ஜனவரி, 2012 க்கான தொகுப்பு

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள்….


            

கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம்  கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் கூட்டமைப்பின் அதிபரான மிக்கைல் கோர்பசேவிடம் கையளிக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. 1989 மே 1 ஆம் நாள் மீனவர்களும், பொதுமக்களும் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நடத்தியப் பேரணியில் காவல்துறை கண்முடித்தனமாகச் சுட்டதில் இக்னாதிசு என்பவர் உயிரிழந்தார். கூடங்குளம் அணு உலையின் ஒப்பந்ததாரரான சோவியத் கூட்டமைப்பு 1991 ஆம் ஆண்டு சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததால், 1991  ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை மக்கள் போரட்டம் ஓய்ந்து போனது. 2002  ஆம் ஆண்டிற்குப் பிறகு அணு உலைக் காட்டுமானப் பணி மெல்லத் தொடங்கியது போலவே, மக்கள் போராட்டமும் மெல்லத் தொடங்கி இன்று மூன்று மாவட்ட மக்களில் பெரும்பான்மையானோர் போராட்டகளத்தில் உள்ளார்கள்.

சாதி, மதத்தின் பெயரால் இப்போரட்டத்தைச் சீர்குலைக்க இந்திய அரசு முயன்று பயனளிக்காமல் போனதால், வெளிநாட்டில் இருந்து இவர்களுக்குப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பிப் போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவும், தமிழக மக்களிடையே குழப்பத்தை உருவாக்கவும் தொடர்ந்து  முயல்கின்றது. அரசின் கூற்றின் படி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்துப் பணம் வருகிறதென்றால், அந்நாடுகளின் பெயர்களை வெளியிட்டு, அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து “இந்திய நாட்டு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்ததற்காகக் கடும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? பின்னர் அந்நாடுகள் அளிக்கும் பதில் திருப்திகரமானதாக இல்லாதபட்சத்தில் அந்நாடுகளுடனான (அது வல்லரசாக இருந்தாலும்) தூதரக உறவுகளையும், பொருளாதார ஒப்பந்தங்களையும் துண்டிக்க இந்தியா ஆயத்தமா?”  ஏனெனில் அரசின் கூற்றின் படி அணு ஆற்றல் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றது.

               அப்படியிருக்க இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் நாடுகள் பற்றி இந்திய அரசு ஏன் இன்னும் கள்ள அமைதி காக்கின்றது? எதற்காக இந்தியாத் தயங்குகின்றது? மற்றுமொரு ஆயுதமாக‌த் தான் “தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடங்குளம் அணு உலை தேவை”, “கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும்” என்பது போன்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றது இந்திய அரசு. அர‌சு கூறும் “த‌மிழ‌க‌ வ‌ள‌ர்ச்சி”, “எல்லா வீடுகளுக்கும் த‌டைய‌ற்ற‌ மின்சார‌ம்” என்கிறப் பரப்புரைக‌ளின் உண்மைத் த‌ன்மையைப் ப‌ற்றிப் பார்ப்ப‌த‌ற்கு முன் சில‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைப் பார்ப்போம்.

அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டம்

அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டம்

    

     தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு உலைத் தேவை என்பது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் செயல். நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தியில் வெறும் 30 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 70 விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியிலிருந்து உற்ப‌த்தியாகும் மின்சார‌த்தை ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளுக்கு கொடுப்ப‌தை நிறுத்தினாலே த‌மிழ‌க‌ம் மின் உற‌பத்தியில் உப‌ரி மாநில‌மாக‌த் திக‌ழும். இதும‌ட்டும‌ன்றி மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் உள்ள (T&D Loss) தொழில்நுட்ப‌க் குறைபாடு கார‌ண‌மாக‌ மின்சார இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் இவ்விழ‌ப்பு 18%.  2010 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌த்தின் மொத்த‌ மின் உற்ப‌த்தி 10,214 மெகா வாட், இதில் 1,830 மெகா வாட் வீணாகியது. இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்கும் கீழாக‌க் குறைப்பதன் மூலம் கூட‌ங்குள‌ம் அணு உலைத் திட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டும்  405 மெகா வாட் மின்சார‌த்தை விட இரு மடங்கு மின்சாரம் ந‌ம‌க்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 1,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும்.

 
   த‌மிழ‌கத்தின் மின் தேவை ஆண்டிற்கு 9% என்ற அளவில் அதிகரிக்கின்றது. இந்த‌த் தேவையான‌ மின்சார‌த்தை  இந்திய அர‌சு காற்றாலை, உயிர்ம எரிபொருள், கதிரவன் ஒளி போன்ற‌ ம‌ர‌புசாரா மின் ஆற்றலில் பெற்றுக்கொள்ள‌லாம். ச‌ரி, த‌மிழ‌க‌ம் த‌ன்னிறைவ‌டைந்த‌ மாநில‌மாக‌ மாறிவிட்ட‌து, இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறையை யார் தீர்ப்ப‌து என்ற‌ கேள்வி உங்க‌ள் ம‌னதில் எழக்கூடும். இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறை 10 விழுக்காடு, ஆனால் மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் ஏற்படும் மின் இழ‌ப்பீட்டை 40%, அதாவது 1,80,000 மெகா வாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்தால்  72,000 மெகா வாட் மின்சார‌ம் தொழிற்நுட்ப‌க் குறைபாட்டினால் வீணாகின்ற‌து (இந்தியாவிற்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கும் நாடுகளில் இது 10 விழுக்காட்டிற்கும் கீழ்). இது த‌மிழ‌க‌ம், ம‌காராசுட்டிரா, குச‌ராத், ஆந்திர‌ப் பிர‌தேச‌ம், க‌ர்நாட‌காவில் உற்ப‌த்தியாகும் ஒட்டு மொத்த‌ மின்சார‌த்திற்குச் ச‌ம‌ம்.  இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்குக் கீழாக‌க் குறைத்த‌ல் மூல‌ம் எந்த வித புதிய மின்திட்டமும் தொடங்காமல் இன்னும் ஐந்து ஆண்டுக‌ள் இந்தியா மின் உற்ப‌த்தியில் த‌ன்னிறைவான‌ நாடாக‌த் திக‌ழும் (இந்தியாவின் ஆண்டு மின்தேவை அதிக‌ரிப்பு 3.6 விழுக்காடு). இந்த இழப்பீட்டை சரி செய்யாமல் புதிய மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது “ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது” போன்றது. எவ்வளவு முயன்றாலும் இந்தியாவினால் மின்பற்றாக்குறையை சரி படுத்தவே முடியாது. 

இந்தியாவில் சூரிய ஒளி வீச்சின் வரைபடம்(கிலோ வாட்/சதுர மீட்டர்)

இந்தியாவில் சூரிய ஒளி வீச்சின் வரைபடம்(கிலோ வாட்/சதுர மீட்டர்)

                                      இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும், ம‌ர‌பு சாரா எரி ஆற்றல்க‌ளான‌ காற்றாலையும், கதிரவன் ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் கதிரொளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா கதிரொளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணி நேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை கதிரவன் ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியையும் (வரைபடம் 1) கொண்ட இந்தியா,  தார்ப் பாலைவனத்தில் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கதிரவன் ஒளி மின் பண்ணையை வைப்பதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு  3,00,000 மெகாவாட். தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியில் கிடைக்கும் கதிரவன் ஒளியையும் முழுமையாகப் பயன்படுத்தி மின்சாரம் எடுத்தால், இந்தியா மின்சாரத் தன்னிறைவு அடைவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் இயலும். இந்திய அரசின் காற்றாலை மின்னுற்பத்திக் கூட்டமைப்பின் கணிப்பீட்டின் படி இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யமுடியும் (வரைபடம் 2) – இந்தியாவில் காற்றாலை மின்னுற்பத்திகான வாய்ப்புகளை காட்டுகின்றது ( http://www.inwea.org ).  ஆனால் இந்தியா 14,500 மெகாவாட் மட்டுமே (இதில் 35 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது), இதுமட்டுமின்றி உயிர்ம எரிபொருளில் இருந்து 21,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும், மேலும் மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துதன் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

                    இதை எல்லாம் விடுத்து பேரழிவு அணு  உலைக‌ளை இந்தியா நிறுவ‌த் துடிப்ப‌து ம‌க்க‌ளுக்காகவா? அல்ல‌து இந்திய‌, ப‌ன்னாட்டு பெரு முத‌லாளிக‌ளுக்காக‌வா என்ற‌ கேள்வி எழுகின்ற‌து. ஏனெனில் இந்த‌ அணு மின் உலைக‌ளுக்கான‌ யுரேனிய‌ இற‌க்கும‌திக்கான‌ 1,2,3 ச‌ட்ட‌த்திற்கு இட‌துசாரிக‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ ம‌றுத்த‌ பொழுது ப‌ல இல‌ட்ச‌ங்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு கைமாறி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டு  இச்ச‌ட்ட‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து க‌ண்கூடு. இந்தியாவில் கட்டப்படும்‌ புதிய‌ அணு உலைக‌ளுக்கான‌ ஒப்ப‌ந்த‌த் தொகையாக 1,40,000 கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்கின்றது. மேலும் அணு ஆற்றல் துறைக்கு இந்திய‌ அர‌சு ஆண்டிற்கு ப‌ல இல‌ட்ச‌ம் கோடிக‌ளை மானிய‌மாக‌க் கொடுத்து வ‌ருகின்ற‌து. எடுத்துக்காட்டாக கூடங்குளம் அணு உலையைக் கட்டுவதற்கு 7,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என திட்டமிடப்பட்டு 12,000 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக முதலில் கூறப்பட்டது, இதுவே பின்னர் 13,000, 14,000 கோடி ரூபாய் என அதிகரித்துக் கொண்டே உள்ளது. இறுதியாக 20,000 கோடி ரூபாய் வரை இது செல்லக்கூடும்.  40  ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அணு உலையை மூடுவதற்கு சற்றேறக்குறைய 40,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கொண்டால், இந்த அனுவுலைக்கு மட்டுமே 60,000 கோடி ரூபாய் செலவாகின்றது. இது மட்டுமின்றி அணு உலை செயற்படுவதற்காக ஆகும் செலவு, யுரேனிய எரிபொருளுக்காகும் செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு என எல்லாம் இருக்கின்றன. இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் அணு மின்சாரம் மலிவானதுதானா?

இந்தியாவில் காற்றுவீச்சின் அளவை காட்டும் வரைபடம்
இந்தியாவில் காற்றுவீச்சின் அளவை காட்டும் வரைபடம்

             

மேலும் கூடங்குளத்தில் அணு உலை கட்டக்கூடாது என்று முதலில் இரசியா கூறியுள்ளது. இதற்கான காரணம் அந்த நிலத்தின் கீழே வெற்றுக் குழிகள் உள்ளன, இந்த நிலத்தின் பாறை உறுதியானது அல்ல, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் விட இது போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல போபாலில் ஏற்பட்டது போல மனிதத் தவறுகளினாலும் அணு உலையில் நேர்ச்சி (விபத்து) ஏற்படக்கூடும். எல்லாவற்றிலும் தான் ஆபத்து உள்ளது எனச் சிலர் கூறுகின்றார்கள், அவர்களுக்கு அணு உலையினால் ஏற்படும் பேரழிவுகள் பற்றித் தெரியவில்லை. அண்மையில் ஏற்பட்ட புகுசிமா விபத்தின் காரணமாக ஏற்பட்டக் கதிர்வீச்சு உலகம் முழுவதும் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.(1) மேலும் அணு உலை விபத்து ஏற்படும் பொழுது பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறப்பது மட்டுமல்லாமல், இந்தத் தாக்கம் தலைமுறை தலைமுறையாக மக்களை இலட்சக்கணக்கில் கொல்லும். இதுமட்டுமின்றி அணு உலைகள் செயற்படும் பொழுது தொடர்ச்சியாக உமிழும் கதிர்வீச்சினால் அணு உலையைச் சுற்றி வாழும் மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும், இதனால் அவர்கள் இறக்கக்கூடும், அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு அணு உலையினால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சே காரணம் என அணு ஆற்றல் துறை ஒப்புக்கொண்டுள்ளது (2). அதுமட்டுமின்றி அணுக் கழிவுகள் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளியிடும்.

    இறுதியாக  வளர்ச்சி பற்றிய ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் காணாமல் போயுள்ளது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 விழுக்காடு விவசாய நிலம் காணாமல் போயுள்ளது (3). விவசாயத்திகு மின்சாரம் சரியாக வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும். சிறு, குறு தொழிலகங்களுக்கு பகல் வேலை நேரத்தில் வெறும் மூன்றுமணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது. இதனால் பல தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் இதே நேரத்தில்  தமிழகத்தில் ஆண்டிற்கு 9.21% அன்னிய மூலதனம் உள்ளே வந்து கொண்டிருக்கின்றது (4), அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது. கூடங்குளம் போன்ற திட்டங்களினால் கிடைக்கும் 405 மெகாவாட் மின்சாரம் கூட அவர்களுக்குத் தானே தவிர, தமிழக விவசாயிகளுக்கோ, சிறு தொழிலகங்களுக்கோ, வீடுகளுக்கோ அல்ல.

கூடங்குளம் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்கள், உலக ஏகாதிபத்தியங்கள் என பல மறைமுக எதிரிகளை எதிர்கொண்டு நம்முடைய இயற்கை வளங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போராடி வருகின்றார்கள். இந்த நிலையில் முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் கைகளை வலுப்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவான குரல்களைத் தொடர்ந்து வெளிபடுத்துவதும் தான், அத்தோடு இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மின்னுற்பத்திக்கான ஒரே வழி பேரழிவை ஏற்படுத்தும் அணு உலை தான் என்ற மாயையலிருந்து மீட்டு காற்றாலை, கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத மரபு சாரா எரிஆற்றல்களின் மூலம் மின்னுற்பத்தி செய்ய நெருக்குதலுக்கு உள்ளாக்குவதும் தான்.

மக்கள் போராட்டம் ஓங்குக !!!

நற்றமிழன்.ப

தமிழர்ப் பாதுகாப்பு இயக்கம் (சேவ் தமிழ்சு)

தரவுகள்:

1) http://www.globalresearch.ca/index.php?context=va&aid=28714

2) http://www.dnaindia.com/mumbai/report_dna-investigations-deaths-confirm-cancer-risk-near-n-reactors_1637359#comments

3)http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:4334

4) http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu

 

கீற்றில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

நன்றி. கீற்று

Advertisements

இந்திய‌ இராணுவ‌ம் மக்களுக்கு செய்த அளப்பறிய‌ சேவைக‌ள்


     

         இந்தியா குடியரசு நாளில் (அதாவது இந்தியா மக்களாட்சியாகிய நாளில்) இந்திய இராணுவம் 1947ஆகத்து 15லிருந்து இந்திய மக்களுக்கும், அண்டை நாடுகளிலுள்ள மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

  • உதவுகிறேன் என்ற பெயரில் காசுமீர் நாட்டிற்குச் சென்று இன்னும் அந்த நாட்டை விட்டு நகராமல் அந்த நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை அனாதையாக்கி வருகின்றது. காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து 100க்கும் அதிகமான சிறுவர்களும், இளைஞர்களும் இறந்தார்கள் என்பதை இந்திய ஊடகங்களே கூறியுள்ளன.

            கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

            விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969                   

            கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

            வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

            அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

            பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912

                                                            பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும், காசுமீரிகள் இராணுவத்தால்         கொல்லப்படுகின்றார்கள் என்ற உண்மை அண்மையில் வெளியானது. (1,2)

  • முதலில் பண்ணையார்களுக்கு எதிராக தொடங்கிய விவசாயிகளின் புரட்சி, அடக்குமுறை ஹைதராபாத் நிசாமிற்கு எதிராகவும் தொடர்ந்தது. இந்த போராட்டம் 1947லிருந்து 1951வரை நடந்தது. 1951ல் பண்ணையார்களை எதிர்த்து போராடிய பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களைத் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது இந்திய இராணுவம்.(3)
  • இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மேகலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இராணுவ அதிகார சிறப்பு சட்டம் 1958 (AFSPA 1958) மூலம் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் கொன்று, கைது செய்து வருகின்றது. பெண்களை கற்பழித்து வருகின்றது. இந்த மாநிலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகளை அறிய உங்களுக்கு இரு நிகழ்வுகள் போதுமானது. 1)எங்கள் குழந்தைகளை விட்டுவிடுங்கள், எங்கள் சதைகளை எடுத்துக்கொள்ளுங்கள், எங்களை கற்பழியுங்கள் என்று இராணுவ முகாம் முன்பு நிர்வாணமாக போராடினர் மணிப்பூர் தாய்கள். 2) மனோரமா என்ற பெண்ணை இராணுவம் கற்பழித்து கொன்றதை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார் ஐரோம் சர்மிளா.(4)
  • ஆழிப்பேர‌லை தாக்கிய‌ பின்ன‌ர் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ந்த‌ இராணுவ‌ம் இற‌ந்த‌ உட‌ல்க‌ளை நாங்க‌ள் அக‌ற்ற‌வோ, தொட‌வோ மாட்டோம் என்று சொன்ன‌து. அதை அன்றைய முத‌ல‌மைச்ச‌ர்.செய‌ல‌லிதா ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் க‌ண்டித்து பேசினார். அண்மையில் சென்னையில் தில்சன் என்ற சிறுவன் விளையாட்டு தனமாக இராணுவ குடியிருப்பினுள் நுழைந்த பொழுது சுட்டு கொன்றார் ஒரு இராணுவ வீரர்(4)
  • மத்திய இந்தியாவில் பன்னாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடும் பழங்குடிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனரான இராம் மோகனனின் கூற்றை அப்படியே தருகிறேன்.

” இராணுவத்தின் மேல் உள்ள கொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு, ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்களைப் பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று.”

  • காங்கோவில் ஐநா அமைதி பாதுகாப்பு படையில் இருந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த பல பெண்களை கற்பழித்துள்ளார்கள். பல நாடுகள் இராணுவமும், பன்னாட்டு ஊடகங்களும் இருக்கும் பொழுதே இப்படி செய்தவர்கள், ஊடகங்களும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மறந்து போன இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், காசுமீரில் என்ன செய்வார்கள் என்று நான் விளக்க தேவைஇல்லை.(5)
மனிதர்களை இந்திய இராணுவம் இப்படிதான் விலங்கினும் கீழாக நடத்துகின்றது

மனிதர்களை இந்திய இராணுவம் இப்படிதான் விலங்கினும் கீழாக நடத்துகின்றது

  • வங்காள தேசத்தில் விடுதலைக்காக போராடிய உண்மையான குழுக்களை அழித்தொழித்து.
  • அமைதி படை என்ற பெயரில் ஈழத்தில் நுழைந்த இந்திய இராணுவம் மருத்துவமனைகள் என்று கூட பாராமல் குண்டு வீசியது, பொதுமக்களின் மேல் டாங்கிகளை ஏற்றியது என பல வன்முறைகளை செய்தது, இவையெல்லாம் சாத்தானின் படைகள் என்று நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது மட்டுமின்றி, எல்லா தொழில்நுட்ப உதவிகளும் செய்தது.
  • அதுமட்டுமின்றி இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது, இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்ட போதும் உலகின் மூன்றாவது பெரிய கடற்படை வேடிக்கை பார்த்ததே தவிர மீனவ குடிமக்களை காப்பாற்றவில்லை. சில நாட்களுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் மாடு திருடியதாக கூறி ஒருவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் காட்சி வெளியாகியுள்ளது. மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் இக்காணொளியை பார்க்கவும்.

          http://www.youtube.com/watch?v=e5kBqutAcio

  • இந்தியா விடுதலை பெற்று விட்டதாக கூறிக்கொண்டாலும் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடக்கியாள வகுத்த அதே காலனிய ஆதிக்கச் சட்டங்களைக் கொண்டே இயங்கிவருகின்றன.

நற்றமிழன்.ப

தரவுகள்:

1)   https://natramizhan.wordpress.com/2010/12/03/

2)   http://kashmir.wordpress.com/

3)   http://en.wikipedia.org/wiki/Telangana_Rebellion

4)   http://www.indianexpress.com/news/army-must-handover-person-responsible-for-di/813657/

5)   http://www.outlookindia.com/article.aspx?277848

மாட்டுப் பொங்கல்


 

என்னை குளிப்பாட்டுகின்றான்
எனது கொம்புகளுக்கு
வர்ணம் தீட்டினான்
சூரியக் கதிரின் ஒளியிலே
எனது கொம்புகள் பளபளப்பதாக‌
பீற்றிக்கொள்கின்றான்
இயற்கை இவனுக்கு
பிடிக்காத ஒன்று
ஐயையோ வர்ணத்தின் மேல்
திருநீறும்(!) வைத்து விட்டான்
இன்று தான் இவன்
என்னை மாடாக பார்ப்பான்
மற்ற நாட்களில் ஒர்
எந்திரம் நான் அவனுக்கு
இறுதியாக கை கூப்பியபடியே
வருகின்றான்…. ஓட்டுக்
கேட்பானோ என்று
உள்ளூற பயம் எனக்கு…..
ஓ…. வணங்குகிறானாம்
என்னைக் கடவுளாக‌
எண்ணுகிறானாம்
எனது பிள்ளையையும், என்னையும்
தனியே கட்டிவைத்து
அழகு(!) பார்த்தவன் ………

உழவர் தினம்


 

 

 

 தரிசாய்ப் போன
நிலம்
இறந்து போன
நதியின் ஊடாக‌
விவசாயியின் நான்கு
பேர் பயணம்
“ஓ”வென்று ஓலமிட்டபடி
பின்னே ஓடி வருகின்றது
உழவர் தினம்…..

( உழவர் தினம் கொண்டாடுவோம் உழவர்களுடன்…..)

கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…………மொழியாக்கம் – நற்றமிழன்


                 ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனோநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

 
             கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த  ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்

  மொத்த அளவு(மெகா வாட்டில்) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000       2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்      1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும்  என கணக்கிடப்பட்டுள்ளது)     1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%)     540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்      405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின்  அளவு     305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்     610  

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக  அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

        

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும். 

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெகாவாட் குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை      700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள்      900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்    >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில்  உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல்  மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

                    

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன.  நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின்  மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும்  நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.

……………………………………………………….

வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா ????

நன்றி – சங்கர் சர்மா – மின் கொள்கை ஆய்வாளர்

நன்றி – Dia Nuke Org.

மூலப்பதிவு – http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

Advertisements
%d bloggers like this: