மே, 2011 க்கான தொகுப்பு

“ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம்”” க‌ருத்த‌ர‌ங்க‌ம் மே 7 2011


   மே 07 2011 அன்று சென்னை லயோலா கல்லூரியில் Save Tamils அமைப்பு நடத்திய‌ “ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம்” கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு.பால் நீயூமென் (விரிவுரையாளர். அரசியல் துறை பெங்களூரு பல்கலைக்கழகம்) ஆற்றிய உரையின் வ‌ரிவ‌டிவ‌ம்.
     மே 2009 அன்று முடிந்த போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் இலங்கை அரசால் கூறப்பட்டது. மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத “”Zero Tolerance Method”-ஐ உபயோகப்படுத்தியதாகவும் கூறியது.  ஆனால் ஐ.நாவின் அப்போதைய‌ அறிக்கை 7,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாக‌ கூறிய‌து. பிரிட்ட‌ன், பிரெஞ்ச் ஊட‌க‌ங்க‌ள் 20,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாக‌ கூறின‌. போர்க்கால‌க‌ட்ட‌த்தில் ஐ.நாவின் பிர‌திநிதியாக‌ இல‌ங்கையில் இருந்த‌ கார்ட‌ன் வைசு 40,000 பொது ம‌க்க‌ள் இந்த‌ப் போரில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ கூறினார். 70,000 பொதும‌க்க‌ள் இற‌ந்ததாக‌ அல்ஜ‌சீரா தொலைக்காட்சி கூறிய‌து.
  இந்த‌ப் போர் எந்த‌வித‌ சாட்சிய‌மும் இன்றி ந‌டைபெற்ற‌ ஒரு போராகும். பன்னாட்டு‌ அழுத்த‌த்தின் கார‌ண‌மாக‌ 23 மே 2009 அன்று இல‌ங்கை சென்ற‌ ஐ.நா பொதுச்செய‌ல‌ர் பான் கீ மூன், இல‌ங்கை அதிப‌ருட‌ன் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டார், இதில் போரில் ஈடுப‌ட்ட‌ இரு பிரிவுக‌ளும் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க ஒரு குழு நிறுவப்படும் என்று கூறியிருந்தார். இல‌ங்கை அதிப‌ர்.இராச‌ப‌க்சேவின் ஒப்ப‌த‌லுட‌னே இந்த‌ போர் விசார‌ணை குழு அமைப்பது ப‌ற்றிய‌ அறிக்கை பான்.கீ.மூனால் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. இப்பொழுது இந்த‌க் குழு ஒரு நேர்மைய‌ற்ற‌ குழு என்று இராச‌ப‌க்சே கூறுவ‌து வேடிக்கையான‌ ஒன்றாகும்.

 15 ச‌ன‌வரி 2010 அன்று ட‌ப்ளின் ம‌க்க‌ள் தீர்ப்பாய‌ம் இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ இறுதி க‌ட்ட‌ப்போரில் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளும், போர்க்குற்ற‌ங்க‌ளும் நிக‌ழ்ந்துள்ள‌ன‌. மேலும் இல‌ங்கையில் இன‌ப்ப‌டுகொலை ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌.  இதை உறுதி படுத்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும்  மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.
 2010 மார்ச் மாத‌ம் லூயிசு ஆர்ப்ப‌ர் த‌லைமையிலான‌ ப‌ன்னாட்டு நெருக்க‌டி நிலைக்குழும‌ம்(Internation Crisis  Group) த‌ன‌து அறிக்கையை வெளியிட்ட‌து. அதில் போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ ஒரு விசார‌ணை தேவை என்ற‌ கோரிக்கை முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. இதைத் தொட‌ர்ந்து ம‌னித‌ உரிமை க‌ண்காணிப்ப‌க‌ம், ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள், ப‌ன்னாட்டு ம‌ன்னிப்பு சபை (Amnesty International)  எல்லாம் த‌ங்க‌ளிட‌ம் உள்ள‌ போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ சாட்சிய‌ங்க‌ளை ஒவ்வொன்றாக‌ வெளியிட‌ மீண்டும் ஐ.நாவின் மேல் அழுத்த‌ம் அதிக‌மான‌து. இத‌னால் சூன் 3, 2010 அன்று மூன்று பேர் கொண்ட‌ ஒரு குழுவை இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ போர்க்குற்ற‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விசாரிக்க‌ ஐ.நா பொதுச்செய‌ல‌ர் பான்.கி.மூன் நிய‌மித்தார். இதை அடுத்து இல‌ங்கையில் அமைச்ச‌ர் ப‌த‌வியில் இருக்கும் விம‌ல் வீர‌வ‌ன்சா கொழும்பில் உள்ள‌ ஐ.நா தூத‌ர‌க‌த்தைச் சுற்றிவ‌ளைத்து விட்டு உண்ணாவிர‌த‌ம் இருக்க‌த்தொட‌ங்கினார். இத‌னால் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவான‌து.

செப்ட‌ம்ப‌ர் மாத‌த்தில் மீண்டும் த‌ன் மீதான‌ அழுத்த‌ம் அதிக‌ரிக்க‌வே அந்த‌ மூன்று ந‌ப‌ர் குழுவிற்கான‌ ப‌ணிப்பானையை வெளியிட்டு குழு த‌ன் வேலையை தொட‌ங்க‌ வேண்டும் என‌ உத்த‌ர‌விட்டார் பான் கீ மூன் .

இந்த‌க்குழுவில் இந்தோனிசியாவைச் சேர்ந்த‌ மார்சுகி தாருசுமேன் என்ப‌வ‌ரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த‌  யேசுமின் சூக்கா என்ப‌வ‌ரும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டின் மிக்சிக‌ன் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ இருக்கும் சிடீப‌ன் என்ப‌வ‌ரும் இருந்தார்க‌ள். இதில் மார்சுகி தாருசுமேன் ஏற்க‌ன‌வே இந்தோனேசிய‌ அதிப‌ர் சுக‌ர்த்தோ ஆட்சிக்கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ப‌டுகொலைக‌ளை விசாரிக்கும் குழுவில் ப‌ணியாற்றிய‌வ‌ர். மேலும் இந்தோனேசிய தேசிய‌ ம‌னித‌ உரிமை ஆணைய‌த்தில் ஏழு ஆண்டுக‌ள் ப‌ணியாற்றிய‌வ‌ருமாவார். யேசுமின் சூக்கா என்ப‌வ‌ர் ம‌னித‌ உரிமை ஆணைய‌ அற‌க்க‌ட்ட‌ளையில் த‌லைமை அதிகாரி, மேலும் இவ‌ர் தென்னாப்பிரிக்க‌ உண்மை அறியும் குழுவிலும், ந‌ல்லிண‌க்க‌ ஆணைய‌த்திலும் ப‌ணியாற்றிய‌வ‌ர். சிடீப‌ன் என்ப‌வ‌ர் ச‌ட்ட‌ நிபுண‌ர் ஆவார். இந்த‌க் குழு முறைப்ப‌டி ஆசிய‌ க‌ண்ட‌த்திலிருந்து ஒருவரையும், ஆப்பிரிக்க‌ க‌ண‌ட‌த்திலிருந்து ஒருவ‌ரையும், அமெரிக்க‌ க‌ண‌ட‌த்திலிருந்து ஒருவ‌ரையும் கொண்ட‌து. மேலும் இந்த‌க் குழுவில் உள்ள‌வ‌ர்க‌ள் முன்ன‌ர் கூறியுள்ள‌து போல‌வே இத‌ற்கு முன்ன‌ர் இது போன்ற‌ விசார‌ணைக்குழுக்க‌ளில் ப‌ங்காற்றிய‌வ‌ர்க‌ள்.

 
இந்த‌க் குழுவிற்கான‌ ப‌ணியாணை:
 
செப்ட‌ம்ப‌ர் 2008லிருந்து மே 2009 வ‌ரை ந‌டைபெற்ற‌ போரில் ந‌டைபெற்ற‌ ம‌னித‌ உரிமை மீற‌ல், போர்க்குற்ற‌ம்  போன்ற‌வ‌ற்றை விசாரித்து ஐ.நா பொதுச்செய‌லருக்கு அறிவுரை கூறுவ‌து. இத‌ன் அடிப்ப‌டையில் 16 செப்ட‌ம்ப‌ர் 2010 அன்று த‌ன‌து ப‌ணியைத் தொட‌ங்கிய‌ இந்த‌க் குழு 31 மார்ச் 2011 அன்று 196 ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ விசாரணை அறிக்கையை த‌யாரித்த‌து.

இந்த‌ விசார‌ணையில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ முறையில் (Methodology)

1)சாட்சிய‌ங்க‌ளின் நேர‌டியான‌ கையெழுத்துப் பிர‌திக‌ள்.
2)சாட்சிக‌ளின் செவ்விகள் (Interview’s)
3)ப‌ல்வேறு ம‌னித‌ உரிமைக் குழுக்க‌ள் அளித்த‌ அறிக்கைக‌ள்
4)போர்க்குற்றம் தொடர்பான‌ காணொளி காட்சிக‌ள் (Videos)
5) செய்ம‌திப் புகைப்ப‌ட‌ங்க‌ள் (Satelite photos)
6) நாளித‌ழ்க‌ளில் வெளியாகி இருந்த‌ ஆதார‌ப்பூர்வ‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள்.
இத‌ன‌டிப்ப‌டையிலேயே இந்த‌ மூவ‌ர் குழு விசார‌ணை ந‌ட‌த்திய‌து.

இந்தக் குழு போரில் இர‌ண்டு முக்கிய‌ திருப்புமுனை நிக‌ழ்வுக‌ள் ஏற்ப‌ட்ட‌தாக‌ குறிப்பிடுகின்ற‌து.
1) இந்தியாவின் த‌லையீடும், இந்திய‌ க‌ட‌ல்ப‌குதியில் இந்தியா த‌ன‌து போர்க்க‌ப்ப‌ல்க‌ளை நிறுத்தி புலிக‌ளைக்க‌ண்காணித்து வ‌ந்த‌தும், செய்ம‌தி மூல‌ம் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை இல‌ங்கைக்கு கொடுத்து உத‌விய‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும்.

2) ப‌ய‌ங்க‌ரவாத‌த்திற்கு எதிரான‌ போர் என்ற‌ பெய‌ரில் இல‌ங்கை இந்த‌ போரைச் செய்த‌தால் உல‌க‌ நாடுக‌ளின் த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்த‌து.

இலங்கை அர‌சின் இறுதிக‌ட்ட‌ப்போருக்கான‌ த‌யாரிப்பு :

1) தீவிர‌வாத‌த்தை தடுக்கும் ச‌ட்ட‌ம் (Prevention of terror act)
2) அவச‌ர‌காலச் ச‌ட்ட‌ம்  (emergency terror act).இவ்விரு ச‌ட்ட‌ங்க‌ளின் மூல‌மாக‌வும் எவ‌ர் ஒருவ‌ரையில் கைது செய்து 36 மாத‌ங்க‌ள் எந்த‌ ஒரு குற்ற‌ப்ப‌த்திரிக்கை தாக்க‌ல் செய்யாம‌லும் சிறையில் அடைக்க‌ முடியும்.
3) அர‌ச‌ அதிப‌ரின் அதிகாரத்தின் மூலமாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தைச் சேர்ந்த‌ 300 குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் முக்கிய‌மான‌ அர‌ச‌ ப‌த‌விக‌ளில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டார்க‌ள் (உதார‌ண‌ம். கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே பாதுகாப்பு ப‌டை செய‌ல‌ராக‌வும், ப‌சில் இராச‌ப‌க்சே அதிப‌ரின் ஆலோச‌க‌ராவும் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து).
4) போர் நிறுத்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் 66 ம‌னித‌ உரிமை உறுப்பின‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.
5) செப் 8, 2008 அன்று நாங்க‌ள் யாருக்கும் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ முடியாத‌ கார‌ண‌த்தினால் போர் ந‌டைபெறும் ப‌குதியில் இருந்த‌ அனைத்து ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் வ‌ன்னிப்ப‌குதியை விட்டு வெளியேறுமாறு அர‌சு அறிக்கை வெளியிட்ட‌து.

……….

ஐ.நா நிபுண‌ர் குழுவின் அறிக்கை இல‌ங்கை அர‌சு ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ளைச் செய்துள்ள‌து என‌ குற்ற‌ம் சாட்டியுள்ள‌து. அவை

1)அப்பாவி பொதும‌க்க‌ளைக் கொன்றது
2)வெள்ளைக் கொடி ஏந்தி ச‌ர‌ண‌டைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை கொன்ற‌து.
3)கைது செய்த‌ போர்க்குற்ற‌வாளிக‌ளைக் கொன்ற‌து.
4)உண‌வு, ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ஒரு ஆயுத‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ம‌க்க‌ளைக் கொன்ற‌து போன்ற‌வை குறிப்பிட‌ ப‌ட்டுள்ள‌ன‌.

……………………

மேலும்  இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு போர் விதிக‌ளை மீறியுள்ள‌தாக‌வும் ஐ.நா நிபுண‌ர் குழு குற்ற‌ம் சாட்டியுள்ள‌து. அவை

1)இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளையும் மீறியுள்ள‌து. ச‌ன‌வ‌ர் 29 வ‌ரை ஐ.நா அதிகாரிக‌ள் இருவ‌ர் போர்ப்ப‌குதியில் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் இறுதியாக‌ போர்ப்ப‌குதியை விட்டு வெளியேறும் பொழுது நில‌மெங்கும் ம‌க்க‌ளின் பிண‌ங்க‌ள் இருந்த‌தால் வான் நோக்கி பார்த்த‌வாரே ந‌ட‌ந்து வ‌ந்த‌தாக‌வும், ஆனால் ம‌ர‌ங்க‌ளில் எல்லாம் வெடித்துச் சித‌றிய‌ குழந்தைக‌ளின் உட‌ல் பாக‌ங்க‌ள் இருந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.
2) போரில்லாப் ப‌குதி என்று கூறிய‌ இட‌த்தில் வ‌ந்து குவிந்த‌ ம‌க்க‌ளைக் கொன்ற‌து
3) பொதும‌க்க‌ள் மீது க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ள் பாவித்த‌து.
4) ம‌ருத்த‌வ‌ம‌னையின் க‌ழிவ‌றை வாயில் முத‌ற்கொண்டு நோயாளிக‌ளால் நிர‌ம்பிய‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளின் மீது குண்டுவீசிய‌து. இறுதிக் கால‌ங்க‌ளில் ம‌ய‌க்க‌ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌டாம‌ல் 40,000 அறுவை சிகிச்சைக‌ள் அங்கு ந‌டைபெற்ற‌தாக‌வும், கையுறைக‌ள் இல்லாத‌தால் ம‌ருத்துவ‌ர்க‌ள் வெறும் கைக‌ளினாலேயே மேற்கொண்ட‌ அறுவை சிகிச்சைக‌ளை செய்த‌தாக‌வும், மேலும் “blade” இல்லாத‌தால் ஒருமுறை ப‌ய‌ன்ப‌டுத்திய‌ “blade”ஐயே ம‌றுமுறை அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌தின‌ர். இந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்துக‌ளும், சில‌ முக்கிய‌மான‌ ம‌ருந்துக‌ளும் தேவை என‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைக்க‌ அர‌சோ இவ‌ர்க‌ளுக்கு த‌லைவ‌லிக்கு கொடுக்க‌ப்ப‌டும் சில‌ மாத்திரைக‌ளை ம‌ட்டுமே கொடுத்த‌து. மேலும் அடிப்ப‌டை ம‌னித‌ நேய‌ அடிப்ப‌டையில் ப‌ணிபுரிந்த‌ மூன்று ம‌ருத்துவ‌ர்க‌ளையும்  இல‌ங்கை அர‌சு கைது செய்த‌து என‌ எல்லாம் ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ செயல்க‌ளாகும் என‌ கூறுகின்ற‌து…..

…………..

இந்த‌ எண்ணிக்கைக‌ள் எல்லாம் எதைக் குறிக்கின்ற‌து. இவை எல்லாம் ஏதோ ஒரு ம‌ட்டைப்ப‌ந்து ஆட்ட‌க்கார‌ர் எடுத்த‌ ஒட்ட‌ங்க‌ளின் எண்ணிக்கை அல்ல‌. ஒவ்வொன்றும் ஒரு ம‌னித‌ உயிரின் எண்ணிக்கை.

மே 13, 2009 அன்று ஐ.நா போர்ப்ப‌குதியில் 1,00,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து.
இந்திய‌ பாராளும‌ன்ற‌த்தில் பிர‌ணாப் முக‌ர்சி வெறும் 70,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே போர்ப்ப‌குதியில் இருப்ப‌தாக‌ கூறினார்,
இன்னும் ஒரு ப‌டி மேலே போய் இல‌ங்கை அர‌சோ வெறும் 10,000 பேர் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து. ஆனால் ப‌ன்னாட்டு செஞ்சிலுவைச் ச‌ங்க‌மோ காய‌ம‌டைந்து இருந்த‌ 14,000 பொதும‌க்க‌ளை த‌ன‌து க‌ப்ப‌ல் மூல‌ம் இல‌ங்கையின் ம‌ற்றொரு ப‌குதிக்கு சிகிச்சைக்காக‌ கூட்டிச்சென்ற‌தாக‌ கூறிய‌து. இவ‌ர்க‌ளில் 5,000 பொதும‌க்க‌ள் காலையோ, கையையோ இழ‌ந்த‌வ‌ர்க‌ளாவ‌ர். மேலும் இவ‌ர்க‌ளை எல்லாம் “போரில்லாப்ப‌குதி” என்று அர‌சு அறிவித்த‌ ப‌குதியில் இருந்தே கொண்டு சென்றோம் என‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம் கூறிய‌து. உல‌க‌ உண‌வு திட்ட‌ அலுவ‌ல‌க‌ம் போர்ப்ப‌குதியில் 4,20,000 பொதும‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள் என்றும், அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உண‌வை எடுத்துச் செல்ல‌வும் அர‌சிட‌ம் அனும‌தி கோரிய‌து. ஆனால் அர‌சு 1,00,000 ம‌க்க‌ளுக்கு தேவையான‌ உணவை எடுத்துச் செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே அனும‌தி அளித்த‌து. அதாவ‌து ஒருவ‌ருக்கு தேவையான‌ உண‌வு நான்கு பேருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ப‌சியால் இற‌ந்தார்க‌ள்.

………………….
இல‌ங்கை அர‌சு இறையாண்மைக் கொண்ட‌ ஒரு அர‌சாக‌ இருந்தாலும் தீவிர‌வாதிக‌ளை அவ‌ர்க‌ள் எவ்வாறு அழித்தார்க‌ள் என்ப‌து அவ‌ர்க‌ள‌து நோக்க‌த்தை கூறுகின்ற‌து என‌ நிபுண‌ர் குழு கூறுகின்ற‌து. ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளில் கையெழுத்திட்டுள்ள‌ அர‌சு அதை மீறுவ‌து ச‌ட்ட‌ப்ப‌டி த‌வ‌று. இது போன்ற‌ விதிக‌ளில் கையெழுத்திட‌வில்லை எனும்போதிலும் விடுத‌லைப்புலிக‌ள் ம‌னித‌ உரிமை விதிக‌ளை ம‌தித்து ந‌ட‌ந்திருக்க‌வேண்டும் என்றும் அந்த அறிக்கைக் கோருகின்ற‌து. பொதும‌க்க‌ளுக்கும் போராளிக‌ளுக்கும் இடையிலான‌ வேறுபாட்டை அர‌சு உருவாக்க‌ த‌வ‌றிவிட்ட‌து என‌ அவ்வ‌றிக்கை கூறுகின்ற‌து.
ஐ.நா நிபுண‌ர் குழு அமைக்கப்ப‌ட்ட‌ பின்பு க‌ண்துடைப்புக்காக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ இல‌ங்கையின் போர்க்குற்ற‌ விசார‌ணை, ந‌ல்லிண‌க்க‌ ஆணைய‌த்தைப் ப‌ற்றியும் ஐ.நா நிபுண‌ர் குழு கூறியுள்ள‌து.

1)10 ந‌ப‌ர்க‌ள் கொண்ட‌ இந்த‌க் குழுவில் ப‌குதி பேர் முன்னாள் இராணுவ‌த்தின‌ர். இதில் ஒரு பெண் கூட‌ இல்லை.
2) உண்மை நிலை என்ன‌ என்ப‌தை அவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ விசார‌ணை செய்ய‌வே இல்லை.
3) சாட்சிய‌ங்க‌ளுக்கு பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேஇல்லை.
4) போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்த ஆணைய‌த்தை நோக்கி வ‌ர‌வில்லை.
5) உண‌ர்வு பூர்வ‌மான‌, பாலின‌, உள‌விய‌ல் அடிப்ப‌டையில் இந்த‌க் குழு நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை. (எப்ப‌டி ஒரு பெண் 10 ஆண்க‌ள் இருக்கும் அறையில் வ‌ந்து தான் கற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌தைக் கூற‌ முடியும்?)
6) இந்த‌க் குழுவிற்கென்று நிர‌ந்தர‌மாக‌ அலுவ‌ல‌க‌ம் எதுவும் கிடையாது. இவ‌ர்க‌ள் இந்த‌ போர் ந‌டைபெறாத‌ கொழும்பில் இருந்து இய‌ங்கினார்க‌ள். போரினால் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்டு 3,00,000 ம‌க்க‌ள் அடைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இட‌ப்பெய‌ர்வ்ய் முகாம் ப‌குதியான‌ ம‌ன்னாரில் கூட‌ இவ‌ர்க‌ள் வெறும் இர‌ண்டு நாட்க‌ள் ம‌ட்டுமே விசார‌ணை ந‌ட‌த்தினார்க‌ள்.
7) இந்த‌ விசார‌ணைக் குழுவை மேற்பார்வையிடுவ‌த‌ற்கோ, க‌ண்காணிப்ப‌த‌ற்கோ எந்த‌ ஒரு ப‌ன்னாட்டு ஊட‌க‌த்திற்கும் அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வே இல்லை.
8) குழுவின் வெளிப்ப‌டைத்த‌ன்மை கேள்விக்குறிய‌தே (இந்த‌ போரில் ப‌ங்கு கொண்ட‌ இராணுவ‌த்தின‌ரே இந்த‌க் குழுக்க‌ளிலும் இருந்தார்க‌ள். இவ‌ர்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்க‌ள்?)

…..
மேலும் ஐ.நா நிபுண‌ர் குழு இல‌ங்கையில் உள்ள நீதித்துறையின் க‌ட்ட‌மைப்பு ப‌ற்றியும் கூறியுள்ள‌து.

1)ச‌ரியான‌ க‌ட்ட‌மைப்பு இல்லாம‌ல் பெய‌ருக்கும் இய‌ங்கும் நீதித்துறை (தீவிர‌வாத‌ த‌டுப்பு ச‌ட்ட‌ம், அவ‌ச‌ர‌ காலச் ச‌ட்ட‌ம் போன்ற‌ அர‌சு ஆதிக்க‌ ச‌ட்ட‌ங்க‌ளைக் கொண்டதே அந்த‌ நீதித்துறை)
2) இது போன்ற‌ நிலையில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எவ்வாறு நீதிம‌ன்ற‌த்திற்கு சென்று முறையிட‌ முடியும்? 
சிங்க‌ள பொதும‌க்க‌ளிட‌ம் நாம் இந்த‌ப் போரை வெற்றிக்கொண்டு விட்டோம் என்ற‌ நிலையும், அவ‌ர்க‌ள் போர் ந‌டைபெற்ற‌ இட‌ங்க‌ளை ஒரு சுற்றுலா போல‌ சென்று பார்த்து வ‌ருகின்றார்க‌ள். போர்க்கால‌த்தில் த‌டைசெய்ய‌ப்பட்ட‌ ஊட‌க‌த்தடையும், அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌மும் இன்னும் அம‌லில் இருக்கின்ற‌ன‌. த‌மிழ‌ர்க‌ள் அங்கு போரில் தோல்வி அடைந்த‌ ம‌னித‌ர்க‌ளாக‌வே இல‌ங்கையில் பார்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

………….
ஐ.நா நிபுண‌ர் குழுவின் கோரிக்கைக‌ள்:

1) போர்க்குற்ற‌ம், ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்துள்ள‌தால் இவை ப‌ற்றி ஒரு சுயேட்சையான‌ ப‌ன்னாட்டு விசார‌ணைக்குழு விசாரிக்க‌ வேண்டும் .

2) த‌ற்பொழுதும் அங்கு ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் வ‌ன்முறைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.

3) விசாரணை ப‌ன்னாட்டு ச‌ட்ட‌ விதிக‌ளின் ப‌டி ந‌டைபெற‌ வேண்டும்.

4) ஐ.நாவும் இந்த‌ பிர‌ச்ச‌னையில் சில‌ த‌வ‌றுக‌ளைச் செய்துள்ள‌து.

………………………
வ‌ரிவ‌டிவ‌ம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

Advertisements

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?????


  ந‌க்ச‌ல்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை ஒடுக்க‌வே நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ளோம் என்று கூறும் இந்திய‌ பாதுகாப்பு(!) ப‌டையின் உண்மை முக‌த்தை தோலுரித்து காட்டுகின்ற‌து இக்க‌ட்டுரை. வீரப்பனை தேடும் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த‌ சோள‌க‌ர் ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை ச‌.பால‌முருக‌ன் எழுதிய‌ சோள‌க‌ர் தொட்டி என்ற‌ நாவ‌ல் மிக தெளிவாக பதிந்துள்ளது.
 
அதைப் போலவே மாவோவின‌ர்களை  தேடும் வேட்டையில் பாதிக்க‌ப்ப‌டும் ப‌ழ‌ங்குடி இன‌ம‌க்க‌ளின் வாழ்க்கை நிலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இக்க‌ட்டுரை ஒரு சிறிய‌ அள‌விலாவ‌து உங்க‌ளுக்கு உத‌வும். மேலும் இதுபோல பாதிக்கப்படுகின்ற பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக போராடும் பினாயக் சென் போன்றோர் அரச நிறுவனங்களால் ஒரு தேச‌துரோகியைப் போல சித்தரித்து ஒருவரை கைது செய்து அடைப்பது அவரை தண்டிப்பதற்காக அல்ல…பொதுமக்களிடம் குறிப்பாக மக்களுக்காக வேலை செய்பவர்களிடம் ஒரு அச்ச‌ உணர்வை எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தான். அந்த அச்ச‌த்தின் மூலமாக மக்களை ஆட்சி செய்வது தான் இராணுவ ஆட்சி, இந்தியாவிலும் இந்த முறையிலான‌ இராணுவ ஆட்சியே நடக்கின்றது..

இந்த கட்டுரையின் இறுதியில் கோவசி அத்மா என்ற பழங்குடி விவசாயி கூறுவது போல இங்கு இரண்டு வேறுபட்ட அரசுகள் உள்ளன (ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா)என்பதை தனது அண்மைய தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் வேறுவழியில்லாமல் உறுதி செய்துள்ளது.

காவல் துறையின் இயக்கல்களுக்கு(operation) நடுவே தாண்டேவாடாவில் வாழுகின்ற மனிதர்களான பழங்குடிகளின் உண்மையான நிலையைப் பற்றியும், அங்கு மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற‌ படுகொலை நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கின்றது இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதியவர் தெகல்கா நாளிதழின் நிருபரான‌ துசா மிட்டல்…

…………………………………………………………………………………

 இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோவினர் இந்திய‌ எல்லைப் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது நடத்திய மிக மோசமான  தாக்குத‌ல் ந‌டைபெற்று இன்றோடு(6 ஏப்ரல் 2011) ஒர் ஆண்டு ஆகின்ற‌து. க‌ட‌ந்த ஆண்டு இதே நாளில் தான் ச‌ட்டீசுக‌ரின் வ‌ன‌ப்ப‌குதியில் 76 எல்லைப் பாதுகாப்புப‌டை வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ப‌டுகொலை மாவோவின‌ர் மீதான‌ எதிர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை அதிக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ணியாக‌ ஆன‌து. ஓர் ஆண்டுக்கு பின்ன‌ர் அதே வ‌ன‌த்துறை இன்னொரு ப‌டுகொலை நிக‌ழ்வைச் ச‌ந்தித்துள்ள‌து. ஆனால் இந்த‌ முறை ப‌டுகொலையை செய்த‌து நாம் எதிரியாக‌ க‌ருதும் மாவோவின‌ர் அல்ல, இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் என்ப‌து தெக‌ல்கா நாளித‌ழின் விசாரணையிலிருந்து தெரிய‌ வ‌ருகின்ற‌து. இதில் தாக்குத‌லுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்தியாவில் உள்ள‌ ச‌க‌ம‌க்க‌ளின் க‌ண்க‌ளுக்கு (தெரிந்தும்)தெரியாத‌ ப‌ழ‌ங்குடிகளே.

     மார்ச் இர‌ண்டாவ‌து வார‌த்தில் பாதுகாப்பு ப‌டை ந‌ட‌த்திய இய‌க்க‌ல் ஐந்து நாட்க‌ள் நீடித்த‌து. இதில் இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொழுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌. நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌(மொத்த‌ இருப்பு) த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌. கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

 இதைப் ப‌ற்றிய‌ செய்தி “Rajastan Patrika” என்ற ஒரே ஒரு இந்தி நாளிதழலும், “இந்து” நாளித‌ழிலும், சில‌ உள்ளூர் தொலைக்காட்சி அலைவ‌ரிசைக‌ளிலும் வெளிவ‌ந்த‌தை த‌விர வேறு எந்த‌ ஒரு த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. தாண்டேவாடாவில் காவல்துறை தலைமை அதிகாரியான கல்லுரி என்பவரின் தலைமையில் தான் இந்திய‌ துணை இராணுவமும், மற்ற படைகளும் இய‌ங்குகின்றன‌. இவ‌ர் இந்த‌ ப‌டுகொலையும், தீ வைப்பும் “மாவோவின‌ரின் பர‌ப்புரை யுத்தி” என்கின்றார். ச‌ட்டீசுக‌ர் மாநில‌ உள்துறை ம‌ந்திரி ந‌ன்கிராம் க‌ன்வாரோ இந்த‌ தீ வைப்புக‌ளுக்கு கார‌ண‌ம் மாவோவின‌ர் தான் என‌க் குற்ற‌ம் சாட்டுகின்றார்.

                                                                                        இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்டீசுக‌ர் மாநில‌ முத‌ல்வ‌ர் இராமன் சிங்கின் உத்திரவாத‌த்தின் பேரில் காவ‌ல்துறையின‌ரின் பாதுகாப்போடு சென்ற‌ ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ரான‌ சுவாமி அக்னிவினேசு வெறி கொண்ட‌‌ ஒரு கூட்ட‌த்தின‌ரால் தாக்க‌ப்ப‌ட்டார். உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டுமுள்ளார்க‌ள். தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ சுமையுந்தின் ஓட்டுநர், க‌ர்த‌ம் சூர்யா என்ற‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். இந்த காதம் சூர்யா இதற்கு முன்னர் ஒரு க‌ற்ப‌ழிப்பு வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்பட்டவர். இவ‌ரை க‌ண்டுபிடிக்க‌முடிய‌வில்லை என்று காவல்துறை கூறுகின்ற‌‌து. பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து. ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

                                                                                                                                                                            க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர். ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள். மேலும் இவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌ உடுப்பு அணிந்தும், பொது ம‌க்க‌ளைப் போன்ற‌ உடைய‌ணிந்தும் இருந்த‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிகளும் இருந்துள்ளார்கள்.

 
  “இந்த‌ப் ப‌குதியில் நாட்டுத்துப்பாக்கிக‌ள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌தாக‌ காவ‌ல்துறை க‌ருதியிருந்த‌து. மேலும் கிடைத்திருந்த‌ உள‌வுத்த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி முக்கிய‌மான‌ மாவோவின‌ர் இந்த‌ப் ப‌குதியில் ப‌துங்கியிருப்ப‌தாக‌வும் எங்களுக்கு த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ன‌” என‌ காவ‌ல்துறை வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன. அவர்கள் மேலும் கூறுகையில் “இந்த‌ கிராம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌க்ச‌ல் ஆத‌ர‌வாள‌ர்க‌ள், தெரிந்தோ, தெரியாம‌லோ ந‌க்ச‌ல்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் உட‌ந்தையாக‌வும், 76 ப‌டை வீர‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு உத‌வியும் உள்ளார்க‌ள்”.
 
  தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து. இது ச‌ல்வா சூடும் ந‌டைபெற்ற‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தை எம‌க்கு நினைவூட்டிய‌து. 2005ல் தொடங்கிய ச‌ல்வா சூடும் இய‌க்க‌லினால் மொத்த‌ம் 645 கிராம‌ங்க‌ள் எரித்து சாம்ப‌லாக்க‌ப்பட்டது, மொத்த‌ம் 60,000 ம‌க்க‌ள் உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல் அர‌ச‌ உத‌வி பெற்ற‌ ஒரு ஆயுத‌ப்ப‌டை இயக்கல் என்ப‌து பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.
 

பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி

                                                        

                                       அது போல‌ ஒரு பெரிய‌ இட‌ப்பெய‌ர்வு இப்பொழுது ந‌ட‌க்க‌வில்லை என்றாலும், இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ளால் வீடுக‌ளை இழ‌ந்து பாதிக்க‌ப்பட்ட‌ ப‌ழ‌ங்குடிக‌ள் ஆந்திர‌ மாநில‌த்திற்கு இட‌ம்பெய‌ர்ந்து அங்கு கூலி வேலைக‌ளில் ஈடுப‌ட்டுவ‌ருகின்றார்க‌ள். இதை விடுத்த‌ அந்த‌ கிராம‌ங்க‌ளிலேயே வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் வீடுக‌ள் இல்லாத‌ காரண‌‌த்தினால் பெரிய‌ ம‌ர‌ங்களின் கீழ் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ கொடூர‌ நிக‌ழ்வை செய்த‌து சீருடை அணிந்த‌ மாவோவின‌ர் என்று முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உள்ளூர்வாசிக‌ள் இந்த‌ தாக்குத‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே என்றும், அவ‌ர்க‌ளில் சில‌ர‌து பெய‌ர்க‌ளையும் கூறினார்க‌ள்: ந‌க‌ர‌ம் ப‌குதியைச் சேர்ந்த‌ இர‌மேசு என்ற‌ ம‌த்க‌ம் பீமா, லேகாப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ தெல‌ம் அன்ட, மோர்பளி ப‌குதியைச் சேர்ந்த‌ புத்கே ம‌ரா, குர்ராப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ கிச்சே ந‌ந்தா (இவ‌ர் ஏற்க‌ன‌வே சிங்கார‌ம் என்ற‌ ப‌குதியில் 19 ப‌ழ‌ங்குடியின‌ரைக் கொலை செய்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்), மிசுமா ப‌குதியைச் சேர்ந்த‌ க‌ர்த‌ம் சூர்யா (இவ‌ர் ஏற்க‌ன‌வே 4 ப‌ழ‌ங்குடி இன‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்). மேலும் ந‌ந்தா, சூர்யாவைக் கைது செய்ய‌ச் சொல்லி நீதிம‌ன்ற‌ம் பிற‌ப்பித்த‌ தீர்ப்பு ஒன்றும் நிலுவையில் உள்ள‌து. வ‌ழ‌மை போல‌வே இவ‌ர்க‌ளை எல்லாம் காண‌வில்லை என்று காவ‌ல்துறை கூறுகின்ற‌து. 

 
  இவ‌ர்க‌ளில் சில‌ர் ச‌ர‌ண‌டைந்த‌ மாவோவின‌ர் (பின்னர் அர‌ச‌ த‌ர‌ப்பால் மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்), சில‌ர் ச‌ல்வாசூடும் இய‌க்க‌லில் ப‌ணியாற்றி பின்ன‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக‌ ஆன‌வ‌ர்க‌ள், சில‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக ப‌ணியாற்றி “கோய”அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வ‌ர்க‌ள். அர‌சு ச‌ல்வா சூடும் இய‌க்க‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌தாக‌ கூறுகின்ற‌து, ஆனால் அந்த‌ இய‌க்க‌லில் ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் தான் அதிர‌டி ப‌டைக‌ளிலும், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிக‌ளாக‌வும் ப‌ணியாற்றி வ‌ருகின்றார்க‌ள். ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல்…துணைப் பாதுகாப்பு ப‌டை இய‌க்க‌ல் என்று பெய‌ர் மாற்ற‌ம் தான் அடைந்திருக்கின்ற‌தே த‌விர‌ ச‌ல்வா சூடும் முடிந்து, துணை இராணுவ‌ப்ப‌டையின் ந‌டவ‌டிக்கைக‌ள் தொட‌ங்கி இருக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ சான்றுக‌ள் தென்ப‌ட‌வே இல்லை. மேலும் இங்கு த‌னிப்ப‌ட்ட‌ ப‌கை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்றதா இல்லை மாவோவின‌ருக்கு எதிரான ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்ற‌தா என்பதும் தெளிவாக தெரியாத‌ நிலையே நிலவுகின்றது. இந்த படுகொலை நிகழ்விற்கு உடந்தையாக இருந்த த‌ன் ம‌கன்(புத்கே மற) சாக‌ வேண்டும் என்று நினைக்கும் மோர்ப‌ளி வாசியான‌ புத்கே ல‌ச்சாவை நீங்க‌ள் ச‌ந்திந்தால் தான் இங்கு ந‌ட‌ந்து வ‌ரும் உள்நாட்டுப் போர் எந்த‌ள‌வு ம‌க்க‌ளை பாதித்துள்ள‌து என்ப‌து உங்க‌ளுக்கு தெரிய‌ வ‌ரும். புத்கே ல‌ச்சா மேலும் கூறுகையில் தொட‌க்க‌த்தில் புத்கே ம‌ற‌ குடிப்ப‌ழ‌க்க‌த்தில் ஈடுப‌ட்டு பெண்க‌ளிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முற்ப‌ட்டான், பின்னர் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்து என‌க்கு தீராத‌ க‌ள‌ங்க‌த்தை உண்டாக்கிவிட்டு இந்த‌ கிராம‌த்தை விட்டே வெளியேறிவிட்டான்.

  “அவ‌ன் ஆந்திராவில் கூலி வேலை செய்வ‌தாக‌வும், எங்கேயாவ‌து அவ‌ன் த‌ங்க‌ நேர்ந்தால் அங்குள்ள‌ ப‌சு, உண‌வு தானிய‌ங்க‌ள், ப‌ண‌த்தை திருடி வ‌ருவ‌தாக‌வும்” நான் கேள்விப்ப‌ட்டேன் என‌ புத்கே ல‌ச்சா கூறுகின்றார். இதன் பின்ன‌ர் கடந்த ஆண்டு(2010)ச‌த்தீசுக‌ர் வ‌ந்த‌ த‌ன் ம‌க‌ன் நேரடியாக கோன்டா ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் குழுவிற்கு த‌லைமை பொறுப்பு வ‌கித்ததாகவும், இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சிறப்பு காவல்துறை அதிகாரியானான், அவனுக்கு அரச படைகளின் சீருடையும், ஒரு துப்பாக்கியும், மாதம் 3,000 ரூபாய் சம்பளமும் அரசால் வழங்கப்பட்டது. அவன் மட்டும் தனியாக இந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தால் இங்கிருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து அவனை கொன்று விடுங்க‌ள் என்று நான் இங்குள்ள‌ மக்களிடம் கூறுவேன் என்கிறார் புத்கே லச்சா.

பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி

 
 ப‌டுகொலையை நேரில் க‌ண்ட‌ சாட்சிய‌ங்க‌ள் கூறிய‌த‌ன் அடிப்ப‌டையில் அந்த‌ நாட்க‌ளில் நிக‌ழ்ந்தவை…..

11 மார்ச், காலை 8.00 மணி – இடம். மோர்பளி

 அரச படை இரண்டு பிரிவுகளாக மோர்பளி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மத்வி கங்காவின் குழந்தைகள் தண்ணீர் எடுக்கச் சென்ற குளத்தை ஒட்டிய பாதை வழியாக முதல் அணி வந்தது. அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு தன் குடும்பத்தை எச்சரிக்க சென்றார் மத்வி கங்கா(வயது 40), ஆனால் அவர்கள் அதற்குள்ளாக அங்கு வந்துவிட்டார்கள். மத்வி கங்காவையும், அவரது மகள் லக்கேவையும்(17 வயது), மகன் பீமா மூவரையும் தாக்கியுள்ளார்கள், பின்னர் அவர்களை கட்டி கிராமத்திற்குள் இழுத்து வந்துள்ளார்கள். பின்னர் அவர்களிடம் “மாவோவினர் எங்கே என்று? கேட்டுள்ளார்கள்.

  முதல் அணி மோர்பளி கிராமத்திற்குள் வருவதற்கு முன்னதாகவே அந்த கிராமத்தில் வசித்த 200 பேரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அரச படைக்கு மாவோவினரோ, மக்கள் தயாரிப்பதாக சொன்ன நாட்டு துப்பாக்கிகளோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மாவோவினர் மாவீரர்களுக்காக கட்டிய 15 அடி உயர நினைவுச் சின்னம் மட்டுமே. அந்த கிராமத்தில் மாவோவினரின் நினைவுச் சின்னம் இருப்பதாலேயே அந்த கிராமவாசிகள் அனைவரும் மாவோவினர் என்று கூறி விடமுடியாது.
                                                                                                                                                                          ம‌று புற‌ம், இர‌ண்டாவ‌து அணி வ‌ரும் பொழுது, 40 வ‌ய‌தான‌ ஐம்லா என்ப‌வ‌ர் த‌ன‌து நில‌த்தை உழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள் “எழுந்து, அந்த ப‌க்க‌மாக‌ச் செல், நாங்க‌ள் எல்லோரும் ஆந்திர‌ பிரிவைச் சேர்ந்த‌ ந‌க‌ச‌ல்க‌ள், நாங்க‌ள் அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ச‌ந்திப்பிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்க‌ள். அவ‌ர் அங்கிருந்து ந‌க‌ர‌ ம‌றுக்க‌வே, அவ‌ரை த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ இல‌த்தி க‌ம்பைக் கொண்டு தாக்கி, அவ‌ர் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவரது வாழ்நாள் சேமிப்பான‌‌ ரூ. 10,000த்தை அவ‌ரிட‌ம் இருந்து ப‌ரித்து, அவரது இரு பெண் குழந்தைகளின் கண் முன்பே அவ‌ரை பாலிய‌ல் துன்புறுத்த‌லுக்கு உட்ப‌டுத்தினார்க‌ள். (ச‌ல்வா சூடும் கால‌த்தில் அடிக்க‌டி வீட்டிற்கு தீ வைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறத் தொட‌ங்கிய‌தால் இங்கு வாழும் பழ‌ங்குடிக‌ள் த‌ங்க‌ள் வாழ்நாள் சேமிப்புக‌ளான‌ த‌ங்க‌ ந‌கைக‌ளையும், ப‌ண‌த்தையும் எங்கு சென்றாலும் த‌ங்க‌ளுட‌னே எடுத்துச் செல்ல‌த்தொட‌ங்கினார்க‌ள்..இல்லையென்றால் அவையும் எரிந்து சாம்ப‌லாகிவிடும்)

   அந்த‌ கிராம‌த்தில் உள்ள‌ 35 வீடுக‌ளிலுள்ள‌ பொருட்க‌ளையும் க‌ளவாடி, அங்கிருந்த‌ ம‌க்க‌ளை அடித்து துன்புறுத்திய‌ இரு அணிக‌ளும், கையில் தீக்குச்சி மற்றும் கல்லெண்ணெய்(petrol) மூலம் அந்த‌ கிராம‌த்தை எரித்து விட்டுச் சென்றார்க‌ள். விவ‌சாயியான‌ க‌ர்த்தி ல‌ச்சாவின் ம‌ண் குடிசை இத‌ற்கு முன்பே ஒருமுறை ச‌ல்வா சூடும் ப‌டையின‌ரால் 2006ல் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இது இர‌ண்டாவ‌து முறை. “எத்த‌னை முறை தான் நான் என‌து குடிசையும் மீள‌க்க‌ட்டுவ‌து?, மீண்டும் அவ‌ர்க‌ள் வ‌ந்து என‌து குடிசையை கொழுத்த‌மாட்டார்க‌ள் என்ப‌து என்ன‌ நிச்ச‌ய‌ம் என்று?” அவ‌ர் கேட்கின்றார்.

     அங்க‌ன்வாடி ப‌ணியாள‌ரான‌ சோடி சான்டோவின் குடிசையும் இதில் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ர‌து குடிசையில் தான் க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்காக‌ அர‌சினால் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் உண‌வுப் பொருட்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. சோடி சாண்டோவின் குடிசை தான் இந்த கிராமத்திலிருந்த ஒரே அரச அலுவலகம்.  ப‌ள்ளிக்கூட‌ங்க‌ள், நியாய‌ விலைக் க‌டைக‌ள், குடி நீர் என்று எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளுக்கும் இவ‌ர்க‌ள் த‌ங்கள் கிராம‌த்திருந்து நெடுந்தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டியிருந்த‌து. மேலும் இது போன்ற‌ இட‌ங்க‌ளைச் சுற்றி ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டையின் முகாம்க‌ளும், காவ‌ல்துறை நிலையங்களும் இருந்த‌ன. புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆசிரம பள்ளிக்கூடங்கள் கூட இந்த கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன‌. சல்வா சூடுமினால் வனப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்கள் தீ வைத்து காலி செய்யப்படுவதற்கும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகங்கள் முக்கிய சாலைகளின் அருகிலேயே அமைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. முதலில் அவர்களது இடங்களிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி காவல்துறை, மற்ற படைகளின் கண்காணிப்பிலேயே வைப்பது தான் அவர்களின் உத்தி.

பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா

 

      மோர்ப‌ளி கிராம‌த்தை தீவைத்து கொழுத்திய‌ பின்ன‌ர் ஒரு குழு க‌ங்கா, ம‌ற்றும் அவ‌ர‌து இரண்டு பிள்ளைக‌‌ளையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‌ சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌ம் நோக்கி புற‌ப்ப‌ட்ட‌து. போகின்ற‌ வ‌ழியில் ப‌டையின‌ர் வ‌ண்டியை நிறுத்தி தாங்க‌ள் கொள்ளைய‌டித்து வ‌ந்திருந்த‌ 50 கோழிக‌ளையும்(இதில் இரண்டு கோழிகள் கங்காவிற்கு சொந்தமானவை) ச‌மைத்து உண்டு, பின் ஓய்வெடுத்த‌ பின்ன‌ரே சென்றார்க‌ள். காவ‌ல்துறை நிலைய‌த்தில் க‌ங்காவும், அவ‌ர‌து இர‌ண்டு பிள்ளைக‌ளும் சிற‌ப்பு கால்துறை அதிகாரிக‌ளால் மீண்டும் தாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “ஏன் அங்கிருந்து ஓடினீர்கள்? என்று அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அவ‌ர் த‌ன‌து கிராம‌த்தில் ந‌ட‌ந்த‌ கொள்ளை, தீவைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ளிட‌ம் கூறினார், ஆனால் அவ‌ர்க‌ள் ப‌திவு செய்த‌து என்ன‌வோ க‌ங்கா குடும்ப‌த்தின‌ரின் பெய‌ர்க‌ளை ம‌ட்டுமே.

                                                                                      இத‌ற்கிடையில் கங்காவின் 17வ‌ய‌து பெண்னை அருகிலிருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்க‌ள், அடுத்த‌ நாள் காலையில் கிழிந்து போன‌ உள்ளாடைக‌ளுடன் அரை நிர்வாணமாக‌ அவ‌ள் வெளியே வ‌ந்தாள். “அவ‌ளை அடித்து துன்புறுத்தி க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள்” என்று கூறுகின்றார் க‌ங்கா. தெக‌ல்கா குழுவின‌ர் மோர்ப‌ளி கிராம‌த்திற்கு சென்ற‌ பொழுது அந்த‌ பெண் தனக்கு புதுத்துணிக‌ள் வாங்குவ‌த‌ற்காக‌ கூலி வேலை செய்ய‌ ஏற்க‌ன‌வே ஆந்திராவிற்கு சென்றிருந்தாள்.

    மோர்ப‌ளியில் இருந்த‌ இர‌ண்டாவ‌து அணி அங்கிருந்து வ‌ன‌ப்ப‌குதியை சோத‌னை செய்ய‌ச் சென்ற‌ பொழுது 35 வ‌ய‌தான‌ ம‌த்வி உங்கி ம‌வுவா விதைக‌ளை பிரித்து வைத்துக்கொண்டிருந்தார், அவ‌ர‌து க‌ண‌வ‌ரான‌ ம‌த்வி சுக்கா (40 வயது) அருகிலுள்ள புளியமரத்தில் நன்றாக பழுத்திருந்த புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார். அரசபடையின் காலணி சத்தத்தை கேட்ட உடனே மரத்தில் இருந்து கீழே இறங்கிய மத்வி சுக்கா இலைகள் அதிகமாக‌ இருந்த‌ டெண்டு ம‌ர‌த்தில் ஏறி ம‌றைந்து கொண்டார். ம‌த்வி உங்கி அங்கிருந்து ஓடி த‌ன‌து குடிசைக்குள் சென்று விட்டார். அவ‌ர‌து ஒரு வ‌ய‌து ம‌க‌ளை தூக்கி வைத்துக் கொண்டார். அவ‌ர‌து வீட்டிற்குள் புகுந்த அரச‌ப‌டையின‌ர் அவ‌ரை தாக்கி அவ‌ள‌து மேல்ச‌ட்டையை கிழித்துள்ளார்க‌ள்.

    ப‌டையின‌ர் அங்கிருந்து ந‌க‌ர்ந்து செல்லும் போது துப்பாக்கி ச‌த்த‌ம் கேட்க‌, த‌ன‌து குடிசையில் இருந்து வெளியே த‌வ‌ழ்ந்த‌ ப‌டியே(நடக்க முடியாததால்) வ‌ந்த‌ உங்கி த‌ன‌து க‌ண‌வ‌ரை தேடி‌ச்சென்றார். அவ‌ர‌து க‌ண‌வ‌ர் இருந்த‌ இட‌த்தில் ஒரே இர‌த்த‌மாக‌ இருந்த‌து ஆனால் அவ‌ர‌து உட‌ல் அங்கில்லை, ச‌ற்று நிமிர்ந்து மேலே பார்த்தால் அவ‌ர‌து க‌ணவ‌ரின் உட‌ல் ம‌ர‌க்கிளைக்கு இடையில் குத்த‌ப்ப‌ட்டு தொங்கிக்கொண்டிருந்தது.  “இங்கே தான் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் என‌து க‌ண‌வ‌ரை சுட்டுக் கொன்றார்க‌ள்” என்று ஒரு கால‌த்தில் தான் வ‌ழிப்ப‌ட்ட வந்த அந்த‌ ம‌ர‌த்தைக் நம்மிடம் காட்டுகின்றார்.

13 மார்ச், ம‌திய‌ம் 12 ம‌ணி, புத்தாம்ப‌டு கிராம‌ம்

    அன்று ம‌திய‌ம் சிந்த‌ல்ந‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டைப்பிரிவு முகாமில் இருந்த‌ 300 பேர் திமாபுரை நோக்கி செல்ல‌த் தொட‌ங்கினார்க‌ள். அந்த‌ ப‌குதியில் மாவோவின‌ர் முகாம் அமைத்திருப்ப‌தாக‌ காவ‌ல்துறை த‌ர‌ப்பு கூறிய‌து. திமாபுர் செல்லும் வ‌ழியில் புத்தாம்ப‌டு கிராம‌த்தை அவ‌ர்க‌ள் சுற்றி வ‌ளைத்தார்க‌ள். ச‌ற்று தூர‌த்தில் அர‌ச‌ ப‌டையின‌ர் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் ஓட‌த் தொட‌ங்க, உடனடியாக‌ ப‌டையின‌ர் அவ‌ர்க‌ளை நோக்கி சுட‌த்தொட‌ங்கினார்க‌ள். இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌த்க‌ம் கித்மீ கூறுகையில் “அவ‌ர்க‌ள் என்னை கொன்று விட்டார்க‌ள் என்றே நினைத்தேன், ஆனால் ந‌ல்வாய்ப்பாக(luckily) அந்த‌ குண்டு என் காலில் பாய்ந்த‌த‌னால் நான் த‌ப்பித்தேன்”. இப்பொழுது அவர் தனது கால்க‌ளை இழுத்துக் கொண்டே காட்டிற்குள் செல்கின்றார். த‌லையில் டெண்டூ இலைக‌ளை ஒரு கூடையில் சும‌ந்து கொண்டும், காலில் துப்பாக்கி குண்டோடும் அவ‌ர் வாழ்ந்து வ‌ருகின்றார்.

  ஆனால் கித்மீயைப் போல‌ ப‌த்சே பீமாவிற்கும்(வ‌ய‌து 40), ம‌ன்னு ராமிற்கும் ந‌ல்வாய்ப்பு கை கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கைது செய்து அழைத்து கொண்டு ப‌டையின‌ர் திமாபுர் நோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள். த‌ன‌து க‌ண‌வ‌ன் பீமாவை விட்டு விடுமாறு அவ‌ர‌து ம‌னைவி ப‌த்சே ல‌க்மீ ப‌டையின‌ரிட‌ம் கெஞ்சினாள், இன்னும் ஒரு நாளில் அவ‌ரை விடுவித்து விடுவோம் என‌‌ ப‌டையின‌ர் அவ‌ருக்கு உறுதிய‌ளித்தார்க‌ள். ஆனால் இர‌ண்டு நாள் க‌ழித்து திமாபுரில் முழ‌ங்காலி‌டப‌ட்டு தொழுகை செய்யும் நிலையில் அவ‌ர‌து க‌ண‌வ‌ரின் உட‌லை இர‌த்த‌ வெள்ள‌த்தில் ம‌ட்டுமே ல‌க்மீயால் காண‌முடிந்த‌து. அப்போதும் கூட‌ அவ‌ர‌து க‌ண‌வ‌ரைக் கொன்ற‌ கோடாரி அவ‌ர‌து முதுகுப்ப‌குதியின் உள்ளே இருந்த‌து, அவ‌ர‌து கைக‌ளே ஒரு க‌யிற்றின் மூல‌மாக‌ பின்னால் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.

எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.

13 மார்ச், மாலை 3 ம‌ணி, திமாபுர் கிராம‌ம்….

                                                                                    மாலை 3 ம‌ணிய‌ள‌வில் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் திமாபுர் கிராம‌த்திற்குள் நுழைந்த‌ன‌ர். திமாபுர் கிராம‌ம் அர‌சினால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கிராம‌மாகும், ப‌ள்ளிக் கூட‌ங்க‌ள் கிடையாது, நியாய‌ விலைக் க‌டைக‌ள் கிடையாது, குடிநீர் வ‌ச‌தியும் கிடையாது. அங்கு இருந்த‌ ஒரு தொட‌க்க‌ப்ப‌ள்ளியும் ச‌ல்வா சூடும் தொட‌ங்கிய‌ பிற‌கு முற்றிலுமாக‌ செய‌ல்ப‌டுவ‌தில்லை (ச‌ல்வா சூடும் ப‌டையின‌ரால் ஆசிரிய‌ர்க‌ள் யாரும் வ‌ன‌ப்ப‌குதிக்குள் நுழைய‌ வேண்டாம் என்று மிர‌ட்ட‌ப்ப‌ட்டார்க‌ள்). மேலும் திமாபுர் கிராம‌த்திற்கு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் கிடையாது. முன்ன‌ர் ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ராக‌ இருந்த‌ ம‌த்க‌ம் ம‌சுகா இப்பொழுது தோர்ந‌ப‌ல் ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் முகாமில் உள்ளார். 2006ஆம் ஆண்டிற்கு பின்ன‌ர் எந்த‌ ஒரு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் இந்த‌ கிராம‌த்திற்கு வருவதும் கூட கிடையாது.

   13 மார்ச் அன்று சில‌ குடிசைக‌ளை எரித்துக் கொண்டே அர‌ச‌ ப‌டை திமாபுர் கிராம‌த்திற்குள் மாவோவின‌ரையோ அல்ல‌து கிராம‌வாசிக‌ளையோ தேடிய‌ப‌டியே உள்ளே நுழைந்த‌து. ஆடுக‌ளும், கோழிக‌ளும் ம‌ட்டுமே அங்கிருந்த‌ உயிருள்ள‌ பொருட்க‌ளாகும். வ‌ழ‌மை போல‌வே அவ‌ற்றை கொன்று த‌ங்களின் இர‌வு உண‌வாக்கிக் கொண்டார்க‌ள். இர‌வு அவ‌ர்க‌ள் அங்கேயே த‌ங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து வெளியே செல்லும் வ‌ழியில்(2கிலோ மீட்ட‌ர் தொலைவில்) மாவோவின‌ரின் தாக்குத‌லுக்கு உள்ளானார்க‌ள்.
                                                                                                                                                                   “அங்குள்ள‌ கிராம‌ங்க‌ளை பாதுகாக்க‌வே எங்க‌ள‌து ம‌க்க‌ள் விடுத‌லை க‌ர‌ந்த‌டி இராணுவ‌ம்(people liberation guerrills Army) அவ‌ர்க‌ளை தாக்கிய‌து” என்ற‌ கையெழுத்து பிர‌தி ஒன்று தெக‌ல்கா குழுவின‌ருக்கு வ‌ந்த‌து. இந்த‌ கையெழுத்து பிர‌தியின் கீழே – மாவோவிவ‌ன‌ரின் தெற்கு பாசுட‌ர் ப‌டையணியின் த‌லைமை அதிகாரி – வெங்க‌டேசு என்று கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் அந்த‌ அறிக்கையில் “க‌ல்லுரிக்கும்(மாநில‌ காவ‌ல்துறை த‌லைமை அதிகாரி) அவ‌ர‌து ப‌டைக‌ளுக்கும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாட‌ப்ப‌டும் வ‌ன‌ மிருக‌ங்க‌ள் ஆகிவிட்டார்க‌ளா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவ‌ரை அவர்கள் பார்த்தாலும், அவ‌ரை தாக்கியோ, கொன்றோ, அல்ல‌து அவ‌ர‌து பொருட்க‌ளை கொள்ளைய‌டித்தோ செல்கின்றார்க‌ள். அர‌ச‌ நிர்வாக‌ம் ஆதிவாசிக‌ளுக்கான‌ அபிவிருத்தி(development) திட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசி வ‌ருகின்ற‌து. ஆனால் நீங்க‌ள் பார்த்துவ‌ரும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் ஆதிவாசிக‌ளைப் போல‌வா ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்?” என்று எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.

                                                                                          மாவோவின‌ரின் தாக்குத‌லில் 3 “கோயா” அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளும், 1 மாவோவின‌ரும் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் பாதுகாப்பு‌ ப‌டை மீண்டும் திமாபுர் கிராம‌த்திற்கு திரும்பிய‌து. அடுத்த‌ நாள் முழுவ‌தும் அங்கே த‌ங்கியிருந்த‌ ப‌டையின‌ர், 15 மார்ச் அதிகாலையில் கிராம‌த்தை விட்டு சிந்த‌ல்ந‌ர் நோக்கி புற‌ப்ப‌ட்டார்க‌ள். வ‌ழ‌மை போல‌வே அங்கிருந்த‌ 50 குடிசைக‌ளை தீவைத்து கொழுத்தி, தாங்க‌ள் கைது செய்து கொண்டு வ‌ந்த‌ ப‌த்சே பீமாவை அங்கேயே கொன்றுவிட்டு சென்றார்க‌ள். ம‌ன்னு ராமை அவ‌ர்க‌ள் தங்க‌ளுட‌னே சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌த்திற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.

   இர‌ண்டு நாட்க‌ளுக்கு பின்ன‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ரான ம‌ன்னு ராமைத் தேடி சிந்த‌ல்ந‌ர் வ‌ந்தார்‌ ம‌ங்க‌லி‌. “காவ‌ல்நிலைய‌த்திலிருந்து ஒரு நூறு மீட்ட‌ர் தொலைவில் ஒரு இர‌த்த‌ வெள்ள‌ம் ப‌டிந்திருந்த‌து” என‌ அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். அந்த‌ இட‌த்தில் தான் ம‌ன்னு சுட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ அங்கிருக்கும் கிராம‌வாசிகளும் கூறினார்க‌ள். காவ‌ல்துறை இந்த‌ தாக்குத‌லில் 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும், ஒரு ந‌க்ச‌லின் உட‌ல் கிடைத்துள்ள‌தாக‌வும் கூறிய‌து. 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை மாவோவின‌ர் ம‌றுத்துள்ளார்க‌ள். காவ‌ல்துறை கூறும் அந்த‌ ஒரு உட‌லும் க‌ண்டிப்பாக‌ ம‌ன்னு ராமுடையதாக‌‌த்தான் இருக்கும்.

16 மார்ச், காலை 5 ம‌ணி, த‌ர்ம‌த்லா கிராம‌ம்

  நான்கு ப‌க்க‌மும் இருந்த‌ வ‌ருகின்ற‌ ப‌டையின‌ரின் ச‌த்த‌த்தை கேட்டு அந்த‌ கிராம‌ம் அன்று விழித்த‌து. “எப்ப‌டி நீங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு த‌ங்குவ‌த‌ற்கு இட‌ம் கொடுக்க‌லாம்? எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ச‌மைத்து கொடுத்தீர்க‌ள்? என்று ச‌த்த‌ம் போட்டு கொண்டே ப‌டை சீருடையும், க‌ருப்பு முக‌மூடியும் அணிந்த‌ ஒருவ‌ர் ம‌த்வி முக்காவை அவ‌ர‌து ம‌ண்குடிசையில் இருந்து வெளியே இழுத்து வ‌ந்தான். ம‌ற்றுமொரு ப‌டைக்குழு அவ‌ருக்கு பின்னால் தீக்குச்சிக‌ளோடு நின்று கொண்டிருந்த‌து, இன்னொரு ப‌டைய‌ணியோ தீயை ப‌ற்ற‌வைத்து ஒருபுற‌ம் எறிந்து கொண்டிருந்தார்க‌ள்.

எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி

                                                                                        ஓடி த‌ப்பிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் ப‌டையின‌ரிட‌ம் மாட்டிக்கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் 30 வ‌ய‌தான் ஐம்லா சோகியும் ஒருவ‌ர். அவ‌ர்க‌ள் என்னை துப்பாக்கி முனையில் வைத்து வ‌ன‌ப்ப‌குதிக்குள் இழுத்துச்  சென்றார்க‌ள். ச‌ற்று தூர‌ம் சென்ற‌ பின்ன‌ர் அவ‌ரை துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌ப்பகுதியின் மூல‌ம் அடித்து தாக்கி, க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள். பலமாக தாக்கப்பட்டதினால் சில‌ நிமிட‌ங்க‌ளில்  அவ‌ர் ம‌ய‌ங்கியுள்ளார். அன்று ந‌ட‌ந்த‌தை அவ‌ர் நினைவு கூறுகையில் ஒருவ‌ர் க‌த்தியை எடுத்து அருகில் வ‌ந்த‌தாக‌வும் அதை வைத்து அவ‌ர் என்ன‌ செய்தார் என்று த‌ன‌க்கு நினைவில்லை என்றும் அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். ஆனால் அவ‌ர‌து க‌ண்ணிற்கு ச‌ற்று கீழே ஆழ‌மான‌ வெட்டுக்காய‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ரால் த‌ற்பொழுது ச‌ரியாக‌ பார்க்க‌ முடிவதில்லை. ம‌ய‌க்க‌ம் தெளிந்து ஒரும‌ணி நேர‌ம் க‌ழித்து அவ‌ர் எழுந்து பார்க்கும் பொழுது அவ‌ர் இடுப்பில் முடிந்து வைத்திருந்த‌ வாழ்நாள் சேமிப்பான‌ ரூ.8,000மும், த‌ங்க‌ காத‌ணிக‌ளும், மூக்குத்தியும் காணாம‌ல் போயிருந்த‌ன‌. மேலும் அவ‌ர‌து வீடும் தீக்கிரையாகி இருந்த‌து.
 
    “நான் ம‌ய‌க்க‌ம‌டைந்து விட்ட‌தால் என்னை யார் க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று என்னால் அடையாள‌ம் காட்ட இயலவில்லை, என‌க்கு நீதி கிடைக்க‌ வாய்ப்புள்ள‌தா?, என‌க்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்று நான் இந்த‌ உல‌க‌த்திற்கு கூற‌ வேண்டும், என்னை இந்த‌ நிலைக்கு உள்ளாக்கிய‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டும்” என கூறுகின்றார் ஐம்லா சோகி.

இரண்டு ம‌ணி நேர‌த்திற்கு பிறகு த‌ர்மத்லா கிராம‌த்தை விட்டு பாதுகாப்பு ப‌டை வெளியேறிய‌து. அவ‌ர்க‌ள் செல்லும் போது த‌ர்ம‌த்லா கிராம‌வாசிக‌ளான‌ ம‌த்வா ஆன்டாவையும், ம‌த்வா ஐதாவையும் கயிற்றினால் க‌ட்டி த‌ங்க‌ளுட‌ன் இழுத்துச் சென்றார்க‌ள். இந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் மொத்த‌ம் 207 குடிசைக‌ள் இடிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ம‌த்வி முகா த‌ன‌து வீட்டிற்கு திரும்பி வ‌ந்த‌ பொழுது த‌ன‌து சில‌ லுங்கிக‌ளையும், வாழ்நாள் சேமிப்பான‌ ரூபாய், 2,000த்தையும், 60 அரிசி மூட்டைக‌ளையும், 20 விதை மூட்டைக‌ளும் கொண்டிருந்த‌ அந்த‌ வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு குப்பை மேடாக‌ காட்சிய‌ளித்த‌து.

 
  ஒரு வார‌த்திற்கு பின்ன‌ர் அர‌சு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களான‌ அரிசி, ப‌ருப்பு போன்ற‌வைக‌ளும், எரிந்த குடிசைகளுக்கு ரூபாய். 3,000மும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. “இர‌ண்டு மாறுப‌ட்ட‌ அர‌சுக‌ள் இங்கு உள்ள‌ன‌வா? (ஒரு அர‌சு எங்க‌ள் வீடுக‌ளை இடித்து தீக்கிரைய‌க்குகின்ற‌து, ம‌ற்றொன்று நிவார‌ண‌மாக‌ அரிசியும், ப‌ண‌மும் கொடுக்கின்ற‌து), எப்ப‌டி இந்த‌ இர‌ண்டு அர‌சுக‌ளும் ஒன்றாக‌ இருக்க‌ முடியும்?” என்று விவ‌சாயியான‌ கௌவாசி அத்மா கேட்கின்றார்.
ந‌ன்றி : துசா மிட்ட‌ல், தெக‌ல்கா

மூல‌ம்:

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne160411Are.asp

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
……………..

நன்றி. வினவு (வினவு இணையத்தளத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

தமிழகத் தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உளவியல் தாக்குதல்கள்


சிங்க‌ள‌ அர‌சின் உள‌வுப்பிரிவு ப‌ர‌ப்புகின்ற‌ செய்திக‌ளுக்கு த‌மிழ்த்தேசிய‌ ஊட‌க‌ங்க‌ளே க‌ள‌ம் அமைத்து த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப‌டுவது நடைபெறுகின்றது. இது போன்ற‌ ஊட‌க‌ங்களில் வ‌ரும் செய்திக‌ளை அப்ப‌டியே உண்மை என‌ ந‌ம்பி அதை ப‌ர‌ப்பும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப்ப‌டுவதும் நடைபெறுகின்றது.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப‌ த‌றிவு —–என்ற‌ வ‌ள்ளுவ‌னின் குற‌ளை படிப்பதோடு மட்டுமல்லாமல் அத‌ன் பொருளை உண‌ர்ந்து அதை வாழ்வின் ந‌டைமுறைக‌ளில் செலுத்தி வாழ்ந்தாலே இதுபோன்ற‌ உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளை ந‌ம்மால் வெற்றிக் கொள்ள‌ முடியும்.


அண்மையில் சிங்க‌ள‌ உள‌வுப்பிரிவு வெற்றி பெற்ற‌ சில‌ நிக‌ழ்வுக‌ள். த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ள் தோல்வி அடைந்த‌ சில‌ நிக‌ழ்வுக‌ளைப் ப‌ற்றி நான் ப‌டித்த‌ ஒரு க‌ட்டுரையை இங்கே அப்ப‌டியே பிர‌சூரிக்கின்றேன்.

“இசைப்பிரியா என்கின்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காப் படைகளால் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சண்டைகளின் பொழுது தம்மால் கொல்லப்பட்டவராக சிறிலங்கா இராணுவத் தலைமையால் உரிமை கோரப்பட்ட இசைப்பிரியா என்கின்ற ஊடகவியலாளர், உண்மையிலேயே சிறிலங்கா இராணுவத்தால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்ட பிரபல்யமான ஒரு சர்வதேச செய்தி தாபனம், சிறிலங்கா மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய போர் குற்றமாக அதனை அடையாளப்படுத்தியிருந்தது.

ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த மறுதினம் எங்களுடைய புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் இசைப்பிரியா தொடர்பான ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அதாவது, இசைப்பிரியா சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் வீரனொருவனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அதற்கு பழிதீர்க்க கொல்லப்பட்ட சிறிலங்கா வீரனின் சகாக்கள் ஒரு சதி செய்ததாகவும், தம்மிடம் சரணடைந்திருந்த சாதாரண பெண் ஒருவரை மிரட்டி காயம்பட்ட நிலையில் தவிப்பவர் போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த இசைப்பிரியாவை தந்திரமாகத் தமது எல்லைக்குள் வரவளைத்து, சற்றும் எதிர்பாராத முறையில் அவரை சிறிலங்காப் படைத்தரப்பு கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவினால் கொல்லப்பட்ட சிறிலங்காப் படை வீரனின் நண்பர்கள் கோபத்தில் இசைப்பிரியாவைத் தாக்கி பழிவாங்கியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

தமிழ் ஊடகங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட இந்தச் செய்தியானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலுக்கான ஆதாரத்தை, ஒரு கொடுரமான போர்குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை சில நொடிகளிலேயே சுக்குநூறாக்கிவிட்டிருந்தது.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல! அவர் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்கின்ற ஒரு செய்தி தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அவர் ஒருவரை படுகொலை செய்தார் என்கின்ற ஒரு தகவலும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் சிறிலங்காப் படைகளிடம் சரணடையவில்லை என்கின்ற ஒரு தகவலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக, சில இராணுத்தினர் தமது நண்பன் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு கொலையே அது என்ற நியாயப்பாட்டையும், எமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினுடாக நாம் வழங்கியிருந்தோம்.

அதாவது நிராயுதபாணியாக சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த ஒரு ஊடகவியளாளரை, சிங்கள இராணுவம் கொடுரமாகப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை, தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி முற்றாகவே பலமிழக்கச் செய்திருந்தது.

இத்தனைக்கும், இப்படியான தகவலை எதிரியின் ஊடகங்களோ., அல்லது நடுநிலையான சர்வதேச ஊடகங்களோ வெளியிடவில்லை. முழுக்கமுழுக்க ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற, தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை பெருமையுடன் கூறிக்கொள்கின்ற ஊடகங்களே இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தன.

எதிரி மிகவும் கவனமாக இதுபோன்ற தகவலை தமிழ் ஊடகங்களுக்கு கசிய விட்டிருந்தான். எமது ஊடகங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தோன்றின. இசைப்பிரியாவையும், அவரது வீரத்தையும், விடுதலைப் புலிகளின் பெருமையையும் உயர்த்துவதாக நினைத்துத்தான் எம்மவர்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். ‘நாமாவது சரணடைவதாவது..” என்ற வெட்டி வீரத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்ததால்தான், அவர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பிரசுரித்தும் இருந்தார்கள்.

ஆனால், தம்மை அறியாமலேயே எதிரியின் ஒரு மிகப் பெரிய உளவியல் போருக்கு எமது ஊடகங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அநியாயமாகப் பலியாகிப் போயிருந்தன.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது என்பது எம்மைக் குறிவைத்து எதிரி இன்று மேற்கொண்டு வருகின்ற ஒரு முக்கியமான உளவியல் நடவடிக்கை.

இதற்கு நம்மை அறியாமலேயே நாம் அடிக்கடி பலியாகிவிடுகின்றோம் என்பதுதான் சோகம்.

விடுதலைப் புலிகள் திரள்கின்றார்கள்.. லட்சத் தீவுகளில் நான்காயிரம் பேர் இருக்கிறார்கள், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறிய புலிகள் வன்னிக்காட்டுக்குள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள்.. இதோ வருகிறார்.. அதோ அடிவிழப் போகிறது…” – எமது ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற இது போன்ற செய்திகள் எமக்கு உற்சாகம் அழிப்பதாக இருப்பது உண்மைதான். ஆனால் இந்தச் செய்திகள் எமக்கு தருகின்ற மகிழ்ச்சியை விட எதிரிக்கு அளிக்கின்ற பலன் மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணரத் தவறிவிடுகின்றோம். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்து நீடித்துவைத்திருப்பதற்கும், சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கும், ஒரு இன அழிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வன்னியில் ஒரு இலட்சம் படையினரை தொடர்ந்து தங்கவைப்பதற்கும், அவர்களது குடும்பங்களை வன்னியில் நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கும்.. இதுபோன்ற செய்திகள் எதிரிக்கு மிகவும் பயன்படுகின்றன.

சற்று ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற செய்திகளை ஈழத் தமிழ் அமைப்புக்கள் எதுவுமே வெளியிட்டிருக்காது. சிறிலங்கா தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோதான் இதுபோன்ற செய்திகள் வெளியே கசியவிடப்பட்டிருக்கும். ஆனால் ஈழத் தமிழருக்கு இனிப்பான செய்திகள் போலவே இவை தெரிவதால், இந்தச் செய்திகள் ஈழத் தமிழ் ஊடகங்களில்தாம் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவதான இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம்- குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.“(1)


இர‌ண்டாவ‌து நிக‌ழ்வு:

“உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா?

ரமேஷ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகத் தமிழர் மனங்களில் காணப்படுகின்ற பிரமாண்டத்தை உடைக்கவும், சிறிலங்கா இராணுவத்தின் மேலாண்மையை வெளிப்படுத்தவும் இந்த வீடியோக் காட்சியை சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பிரிவினர் வெளியிட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அளவில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதாராமாக அமைந்துவிடக்கூடிய ரமேஷின் விசாரணை வீடியோக்காட்சியை, சிறிலங்கா இராணுவமே வேண்டுமென்று ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பார்களா? இது எப்படிச் சாத்தியம்?- இவ்வாறு நான் எழுப்பிய கேள்விக்கு அவர் புன்னகைத்தபடி பதில் வழங்கினார்:

‘ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் மகிந்த என்ற அரசியல்வாதிதான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு அப்பால், அந்தத் தேசத்தின் நீண்ட கால வெற்றிதான் அதற்கு முக்கியம். ஒரு ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை விட, உளவியல் ரீதியாக உலகத் தமிழரைப் பலவீனமடைய வைப்பது இன்றைய காலகட்டத்திற்கு சிறிலங்கா தேசத்திற்கு அவசியமாக இருக்கின்றது.

எந்த ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவும், ஒரு தனி நபரை அல்லது சிலரது தனிப்பட்ட நலன்களை விட, தனது தேசத்தின் எதிர்காலம் பற்றித்தான் அதிகம் சிந்தித்துச் செயற்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் ரமேஷின் விசாரணை வீடியோவை சிறிலங்கா உளவியல் பணியகம் வெளியிட்டது.

இதே போன்று, உலகத் தமிழர் உளவியலில் பலவீனத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், அதுவும் புலிகள் அமைப்பின் மிக மிக முக்கியமான ஒருவர் சம்பந்தமான வீடியோ காட்சிகளையும், அந்தப் பிரிவு வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது“ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

என்னுடன் பேசிய அந்த பத்திரிகையாளரின் கருத்து உண்மையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கூறியபடி நடைபெற்றிருப்பதற்கான சாத்தியப்பாட்டை நாம் இலகுவில் ஒதுக்கிவிடவும் முடியாது.

ரமேஷினுடைய வீடியோ காட்சி விவகாரம் கூட, இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருப்பதற்கான சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிடவும் முடியாது.

ரமேஷ் மீதான விசாரணை வீடியோக் காட்சியைப் பொறுத்தவரையில், அந்தக் காட்சி (முன்னர் வெளிவந்த காட்சிகளில் சிலது போன்று) படைவீரர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக எடுக்கப்பட்ட காட்சிகள் போன்று இருக்கவில்லை. அந்தக் காட்சியின் reslution இனைப் பார்க்கும் பொழுது, இது உயர் தொழில்நுட்பத்தினாலான வீடியோக் கமெராவினால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் இந்தக் காட்சிகளை- ஒன்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யூனிட் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சாதாரணமாக முக்கிய விசாரணைகளை பதிவு செய்து வைத்திருக்கும் புலனாய்வுப் பிரிவினர் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும்.

யுத்தம் முடிவடைந்த ஓரிரு தினங்களிலேயே ரூபவானி கூட்டுத்தாபனத்தினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யுனிட் வசமிருந்த யுத்தம் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆதாரங்களையும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கைப்பற்றியிருந்ததாகவும் பின்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

எனவே, யுத்தம் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் யுத்தம் தொடர்பான காட்சிகள் வெளிவருவதானால், அது நிச்சயம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியமே அதிகம் இருக்கின்றது.

ரமேஷ் மீதான விசாரணைக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது, அந்த விசாரணையை மேற்கொள்கின்ற நபர்கள் காட்சிப்படுத்தப்படுவது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அல்லது விசாரணை செய்யும் அதிகாரிகள் உள்ள காட்சிகள் கவனமாக அகற்றப்பட்டு அதன் பின்னரே அந்த வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது சிறிலங்கா இராணுவம்தான் ரமேஷை விசாரணைக்கு உட்படுத்துகின்றது என்பதற்கு, பின்னணியில் பேசப்படுகின்ற சிங்கள ஆங்கில வாக்கியங்களை (ஒலிகளை) தவிர வேறு ஆதாரங்களை அங்கு காண முடியவில்லை.

இந்தக் காட்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய சட்ட வல்லுனர் ஒருவர், இந்தக் காட்சி போர் குற்ற விசாரணைகளுக்கான ஒரு supportive document டே தவிர நல்லதொரு documental evidence அல்ல என்று கூறியிருந்தார். ஒரு சாட்சி என்பது- அதுவும் சர்வதேச அளவில் ஒரு விசாரணைக்கு சாட்சியாக அமைய இருக்கும் ஆதாரம் என்பது, எந்த இடத்தில், என்ன சம்பவம், யாரால், எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை ஓரளவாவது நிரூபிப்பதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷ் தொடர்பான காட்சியில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. அந்தக் காட்சியை வெளியட்டவர்களுக்கு அந்த நோக்கமும் பெரிதாக இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

ரமேஷ் என்ற புலிகளின் தளபதி சிங்களப் படையினரிடம் சரணடைந்திருப்பது, அந்தப் படையினரைப் பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்படுகின்ற சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) இந்தக் காட்சியைக் கசிய விட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் மேலும் உறுதியாகின்றது.

ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்லே தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவு இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது மிகப் பெரிய வெற்றியை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group), இனால் நேரடியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு தன்னை மேலும் விஸ்தரித்துக்கொண்ட ஒரு பிரிவாகக் கூறப்படும் சிறிலங்காவின் உளவியல் பணியகம், 4ம் கட்ட ஈழ யுத்த காலகட்டத்தின் பொழுது களமுனைகளிலும், பின்களச் செயற்பாடுகளிலும் மிகப்பெரிய பங்கினை ஆற்றியிருந்தது.

யுத்தம் முடிவடைந்த இந்த நேரத்திலும் சிறிலங்காவின் இந்த உளவியல் பிரிவினது செயற்பாடானது, சிறிலங்கா தேசம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முறியடிக்கும் விதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இந்த உளவியல் பிரிவே, ரமேஷ் தொடர்பான விசாரணைக் காட்சிகளை வெளியிட்டிருக்கலாம் என்று தற்பொழுது கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வேறு சில முக்கியஸ்தர்கள் தொடர்பான மேலும் சில காட்சிகளையும் இந்தப் பிரிவினரே தொடர்ந்து வெளிவிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவே இந்தக் கூற்றினை நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.

அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பற்றி ஆராய்கின்ற பொழுது, இந்த காட்சிகள் தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுப்பது அவசியம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அத்தோடு, உளவியல் நடவடிக்கை நோக்கத்தை அடிப்படையாக வைத்து, உலகத் தமிழர் உளவியலைக் குறிவைத்து இதுபோன்ற ஒரு யுத்தம் எதிரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உலகத் தமிழ் ஊடகங்கள் எப்படிச் செயற்படுவது அவசியம் என்பது பற்றியும் நாம் ஆராய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்”.(2)
இந்த‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ளிலும் சில‌ ப‌குதிக‌ளை நீக்கியுள்ளேன். க‌ட்டுரையின் பேசு பொருளுட‌ன் தொட‌ர்பில்லாத‌ சில‌ வ‌ரிக‌ளை முக்கிய‌மில்லாத‌தாக நான் க‌ருதிய‌தால் நீக்கியுள்ளேன். மேலும் இந்த‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ளுக்குமான‌ இணைப்பை இந்த‌ க‌ட்டுரையின் த‌ர‌வுக‌ள் ப‌குதியில் இணைத்துள்ளேன்.
இது போன்ற‌ உள‌வு நிறுவனங்களின் செய்திகளை எந்த‌ வித‌ விசார‌ணையுமின்றி அக‌நூல்(Facebook) போன்ற சமூக இணைய‌ங்க‌ளில் த‌ங்க‌ளை த‌மிழீழ‌ தேசிய‌ போராட்ட‌த்தில் பங்கு கொண்ட‌ப‌வ‌ர்க‌ளாக‌ க‌ருதும் சில‌ர் இணைத்து வ‌ருவ‌து வேத‌னைக்குரிய‌து. அதும‌ட்டுமின்றி இந்த‌ உள‌வுச்செய்திக‌ளை மையமாக‌க் கொண்டு ந‌ட‌த்தும் விவாதத்தில் ஒருவர் ஏன் இரமேசு சயனைடு நஞ்சை கடித்து சாக வேண்டியது தானே என்று வரை சென்றிருப்ப‌து சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டையின் வெற்றி. போராட்டம் பற்றிய ஒரு சிறிய புரிதல் கூட இல்லாமல் சாகச(Heroism) மனப்பான்மைகளில் அவர்கள் இருப்பதையே இந்த கூற்று உணர்த்துகின்றது. போராளிகளைப் புனிதர்களாக சித்தரித்து புகழ்வதும், எழுதுவதும் போராட்டத்தில் தம்மை விலக்கி வைத்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக போய்விடுகின்றது சாதாரண மனிதர்களுக்கு. போராளிகள் அரசியல் விழிப்புணர்வு பெற்ற தனக்காகவும் தம் மக்களுக்கு விலை கொடுக்க முன் வரும் இயல்பான மனிதர்கள். வானில் இருந்து குதித்தவர்கள் அல்ல.சிங்கள ஆதிக்க சக்திகளை எதிர்த்து வேலை செய்வதாக கூறும் சிலர் சிங்கள உளவு நிறுவனங்களுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுத்து, அந்த ஆதிக்க சக்திகளின் கூற்றுக‌ளை விவாத‌ப் பொருளாக்கிய‌வ‌ர்கள், அந்த விவாதத்தில் பங்கேற்று இரமேசை விமர்சித்தவர்கள் என எல்லோரும் சிங்கள ஆதிக்க சக்திகளிடம் அப்ப‌ட்ட‌மான‌ தோல்வியைத் தழுவியுள்ளார்கள் என்பதே உண்மை. பகைவன் எப்போதும் ஒரு முனையிலிருந்து தன்னுடையப் போரை நடத்துவதில்லை என்பதை உணரவேண்டும்.

த‌மிழீழ‌ தேசிய‌வாதிக‌ளிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் ஒரு கோரிக்கை, த‌ய‌வு செய்து உங்க‌ளுக்கு வ‌ரும் செய்திக‌ளின் உண்மைத்த‌ன்மையை அறிந்து அதை வெளியிட‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ள‌வோ, அந்த‌ செய்தியை விவாத‌ப்பொருளாக‌ ஆக்க‌வோ முய‌லுங்க‌ள்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப‌ த‌றிவு —–என்ற‌ வ‌ள்ளுவ‌னின் குற‌ளை படிப்பதோடு மட்டுமல்லாமல் அத‌ன் பொருளை உண‌ர்ந்து அதை வாழ்வின் ந‌டைமுறைக‌ளில் செலுத்தி வாழ்ந்தாலே இதுபோன்ற‌ உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளை ந‌ம்மால் வெற்றிக் கொள்ள‌ முடியும்.

ந‌ன்றி. நீராஜ் டேவிட், புதின‌ம் செய்திக‌ள்..

ந‌ற்ற‌மிழ‌ன்.ப

உளவியல் தாக்குதல்களைப்பற்றி மேலும் அறியவும், இந்தக் கட்டுரையில் நான் இணைத்துள்ள இரண்டு கட்டுரைகளும், அந்த இரண்டு கட்டுரைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகளின் மூலமும் இங்கே……..தோழர்.நீராஜின் சில கருத்துகளோடு நான் முரண்படுகின்ற பொழுதிலும் இந்த நான்கு கட்டுரையின் பேசு பொருளுடன் நான் முரண்படவில்லை..

1)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 1       http://www.puthinamnews.com/?p=19418

2)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 2  http://www.puthinamnews.com/?p=19560

3)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 3  http://www.puthinamnews.com/?p=19738

4)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 4 http://www.puthinamnews.com/?p=20094

Advertisements
%d bloggers like this: