தமிழகத் தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உளவியல் தாக்குதல்கள்


சிங்க‌ள‌ அர‌சின் உள‌வுப்பிரிவு ப‌ர‌ப்புகின்ற‌ செய்திக‌ளுக்கு த‌மிழ்த்தேசிய‌ ஊட‌க‌ங்க‌ளே க‌ள‌ம் அமைத்து த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப‌டுவது நடைபெறுகின்றது. இது போன்ற‌ ஊட‌க‌ங்களில் வ‌ரும் செய்திக‌ளை அப்ப‌டியே உண்மை என‌ ந‌ம்பி அதை ப‌ர‌ப்பும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப்ப‌டுவதும் நடைபெறுகின்றது.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப‌ த‌றிவு —–என்ற‌ வ‌ள்ளுவ‌னின் குற‌ளை படிப்பதோடு மட்டுமல்லாமல் அத‌ன் பொருளை உண‌ர்ந்து அதை வாழ்வின் ந‌டைமுறைக‌ளில் செலுத்தி வாழ்ந்தாலே இதுபோன்ற‌ உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளை ந‌ம்மால் வெற்றிக் கொள்ள‌ முடியும்.


அண்மையில் சிங்க‌ள‌ உள‌வுப்பிரிவு வெற்றி பெற்ற‌ சில‌ நிக‌ழ்வுக‌ள். த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ள் தோல்வி அடைந்த‌ சில‌ நிக‌ழ்வுக‌ளைப் ப‌ற்றி நான் ப‌டித்த‌ ஒரு க‌ட்டுரையை இங்கே அப்ப‌டியே பிர‌சூரிக்கின்றேன்.

“இசைப்பிரியா என்கின்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காப் படைகளால் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சண்டைகளின் பொழுது தம்மால் கொல்லப்பட்டவராக சிறிலங்கா இராணுவத் தலைமையால் உரிமை கோரப்பட்ட இசைப்பிரியா என்கின்ற ஊடகவியலாளர், உண்மையிலேயே சிறிலங்கா இராணுவத்தால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்ட பிரபல்யமான ஒரு சர்வதேச செய்தி தாபனம், சிறிலங்கா மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய போர் குற்றமாக அதனை அடையாளப்படுத்தியிருந்தது.

ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த மறுதினம் எங்களுடைய புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் இசைப்பிரியா தொடர்பான ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அதாவது, இசைப்பிரியா சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் வீரனொருவனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அதற்கு பழிதீர்க்க கொல்லப்பட்ட சிறிலங்கா வீரனின் சகாக்கள் ஒரு சதி செய்ததாகவும், தம்மிடம் சரணடைந்திருந்த சாதாரண பெண் ஒருவரை மிரட்டி காயம்பட்ட நிலையில் தவிப்பவர் போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த இசைப்பிரியாவை தந்திரமாகத் தமது எல்லைக்குள் வரவளைத்து, சற்றும் எதிர்பாராத முறையில் அவரை சிறிலங்காப் படைத்தரப்பு கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவினால் கொல்லப்பட்ட சிறிலங்காப் படை வீரனின் நண்பர்கள் கோபத்தில் இசைப்பிரியாவைத் தாக்கி பழிவாங்கியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

தமிழ் ஊடகங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட இந்தச் செய்தியானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலுக்கான ஆதாரத்தை, ஒரு கொடுரமான போர்குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை சில நொடிகளிலேயே சுக்குநூறாக்கிவிட்டிருந்தது.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல! அவர் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்கின்ற ஒரு செய்தி தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அவர் ஒருவரை படுகொலை செய்தார் என்கின்ற ஒரு தகவலும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் சிறிலங்காப் படைகளிடம் சரணடையவில்லை என்கின்ற ஒரு தகவலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக, சில இராணுத்தினர் தமது நண்பன் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு கொலையே அது என்ற நியாயப்பாட்டையும், எமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினுடாக நாம் வழங்கியிருந்தோம்.

அதாவது நிராயுதபாணியாக சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த ஒரு ஊடகவியளாளரை, சிங்கள இராணுவம் கொடுரமாகப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை, தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி முற்றாகவே பலமிழக்கச் செய்திருந்தது.

இத்தனைக்கும், இப்படியான தகவலை எதிரியின் ஊடகங்களோ., அல்லது நடுநிலையான சர்வதேச ஊடகங்களோ வெளியிடவில்லை. முழுக்கமுழுக்க ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற, தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை பெருமையுடன் கூறிக்கொள்கின்ற ஊடகங்களே இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தன.

எதிரி மிகவும் கவனமாக இதுபோன்ற தகவலை தமிழ் ஊடகங்களுக்கு கசிய விட்டிருந்தான். எமது ஊடகங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தோன்றின. இசைப்பிரியாவையும், அவரது வீரத்தையும், விடுதலைப் புலிகளின் பெருமையையும் உயர்த்துவதாக நினைத்துத்தான் எம்மவர்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். ‘நாமாவது சரணடைவதாவது..” என்ற வெட்டி வீரத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்ததால்தான், அவர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பிரசுரித்தும் இருந்தார்கள்.

ஆனால், தம்மை அறியாமலேயே எதிரியின் ஒரு மிகப் பெரிய உளவியல் போருக்கு எமது ஊடகங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அநியாயமாகப் பலியாகிப் போயிருந்தன.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது என்பது எம்மைக் குறிவைத்து எதிரி இன்று மேற்கொண்டு வருகின்ற ஒரு முக்கியமான உளவியல் நடவடிக்கை.

இதற்கு நம்மை அறியாமலேயே நாம் அடிக்கடி பலியாகிவிடுகின்றோம் என்பதுதான் சோகம்.

விடுதலைப் புலிகள் திரள்கின்றார்கள்.. லட்சத் தீவுகளில் நான்காயிரம் பேர் இருக்கிறார்கள், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறிய புலிகள் வன்னிக்காட்டுக்குள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள்.. இதோ வருகிறார்.. அதோ அடிவிழப் போகிறது…” – எமது ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற இது போன்ற செய்திகள் எமக்கு உற்சாகம் அழிப்பதாக இருப்பது உண்மைதான். ஆனால் இந்தச் செய்திகள் எமக்கு தருகின்ற மகிழ்ச்சியை விட எதிரிக்கு அளிக்கின்ற பலன் மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணரத் தவறிவிடுகின்றோம். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்து நீடித்துவைத்திருப்பதற்கும், சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கும், ஒரு இன அழிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வன்னியில் ஒரு இலட்சம் படையினரை தொடர்ந்து தங்கவைப்பதற்கும், அவர்களது குடும்பங்களை வன்னியில் நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கும்.. இதுபோன்ற செய்திகள் எதிரிக்கு மிகவும் பயன்படுகின்றன.

சற்று ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற செய்திகளை ஈழத் தமிழ் அமைப்புக்கள் எதுவுமே வெளியிட்டிருக்காது. சிறிலங்கா தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோதான் இதுபோன்ற செய்திகள் வெளியே கசியவிடப்பட்டிருக்கும். ஆனால் ஈழத் தமிழருக்கு இனிப்பான செய்திகள் போலவே இவை தெரிவதால், இந்தச் செய்திகள் ஈழத் தமிழ் ஊடகங்களில்தாம் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவதான இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம்- குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.“(1)


இர‌ண்டாவ‌து நிக‌ழ்வு:

“உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா?

ரமேஷ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகத் தமிழர் மனங்களில் காணப்படுகின்ற பிரமாண்டத்தை உடைக்கவும், சிறிலங்கா இராணுவத்தின் மேலாண்மையை வெளிப்படுத்தவும் இந்த வீடியோக் காட்சியை சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பிரிவினர் வெளியிட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அளவில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதாராமாக அமைந்துவிடக்கூடிய ரமேஷின் விசாரணை வீடியோக்காட்சியை, சிறிலங்கா இராணுவமே வேண்டுமென்று ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பார்களா? இது எப்படிச் சாத்தியம்?- இவ்வாறு நான் எழுப்பிய கேள்விக்கு அவர் புன்னகைத்தபடி பதில் வழங்கினார்:

‘ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் மகிந்த என்ற அரசியல்வாதிதான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு அப்பால், அந்தத் தேசத்தின் நீண்ட கால வெற்றிதான் அதற்கு முக்கியம். ஒரு ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை விட, உளவியல் ரீதியாக உலகத் தமிழரைப் பலவீனமடைய வைப்பது இன்றைய காலகட்டத்திற்கு சிறிலங்கா தேசத்திற்கு அவசியமாக இருக்கின்றது.

எந்த ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவும், ஒரு தனி நபரை அல்லது சிலரது தனிப்பட்ட நலன்களை விட, தனது தேசத்தின் எதிர்காலம் பற்றித்தான் அதிகம் சிந்தித்துச் செயற்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் ரமேஷின் விசாரணை வீடியோவை சிறிலங்கா உளவியல் பணியகம் வெளியிட்டது.

இதே போன்று, உலகத் தமிழர் உளவியலில் பலவீனத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், அதுவும் புலிகள் அமைப்பின் மிக மிக முக்கியமான ஒருவர் சம்பந்தமான வீடியோ காட்சிகளையும், அந்தப் பிரிவு வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது“ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

என்னுடன் பேசிய அந்த பத்திரிகையாளரின் கருத்து உண்மையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கூறியபடி நடைபெற்றிருப்பதற்கான சாத்தியப்பாட்டை நாம் இலகுவில் ஒதுக்கிவிடவும் முடியாது.

ரமேஷினுடைய வீடியோ காட்சி விவகாரம் கூட, இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருப்பதற்கான சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிடவும் முடியாது.

ரமேஷ் மீதான விசாரணை வீடியோக் காட்சியைப் பொறுத்தவரையில், அந்தக் காட்சி (முன்னர் வெளிவந்த காட்சிகளில் சிலது போன்று) படைவீரர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக எடுக்கப்பட்ட காட்சிகள் போன்று இருக்கவில்லை. அந்தக் காட்சியின் reslution இனைப் பார்க்கும் பொழுது, இது உயர் தொழில்நுட்பத்தினாலான வீடியோக் கமெராவினால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் இந்தக் காட்சிகளை- ஒன்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யூனிட் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சாதாரணமாக முக்கிய விசாரணைகளை பதிவு செய்து வைத்திருக்கும் புலனாய்வுப் பிரிவினர் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும்.

யுத்தம் முடிவடைந்த ஓரிரு தினங்களிலேயே ரூபவானி கூட்டுத்தாபனத்தினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யுனிட் வசமிருந்த யுத்தம் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆதாரங்களையும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கைப்பற்றியிருந்ததாகவும் பின்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

எனவே, யுத்தம் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் யுத்தம் தொடர்பான காட்சிகள் வெளிவருவதானால், அது நிச்சயம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியமே அதிகம் இருக்கின்றது.

ரமேஷ் மீதான விசாரணைக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது, அந்த விசாரணையை மேற்கொள்கின்ற நபர்கள் காட்சிப்படுத்தப்படுவது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அல்லது விசாரணை செய்யும் அதிகாரிகள் உள்ள காட்சிகள் கவனமாக அகற்றப்பட்டு அதன் பின்னரே அந்த வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது சிறிலங்கா இராணுவம்தான் ரமேஷை விசாரணைக்கு உட்படுத்துகின்றது என்பதற்கு, பின்னணியில் பேசப்படுகின்ற சிங்கள ஆங்கில வாக்கியங்களை (ஒலிகளை) தவிர வேறு ஆதாரங்களை அங்கு காண முடியவில்லை.

இந்தக் காட்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய சட்ட வல்லுனர் ஒருவர், இந்தக் காட்சி போர் குற்ற விசாரணைகளுக்கான ஒரு supportive document டே தவிர நல்லதொரு documental evidence அல்ல என்று கூறியிருந்தார். ஒரு சாட்சி என்பது- அதுவும் சர்வதேச அளவில் ஒரு விசாரணைக்கு சாட்சியாக அமைய இருக்கும் ஆதாரம் என்பது, எந்த இடத்தில், என்ன சம்பவம், யாரால், எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை ஓரளவாவது நிரூபிப்பதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷ் தொடர்பான காட்சியில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. அந்தக் காட்சியை வெளியட்டவர்களுக்கு அந்த நோக்கமும் பெரிதாக இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

ரமேஷ் என்ற புலிகளின் தளபதி சிங்களப் படையினரிடம் சரணடைந்திருப்பது, அந்தப் படையினரைப் பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்படுகின்ற சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) இந்தக் காட்சியைக் கசிய விட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் மேலும் உறுதியாகின்றது.

ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்லே தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவு இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது மிகப் பெரிய வெற்றியை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group), இனால் நேரடியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு தன்னை மேலும் விஸ்தரித்துக்கொண்ட ஒரு பிரிவாகக் கூறப்படும் சிறிலங்காவின் உளவியல் பணியகம், 4ம் கட்ட ஈழ யுத்த காலகட்டத்தின் பொழுது களமுனைகளிலும், பின்களச் செயற்பாடுகளிலும் மிகப்பெரிய பங்கினை ஆற்றியிருந்தது.

யுத்தம் முடிவடைந்த இந்த நேரத்திலும் சிறிலங்காவின் இந்த உளவியல் பிரிவினது செயற்பாடானது, சிறிலங்கா தேசம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முறியடிக்கும் விதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இந்த உளவியல் பிரிவே, ரமேஷ் தொடர்பான விசாரணைக் காட்சிகளை வெளியிட்டிருக்கலாம் என்று தற்பொழுது கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வேறு சில முக்கியஸ்தர்கள் தொடர்பான மேலும் சில காட்சிகளையும் இந்தப் பிரிவினரே தொடர்ந்து வெளிவிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவே இந்தக் கூற்றினை நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.

அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பற்றி ஆராய்கின்ற பொழுது, இந்த காட்சிகள் தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுப்பது அவசியம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அத்தோடு, உளவியல் நடவடிக்கை நோக்கத்தை அடிப்படையாக வைத்து, உலகத் தமிழர் உளவியலைக் குறிவைத்து இதுபோன்ற ஒரு யுத்தம் எதிரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உலகத் தமிழ் ஊடகங்கள் எப்படிச் செயற்படுவது அவசியம் என்பது பற்றியும் நாம் ஆராய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்”.(2)
இந்த‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ளிலும் சில‌ ப‌குதிக‌ளை நீக்கியுள்ளேன். க‌ட்டுரையின் பேசு பொருளுட‌ன் தொட‌ர்பில்லாத‌ சில‌ வ‌ரிக‌ளை முக்கிய‌மில்லாத‌தாக நான் க‌ருதிய‌தால் நீக்கியுள்ளேன். மேலும் இந்த‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ளுக்குமான‌ இணைப்பை இந்த‌ க‌ட்டுரையின் த‌ர‌வுக‌ள் ப‌குதியில் இணைத்துள்ளேன்.
இது போன்ற‌ உள‌வு நிறுவனங்களின் செய்திகளை எந்த‌ வித‌ விசார‌ணையுமின்றி அக‌நூல்(Facebook) போன்ற சமூக இணைய‌ங்க‌ளில் த‌ங்க‌ளை த‌மிழீழ‌ தேசிய‌ போராட்ட‌த்தில் பங்கு கொண்ட‌ப‌வ‌ர்க‌ளாக‌ க‌ருதும் சில‌ர் இணைத்து வ‌ருவ‌து வேத‌னைக்குரிய‌து. அதும‌ட்டுமின்றி இந்த‌ உள‌வுச்செய்திக‌ளை மையமாக‌க் கொண்டு ந‌ட‌த்தும் விவாதத்தில் ஒருவர் ஏன் இரமேசு சயனைடு நஞ்சை கடித்து சாக வேண்டியது தானே என்று வரை சென்றிருப்ப‌து சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டையின் வெற்றி. போராட்டம் பற்றிய ஒரு சிறிய புரிதல் கூட இல்லாமல் சாகச(Heroism) மனப்பான்மைகளில் அவர்கள் இருப்பதையே இந்த கூற்று உணர்த்துகின்றது. போராளிகளைப் புனிதர்களாக சித்தரித்து புகழ்வதும், எழுதுவதும் போராட்டத்தில் தம்மை விலக்கி வைத்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக போய்விடுகின்றது சாதாரண மனிதர்களுக்கு. போராளிகள் அரசியல் விழிப்புணர்வு பெற்ற தனக்காகவும் தம் மக்களுக்கு விலை கொடுக்க முன் வரும் இயல்பான மனிதர்கள். வானில் இருந்து குதித்தவர்கள் அல்ல.சிங்கள ஆதிக்க சக்திகளை எதிர்த்து வேலை செய்வதாக கூறும் சிலர் சிங்கள உளவு நிறுவனங்களுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுத்து, அந்த ஆதிக்க சக்திகளின் கூற்றுக‌ளை விவாத‌ப் பொருளாக்கிய‌வ‌ர்கள், அந்த விவாதத்தில் பங்கேற்று இரமேசை விமர்சித்தவர்கள் என எல்லோரும் சிங்கள ஆதிக்க சக்திகளிடம் அப்ப‌ட்ட‌மான‌ தோல்வியைத் தழுவியுள்ளார்கள் என்பதே உண்மை. பகைவன் எப்போதும் ஒரு முனையிலிருந்து தன்னுடையப் போரை நடத்துவதில்லை என்பதை உணரவேண்டும்.

த‌மிழீழ‌ தேசிய‌வாதிக‌ளிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் ஒரு கோரிக்கை, த‌ய‌வு செய்து உங்க‌ளுக்கு வ‌ரும் செய்திக‌ளின் உண்மைத்த‌ன்மையை அறிந்து அதை வெளியிட‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்ள‌வோ, அந்த‌ செய்தியை விவாத‌ப்பொருளாக‌ ஆக்க‌வோ முய‌லுங்க‌ள்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப‌ த‌றிவு —–என்ற‌ வ‌ள்ளுவ‌னின் குற‌ளை படிப்பதோடு மட்டுமல்லாமல் அத‌ன் பொருளை உண‌ர்ந்து அதை வாழ்வின் ந‌டைமுறைக‌ளில் செலுத்தி வாழ்ந்தாலே இதுபோன்ற‌ உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளை ந‌ம்மால் வெற்றிக் கொள்ள‌ முடியும்.

ந‌ன்றி. நீராஜ் டேவிட், புதின‌ம் செய்திக‌ள்..

ந‌ற்ற‌மிழ‌ன்.ப

உளவியல் தாக்குதல்களைப்பற்றி மேலும் அறியவும், இந்தக் கட்டுரையில் நான் இணைத்துள்ள இரண்டு கட்டுரைகளும், அந்த இரண்டு கட்டுரைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகளின் மூலமும் இங்கே……..தோழர்.நீராஜின் சில கருத்துகளோடு நான் முரண்படுகின்ற பொழுதிலும் இந்த நான்கு கட்டுரையின் பேசு பொருளுடன் நான் முரண்படவில்லை..

1)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 1       http://www.puthinamnews.com/?p=19418

2)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 2  http://www.puthinamnews.com/?p=19560

3)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 3  http://www.puthinamnews.com/?p=19738

4)உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் – பாக‌ம் 4 http://www.puthinamnews.com/?p=20094

Advertisements
  • Ana
  • மே 18th, 2011

  Who the hell are you? You are amazing.வாவ். இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் என்னைப் போல் ஒருவர் சிந்திக்கிறார் என்கிற பொழுது புல்லரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் எழுதி உலவவிடுங்களேன். தமிழ் தெரியாத புலம்பெயர்ந்த குழந்தைகளுக்குப் புரியவைக்கலாம்.

  • இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி செய்துகொண்டுள்ளேன் தோழர். அந்த அளவு ஆங்கில புலமை என்னிடம் இல்லாதது ஓர் குறை. நண்பர் ஒருவரிடம் கேட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழர்.

  • Ana
  • மே 18th, 2011

  உளவியல் புரியாமல் பலர் நடக்கும் போது கத்தவேண்டும் போல இருக்கும். எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். நான் எழுதிய போது எதுவுமே கோர்வையாக வரவில்லை. உங்கள் அளவுக்கு விபரமாக எழுதி இருக்க மாட்டேன் என்பது நிச்சயம். மனதில் தோன்றியதை அப்படியே நீங்கள் அறிந்து கொண்டது போல எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

  • srinivasan
  • நவம்பர் 18th, 2011

  உங்கள் முயற்சிக் , வாழ்த்துக்கள், நன்றி தோழர்

 1. நன்றி தோழர்.சிறீனிவாசன்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: