ஜூன், 2011 க்கான தொகுப்பு

Can I Have a Dream ?


 
  குழ‌ந்தைக‌ளின் உல‌க‌ம் மிக‌வும் அழ‌கான‌து, வ‌ண்ண‌ம‌ய‌மான‌து, பெரியவ‌ர்க‌ளின் உல‌க‌த்திலிருந்து முற்றிலும் மாறுப‌ட்ட‌ ஒன்று.  வீட்டில் பெற்றோர்கள் வளர்க்கும் விதத்தினால் குழ‌ந்தைக‌ள் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி ஒருவித‌மான‌ உள‌விய‌ல் தாக்குத‌லுக்கு உட்ப‌டுகின்றார்க‌ள். வீட்டில் ந‌ட‌க்கும் இந்த‌ சின்ன‌ உள‌விய‌ல் பிரச்சனையையே தாங்க‌ முடியாத‌ அந்த‌ பிஞ்சு நெஞ்ச‌ங்க‌ளை போர் எப்ப‌டி சிதைத்து மிக‌ நீண்ட‌ கால‌ உள‌விய‌ல் பாதிப்புக்கு உள்ளாகுகின்ற‌து என்ப‌தை சொல்வ‌து தான் Can I Have a Dream ? என்ற‌ குறும்ப‌ட‌ம். உள‌விய‌ல் ரீதியாக‌ ம‌ட்டும் அல்ல‌ போர் குழ‌ந்தைக‌ளை உட‌ல் ரீதியாக‌வும் பாதிக்கின்ற‌து. அவ‌ர்க‌ளின் அழ‌கான‌, வ‌ண்ண‌ம‌ய‌மான‌ உல‌க‌ம் போரினால் உருக்குலைகின்ற‌து. போரினால் குழந்தைகள் வ‌லிந்து பெரிய‌வ‌ர்க‌ளின் உல‌க‌த்தில் திணிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌து ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை. இது அந்த‌ குறும்ப‌டத்தை ப‌ற்றிய‌ க‌ட்டுரை, குறும்ப‌ட‌த்தை அனைவ‌ரும்(இதைப் படிக்கும் வாசகர்கள்) பார்த்திருப்பார்க‌ளா என்ப‌து ஐய‌மே….உங்க‌ளுக்காக‌ அந்த‌ குறும்ப‌ட‌த்தின் க‌தைச் சுருக்கம்….

 
 Can I Have a Dream ? எட்டு நிமிடங்களே ஓடக்கூடியது இக்குறும்படம்… படம் எவ்வாறு இருக்கும் என்பதை படத்தின் பெயர் வரும் காட்சியிலேயே தெளிவாக காட்டுகின்றார் இயக்குநர்…முதலில் I Have a Dream என்ற சொற்றொடர் வரும் சில நொடிகள் கழித்து I Have a Dream என்பதற்கு முன்னாக Can என்ற வார்த்தையும், இறுதியில் கேள்விக்குறியும் வரையப்படும். Can என்ற சொல்லை எழுத தொடங்கும் பொழுது ஒரு மெல்லிய சோக இசை பிண்ணனியில் கொடுக்கப்படுவது மனதை இரணப்படுத்துகின்றது. நிக‌ழ்கால‌த்திலிருந்து இற‌ந்த‌கால‌த்திற்கு செல்லும் க‌தை.

   தமிழ் வழிக்கல்வி புத்தகத்தில் வீட்டுப்பாடம் செய்யும் ஒரு சிறுமி…தனது வீட்டு சாளரத்தின் வழியாக அருகிலுள்ள மைதானத்தில் விளையாடும் பிள்ளைகளைப் பார்க்கின்றாள்…..அவள் செய்யும் வீட்டுப்பாடமானது நிகழ்காலச் சொற்களை இறந்த காலச் சொற்களாக மாற்றுவது (இருக்கின்றது…இருந்தது)….பின்னர், அந்த பாடப் புத்தகத்தின் கீழே ஒரு பிள்ளையின் கோட்டோவியத்தை வரைகின்றாள்…அதே போல எல்லா பக்கங்களிலும் சற்று இடைவெளி விட்டு அதே கோட்டோவியத்தை வரைகின்றாள்…புத்தகத்தின் பக்கங்களைச் சுழற்ற அந்த கோட்டோவியத்தில் உள்ள பிள்ளை ஓடுவது போல் உள்ளது. வானத்திலிருந்து ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்ட அந்த குழந்தை அச்சப்பட்டு மேலே பார்க்க இரண்டு காகங்கள் பறக்கின்றன..அச்சம் நீங்கி குழந்தை சற்று நிம்மதி அடைகின்றது.   நிகழ்காலத்திலிருந்த கதை அந்த பாடப்புத்தகத்தில் உள்ளது போல இறந்த காலத்திற்குச் செல்கின்றது…..இந்த பெண் ஒரு சிறு பெண் பிள்ளையை வரைகின்றாள். பின்னர் இரண்டு வீடுகள் நடுவில் சூரியன்…பின்னர் அந்த சூரியனை அழைத்துவிட்டு மேற்கில் வரைகின்றாள்..சூரியனை ஒரு மனிதனின் முகமாக சித்தரித்து அந்த முகம் சிரிப்பது போல வரைகின்றாள். பின்னர் அவளை விட சில வயது அதிகமான ஒரு பெரிய பையனும், வயது குறைந்த ஒரு சிறிய பையனும் வரைய, அவர்கள் அனைவரும் சேர்ந்து நொண்டி விளையாடுவதற்காக கட்டங்களை வரைகின்றார்கள். முதலில் அந்த பெரிய பையன் விளையாடுகின்றான், பின்னர் இந்த பெண் விளையாடுகின்றாள்…அவள் விளையாடும் பொழுது வானத்தில் எங்கிருந்தோ பறந்து வரும் ஒர் போர் விமானம் ஓர் குண்டை அந்த குழந்தைகள் விளையாடும் பகுதியில் போட்டுச் செல்கின்றது. அந்த குண்டு வீச்சில் இந்த பெண் கால்களை இழக்கின்றாள். இந்த காட்சி வரை இந்த பெண்ணின் முகத்தை மட்டுமே காட்டி வந்த இயக்குநர்..இப்பொழுது தான் அவள் உட்கார்ந்து இருப்பது இரு சக்கர வண்டி என்பதை காட்டுகின்றார். முன்னர் அவள் புத்தகத்தில் வரைந்த ஓடுவது போல இருந்த கோட்டோவியங்கள் எல்லாம் இப்பொழுது வீழ்ந்து கிடக்கின்றன…. அவ‌ள் த‌ன் தாயைப் பார்க்கின்றாள். தாய் அந்த குழந்தை இழந்த கால்ப்பகுதியில் கண்ணீர் மல்க உட்கார்ந்து இருக்கின்றாள்.

 கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர்களில் மட்டும் 60 இல‌ட்சத்திற்கும் அதிகமான‌ குழ‌ந்தைகள்  காயமடைந்து உள்ளார்க‌ள். இது நார்வேயில் உள்ள‌ குழ‌ந்தைக‌ளின் எண்ணிக்கையை விட‌ 6 ம‌ட‌ங்கு அதிகமாகும்.

MORE THAN 6 MILLION (6,000,000) CHILDRENS HAVE BEEN WOUNDED IN THE WAR DURING THE LAST 10 YEARS…. 6 TIMES AS MANY CHILDRENS AS IN NORWAY…..என்ற‌ வ‌ரியுட‌ன் ப‌ட‌ம் முடிவ‌டைகின்ற‌து…
…………………

     …போரினால் குழ‌ந்தைகளுக்கு ஏற்படும் உள‌வியல் பாதிப்பு அவர்கள் வளர்ந்த பின்னரும் கூட அவர்களை பாதித்துக் கொண்டே இருக்கும் என்பதை, வான‌த்தில் ஏதோ ச‌த்த‌ம் கேட்டு அச்ச‌ப்ப‌டும் அக்குழந்தை சில நொடிகள் அப்படியே அந்த வானத்தை பார்த்தப்படியே இருக்கின்றது, சில நொடிகள் கழித்து அந்த வானத்தின் வழியே இரு காகங்கள் பறந்துவருவதை பார்த்த பின்னரும் கூட அந்த குழந்தையின் அதிர்ச்சி நிலை இன்னும் நீங்கவில்லை என்பதை காட்சியின் மூலம் இயக்குநர் தெளிவாக கூறுகின்றார்.  நிக‌ழ்கால‌த்திலிருந்து I Have a Dream என்று தொட‌ங்கும் ப‌ட‌ம் Can I Have a Dream ? என்று கேட்ப‌திலிருந்தே ப‌ட‌த்தின் கால‌க‌ட்ட‌த்தையும், ப‌ட‌ம் செல்லும் திசையையும் இய‌க்குந‌ர் தெளிவாக்குகின்றார்.  மேலும் அந்த குழந்தையும் மற்ற குழந்தைகள் போல தானும் ஓடி விளையாட வேண்டும் என்று எண்ணும் ஆழ்மனவியல் எண்ண ஓட்டத்தையே அந்த சிறுமி சாளரத்தின் வழியே குழந்தைகள் விளையாடுவதை அடிக்கடி பார்ப்பதன் மூலமாகவும், கோட்டோவியங்கள் மூலமாக தான் ஓடுவதைப் போல கற்பனை செய்து பார்க்கும் காட்சியின் மூலமும் இயக்குநர் கூறுகின்றார். இறுதியில் கால் இழந்த அந்த சிறுமி நம்மை நோக்கி பார்க்கும் வலிகள் நிறைந்த அந்த பார்வை நம்முள்ளே ஊடுருவிச் சென்று பல்லாயிரம் கேள்விகளைக் கேட்கின்றது (அறிவார்ந்த நாகரீகமான சமூகமாக நம்மை நாமே கருதிக் கொள்ளும் நம்மிடம் எந்த ஒரு பதிலும் இல்லை). கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர்களில் மட்டும் 60 இல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌ குழ‌ந்தைக‌ள் போரினால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள் என்ப‌து எல்லாம் வெறும் புள்ளி விவ‌ரங்க‌ள் அல்ல‌.. ஒவ்வொரு குழ‌ந்தையின் காய‌மும்(ஊன‌மும்) அந்த‌ குடும்ப‌த்தின் வ‌லி என்பதையும், அந்த குழந்தைகளின் உள்மன வலிகளையும் இந்த‌ ப‌ட‌ம் முக‌த்தில் அறைந்து ந‌ம‌க்குச் சொல்கின்ற‌து.  இது போல போரினால் பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் சரியான உளவியல் சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும், இது அக்குழந்தைகளுக்கு பின்னாட்களில் மிகவும் உதவியாக இருக்கும்.  இவ்வ‌ள‌வு குழ‌ந்தைக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து எல்லாம் ஏதோ தெரியாம‌ல் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் அல்ல‌…எல்லாம் போர்களைப் புரியும் ஒவ்வொரு அரசாலும் திட்ட‌மிட்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வையே, இது போன்ற அரசுகளை எதிர்த்து போராடாமல் இருப்பதும் ஒரு வகையில் வன்முறையே…..

……….
இவ்வ‌ள‌வு நுணுக்க‌மாக‌ ஒரு குறும்ப‌ட‌த்தை இய‌க்கிய‌ தோழ‌ர்.த‌மிழ‌ம் சுபாசு அவ‌ர்க‌ளுக்கு என் சிரம் தாழ்ந்த வ‌ண‌க்க‌ங்க‌ள். திரைப்படத்தின் எந்த ஒரு அளவுகோலை கொண்டு நீங்கள் இந்த படத்தைப் பார்த்தாலும் இந்த படம் உங்கள் விமர்சனக்கத்திகளை எல்லாம் தாண்டி முதலிடத்தை வந்தடையும் என்பதில் எனக்கு எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.  இவ‌ரின் மற்றொரு படைப்பான‌ வ‌ன்னி எலி ப‌ட‌மும் பன்னாட்டு விருதுகளை வென்ற ஒரு முக்கிய‌மான‌ குறும்ப‌டமாகும். 
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

த‌ர‌வுக‌ள்:

1)http://www.tamilthai.com/?p=3193

Advertisements
Advertisements
%d bloggers like this: