ப்ப‌டுவ‌தாக‌ ம‌ட்டும் கூறுவார்க‌ளே த‌விர‌, அந்த‌ வ‌ழ‌க்கே பொய்யான‌ ஒரு வழ‌க்கு என்ப‌தை மட்டும் ஒரு பொழுதும் மறந்தும் கூட அவர்கள் உங்களுக்கு கூற‌மாட்டார்க‌ள்.  உண‌வு பொருட்க‌ள் விலை உய‌ர்ந்த‌தை ம‌ட்டும் கூறுவார்க‌ள். ஏன் விலை உய‌ர்ந்த‌து? யார் கார‌ண‌ம் என்றெல்லாம் கூற‌மாட்டார்க‌ள்.


 

இங்கே என்ன‌ பிர‌ச்ச‌னை என்ப‌தை அவ‌ர்க‌ள்(ஊட‌க‌ங்க‌ள்) இனிமேலும் உங்க‌ளுக்கு கூற‌ப்போவ‌தில்லை. பிர‌ச்ச‌னை என்று ம‌ட்டும் தான் கூறுவார்க‌ள். அதை க‌ளைந்து ந‌ன்றாக‌ வாழ‌ என்ன‌ வ‌ழி என்று கூற‌மாட்டார்கள். நீங்கள் வாழ‌ என்ன‌ தேவை என்று அவர்கள் கருதுவார்களோ அதை பற்றி ம‌ட்டும் தான் கூறுவார்க‌ள். இந்த‌ அமைச்ச‌ர் இவ்வாறு கூறினார், அந்த‌ அமைச்ச‌ர் அவ்வாறு கூறினார் என‌க் கூறுவார்க‌ள். காவ‌ல்துறை சில‌ த‌வ‌றுக‌ளை செய்து விட்ட‌து, ஆனால் “விசார‌ணை இன்னும் ந‌ட‌ந்து கொண்டு தான் உள்ள‌து(!)” என்பார்க‌ள். அப்புற‌ம் யார் இன்று உண்ணாவிர‌த‌ம் இருக்கின்றார்க‌ள், மெர்வின் சில்வா என்ன‌ த‌வ‌று செய்தார் என‌ உங்களுக்கு தெரியுமா? என‌ எப்பொழுதாவ‌து சில‌ உண்மை செய்திக‌ளை எழுதுவார்க‌ள். இவையெல்லாம் வெறும் எலும்பை ஒப்ப‌னை செய்து “பிரியாணி” என்று ஏமாற்றுவ‌து போல‌ தான். இந்த‌ வார்த்தைக‌ளுக்கு எல்லாம் என்ன‌ பொருள்?  “அதிப‌ர், நாடாளும‌ன்ற‌ம், நீதிம‌ன்ற‌ விசார‌ணை, தேர்த‌ல், விசார‌ணை ஆணைய‌ம்” ?

   அதிப‌ர், தேர்த‌ல் அதிகார‌ங்க‌ளை த‌ன‌து க‌ட்டுக்குள் வைத்துக் கொண்டு “அதிபராக‌வே” தன் வாழ்நாளின் இறுதி வ‌ரை இருந்து வ‌ந்தால்?.       ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும் ப‌ல‌ நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் எதிர்க‌ட்சியிலேயே உட்கார்ந்திருந்தால் அந்த‌ “நாடாளும‌ன்ற‌ம்” எத‌ற்கு?.      பொது ம‌க்க‌ளுக்கு எதிராக‌ ம‌ட்டுமே நீதிவிசார‌ணை ந‌ட‌ந்தால்,  ம‌க்க‌ளால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ உறுப்பின‌ர்க‌ளைக் கொண்ட‌ விசார‌ணை ஆணைய‌ம் எதை விசாரிப்ப‌து?   தேர்த‌லில் ஒரு த‌ர‌ப்பு “ஊட‌க‌ம், ப‌ண‌ம், தேர்த‌ல் ஆணைய‌ம், அரச‌ ப‌டைக‌ளைக்” கையில் வைத்துக் கொண்டால் பின்ன‌ர் தேர்த‌ல் எத‌ற்கு?
  ஏன்? எத‌ற்கு? என்ற‌ கேள்வியே இல்லாம‌ல் ஊட‌க‌ங்க‌ள் உங்க‌ளுக்கு இந்த‌ வார்த்தைக‌ளை வழ‌ங்கி வ‌ருகின்ற‌ன‌. இந்த‌ அமைதியும், ச‌மாதான‌மும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌ச்சைப் பொய்க‌ளால் சூழ‌ப்ப‌ட்ட‌ ஒன்று என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது. இவ‌ர் அதிப‌ர் அல்ல, ஒரு ம‌ன்ன‌ர்.   இது நாடாளும‌ன்ற‌ம் அல்ல‌, நில‌ப்பிர‌ப்புக்க‌ள் கும்ப‌லாக‌ கூடும் ஒரு இட‌ம்.   இது நீதிம‌ன்ற‌ விசார‌ணை அல்ல‌, த‌னிப்ப‌ட்ட‌ ப‌ழிவாங்க‌ல் ந‌ட‌வ‌டிக்கை.   இது போரில் ஏற்பட்ட தவறுகளை களைந்து ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆணைய‌ம‌ல்ல‌, போரை நியாய‌ப்ப‌டுத்தும் ஒரு முத்திரை அவ்வ‌ள‌வே.   இவையெல்லாம் தேர்த‌ல‌ல்ல‌, ம‌ன்ன‌ரை அடுத்து இள‌வ‌ர‌ச‌ரை ம‌ன்ன‌ராக்கும் ச‌ட‌ங்கு முறைக‌ள். இது போன்ற‌ வார்த்தைக‌ளை(அதிப‌ர், தேர்த‌ல்) ப‌திப்ப‌த‌ன் மூல‌மாக‌ இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் அதிகார‌த்தில் உள்ள‌ குடும்ப‌த்தினரால் க‌வ‌ன‌மாக‌ உருவாக்கப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ளை ஏற்றுக்கொண்டு அவ‌ற்றை ந‌ம் ஞாப‌க‌த்தில் இருந்து அழியாவ‌ண்ண‌ம் ந‌ம் ம‌ன‌தில் நிலை பெற‌ச் செய்கின்ற‌ன‌. இந்த‌ மொழியே நாம் பார்க்கும் உல‌க‌த்தை (நமது கருத்தாக்கத்தை) உருவாக்குகின்ற‌து .

 
 இந்த‌ வார்த்தைக‌ள் (அதிப‌ர், தேர்த‌ல்) ந‌டைமுறை உல‌க‌த்தை ந‌ம‌க்கு விவ‌ரிக்காம‌ல், நாம் எதை காண‌வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் விரும்புகின்றார்க‌ளோ, அந்த‌ உல‌க‌த்தை ம‌ட்டுமே காண்பிக்கின்றன‌. போர் என்ப‌து “ம‌னித‌ உரிமைக்கான‌ ந‌ட‌வ‌டிக்கை”, உறுதியான‌ எதிர்க‌ட்சி என்ப‌து “தேச‌ துரோக‌ம்”. அவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு என்ன‌ சொல்ல‌ வேண்டும் என்றால், ந‌ம்மை ஆள‌ ஒரு புதிய‌ குடும்ப‌ம் வ‌ந்துள்ள‌து. அந்த குடும்பம் மக்களுடைய‌ பெரும்பான்மை அதிகார‌த்தை எடுத்துக் கொண்டதால் மக்களாகிய‌ நாம் கீழே சென்று விட்டோம். மேலும் இதையெல்லாம் அவ‌ர்க‌ள் ந‌ம் ந‌ல‌த்திற்காக‌வே செய்கின்றார்கள். இதையெல்லாம் விடுத்து “தொலைபேசி ஒழுங்கு ஆணைய‌ம், ந‌க‌ர்ப்புற‌ மேம்பாட்டு ஆணைய‌ம், போரில் ஏற்பட்ட தவறுகளை களைந்து ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும்‌ ஆணையம்” போன்ற‌ சொற்க‌ள் எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு தேவை இல்லை சொற்கள். அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌து எல்லாம் மகிந்த‌ என்ற ஒரு சொல் மட்டும் தான். என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை ம‌ட்டும் தான் அவ‌ர்க‌ள் ப‌திப்பிக்கின்றார்க‌ள், மிக‌ அரிதாக‌வே ஏன் ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை ப‌திப்பிக்கின்றார்க‌ள். ஏனெனில் இந்த‌ “ஏன்” என்ப‌த‌ற்கு பின்னால் உள்ள‌வை அவ‌ர்க‌ளிட‌ம் உள்ள‌ 160 க‌தாபாத்திர‌ங்க‌ளில் (அதிபர், நாடாளுமன்றம், சனநாயகம், தேர்தல்….போன்றவை) அட‌ங்காது. இது அவ‌ர்க‌ளின் விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ளை ப‌ய‌முறுத்தி வெளியேறச் செய்யக்கூடும், மேலும் இந்த செய்தியால் அவ‌ர்கள்(ஊட‌க‌வியள‌ர்க‌ளை) சிறைக்கு கூட செல்ல நேரிடும். யார் க‌ண்டார் சீக்கிர‌மாக அவர்க‌ளுக்கு க‌ல்ல‌றை கூட‌ கிட்ட‌லாம். இத‌னால் சால‌ச்சிற‌ந்த‌ வ‌ழி என்ன‌வெனில் இது போன்ற‌ “ஏன்” “எத‌ற்கு” கேள்விக‌ளை முற்றிலுமாக த‌விர்ப்ப‌தே. அடுத்த‌ நாள் நாம்(ஊடகவியலாளர்கள்) உயிரோடு வாழ‌ வாச‌க‌ர்க‌ளுக்கு சோற்று மூட்டையை செய்தியென‌ சுற்றி கொடுக்க‌வேண்டும், இல்லையெனில் நாம் சுதந்திரமாக வாழ‌முடியாது.
 
       இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை தான் இல‌ங்கையே நீ இன்று செய்துள்ளாய். உங்க‌ள் வாழ்க்கையை முழுவ‌துமாக‌ வாழ‌ நீங்க‌ள் முடிவெடுத்து விட்டீர்க‌ள், சுத‌ந்திர‌மாக‌ வாழ‌ அல்ல‌. இல‌ங்கையின் ம‌க்க‌ள், அர‌சு உருவாக்கியுள்ள‌ ம‌ட்டைப்ப‌ந்து ஆடுக‌ள‌ம், சாலை, துறைமுக‌ம், மின்னுற்ப‌த்தி நிலைய‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை க‌ண்டு த‌ங்க‌ளை, தாங்க‌ளே ஏமாற்றி கொள்கின்றார்க‌ள். ஊட‌க‌ங்க‌ளும் உண்மை நிலையை ம‌க்க‌ளுக்கு கூறாம‌ல் இருப்ப‌தால் த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌ங்க‌ள் மூட‌ப்ப‌டுவதை த‌விர்த்து, வெறும் விள‌ம்ப‌ர‌ங்களால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருகின்ற‌ன‌. அழுகின்ற‌ குழ‌ந்தைக் கூட்ட‌த்தின் த‌லைவ‌ராக‌ எப்பொழுதுமே இருப்ப‌த‌னால் எதிர் க‌ட்சி த‌லைவ‌ரோ, ஒரு அமைச்ச‌ருக்குண்டான‌ வ‌ன‌ப்புட‌ன் வாழ்ந்து வ‌ருகின்றார். எல்லோரும் இதைப் போல‌ தான் ஒரு போலியான‌ வாழ்க்கையை வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள். முரண்டு பிடிக்கும் போது மட்டும் அவ‌ர்க‌ள் சிறைக‌ளில் தூக்கியெறிய‌ப்ப‌டுகின்றார்க‌ள். சென‌ர‌ல் பொன்சேகா உண்மையை கூற‌ முய‌ற்சித்த‌தால் த‌ற்பொழுது சிறையில் உள்ளார். அவ‌ர‌து ப‌த‌வி ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌து, அவ‌ர‌து குடும்ப‌ம் வேட்டையாட‌ப்ப‌ட்ட‌து, அவ‌ர‌து பெய‌ர், புக‌ழ் எல்லாம் சேற்றில் தூக்கியெறிய‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர் த‌ன‌து உணவை இப்பொழுது ‌சிறையில் பெற்று வ‌ருகின்றார். ஒரு அடி பாயில் போரை மட்டுமே கண்ட‌‌ அவ‌ர‌து உட‌ம்பை ஒடுக்கி கொண்டு உற‌ங்குகின்றார். அர‌சு கூறுகின்ற‌ பொய்க‌ளை ஒப்புக்கொண்டு உங்கள் வீடுகளில் வாழுங்க‌ள் அல்ல‌து அடுத்த வேளை உண‌வை சிறையில் உண்ணுங்க‌ள், என்ப‌து தான் இன்றைய‌ ஒப்ப‌ந்த‌ம்.
 

       இது தான் இன்றைய‌ நீதி, இது தான் இன்றைய‌ ஒப்ப‌ந்த‌ம். ஒரு அர‌சுக்கும், ம‌க்க‌ளுக்கும் இடையிலான‌ ஒப்ப‌ந்த‌ம‌ல்ல‌. ம‌க்க‌ளுக்கும் ஒரு த‌னி ம‌னித‌னுக்குமாக‌ ஒப்ப‌ந்த‌ம் இது. ஆட்சியை ஏற்றுக்கொண்டால் வாழ‌லாம் இல்லையெனில் ப‌ட்டினி கிட‌ந்து சாக‌ வேண்டிய‌து தான். கே.பிக்கு(முன்னால் புலிப் போராளி) இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் கைய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர் வாழ்வ‌து என்ப‌தை தேர்ந்தெடுத்தார். இன்றும் கூட‌ ச‌ர‌த் பொன்சேகா ம‌கிந்த‌விட‌ம் கெஞ்சி ம‌ன்னிப்பு கேட்டு வீட்டிற்கு செல்லலாம், இல்லையெனில் சிறைதான் அவ‌ருக்கு வாழ்நாள் முழுதும் வீடாகும் என்றார்கள், ஆனால் அவர் இதை மறுத்துவிட்டார். இலங்கை ஊடகங்களுக்கும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது. நாங்கள் என்ன கூறுகின்றோமோ அதை மட்டுமே கூறி உயிர் வாழுங்கள் , விள‌ம்ப‌ர‌ம், விற்ப‌னை ப‌குதிக‌ளை( வீடு, நில‌ம்)மட்டுமே ம‌க்க‌ளிட‌ம் விற்ப‌னை செய்யுங்க‌ள், உங்க‌ள‌து தொழிலாள‌ர்க‌ளை, உங்க‌ளது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்க‌ள். அர‌ச‌ப‌டை மேற்கொள்ளும் ந‌ட‌வ‌டிக்கை ப‌ற்றி எழுதுவ‌தை நிறுத்தி விடுங்க‌ள். நாங்க‌ள் கூறுகின்ற‌ வார்த்தைக‌ளை கொண்டு ம‌ட்டும் பேசுங்க‌ள். ஆட்டும‌ந்தைக‌ளை திருப்திப‌டுத்துவ‌த‌ற்காக‌ நாங்க‌ள் அடிக்கும் குட்டிக‌ர‌ண‌த்தை, நீங்க‌ளும் அடியுங்க‌ள். நீங்க‌ள் யார், என்ன‌, எப்பொழுது, எங்கே, போன்ற‌ கேள்விக‌ளை கேட்க‌லாம். ஆனால் “ஏன்”, “எப்ப‌டி” என்ற‌ கேள்வியை த‌விர்த்து. ம‌க்க‌ளும் கூட‌ இப்பொழுதெல்லாம் இதை விரும்புவ‌தில்லை.

சண்டே லீட‌ர்(Sunday Leader) நாளித‌ழ் இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை ஏற்றுக்கொள்ள‌வில்லை. அத‌னால் தான் இந்த‌ ப‌த்திரிக்கை மீதான வழக்கு இன்றும் நீதிம‌ன்ற‌த்தில் நடந்து வருகின்றது. இந்த‌ கார‌ண‌த்திற்காக‌ தான் இந்த‌ நாளித‌ழின் நிறுவ‌ன‌ ஆசிரிய‌ரான‌ இல‌ச‌ந்த‌ விக்ர‌ம‌துங்க‌ ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார். இதே‌ கார‌ண‌த்திற்காக‌ தான் ம‌ற்ற‌ நாளித‌ழ்க‌ள் எல்லாம் நீதிம‌ன்ற‌த்திலிருக்கும் எங்கள்‌ நாளித‌ழின் த‌ற்போதை ப‌திப்பாசிரிய‌ரின் மேல் புழுதிவாரி வீசுகின்ற‌ன‌. ச‌ண்டே லீட‌ர் பார்ப்ப‌த‌ற்கு அழ‌காக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌ நாளித‌ழ் அல்ல‌. பொருளாதார‌ ரீதியில் உறுதியான‌தும் அல்ல‌. மேலும் எங்கள் நாளிதழ் பெரும்பாலான‌ ம‌க்களின் விருப்பத்திற்குரிய நாளிதழும் அல்ல‌. இந்த‌ நாளித‌ழ் தான் சிற‌ப்பான‌ ஊட‌க‌விய‌ல் ப‌ணியை மேற்கொள்கின்ற‌தா என்றால் அதுவும் இல்லை.  ஆனால் இந்த‌ நாளித‌ழ் என்ன‌ ந‌ட‌க்கின்ற‌தோ அதை அப்ப‌டியே ப‌திப்பிக்கின்ற‌து. அர‌சுக்காக‌வும், எதிர்க‌ட்சிக்காக‌வும் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்டு உண்மையை ம‌றைத்து, பொய்யான‌ அழகாக செய்தியைப் போல ம‌ற்ற ஊடகங்கள் சுற்றி தருவது போல் நாங்கள் சுற்றி த‌ருவ‌தில்லை. ஆதலால் எங்க‌ள் செய்தி உங்களுக்கு செரிப்ப‌த‌ற்கு ச‌ற்று சிர‌மமாக‌ இருக்கின்ற‌து.  இது தான் “லீட‌ர்” (Leader). நாங்க‌ள் உங்க‌ளுக்கு ம‌திய‌ உண‌வை விற்ப‌தில்லை, உங்களுக்கு உண்மைச் செய்தியை அறிய‌த்த‌ருகின்றோம்.

ந‌ன்றி: ச‌ண்டே லீட‌ர்(Sunday Leader)

மூல‌ப்ப‌திவு: http://www.thesundayleader.lk/2010/10/17/you-buy-the-lie.

…………………………..

இக்கட்டுரை முழுவதுமாக இலங்கையைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதால் இந்தியா, தமிழ் நாடு பற்றிய எனது கருத்துகளை ஓப்புமை நோக்கில் இங்கே கூறுகின்றேன்.
மேற்கூறிய‌வை எல்லாம் இல‌ங்கையில் ம‌ட்டும் ந‌டந்து வருகின்ற‌ நிக‌ழ்வுக‌ள் அல்ல‌. உல‌க‌மெங்கும் இது தான் நிலைமை. வ‌ட‌ அமெரிக்காவின் போர் குற்ற‌ங்க‌ளை வெளியிடும் விக்கீ லீக்சை(Wiki Leaks) உருவாக்கிய‌ சூலிய‌ன் ஆசாங்கே(Julian Assange)இன்றும் கூட‌ த‌ன் உயிரை பாதுகாத்துக் கொள்ள‌ நாடு விட்டு நாடு சென்று கொண்டு தான் இருக்கின்றார். இப்பொழுது அவரை சுவிட்சர்லாந்தில் வைத்து வேண்டியவற்றை செய்ய வட அமெரிக்கா முயன்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பாக நாம் வாழும் இந்தியாவிலும், த‌மிழ‌க‌த்திலும் உள்ள‌ நாளித‌ழ்க‌ள் எல்லாம் அர‌சு கேட்கும் முன்ன‌ரே அர‌சிட‌ம் சென்று ஒப்ப‌ந்த‌ம் போட்டுக் கொண்டு அல்லவா வேலை செய்கின்றார்க‌ள். ஒரு குண்டுவெடிப்பு நிக‌ழ்ந்த‌ அடுத்த‌ நாள் விசார‌ணையை துவ‌க்கும் முன்ன‌ரே இவ‌ர்க‌ள் தான் குற்ற‌ம் செய்தார்க‌ள் என‌ ப‌க்க‌த்தில் இருந்து பார்த்த‌து போல் எழுதுவார்க‌ள் த‌மிழ‌க‌, இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்கள். உதார‌ண‌ம். விழுப்புர‌ம் இருப்பு பாதை குண்டுவெடிப்பு, மேற்கு வங்க இருப்புப்பாதை குண்டுவெடிப்பு. முன்னதில் புலிகளும், பின்னதில் மாவோயிசுட்டுகளும் குற்றம் சாட்டப்பட்டார்கள். குண்டுவெடடிப்பு நடந்து பல மாதங்களாகியும் இவர்கள் தான் அதைச் செய்தார்கள் என்ற உறுதியான ஆதாரம் எதுவும் இன்று வரை காவல் துறைக்கு கிடைக்கவில்லை. காவல்துறையும் இன்னும் துப்பு துலக்கிக் கொண்டு தான் உள்ளது. ஆனால் இந்த குண்டுவெடிப்புகளை முறையே புலிகளும், மாவோயிசுட்டுகளும் தான் செய்தார்கள் என்று ஊடகங்கள் எல்லாம் எழுதின, இன்று எந்த ஒரு பொது மக்களை கேட்டாலும் ஊடகங்கள் கூரிய அவர்கள் தான் குண்டுவெடிப்பைச் செய்தார்கள் எனக்கூறுவார்கள்(ஊடகங்களைப் போலவே எந்த வித ஆதாரமுமின்றி). எப்ப‌டி இல‌ங்கையில் உண்மை நிலையை கூறுப‌வ‌ர்க‌ள் புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்கள், தேச துரோகிகள் என்று அரசால் முத்திரை குத்த‌ப்பட்டு ஊடகங்களால் மக்களின் மனங்களில் பதியவைக்கப்பட்டார்க‌ளோ, அதே போல‌ தான் இங்கே ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளின் உண்மை நிலையை கூறுப‌வ‌ர்க‌ள் மாவோயிசுட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்றும், தேச துரோகிகள் என்றும் அரசால் முத்திரை குத்தப்பட்டு, ஊட‌க‌ங்களின் மூலம் மக்களின் மனங்களில் அவர்கள் தேச துரோகிகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள் என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.  ந‌டுநிலையான‌ ஊட‌க‌ங்க‌ள் எல்லாம் அருங்காட்சியங்களில் கூட நமக்கு கிடைக்குமா என்பது ஐயமே.

     இங்கு ந‌ட‌க்கும் தேர்த‌ல் பித்த‌லாட்ட‌ங்க‌ளோ உல‌க‌ப் பிர‌சித்த‌ம். காசுமீரில் ஆயுதப்போராட்டத்தின் தோற்றுவாய் 1987 சட்டமன்ற தேர்தல், கட்சிகளை எல்லாம் நம்பாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரவதை அனுபவித்தார்கள்(1). இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் இராணுவத்தினரின் துப்பாக்கி முனையில் தான் நடத்தப்பட்டிருக்கின்றது. ஏன், கடந்த நாடாளுமன்றத் தேர்த‌லில் வைகோ போட்டியிட்ட‌ தொகுதியில் ப‌திவான‌ வாக்குக‌ளை விட‌ அதிக‌ அள‌விலான‌ வாக்குக‌ள் எண்ண‌ப்ப‌ட்ட‌தும், ஆர‌ம்ப‌ம் முத‌ல் வாக்கு எண்ணிக்கையின் இறுதி வ‌ரை இர‌ண்டாம் இட‌த்தில் இருந்த‌வ‌ர், பின்ன‌ர் வெற்றி பெற்று இந்திய‌ உள்துறை அமைச்ச‌ராக‌ இருப்ப‌தும் நீங்க‌ள் அறிந்த‌தே. இது போதாதா தேர்தலை ஒரு கட்சி தான் கட்டுப்படுத்துகின்றது என நாம் தெரிந்து கொள்ள. இந்தியா சுதந்திரம் பெற்ற 64 ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கின்றது இதில் 13 ஆண்டுகளைத் தவிர 51ஆவது ஆண்டாக இந்தியாவை ஆண்டு வருகின்ற‌து காங்கிரசு கட்சி, இந்த 51 ஆண்டுகளில் நேரு இறந்த பின்னரான சில ஆண்டுகளைத் தவிர 90விழுக்காடு ஆண்டுகள் காங்கிரசு கட்சி நேரு என்ற மன்னர் குடும்பத்தின் கையில் தான் உள்ளது. இதோ அடுத்த மன்னராக பட்டத்து இளவரசர் இராகுல் எப்பொழுது எங்களுக்கு ஆட்சி வழங்குவார் என ஊடகங்கள் சங்கை முழங்கத்தொடங்கிவிட்டன. இவர்களை தவிர்த்தால் மதவாத ஆட்சியை நிலைநிறுத்தும் பா.ஜ.க தான் இந்திய அளவில் அடுத்த கட்சி என்கின்றார்கள். தமிழநாட்டிலும் அதே நிலைமை தான் ஒன்று கலைஞர் குடும்ப மன்னராட்சி அல்லது செயலலிதா அவர்களின் சர்வாதிகார ஆட்சி. இந்த “பிரதமர், தேர்தல், சனநாயகம், அமைதி” போன்ற 160கதாபாத்திரங்களுக்கு இந்தியாவிலும் இலங்கையில் உள்ள நிலையே.பெரும்பான்மையான மக்களும் இலங்கையைப் போலவே தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக வாழப் பழகி விட்டார்கள். சுதந்திரமாக அல்ல. இங்கும் ம‌க்க‌ளாட்சி என்ப‌தெல்லாம் வெறும் காட்சிப்பிழையே.

1)http://news.bbc.co.uk/2/hi/south_asia/2223364.stm

த‌மிழாக்க‌ம் –  ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

………

Published in keetru

Advertisements

அறுபத்து மூவரையும் நீங்கள் ஆதரிக்கத்தான் போகிறீர்களா???


 

கருணாநிதி காங்கிரசுடன் தன் உறவு முறிந்ததாக அறிவித்தபோது, அது எல்லாதரப்பையும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது. தி.முக வினர் தங்கள் தோளில் இருந்த பாரம் இறங்கியதாக நினைத்து மகிழ்ந்தார்கள். எதிர்கட்சிகள் திமுகவின் பலம் குறைந்துவிடும் என எண்ணி மகிழ்ந்தார்கள் (அதிகார மற்றும் பொருளாதார பலம், ஆள் பலம் அல்ல). நடுநிலையானவர்கள் காங்கிரசின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துபோகும் என்று மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், ஏனெனில் ஒரு தலைமுறையே காங்கிரஸ் தனித்து நின்றதைக் கண்டதில்லை. காங். தொண்டர்களும் தங்கள் பலத்தை காட்ட வாய்ப்பு வந்ததாக மகிழ்ந்தார்கள், ஒரு பெருங்குடிகாரனின் வீரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஒப்பானது இது என்றாலும் அவர்களது மனோநிலையும் பொதுவான நோக்கில் மகிழ்ச்சியே. ஈழ ஆதரவாளர்களை இப்பட்டியலில் இணைக்க முடியாது, அவர்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது.

ஆக உங்கள் நிலைப்பாடு எதுவாயினும் காங்கிரஸ் தனித்து நின்றால் மகிழ்ச்சி என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்கும் இல்லையா? ஆகவே இந்த கழிசடை கூட்டத்தை நிரந்தரமாக தனிமைப்படுத்தி உங்கள் சந்தோஷத்தை நிரந்தரமாக்குங்களேன் என கோரித்தான் இக்கடித்தம்.

 காங்கிரசை புறக்கணிக்க மறுப்போரது முதல் வாதம் அது இந்திய சுதந்திரத்துக்கு உழைத்த கட்சி தியாகிகளின் கட்சி என்பதாக இருக்கும். இது தவறான புரிதல் என்பதே யதார்த்தம். அக்கட்சியில் சுதந்திரத்துக்கு போராடிய சிலரும் தியாகிகள் சிலரும் இருந்தார்கள் என்று சொல்வதுதான் சரி. அப்படியான நல்லவர்கள் பலரும் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டார்கள் அல்லது கைவிடப்பட்டார்கள். பகத்சிங்கை விட ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் இருந்திருக்க முடியுமா? அவரை காந்தியால் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலும் எனும் சூழல் நிலவியபோது அவர்களை லாகூர் மாநாட்டுக்கு முன்னால் தூக்கிலிடுவது நல்லது என்றார் காந்தி (ஒரிஜினல்). காங்கிரஸ் வெள்ளையர்களால் துவங்கப்பட்டது, வெள்ளையர்கள் பாதுகாப்பாக நாடாள வசதியாக மக்களை கட்டுப்படுத்த நடத்தப்பட்டது, அவர்கள் பாவேலைமுடிந்து கிளம்புகையில் அவர்களுக்கு விசுவாசமான வேலையாளாக நாட்டை பெற்றுக்கொள்ள நடத்தப்பட்டது. சுருங்கச்சொன்னால் அப்போது அக்கட்சி வெள்ளையனின் ஒரு பினாமி.

 வெள்ளையர்களால் துவங்கப்பட்டு வெள்ளையர்களுக்காகவே நடத்தப்பட்ட இக்கட்சி இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு வெள்ளையர்களிடமே வந்திருக்கிறது. இணையம் உலகையே ஒரு கிராமமாக்கிவிட்ட பிறகு எதை யார் ஆண்டால் என்ன என்று கேட்பீரேயானால் நீங்கள் இந்த வெள்ளையம்மாளின் மற்றொரு முகம் பற்றி தெரிந்துகொண்டாக வேண்டும். அவர் கேம்பிரிட்ஜில் படித்ததாக சொல்கிறார், கேம்பிரிட்ஜ் அதை மறுக்கிறது. விஷயம் அம்பலத்துக்கு வந்த பிறகு தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இருந்து தன் கல்வித்தகுதியை வாபஸ் பெறுகிறார் (ராகுல் காந்தியின் கல்வித்தகுதியும் ஏறத்தாழ இந்த வகையானதுதான்). அவர் தன் இத்தாலிய குடியுரிமையை துறந்துவிட்டதாக சொல்லும் ஆவணம்கூட முறையானது அல்ல. இத்தாலிய குடியுரிமையை துறந்ததாக சோனியாவே சொல்லிவிட்டதாக சொல்லும் ஒரு ஆவணம்தான் அந்த தூதரகத்தால் தரப்பட்டிருக்கிறது (ராசா குற்றவாளி இல்லை என அவரே சொன்னதால் அவர் குற்றவாளி அல்ல என நக்கீரன் சொல்வது போல). குவாட்டரோச்சியை காப்பாற்ற அவர் எடுத்த அசுரத்தனமான முயற்சி அவனைக்காட்டிலும் அதிகம் சம்பாதித்துக்கொடுத்த ராசா விசயத்தில் இல்லையே ஏன்? ஒரு இத்தாலிய புரோக்கர்கூட தண்டனைக்குள்ளாவதை அவர் விரும்பவில்லை என்பது உங்களுக்கு புரியவில்லையா?

சோனியாவை தியாகி என அதிகமாக கொண்டாடியது தமிழகமே. எந்த ஒரு மரணம் அவருக்கு மாபெரும் செல்வத்துக்கான கதவுகளை திறந்ததோ அதே மரணம்தான் அவருக்கான பெருமளவு பரிதாபத்தையும் தேடித்தந்தது. அவரது கணவனின் மரணம்தான் ஒன்றரை லட்சம் ஈழமக்களின் மரணத்துக்கான ஒரே நியாயமாக அவரது ஆட்களால் சொல்லப்பட்டது. ஆனால் இந்த அரக்கத்தனம் அவருடைய இயல்பு என்று கருதலாமே ஒழிய அவரது கோபத்தின் வெளிப்பாடாக கருத இயலாது. அப்படி அவர் கோபப்படுபவராயின் இன்றைக்கு சுப்ரமணியன்சாமிதான் அவரது முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும்., சாமி இன்னமும் ராஜீவை கொன்றது சோனியாதான் என்கிறார். முசோலினியின் படைத்தளபதியின் மகளாக பிறந்து மூன்று சர்வாதிகாரிகள் நடமாடிய வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டவர். தன் வீட்டின் இன்னொரு மருமகளை நள்ளிரவில் விரட்டியடித்தவர். தியாகத்தின் நிழல்கூட படாதவர் தியாகியென கொண்டாடப்பட்டது காலத்தின் கொடூரமான நகைச்சுவையே.

ஹிட்லரும் ராணுவத்தில் சேராதுபோயிருந்தால் ஒரு ஓவியனாக இருந்து உயிரை விட்டிருப்பார். அதுபோலவே சோனியாவும் அரசாள வந்திருக்காவிட்டால் தியாகியாகவே கருதப்பட்டிருக்கக்கூடும். பிரதமர் பதவியை மறுத்துவிட்டு அங்கு மன்மோகனை அமர்த்தியவர் என அவரது அடிமைகள் கொண்டாடுகிறார்கள். இவர்களைவிட தி.மு.கவினர் பரவாயில்லை, ராஜாவை அமைச்சராக்கி அழகுபார்த்த கனிமொழியை தியாகியென அவர்கள் கொண்டாடவில்லை. முதலில் அவர் ராஜீவின் பின்னால் நின்று பொருளீட்டினார் அவர் போய் சேர்ந்த பின்னர் சில ஆண்டுகள் கழித்து மன்மோகனை முன்னிருத்தி பொருளீட்டுகிறார், இதில் தியாகம் எங்கிருந்து வந்தது? அவருடைய அதீத அதிகார மோகம்தான் ராகுலின் திருமணத்தைக்கூட கைகூடவிடாமல் தடுக்கிறது என்பதற்கான மறுப்பை எந்த காங்கிரஸ்காரனாலும் சொல்ல இயலாது (எல்லோருக்கும் தெரிந்த ரகசியமான ராகுலின் ஸ்பெயின் காதலி இன்னமும் வெயிட்டிங்கில்தான் இருக்கிறார்.. ராகுலின் வயது 41). சோனியா ஒரு நல்ல இத்தாலி குடிமகளாக இருந்திருக்கிறார் என்பதைத்தவிர வேறு எந்த நற்செய்தியும் அவரைப்பற்றி சொல்வதற்கில்லை.

சோனியாவின் வரலாறை இவ்வளவு நீட்டி முழக்க காரணமிருக்கிறது. அவரது காலடியில் கிடக்கும் நாயாகவே காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கிறது. ராகுல் எனும் இளவரசனுக்கு பயிற்சி தந்து அவரை பிரதமராக்கும் வகுப்புக்கள்தான் இப்போது நடக்கும் அரசு. அவர் அரசாள வரும்போது முழு சர்வாதிகாரியாகவே இருப்பார், ஏனெனில் இப்போது அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியை அப்படித்தான் நடத்துகிறார். எப்படிப்பட்ட சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் என்பதற்கு அவரது பாட்டியும் பெரியப்பனும் வழிகாட்டிவிட்டார்கள். இவர்கள் கோபமாக இருந்தால் மனிதப்படுகொலையை முன்னின்று நடத்துவார்கள் (சீக்கியப் படுகொலை), அதிகாரமிருந்தால் கொல்லச்சொல்லி ரசிப்பார்கள் (ஈழம்) அல்லது தேவையெனில் சட்டபூர்வமாக செய்வார்கள் (காட்டு வேட்டை). திமுகவை ஒழிக்க அவரது வீட்டிலேயே ஆள் இருக்கிறது, அதிமுகவை ஒழிக்க அம்மா எனும் ஒரு சக்தியே போதும். ஆனால் காங்கிரசை ஒழிக்க நாம்தான் ஏதாவது செய்தாகவேண்டும். தொண்டர்களே இல்லாத கட்சிக்கு அறுபத்து மூன்று இடங்கள் எனும் அங்கீகாரம் நம் சாலையில் கிடக்கும் அசிங்கம் போன்றதென்றால் அதில் சிலர் தேர்ந்தெடுக்கப்படுவது அந்த அசிங்கத்தை நம் சட்டையில் பூசிக்கொள்வது போன்றது.

நீங்கள் குடும்ப ஆட்சியை விரும்பாதவர் என்றால் காங்கிரசை ஒழித்தாகவேண்டும், பரம்பரையாக இந்தியாவை ஆளும் லட்சியத்தோடு உள்ள உள்வீட்டு பிரச்சனையில்லாத குடும்பம் சோனியாவுடையதுதான். போட்டியில் இருக்க தகுதி பெற்ற ஒருவரை காலன் கூட்டிச்செல்ல இன்னொருவரை சோனியாவே விரட்டியடித்தார், எமதர்மன் எப்போதும் இவருக்கு சகாயம் செய்பவனாகவே இருந்திருக்கிறான்.

நீங்கள் ஈழத்தைப் பற்றி அக்கறையில்லாத தமிழரென்றாலும் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். காரணம் அவருக்கு தமிழக தமிழனென்றும் ஈழத்தமிழனென்றும் பிரித்தறியத் தெரியாது. முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் துரோகமும், மீனவர்களின் மரணம் அதைத்தான் சொல்கிறது.

 நீங்கள் சிறுபன்மையோர் நலன் குறித்து அக்கறைப்படுபவர் என்றால் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். சீக்கியர்களை கொல்ல அவர்களே போனார்கள், இசுலாமிரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் போனபோது அவர்கள் மவுனமாக ஆதரித்தார்கள்.

 நீங்கள் கருணாநிதியில் ஆதரவாளர் எனில் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். கருணாநிதியின் ராஜதந்திரி எனும் பிம்பத்தின் மீது மூன்று சீட்டு எனும் அஸ்திரம் மூலம் சாணத்தை பூசியவர் சோனியாதான்.

 கருணாவை வெறுப்பவர் எனில் நீங்கள் காங்கிரசை புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரசை வளர்த்துவிட்ட குற்றத்தை செய்தவர்கள் பட்டியலில் அவருடன் நீங்களும் இடம் பிடித்துவிடுவீர்கள்.

நீங்கள் ஏழை எனில் காங்கிரசை ஆதரிக்காதீர்கள், எலிகளுக்கு இனாமாகத் தரும் தானியத்தை உங்களுக்கு தரமாட்டோம் என தயக்கமில்லாமல் சொன்னவர்கள் இவர்கள்.

 நீங்கள் நடுத்தர வர்கத்தவர் எனில் காங்கிரசை ஆதரிக்காதீர்கள், உங்களிடம் முன்கூட்டியே பிடுங்கப்படும் வரி ஹசன் அலியிடமிருந்து யாசகமாகக் கூட கோரப்படவில்லை. நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட் ரோலில் உள்ள வரி ஐம்பத்து இரண்டு சதவிகிதம், ஒரு சதவிகிதம்கூட வரிபிடித்தம் இல்லாமல் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணம் எழுபது லட்சம் கோடி.

ஒருவேளை நீங்கள் ராகுலுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என ஆசைப்பட்டாலும் காங்கிரசை புறக்கணித்தால்தான் உண்டு. இனி அதிகாரத்துக்கு வழியில்லை என்ற சூழல்வந்தால் மட்டுமே ராகுலால் அவரது வெளிநாட்டு காதலியை மணமுடிக்க இயலும்.

 நீங்கள் ஈழமக்களுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல விரும்பினாலும் காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட்டுத்தான் அதை சொல்ல முடியும்.

ஆகவே… தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்…..

 சில விதிவிலக்குகள்: நீங்கள் ஈழ ஆதரவாளர் எனில் இந்தக் கடிதம் உங்களுக்கு அவசியப்படாது. அம்மாவின் பக்தர்கள் எனில், சிந்திக்க கற்ற பிறகு இது என்ன கடிதம் என்று தெரிந்துகொள்ளலாம்.

நண்பர் ஒருவர் எழுதியது……….

63 தொகுதிகளிலும் காங்கிரசை வேரறுக்க இந்த கட்டுரை ஒரு சிறிய அளவில் உதவும் என்ற எண்ணுகின்றேன்…

Advertisements
%d bloggers like this: