முதுகில் குத்தும் இந்திய அரசு ……


     பேச்சுவார்த்தை என்று வரவழைத்து விட்டு பின்னர் முதுகில் குத்துவது இந்திய அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும்பொழுது கொல்லச் சொல்லியது இந்த இந்திய அரசு, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை என்னால் கொல்ல இயலாது என்று கூறினார் செனரல்.அர்கரத்சிங். அதே போலவே மாவோயிசப் போராளிகள். ஆசாத்தையும் கிசன்ஜீயையும், அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே பின்னரங்கில் சுட்டுக்கொன்றது இந்த இந்திய அரசு என்ற உண்மையைத் தெகல்கா வார இதழில் வெளியான புலனாய்வுக் கட்டுரைகள் அம்பலப்படுத்தின.  ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மீனவர்களின், அறவழியிலான அனல்மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை இரவோடு இரவாக காவல்துறையை ஏவி சுட்டுத்தள்ளி போராட்டத்தை நசுக்கியது இந்திய அரசு, அதே போலவே கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது இப்பொழுது தங்களால் ”தேசபக்தி” வெறி ஊட்டப்பட்ட இந்துவெறி கும்பல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி, பொய்வழக்கு போட்டுத் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது இதே இந்திய அரசு. எல்லா போராட்டங்களையும் நாங்கள் முதுகில் தான் குத்துவோம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றது இந்த இந்திய அரசு.

     மக்களாட்சி (சனநாயகம்) என்ற வார்த்தைகூட தற்பொழுதுள்ள இந்திய அரசுக்குப் பிடிக்காத ஒன்று போல் தெரிகின்றது. தான் நினைத்த எதையும், யாரையும் பொருட்படுத்தாமல் செய்யும் சர்வாதிகாரத் தன்மை தான் இந்திய அரசின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகின்றது. இதையே தான் கூடங்குள அணு உலைப் போராட்டம் தொடர்பான அரசின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. மக்களின் முன்னால் பேச்சுவார்த்தை என்று பெயரளவில் ஒன்றை நடத்திக்கொண்டே பின்புறம் மிகவும் கேவலமான முறையில், முதலில் சாதியரீதியாக போராட்டத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்தது, அது தோல்வியைத் தழுவவே, அடுத்து மதரீதியான பிரிவினையைத் தூண்டிவிட்டு வகுப்புவாத கலவரங்களை உருவாக்க முயன்று அதுவும் தோல்வியைத் தழுவவே, கூடங்குளம் அணு உலை ”தேச வளர்ச்சிக்கு” முதன்மையானது என்று கூறி தேசபக்தி என்ற வெறியை மக்களுக்கு ஊட்டுகின்றது.

 

     தேசிய வளர்ச்சி என்பது வல்லரசுக் கனவுடன் தொடர்புள்ளது. ஆம், 50 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் இந்தியா, ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 42 விழுக்காட்டுக் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் இருக்கும் இந்த நாட்டில், ஒரு முதலாளிக்குக் கிடைக்கும் பலகோடி உரூபாய் இலாபத்தை மக்கள் கணக்கில் எழுதும் ”ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி” (GDP) என்ற பொய்யான புள்ளிவிவரத்தை வைத்து நாடே வளர்வதாகவும், அடுத்து வல்லரசு ஆகப் போகின்றது என்றும் ஆருடம் கூறுகின்றது அரசு. மக்களுக்குத் தேவை வல்லரசு அல்ல மக்கள் நலம் நாடும் நல்லரசே. இந்தியா ஊட்டும் இந்த தேசபக்தி வெறி அண்டை நாடான பாகிசுதானுடன் விளையாட்டில் கூட இந்தியா தோற்கக்கூடாது என்ற அளவிலிருந்து, இப்பொழுது இசுலாமியர்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற பார்வைக்கு நம்மை கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது. உலக அரசியலால் ஒடுக்கப்பட்டுள்ள பாகிசுதான் நாட்டு மக்கள் தங்கள் தேச அரசியல்வாதிகளால் மேலும் ஒடுக்கப்படுகின்றார்கள். இந்த ஒடுக்கப்பட்ட மக்களை எல்லாம் நாம் எதிரிகளாகத் தான் பார்க்கவேண்டும் என்று கற்பிக்கின்றது இந்திய தேசபக்தி வெறி. அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்குப் பின்னால் அந்நிய சக்தி இருக்கின்றது, அவர்களுக்கு ”வெளிநாட்டுப் பணம்” வருகின்றது என வழமை போல ஆதாரம் இல்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அவர்கள் மேல் சுமத்திப் போராடும் மக்களை தேச விரோதிகளாகச் உருவகப்படுத்துகின்றது (சித்தரிக்கின்றது) இந்தியா. இதன் மூலம் போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப் படுத்த முயன்று வருகின்றது, 

    இதன் ஒரு பகுதியாகத் தான் தேசபக்தி வெறி ஊட்டப்பட்ட இந்து வெறிக்கும்பல் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் காவல்துறை முன்பே தாக்கிய நிகழ்வு நடந்தது.  தாக்கியது மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே முதல் முறையாக, தாக்கிய இந்து வெறிக்கும்பலிடம் சென்று மாவட்ட நீதிபதி உங்களுக்கு ஏதாவது குறை இருக்கின்றதா எனக்கேட்டு, அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள நிகழ்வும் நடந்துள்ளது. ஆம், இனிமேல் உங்களை யாராவது வேண்டுமென்றே தாக்கி விட்டு, தடுத்த உங்களின் மீதும் புகார் கொடுத்து கைதும் செய்யக்கூடும்.

     மக்களின் முன்பு அணு உலைக்கு ஆதரவாக அரசின் முகவர்களான அப்துல்கலாம், மருத்துவர்.சாந்தா போன்றோர்களை வைத்து விளம்பரம் கொடுத்து வரும் அதே நேரத்தில், அரசு பின்புறமாக அணு உலை எதிர்ப்பாளர்களை நசுக்க எல்லாவிதமான கீழ்தரமான முயற்சிகளையும் செய்து வருகின்றது. இதன் முன்னுரையைத் தான் இந்து வெறிக்கும்பலின் தாக்குதலும், அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கும் சுட்டிக்காட்டுகின்றது.

   சரி, கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ‘அந்நிய நாட்டு’ உதவியுடன் நடப்பதாக அரசும், சில ஊடகங்களும் கூறுவது உண்மையென்றால் இறையாண்மை உள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்.

   அந்நாடுகளின் பெயர்களை வெளியிட்டு, அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து “இந்திய நாட்டு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்ததற்காக கடும் கண்டனம் தெரிவித்திருக்கலாம், அப்படி செய்து  அந்நாடுகள் அளிக்கும் விளக்கம் திருப்திகரமானதாக இல்லாத சூழலில் அந்நாடுகளின் தூதரக அதிகாரிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பியிருக்கலாம் அல்லது இந்தியாவின் அணுக் கொள்கைக்கு எதிராக செயல் படும் இந்நாடுகள் உடனான பொருளாதார ஒப்பந்தங்களை குறிப்பாக அணுஉலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்களை இரத்து செய்வதாக அறிவித்திருக்கலாம். உண்மையில் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக இருந்தால் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையின் மூலம் அதை தடுத்திருக்கலாம்.

  

   இதில் எது ஒன்றையும் செய்யாமல், வெறுமனே அந்நிய நிதி, அந்நிய சதி என்று கூறி, போராடும் மக்களின் மேல் ஒரு பகையுணர்ச்சியை மற்றவர்களுக்கு உருவாக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்து வருகின்றது இந்திய அரசு. இதோ நடுவண் அரசின் பாதையில் மாநில அரசும் நிபுணர் குழுவும் அமைத்துவிட்டது, , அடக்குமுறைக்குப் பெயர்போன தற்போதைய மாநில அரசும் நடுவண் அரசின் வழியிலேயே பேச்சுவார்த்தை என்று பெயரளவில் காட்டிக்கொண்டு பின்புற வேலைகளை செய்யத்தொடங்கிவிட்டது. கூடங்குளம் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மாற்றம், தமிழக அரசு இந்திய அணுஆற்றல் கழகத்துடன் பேரம் பேசுதல், தமிழகத்தில் எட்டு மணி நேர மின்தடை (பாமர மக்களுக்குக் கூடங்குளத்தைத் திறக்கச் சொல்லி அழுத்தம் கொடுப்பதற்காக) என்பவை இதில் சில.

     நந்திகிராமில் டாட்டா ஆலையை எதிர்த்து மக்கள் போராடிய போது நக்சல்கள் என்றும், ஒரிசாவில் போசுகோ ஆலையை எதிர்த்து மக்கள் போராடிய பொழுது சட்டத்திற்கெதிரானது என்றும் அடக்குமுறையை ஏவிய அரசு, கூடங்குளத்தில் வெளிநாட்டு சதி என்ற போர்வையில் அடக்குமுறையை ஏவக் காத்திருக்கின்றது. எல்லா மக்கள் போராட்டங்களிலும் அரசு ஒரே சூத்திரத்தையே பின்பற்றி போராட்டத்தை நசுக்குகின்றது. முதலில் போராட்டக்காரர்களை பிரிக்க முனைவது, இல்லையென்றால் போராடுபவர்கள் நக்சல்கள், தேச விரோதிகள் என்ற முத்திரைக்குத்தி பொதுமக்கள் என்ற மைய நீரோட்டத்திலிருந்து பிரித்து, பின்னர் அடக்குமுறையை ஏவி ஒடுக்குவது. அதே போல எளிய மக்களின் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் தொடர்ந்து வருகின்றது. கூடங்குள ஆதரவுப் பரப்புரையை தமிழக, இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்து, நாங்கள் அரசின் நான்காவது தூணல்ல அரசின் ஊதுகுழல்கள் என்று மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளன.

அணு உலையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும், அரசின் மோசடிகள் தொடர்பாகவும் தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும், மின் பற்றாக்குறை தொடர்பாக பாமர மக்களிடம் உள்ள ஐயங்களை போக்குவதன் மூலமாகவும், போராடும் மக்களின் கைகளை வலுப்படுத்துவோம்.

மக்கள் போராட்டம் வெல்க !!!

-நற்றமிழன்.ப

தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement)

 தரவுகள்:

1)   http://tamil.oneindia.in/news/2012/02/01/tamilnadu-case-filed-against-pushparayan-24-other-aid0175.html

இப்பதிவு கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

நன்றி. கீற்று

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: