ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்……தோழர்.பிரியா தம்பி


கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு வளர்ந்ததைப் போலவே, ஊடகமும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. காலை 9 மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி என்கிற வேலைகளில் மாற்றம் வந்தது கடந்த சில ஆண்டுகளில் தான். பெண்கள் என்றால் டீச்சர் வேலைக்கோ, அல்லது ஏதாவது ஒரு நல்ல அரசு வேலைக்கோ போய் விட்டு மாலை வீடு திரும்பி விட வேண்டும் என்கிற ஒரு மனோபாவத்தை உடைத்துக் கொண்டு பெரும்பாலான பெண்கள் இந்த ஊடகத்துறைக்கும் வரத் தொடங்கினர்.

இன்று ஊடகத்தில் பெண்களின் எண்ணிக்கை பிரமிக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியாகுமா? என்று கேட்டால் இல்லெயென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிகை, ஊடகம் என்றால் செய்தி ஊடகம், டி.வி, சினிமா, இணையம் எழுத்து என எல்லாம் கலந்தது தானே?

நான் பணியாற்றும் செய்தித்துறை சார்ந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். சமீபத்தைய புள்ளி விவரங்களின் படி இந்திய ஊடகங்களில் 97 விழுக்காட்டை இந்து ஆதிக்க சாதிகளும், 49 விழுக்காட்டை குறிப்பாக பார்ப்பனர்களும் மட்டுமே முதலாளிகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் மிகச் சிறந்த ஊடகங்கள் என்று சொல்லப்படுகிற 37 ஊடகங்களை வைத்து எடுக்கப்பட்ட கணக்கில், செய்திகளை நிர்ணயிக்கும் இடத்தில்  71 விழுக்காடு பேர் பார்ப்பனர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் ஊடகங்களை விட ஆங்கில நிறுவனங்களில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள். பெண்கள் என்றால் சீக்கிரம் வீட்டுக்கு ஓடி விடுவார்கள், எந்த நேரத்திலும் பணிசெய்யத் தயாராக இல்லாதவர்கள், செய்தி சேகரிப்பு போன்ற கடினமான வேலைகளை அவர்களால் செய்ய முடியாது என்கிற எல்லா செய்திகளையும் இந்தப் பெண்கள் பொய்யாக்கி விட்டு கால, நேரம் பார்க்காமல் வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் இவர்களில் சமூகம் சார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நிர்வாகங்களின் சமூக மதிப்பீடுகளைத் தான் அங்கு வேலை செய்பவர்களும் பிரதிபலிக்க முடியும் என்பது இதில் ஓரளவு உண்மையும் கூட. செய்தியாளர்களின் தேர்வு என்பது மொழிப் புலமையும், தொடர்பு கொள்ளும் திறனும், நல்ல தோற்றப் பொலிவும் என்பது தான் செய்தியாளர்களாக வரவேண்டிய பெண்களுக்கு நிர்வாகம் வைக்கும் தகுதித் தேர்வு.

நல்ல படித்த பின்னணியில் இருந்து, காலம் காலமாய் இந்த சமூகத்தை தீர்மானிக்கும் ஒரு உயர்சாதி பின்னணியில் இருந்து தான் அதில் பெரும் பெண்கள் வருகிறார்கள். முதல் தலைமுறையாக படித்த, பின் தங்கிய ஒரு சமூகத்தை, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆங்கில மீடியாவில் எனக்குத் தெரிந்து இல்லை.

காலம் காலமாய் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு இடத்தை வெறுமனே நிரப்புவதற்காக மட்டுமே நாம் போய் அமர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. போராடி செல்லும் ஒரு இடத்தில், நாம் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டோம் என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பது அவசியமாகிறது… இது இன்று வரை பெருமளவு சாத்தியப்படவே இல்லை. இதைத் தாண்டியும் தெகல்ஹா போன்ற ஊடகங்களில் சில பெண்களில் நல்ல கட்டுரைகளை பார்க்க முடிகிறது.

நான் பணிபுரிந்த வரையிலும் மலையாள செய்தி ஊடகங்கள் ஓரளவுக்கு சுதந்திரமாகவும், சமூகப் பார்வையோடும் இயங்குவதாகத் தெரிகிறது. பொதுவாக ஊடகங்களுக்கு வரும் பெண்கள் என்றால் பெண்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே எழுத வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் தொடர்பான விஷயங்கள் எது என்பதையும் ஆண்களே முடிவு செய்கிறார்கள்… பேஷன், சமையல் …. இதுபோன்ற செய்திகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை.

எவ்வளவோ மாறிய பிறகும் பெண்களால் பெண்கள் பத்திரிகைக்கு மட்டும் தானே ஆசிரியராக வர முடிகிறது. பெண்கள், பத்திரிகைக்கு வந்ததில் இன்னொரு நல்ல மாற்றத்தை குறிப்பிட்டாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அல்லது இப்போதும் சில பத்திரிகைகளில் செய்திக்காக செல்லும் இடங்களில் கவர் வாங்கும் செய்தியாளர்களும், புகைப்படக் காரர்களும் இருக்கிறார்கள்.. ஜால்ரா செய்திகள் தொடங்கும் இடம் இதுதான்… போதிய படிப்பறிவற்று, எழுதும் திறமையற்ற, வெறுமனே செய்தி சேகரிக்கும் ஆட்களை மட்டும் தெரிந்து கொள்ளும் ஆட்கள் மட்டுமே இங்கு செய்தியாளர்களாக இருந்தனர்.

பெண்கள் வந்த பிறகு இந்த நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது. பெண்கள் யாரும் கவர் வாங்கும் செய்தியாளராக இல்லை என்பதை பெருமிதத்தோடு சொல்லிக் கொள்கிறேன். முறையான படிப்பு, சம்பளம், மொழித்திறமை எல்லாம் பெண்களால் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இங்கும் பெண்களின் ஒழுக்கம் தொடர்பான கேள்விகளை தவிர்த்து விட முடியவில்லை. இன்றும் சில ஊடகங்களில் டிரஸ் கோட் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். சுடிதார் அணிந்து இருபுறமும் துப்பட்டாவை பின் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் சொல்கிறார்கள். ஒருமுறை பா.ம.க. நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளராக கலந்து கொண்டேன். ஜீன்ஸ், குர்தா தான் நான் அன்று அணிந்திருந்த உடை. கலாச்சாரம் பற்றி பேசிக் கொண்டிருந்த ராமதாஸ் கீழே இருந்த என்னைப் பார்த்து, ‘’இவங்க போட்டிருக்கிற ஆடையைப் பாருங்க, பெண்கள் ஏதேதோ அணியத் தொடங்கிட்டாங்க’’ என்று சிரித்தார்.

நாம் எந்த வேலைக்குப் போனாலும் நம்மை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கும் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன். நான் கைரளி தொலைக்காட்சியில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஆதிவாசிகள் பற்றிய ஆவணப் படம் ஒன்றிற்காக வயநாடு பகுதியில் என்னுடைய கேமராமேனோடு ஒரே வீட்டில் சில காலம் தங்கியிருந்தேன்.. இன்றும் அந்த ஆதிவாசி மக்களை பற்றி நான் பிரமித்து சில செய்திகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதைக் கேட்பவர்கள் எனக்கும் அந்த கேமராமேனுக்கும் என்ன உறவு இருந்தது என்பதில் தான் அதிக அக்கறை காட்டினார்கள். ஆதிவாசிகள் என்ன இடர்பாடுகளை எதிர்கொள்கின்றார்கள் என்று ஒருவர் கூட கேட்கவில்லை.

பெண் எழுத்து என்று வரும்போது, நாம் பெண்களின் உடலரசியலைத் தாண்டி எது குறித்தும் இன்னமும் பேசவில்ல என்றே நினைக்கிறேன். சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் நாம் பேசியாக வேண்டும்.
திரைப்படங்கள் பெண்ணிய நோக்கில் பெரும்பாலும் வரவே இல்லை. தமிழில் பாலசந்தர் எடுத்த திரைப்படங்கள் பெண்ணியத்திற்கான உதாரணப்படங்களாக கூறுகின்றார்கள். ஆனால் அவர் படத்தில் பெண்கள் என்றால் பிள்ளைகளை பெற்றெடுக்கும் இயந்திரமாகத் தான் பார்க்கப்படுகின்றார்கள். பெண்கள் திரைப்படத்துறையின் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வருகின்றார்கள். பெண்களை சரியான முறையில் கதாபாத்திரங்களாக காட்டவே இல்லை. கதாநாயகி என்றால் அவள் எப்போதும் லொட லொடவென்று லூசு போல் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பெண்கள் அறிவுடையவர்கள் என்கிற ரீதியில் இங்குள்ள ஆண்களால் இன்னமும் சிந்திக்கவே முடியவில்லை.

துணை நடிகைகள் வெறும் பாலியல் பிண்டங்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். தொடர் நாடகங்களில் வேலைக்கும் போகும் பெண்கள், மாடர்ன் உடை அணியும், குட்டை முடி வைத்த பெண்கள் எல்லாம் வில்லிகளாகவும், வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் நல்லவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

தனக்கு குழந்தை பிறக்காததால் தன் கணவனுக்கு மறுமணம் செய்து வைப்பது போல மட்டுமே இன்னமும் காட்டுகின்றார்கள். இது போன்ற தொடர்களில் கூட்டுக்குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகளை யாரும் காட்டவே இல்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் தனிநபர்களால் வரும் கேலி, கிண்டல் பிரச்சனைகளை எல்லாம் பெண்கள் தவிர்த்து விட்டு  நமக்கான தளத்தில் இயங்குவது தான் சரியாக இருக்க முடியும்.

……..

தமிழர்களை பாதுகாப்போம் இயக்கம் (Save Tamils Movement)  உழைக்கும் பெண்கள் நாளை கொண்டாடவும், சிந்திக்கவும் என்ற நோக்கில் 27.03.2011 அன்று லயோலா கல்லூரியில் நடத்திய “நியூயார்க்கிலிருந்து திருப்பூர் வரை” கருத்தரங்கில் கலந்து கொண்ட தோழர்.பிரியா தம்பி பேசிய உரையின் வரி வடிவம்……..

Advertisements
  1. சார், முதலில் பிரியா தம்பியின் ஜாதி அடையாளத்தை கைவிடச் சொல்லுங்கள். பிரியா என்பது அவர் பெயர். ‘தம்பி’ என்பது, அவர் சார்ந்த ஜாதி அடைமொழி.

    ஜாதியைத் தொலைத்துவிட்டு, ஊருக்கு புத்திமதி சொல்லட்டும்.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: