ஏப்ரல், 2012 க்கான தொகுப்பு

சாப்ளின் என்றொரு மனிதன் ………….


              என் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று. இன்றுடன் அவனுக்கு 123 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வையும், வறுமையையும் அவனைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை நடிகன் மட்டுமல்ல, அவன் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளன் என்பதையெல்லாம் தாண்டி அவன் ஒரு உன்னதமான மனிதன். ஆம் ஹிட்லர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உலகின் பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி உலகை விழுங்கத் தொடங்கியிருந்த காலகட்டத்தில், ஹிட்லரை எதிர்த்து “ஒரு பெரிய சர்வாதிகாரி(The Grate Dictator)” என்ற தன் திரைப்படத்தின் மூலம் ஒரு தனி மனித போராட்டம் நடத்தினான். அந்த திரைப்படத்தில் இறுதிகட்டக் காட்சியில் கோயபல்சிற்கு தான் எழுதிய வசனங்கள் காட்டுகின்றது அவனது தீர்க்கதரிசனத்தையும், இன்றைய அரசுகளின் உண்மை நிலையையும், அதே போல மானுடத்தின் பாலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் பாலும் அவன் கொண்ட பேரன்பு ஹிட்லருக்காக அவன் எழுதிய இறுதி கட்ட காட்சி வசனத்தில் தெரிகின்றது. அந்த வசனத்தை உங்களுக்காக இங்கே தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றேன். இதோ…….

  

இன்றும் கூட பலர் ஹிட்லரின் படம் என்று சார்லி சாப்ளின் படத்தைப் பார்த்து நினைப்பதுண்டு....

இன்றும் கூட பலர் ஹிட்லரின் படம் என்று சார்லி சாப்ளின் படத்தைப் பார்த்து நினைப்பதுண்டு....

கோயபல்சு : சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற வார்த்தைகளெல்லாம் இன்று மக்களை நாம் ஏமாற்றுவதற்காக மட்டுமே. சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் போன்ற எண்ணங்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைய முடியாது. நமது செயல்பாடுகளுக்கு குறுக்கே இதுபோன்ற சிந்தனைகள் கொண்ட நாடுகள் வருவதால் அவர்களை நாம் நசுக்கி எறிய வேண்டும். எதிர்காலத்தில் எல்லா மனிதர்களும் அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒழுக்கமாக நடக்கவேண்டும். அதை யார் மறுக்கிறார்களோ அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள்.

 

   ஹிட்லர்: நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். மனித இனம்  என்பது அவ்வாறானதே. நாம் அடுத்தவர்களின் மகிழ்ச்சியினால் வாழ வேண்டுமே தவிர துன்பங்களினால் அல்ல. நாம் யாரையும் வெறுத்து ஒதுக்கக்கூடாது. இந்த உலகத்தில் எல்லோருக்கும் போதுமான இடம் இருக்கின்றது. அழகான இந்த பூமி மிகவும் உன்னதமானது. சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நாம் வாழ வேண்டும், ஆனால் நாம் வழி மாறிவிட்டோம். பேராசை மனிதனின் மனங்களை நஞ்சாக்கிவிட்டது.  பகைமை இந்த உலகத்தில் எல்லைகளை உருவாக்கி, நம்மை துயரப்படுத்தி, இரத்த ஆறுகளை ஓடவிட்டுள்ளது. நாம் மிக வேகமாக செல்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளோம், ஆனால் நம்மை நாமே ஒரு அறையில் அடைத்துவைத்து விட்டோம்.

ஆயிரம் வலிகளை நம்முள் கடத்தும் வலிமை நிறைந்த ஒரு காட்சி

இயந்திரங்கள் போதுமானதை விட அதிகமாக உற்பத்தி செய்து நம்மை இன்னும் அதிகமாக வேண்டும் என்ற நிலைக்குள் தள்ளிவிட்டுவிட்டன.  நம்  அறிவு நம்மை மிகவும் மோசமானவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் மிகவும் கடுமையானதாகவும், இரக்கமற்றதாகவும் உள்ளது. நாம் நிறைய யோசிக்கின்றோம், ஆனால் மிகவும் குறைவாகவே மற்றவர்களுக்காக கவலைப்படுகின்றோம். நமக்கு தேவை மனிதாபிமானமே அன்றி இயந்திரங்களல்ல. நமக்கு வேண்டியது இரக்கமும், மனிதமுமே அன்றி புத்திசாலித்தனமல்ல.  இந்த தகுதிகளெல்லாம் இல்லாத வாழ்க்கை மிகவும் வன்முறையானதாகவும், இருண்டதாகவும் மாறிவிடும். விமானங்களும், தொலைக்காட்சிகளும் நம்மை மிகவும் நெருங்கியவர்களாக மாற்றிவிட்டது. இந்த கண்டுபிடிப்புகளின் உண்மையான நோக்கமான மனிதனிடம் உள்ள நல்ல குணங்கள் காணாமல் போய்விட்டதை அறிந்து கதறுகின்றது. இவை உலகலாவிய சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் நம்மிடம் வேண்டி நிற்கின்றன.

   இப்பொழுதும் கூட நான் பேசுவது பல கோடிக்கணக்கான மக்களை சென்றடைகின்றது. கோடிக்கணக்கான நம்பிக்கையற்ற ஆண்களை, பெண்களை, குழந்தைகளை சென்றடைகின்றது. மனிதனை சித்தரவைதை செய்யவும், அப்பாவி மக்களை சிறைப்படுத்தும் இந்த அமைப்பு முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். எவருக்கெல்லாம் எனது குரல் கேட்கின்றதோ, உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன் “நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்”. நம் மீது இன்று படர்ந்துள்ள துயரம் கடந்து போகும் ஒன்று. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை தடுக்கும் மனிதர்களின் பேராசை மறைந்து போகும். மனிதர்கள் கொண்ட வெறுப்புகள் ஒரு நாள் மறையும், சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள். மக்களிடமிருந்து அவர்கள் பரித்துக்கொண்ட அதிகாரம் மீண்டும் மக்கள் கைகளுக்கே திரும்பும், மனிதன் இறக்கும் வரை விடுதலை தாகம் தணியாது.

இயக்குநராக....

இயக்குநராக....

  

சிப்பாய்களே உங்களை சர்வாதிகாரிகளிடம் கையளிக்காதீர்கள். அவர்கள் உங்களை அடிமைப்படுத்தி, நீங்கள் என்ன யோசிக்க வேண்டும், உணர வேண்டும் என்று உங்களுக்கு கூறுவார்கள், உங்கள் தசைகளைப் பிழிந்து வேலை வாங்குவார்கள். அவர்கள் உங்களை ஒரு ஆட்டுமந்தையைப் போல, துப்பாக்கியில் போடப்படும் இரசாயனதைப் போல மட்டுமே நடத்துவார்கள். உங்களை இதுபோன்ற செயற்கையான மனிதர்களிடம் ஒப்படைக்காதீர்கள். இயந்திரத்தனமான மூளையையும், இதயத்தையும் கொண்ட இயந்திர மனிதர்களே. நீங்கள் இயந்திரங்கள் அல்ல, நீங்கள் ஒரு ஆட்டுமந்தையல்ல. நீங்கள் மனிதர்கள். உங்கள் இதயத்தில் மனிதத்தன்மையின் மீதான காதல் உள்ளது. நீங்கள் யாரையும் வெறுக்க மாட்டீர்கள். அன்பே இல்லாதவர்கள் தான் மற்றவர்களை வெறுப்பார்கள். அன்பில்லாத, செயற்கையான வெறுப்பு அது.

    சிப்பாய்களே மனிதனை அடிமைப்படுத்துவதற்காக போராடாதீர்கள், விடுதலைக்காக போராடுங்கள். கடவுளின் அரசு மனிதனுக்குள்ளே தான் இருக்கின்றது, ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு கூட்டத்திடமோ அல்ல, நம் எல்லோரிடமும் அது இருக்கின்றது, மக்களாகிய உங்களிடமே எல்லா ஆற்றலும் இருக்கின்றது. இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல், மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல். இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும், அழகாகவும், ஒரு உன்னதகரமான கண்டுபிடிப்பாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் மக்களாகிய உங்களிடமே இருக்கின்றது. சனநாயகத்தின் பெயரால் அந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்துவோம். ஒன்றாக இணைந்து ஒரு புதிய உலகிற்காக போராடுவோம்.

   ஒரு நாகரிகமான உலகம், அந்த உலகம் மக்களுக்கு உழைப்பதற்கான வாய்ப்பையும், எதிர்காலத்தையும், ஓய்வுக்கால பாதுகாப்பையும் கொடுக்கக்கூடியது. இவற்றை எல்லாம் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதிகளுடன் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையே நம்மிடம் கூறினார்கள். அவர்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. கண்டிப்பாக நிறைவேற்றவும் மாட்டார்கள். சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொண்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்துவார்கள். இந்த வாக்குறுதிகளை எல்லாம் நாமே நிறைவேற்றப் போராடுவோம், உலகை விடுவிக்க போராடுவோம், பேராசையினாலும், வெறுப்பினாலும் உருவாக்கப்பட்டுள்ள தேச எல்லைகளை எல்லாம் தகர்த்தெறிவோம். இந்த முறை ஒரு உன்னதமான காரணத்திற்காக போராடுவோம். இந்த உலகத்தில் அறிவியலும், வளர்ச்சியும் எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். சிப்பாய்களே சனநாயகத்தின் பெயரால் எல்லோரும் ஒன்றிணைவோம் !

நற்றமிழன்.ப

சார்லியின் அந்த உன்னதமான உரைவீச்சு இங்கே:

 http://www.youtube.com/watch?v=QcvjoWOwnn4&feature=related

Advertisements

கூடங்குளமும் தமிழக அரசின் வியூகமும்


கூடங்குளத்தில் அணு உலை கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பொழுதிலிருந்தே தொடங்கிய அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ‘கூடங்குளத்தை இழுத்து மூடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஏழு மாதங்களாக உச்சத்தை அடைந்தது. இதில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக கூடங்குளத்தை இழுத்து மூடவும் செய்தனர் போராடும் மக்கள். இந்நிலையில் தான் தமிழக அரசு மார்ச் 19 அன்று கூடங்குளம் அணு உலைக்கு ஒப்புதல் கொடுத்தது. இதற்கு சில வாரங்கள் முன்பாகவே கூடங்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு அதிகார வர்க்கத்திற்கு ஏற்றவர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூடங்குளம் சென்று வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர்.

koodankulam_police_623

அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் முன்னரே போராட்டக்குழுவைச் சேர்ந்த மக்களை கைது செய்யும் படலம் தொடங்கியது. 11 பேரின் மேல் இந்திய ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தது, தேசத் துரோகம், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. மீதமுள்ள 184 பேரின் மேல் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஒன்றுகூடுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 43 பேர் பெண்கள், இரண்டு பேர் பள்ளி மாணவிகளாவர். மேலும் இங்கு 144 தடையுத்தரவும் போடப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றிய கிராமங்கள் ஒவ்வொன்றும் தனி காவல்படையினால் சுற்றி வளைக்கப்பட்டு கிராமங்களுக்கு இடையிலான தொடர்பும், பிற இடங்களைச் சேர்ந்தவர்கள் இக்கிராமங்களுக்குள் நுழைவதும் தடுக்கப்பட்டது. மேலும் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்கள் கூட இக்கிராமங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடலோர பகுதிகள் என்பதால் அங்குள்ள நிலத்தடி நீரை குடிக்கமுடியாது. அங்கு வாழும் மக்கள் வெளியிலிருந்து வரும் நீரையே குடித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் தடுக்கப்பட்டது அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாக அமைந்தது. மேலும் 3,000த்திற்கும் அதிகமான குழந்தைகள் இக்கிராமங்களில் உள்ளனர். இவர்களுக்கான உணவான பால் கூட அங்கு உள்ளே அனுமதிக்கப்படாதது, நம்மை மனித நேய கோரிக்கைகளை நோக்கித் தள்ளியது.

முன்னர் போராட்ட களமாக இருந்த கூடங்குளம் அணு உலை இப்பொழுது முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கூடங்குளத்தை இழுத்து மூடு என்ற முன்னைய கோரிக்கையில் இருந்து, அரசு மனித நேய கோரிக்கைகளை எழுப்ப வைத்துள்ளது. நமது கவனம் முழுவதையும் இடிந்தகரை, அதைச் சுற்றிய பகுதியில் மட்டும் இருக்குமாறு காவல்துறையின் வியூகம் அமைந்துள்ளது. ஆம், அதற்காகத் தான் பால், குடிநீர், உணவு போன்ற அடிப்படை பொருட்களை அங்கு தடை செய்தது. மேலும் ஆயிரக்கணக்கில் அங்கு காவல்துறையைக் குவித்து எந்நேரமும் காவல்துறை வன்முறையை ஏவலாம் என்ற நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தான் ஊடகங்களை நேற்று(21 மார்ச்) மதியம் முதல் இடிந்தகரை பகுதியினுள் காவல்துறை அனுமதிக்கத் தொடங்கியது.

காவல்துறைக்கு வன்முறையை ஏவும் எண்ணம் இருந்தால் ஊடகங்களை உள்ளே அனுமதித்திருக்காது. காவல்துறையின் வியூகத்தின்படி குறைந்த பட்சம் இன்னும் ஒருமாத காலம் இப்பொழுது இருக்கும் அதே எண்ணிக்கையில் காவல்துறை கூடங்குளத்திலும், இடிந்தகரையைச் சுற்றிய பகுதிகளிலும் இருக்கும். இப்பொழுது அணு உலையின் பராமரிப்பு பணிகளே நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் இயங்கத் தொடங்கியதும் காவல்துறை இடிந்தகரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும். கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள காவல்துறை அணு உலை இயங்கத் தொடங்குவதிலிருந்து குறைந்த பட்சம் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் வெளியேறக்கூடும்.

koodankulam_people_615

கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் வரை காவல்துறை நமது பார்வையை இடிந்தகரை பகுதியிலேயே வைத்திருக்க முயல்கின்றது. குடிநீர், பால், உணவு போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் அம்மக்களுக்கு கிடைக்கச் செய்ய இயலாததன் மூலம் காவல்துறை இந்நிலையை நீடிக்க இயலும். நாமும் உயிர் தொடர்பான பிரச்சனை என்பதால் இடிந்தகரையில் மட்டுமே நம் கவனத்தை வைத்திருப்போம். அணு உலை தொடங்கிய பின்னர் அதை போராடி நிறுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனை மனதில் கொண்டே காவல்துறையும், அரசும் செயல்பட்டு வருகின்றது.

பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தவிர தமிழக அளவில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். அணு உலை எங்களுக்கு வேண்டாம் என்று போராடியதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை நாளை நம்மை நோக்கியும் திரும்பும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சனநாயகத்தின் இறுதி மூச்சு இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இடிந்தகரை மக்களின் உயிர்வாழும் உரிமையை மீட்டெடுக்கும் அதே வேளையில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையையும் நம் மனதில் நாம் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் இவ்வளவு ஆண்டுகளாக மக்கள் அங்கு போராடியததற்கான பொருள் இல்லாமல் போய் விடும்.

மக்கள் போராட்டம் ஓங்குக…..

– ப.நற்றமிழன்

இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் முன்னரே வெளிவந்துள்ளது.

நன்றி – கீற்று.

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக எழும் இந்தியா ……


கூடங்குளத்தில் அடக்குமுறையை தமிழக அரசு செலுத்த தொடங்கிய அன்றிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திவருகின்றன. அப்போராட்டங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பே இக்கட்டுரை….

கேரளாவில் உள்ள திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், பையனூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை கேரளாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும், மற்ற இயக்கங்களும் நடத்தின. இதில் திருச்சூரில் நடந்த போராட்டத்தில் அங்கு தங்கியிருந்த மனித உரிமைப் போராளியும், மருத்துருவமான திரு.பினாயக் சென் அவர்களும் பங்கு கொண்டார்(1).

மகாராசுட்ராவில் உள்ள பூனே நகரில் உள்ள லோகயாத் என்ற இயக்கம் முதலில் இருந்தே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர்கள் நடத்திய கருத்தரங்கும், முல்லைத்தீவு சாகா ஆவணப்படம் திரையிடலும் நினைவு கூறத்தக்கது.   ஜெய்தாப்பூர் அணு உலைக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை 23 மார்ச் அன்று இவர்கள் புனேவில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், இடிந்தகரையில் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் ஒரு நாள் அடையாளப் பட்டினி போராட்டத்தை நடத்தினர். இதே நாளில் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய மக்கள் இயக்க கூட்டமைப்பும் உண்ணாவிரதம் நடத்தியது. (2)

 

அதுபோலவே கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. கடந்த செவ்வாய் கிழமையன்று(மார்ச் 20) கர்நாடகாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும், இயக்கங்களும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும், கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்(3). இதனையடுத்து மார்ச் 24-அன்று பன்னப்பா பூங்காவில் ஒரு நாள் அடையாளப் பட்டினி போராட்டமும், மக்கள் ஆதரவு கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இந்த பத்திரைகையாளர் சந்திப்பில் இக்கூட்டமைப்பில் உள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மக்கள் சனநாயக முன்னணி(PDF), புதிய சோசலிச மாற்று (New Socalist Alternative) போன்ற இயக்கங்களும், மேலும் சில மனித உரிமை அமைப்புகளும் கலந்து கொண்டு கூடங்குளத்தின் இன்றைய நிலையையும், இடிந்தகரை மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் கூறினர், இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் கூறினர்.

      மார்ச் 25- அன்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), கர்நாடக தமிழ்  மக்கள் இயக்கம், சேவ் தமிழ்சு இயக்கம், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பெங்களூரில் உள்ள டவுன் ஹால் முன்பு நடைபெற்றது. இதில் மைசூரில் இருந்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரான திரு.இலட்சுமி நாராயணன் அவர்களும், மேலும் சில நண்பர்களும் வந்து கலந்து கொண்டனர்.  இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள். (4,5)

1)   கூடங்குளம் அணு உலையை மூடு, கூடங்குளம் அணு உலையை திறக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப்பெறு.

2)   இடிந்தகரை, கூடங்குளம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான காவல்துறை, அதிரடிப் படை, துணை இராணுவத்தினரை வெளியேற்று.

3)   மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான குடிநீர், பால், உணவுப் பொருட்களும், மற்ற பொருட்களும் இடிந்தகரை அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் செல்வதற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கு.

4)   மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்.

5)   இராதாபுரம் தாலுக்காவில் உள்ள 144 தடையுத்தரவை திருமப்பெறு.

 என்ற கோரிக்கைகளை மையாகக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்தூர் நகரில் உள்ள ஐ.ஐ.எம் கல்லூரி மாணவர்கள் அப்துல் கலாமிற்கு கருப்பு கொடி காட்டியுள்ளார்கள். (6) தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில்  மஹசே விருது பெற்ற சந்தீப் பாண்டே தலைமையில் ஏழு நாள் தொடர் உண்ணாவிரத்ததை இன்று(மார்ச் 26) தொடங்குகிறார்கள் . பிரபல ஆவணப்பட இயக்குனர். ஆனந்த் பட்வர்த்தன் தலைமையில் கண்டன போராட்டம் தாதர் தொடர்வண்டி நிலையம் அருகில் இன்று மாலை(மார்ச் 26) 5 மணிக்கு நடைபெற இருக்கின்றது.

ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பதிவானவை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள போராட்டங்கள், இவற்றில் எல்லாம் பதிவாகாமல் நாள்தோறும் பல போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றுவருகின்றன. இடிந்தகரை மக்களுக்கு தோள் கொடுப்போம், மக்கள் போராட்டத்தை வென்றெடுப்போம்.

ஒரு ஊடகத்திற்கு இக்கட்டுரையை அனுப்பியிருந்தால் இதை வெளியிட தாமதமாகிவிட்டது.

தரவுகள்:

1)   http://www.binayaksen.net/2012/03/dr-binayak-sen-flags-off-antinuclear-march/

2)   http://www.newsalai.com/2012/03/blog-post_3705.html

3)   http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/citizens-lit-candles-in- solidarity-with-koodankulam-people?redirect=/web/guest/india

4)      http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article3224379.ece

5)      http://www.deccanherald.com/content/237178/protest-against-kudankulam-plant.html

6)      http://www.newsalai.com/2012/03/blog-post_5530.html

Advertisements
%d bloggers like this: