சேதன் பகத்தும், ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களும்…..
ஐ.ஐ.டி-யில் நுழைய இதுவரை JEE (Joint Entrance Exam)என்ற தேர்வு வைக்கப்பட்டிருந்தது. இதே போல NIT (Earlier called as Regional Enginerring college), AIEEE என்று தனித்தனி தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளும் அந்தந்த கல்லூரிகளில் நுழைவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்றையும் ஒன்றாக்கி ஒரே நுழைவு தேர்வாக பொது நுழைவு தேர்வு (CET- Common Entrance exam) என்ற பெயரில் கபில் சிபில் மாற்றினார், மேலும் பனிரென்டாம் வகுப்பு அல்லது PUC 2nd year-ல் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் ஒரு பகுதியும், பொது நுழைவு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி . போன்ற கல்லூரிகளில் நுழைய அடிப்படையான ஒன்றாக மாற்றினார். இதற்கு முன்னர் பனிரென்டாம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஐ.ஐ.டி-யினால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஐ.ஐ.டி படிப்பவர்கள் இதுவரை JEE என்ற நுழைவு தேர்வுக்காக மட்டுமே பனிரெண்டாம் வகுப்பின் தொடக்கத்தில் இருந்தே படித்து எழுதி வருகின்றார்கள். இப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், மேலும் இதுவரை ஐ.ஐ.டிக்கான மாணவர்களை உற்பத்தி செய்த கோச்சிங் சென்டர்கள் மதிப்பிழந்து, புதிய கோச்சிங் சென்டர்கள் உருவாகும்…
இந்த புதிய முறையை தற்பொழுது ஐ.ஐ.டி கான்பூர் எதிர்த்து 2013ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை தாங்களே நடத்தப்போவதாக கூறியுள்ளனர். ஐ.ஐ.டி மும்பையும், தில்லியும் கான்பூர் வழியை பின்பற்றலாம், ஆனால் ஐ.ஐ.டி மும்பை, தில்லியின் இறுதி முடிவுகள் சூலை தொடக்கத்தில் நடக்கும் ஐ.ஐ.டி செனட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும். ஐ.ஐ.டி கான்பூர் இதை எதிர்ப்பதற்கான காரணமாக கூறுவது JEE தேர்வு முறையில் மிகத்திறமையான மாணவர்கள் மட்டுமே நல்ல மதிப்பெண் எடுத்து ஐ.ஐ.டியில் நுழைய முடியும், புதிய முறையின் மூலம் தகுதி குறையும்… மீதமுள்ள ஐ.ஐ.டி சென்னை, ரூர்க்கி போன்ற ஐந்து ஐ.ஐ.டிகளும் கபில் சிபிலின் புதிய முறையை ஏற்றுக்கொண்டுள்ளன…
“பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணில் மூன்றில் ஒரு பங்கு செய்முறை பயிற்சிக்கு செல்லும், இந்த மதிப்பெண் மாணவனைப் பற்றிய ஆசிரியிரின் அளவீட்டை பொறுத்தது, இதனால் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை ஐ.ஐ.டிக்கான தகுதிகளில் ஒன்றாக சேர்க்கக்கூடாது என்று சேதன் பகத் கருத்து கூறியுள்ளார். செய்முறை பயிற்சிக்கான மதிப்பெண் மாணவன் அந்த செய்முறைத் தேர்வை எப்படி எதிர்கொண்டுள்ளான் என்பதை பொறுத்து தான் இருக்க வேண்டுமே தவிர, மாணவன் பற்றிய ஆசிரியரின் மதிப்பீட்டைக்கொண்டு மதிப்பெண் கொடுப்பது தவறானது, இதைக் கண்டிக்காத சேதன் பக்த், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை ஐ.ஐ.டி.கான தகுதிகளில் ஒன்றாக சேர்க்கக்கூடாது என்பது ஐ.ஐ.டியில் படித்த சேதன் பக்த்தின் திறமையையும், தகுதியையும் காட்டுகின்றது….
இந்த புதிய முறையில் உள்ள குறைபாடாக நான் கருதுவது – எல்லா மாநிலங்களிலும் நடக்கும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முறை என்பது முற்றிலும் மாறுபட்டது, தமிழகத்தையும், கர்நாடகத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 80 விழுக்காட்டிற்கும் மேல், கர்நாடகாவில் 50 விழுக்காட்டை தாண்டுவதே சாதனை. இந்தியா முழுவதையும் சேர்த்து மொத்தம் 24 பாட முறைகளை கொண்ட கல்வி இயக்குநகரங்கள் உள்ளன. 24 பாட முறைகளையும் ஒன்று சேர்த்துவது தவறான ஒன்று, அப்புறம் நம்ம சமச்சீர் கலவி எல்லாம் காணாமல் போய்விடும். இதை தவிர்த்து மாநிலத்தின் கல்வி முறைக்கு ஏற்ப கணக்கீடு முறையை நடைமுறைப்படுத்தி நாம் இதை சரி செய்ய முடியும்.
அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்து, அரசுக்கு தன் கருத்தை தெரிவிக்க ஒரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி உண்டு, ஆனால் அதை விடுத்து எனக்கு நானே நுழைவு தேர்வு வைத்துக்கொள்கின்றேன், அரசு சொல்வதை நான் கேட்கமாட்டேன் என்பது சனநாயகத்தை(சனநாயகம் இல்லை என்றாலும் கூட) புறக்கணிக்கும் முறை, மேலும் வருங்காலத்தில் இட உரிமை(ஒதுக்கீடு) போன்றவற்றை அரசு கொண்டுவரும் பொழுது அதை நான் ஏற்க மாட்டேன் என இந்த கல்வி நிறுவனங்கள் கூறவும் இப்பொழுது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் உதவும் என்பதால் ஐ.ஐ.டி கான்பூர் எடுத்துள்ள நிலையை எதிர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு…
ஐ.ஐ.டி போன்ற இந்திய அரசினால் நடத்தப்பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படித்த பெரும்பான்மையினர் வெளிநாடுகளில் மட்டுமே பணியாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நற்றமிழன்.ப