சிலுவையில் தொங்கும் சாத்தான்


ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே)!

உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌!

உங்க‌ள் ராஜ்ஜிய‌ம் வ‌ருவ‌தாக‌,

எங்க‌ள் செல்வ‌மிக்க ஆப்பிரிக்காவில்

விரும்பி அழைக்கும் ஆப்பிரிக்காவில்

காலனீய ஆட்சிக்காலத்தில் நடந்ததைப் போலவே

இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக,

இன்றைய‌ நாளில் எங்க‌ள் தின‌க்கூலிக்குறிய‌ டால‌ரைத் தாருங்க‌ள்.

எங்க‌ள‌து த‌வ‌றுக‌ளை ம‌ன்னித்த‌ருளுங்க‌ள்.

உங்க‌ளுக்கும், எங்க‌ளுக்கும் ச‌வாலாக‌ உள்ள‌ சூழ‌லை வெற்றி

கொள்ள‌ உத‌வி தாருங்க‌ள்.

கருணையை வ‌ழ‌ங்கி உறுதுணையாக‌ இருந்து நாங்க‌ள் உம‌க்கு

என்றும் ப‌ணிவுட‌னும்

ந‌ன்றியுட‌னும் இருக்க‌ ஆத்ம‌ப‌ல‌த்தை அளியுங்க‌ள்.

என்றென்றும், எப்போதும், ஆமென்!”

மேற்கூறிய வரிகளின் மூலம் சுத‌ந்திர‌ம் பெற்ற‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள் முன்னாள் கால‌னீய‌ முத‌லாளிக‌ளுக்காக‌வே விடுத‌லை பெற்ற‌ பின்ன‌ரும் செயல்படுகின்றன என்ப‌தை தெளிவாக‌ கூறுகின்றார். (இதில் ஆப்பிரிக்கா என்ப‌தை எடுத்து விட்டு இந்தியா என்று போட்டு ப‌டித்தால் அப்ப‌டியே பொருந்தி போகின்ற‌து. முதல் வரியில் மட்டும் ஒரு சின்ன‌ மாற்ற‌ம் .. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே …. என‌ வ‌ந்தால் இந்திய‌ சூழ்நிலைக்கு ச‌ரியாக‌ இருக்கும்).

சிலுவை என்றாலே எல்லோருடைய‌ ம‌னதிலும் இயேசு தான் காட்சியளிப்பார் ஆனால் இந்நூல் முழுதும் சாத்தான் தான் காட்சிய‌ளிக்கின்றார். வ‌ரிய‌ங்காவின் சிறு வ‌ய‌து முத‌லே அவ‌ளுக்கு சாத்தானை சிலுவையில் அறைவது போலும் பின்ன‌ர் சில‌ர் வ‌ந்து அந்த‌ சாத்தானை மீட்ப‌தும் போலும் க‌ன‌வுகள் தொடர்ந்து வ‌ருகின்ற‌ன. வரியங்காவை மையப்படுத்தியே நாவல் நகர்கின்றது. நைரோபியில் தான் பார்த்துவந்த வேலையில் முதலாளியின் ஆசைநாயகியாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுவதால், மனம் நொந்து அலையும் வரியங்காவின் கைகளுக்கு வருகின்றது அந்த சாத்தானின் விருந்திற்கான‌ அழைப்பு. அந்த விருந்து அவள் பிறந்த சொந்த ஊரில் நடப்பதாலும், வசித்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாலும் சொந்த ஊரான இல்மொராக் நோக்கி ப‌ய‌ணிக்கிறார் வ‌ரிய‌ங்கா.

இந்தப் பயணத்தில் அவளுட‌ன், கட்டிட‌ தொழிலாளியான‌ முதூரியும், விவ‌சாயியான‌ வ‌ங்காரியும், க‌ல்லூரியில் நாட்டுப்புற‌ இசை ப‌ற்றி ப‌டிக்கும் மாண‌வ‌னான‌ க‌த்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராய், அவ‌ர்க‌ள் செல்லும் வாக‌ன‌த்தை ஓட்டும் முவாரா இவ்வ‌றுவரின் கலந்துரையாடலூடாக‌‌ கென்ய‌ விடுத‌லை போராட்ட‌ வ‌ர‌லாற்றையும், விடுத‌லைக்கு பின்னான‌ நிலையையும், அதை மாற்றி மக்களுக்கான சோசலிசத்தை நோக்கி எப்படி பயணிப்பது என்பதையும், ம‌ண்ணின் இசையை, மக்களுக்கான கலையை(பூர்வ‌குடிக‌ளின் இசையை) மீட்டெடுப்ப‌தன் அவ‌சிய‌த்தையும், முதலாளித்துவ‌த்தின் உண்மை முகத்தையும், ம‌த‌மும், அர‌சும் எவ்வாறு முதலாளித்துவ‌த்திற்கு வேலை செய்கின்ற‌ன‌ என்ப‌தையும் விள‌க்குகின்றார் நூலாசிரிய‌ர், இறுதியில் வரியங்கா(தன்னை) சிறுவ‌ய‌தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய‌ வ‌ய‌தான‌ ப‌ண‌க்கார‌னை கொல்வ‌துடன் நாவ‌ல் முடிகின்ற‌து……

“மதம் ஒரு அபின் -கார்ல் மார்க்ஸ்”

மக்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க ஐரோப்பிய காலனீய ஆட்சியாளர்கள் தங்களது மதத்தை பூர்வகுடிகள் மத்தியில் திட்டமிட்டு பரவச்செய்தனர். இதுதான் கென்யாவிலும் நடந்தது. பண்பாட்டு, கலாச்சார தளத்தில் மக்களிடையே தங்களது ஆதிக்கத்தை செலுத்த காலனீய ஆட்சியாளர்கள் கிருத்துவ மதத்தை பூர்வகுடிகளிடம் திணித்தார்கள். ஆட்சியதிகாரம் பூர்வகுடிகள் கைகளுக்கு வந்த பின்னரும், அது மக்களுக்கான சுதந்திரமாக இல்லை. அதனால் எத்தகைய விடுதலை மக்களுக்கு வேண்டும் என விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகின்றார் நூலாசிரியர்.

tumblr_m5ku9uUHea1r9g86vo1_500

கென்ய‌ ம‌க்க‌ளின் விடுத‌லை என்ப‌து ஆட்சிய‌திகார‌ த‌ள‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, ப‌ண்பாட்டு, க‌லாச்சார‌ த‌ள‌த்திலும் நிக‌ழ‌ வேண்டும், அதுமட்டுமில்லாமல் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானவர்களாக இருக்க வேண்டுமேயன்றி ஒரு சில முதலாளிகளுக்காக இருக்கக்கூடாது என்ப‌தில் நூலாசிரிய‌ர் கூகி வா தியாங்கோ மிக‌வும் உறுதியாக‌ இருந்துள்ளார் என்ப‌து இந்த‌ நூலில் தெளிவாக‌ தெரிகின்ற‌து.

ஆட்டின் தோலை உரிப்ப‌த‌ற்கு தோதான‌ வ‌ழி த‌லைகீழாக‌ க‌ட்டி உரிப்ப‌து, அந்த‌ வ‌ழிமுறையையே இங்கு கூகி ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ளார். சிலுவையில் தொங்கும் சாத்தானும், சாத்தானை காப்பாற்ற‌ விளையும் சில‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளின் மூல‌ம் முத‌லாளித்துவ‌த்தையும், ம‌த‌த்தையும் ஒன்று சேர்த்து தோலுரித்து காட்டுகின்றார்.

“தொழிலாளிக‌ளின் ம‌த‌ச்சார்பைப் பொறுத்து ப‌ண்ணையில் ச‌ர்ச்சுக‌ளையோ, ப‌ள்ளிவாச‌ல்க‌ளையோ முத‌லாளி க‌ட்டுவான். சாமியார்க‌ளை வேலைக்கமர்த்துவான் . ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ‌மையும் தொழிலாளிக‌ளுக்கு பிர‌ச‌ங்க‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டும். அங்கே ம‌னித‌ விய‌ர்வை, ர‌த்த‌த்தை, மூளையை க‌ற‌க்கும் அமைப்பு க‌ட‌வுளாலேயே விதிக்க‌ப்ப‌ட்ட‌து, என்றும் அத‌ற்கும், இறுதியில் அவ‌ர்க‌ளுடைய‌ ஆத்மா மோட்ச‌ம‌டைவ‌த‌ற்கும் தொட‌ர்பு உண்டு என்றும் அவ‌ர்க‌ளுக்கு போதிக்க‌ப்ப‌டும். திருவிவிலிய‌ நூலில் போதிக்கப்பட்டிருப்பது போன்று “வ‌ருத்த‌ப்ப‌ட்டு பார‌ம் சும‌க்கிற‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்கள்; ஏனெனில் அவ‌ர்க‌ள் தேறுத‌ல் பெறுவார்கள்”. “நீதிமான்க‌ளாய் இருப்ப‌த‌ற்கே ப‌சியிலும், துன்ப‌த்திலும் துன்புறுப‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்க‌ள்; ஏனெனில் அவ‌ர்க‌ள் ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்”.

ப‌ண்ணையின் முத‌ன்மையான‌ பாட‌லான‌ சாம்பாகீத‌ம் இப்ப‌டி இருக்கும்:

உன் பாவ‌ங்க‌ளுக்காக‌

நீ அழுது புல‌ம்பினாலும்

உன் சிலுவையை நீ சும‌ந்தாலொழிய‌

இளைப்பாறுத‌ல் பெற‌ மாட்டாய். ”

“க‌ண்ணுக்குக் க‌ண், ப‌ல்லுக்குப் ப‌ல்லா? அந்த‌ அள‌வுக்கு ச‌கிக்க‌ முடியாத‌ வ‌ன்முறை நில‌வினால் உல‌க‌ம் என்ன‌வாகும்?

ஆம், ஒரு ஏழை த‌ன் க‌ண்ணுக்கும், ப‌ல்லுக்கும் பிர‌தி கேட்கும் போது தான் அது வ‌ன்முறையாகிவிடுகிற‌து. முத‌லாளிக‌ள் தொழிலாளியின் ப‌ல்லை துப்பாக்கி க‌ட்டையால் உடைக்கிறார்க‌ளே, அது வ‌ன்முறையில்லையா? அத‌னால் தானே இந்த‌ முத‌லாளிக‌ள் கால‌ம் முழுதும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ தொழிலாளிக‌ளின் முதுகிலேயே ஏறி உட்கார்ந்து கால‌ம் க‌ழிக்கிறார்க‌ள்? தொழிலாளிக‌ளும் வார‌ம் த‌வ‌றாம‌ல் கோயிலுக்குப் போய் அடிமைத்த‌ன‌த்தின் போத‌னையைக் கேட்டுவ‌ருகிறீர்க‌ள்.

நான் உன‌க்குச் சொல்லுகிறேன்

தீமைக‌ளை எதிர்க்காதே.

எவ‌னாவ‌து உன்னை வ‌ல‌து க‌ன்ன‌த்தில் அறைந்தால்

அவ‌னுக்கு உன் ம‌றுகன்ன‌த்தையும் காட்டு.

எவ‌னாவ‌து உன்மீது வ‌ழ‌க்கு போட்டு

உன் மேலாடையை எடுத்துக் கொள்வானானால்

உன் உள் ஆடையையும் அவ‌னிட‌ம் கொடுத்துவிடு”

முத‌லாளித்துவம் என்கிற சாத்தான் எப்ப‌டியெல்லாம் திட்டமிட்டு ஏழை, எளிய ம‌க்க‌ளின் விய‌ர்வையையும், இர‌த்த‌த்தையும் உறிஞ்சுகின்ற‌து என்ப‌தை பின்வ‌ரும் வ‌ரிக‌ள் தெளிவாக‌ காட்டுகின்ற‌து.

“மாபெரும் விருந்து”

வாருங்க‌ள், வ‌ந்து பாருங்க‌ள்

ந‌வீன‌ திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன‌

ஏழு நிபுண‌ர்க‌ளைத் தேர்ந்தெடுக்கும் போட்டி,

வ‌ங்கிக் க‌ட‌ன்க‌ள், ப‌ல‌ப்ப‌ல‌ நிதி நிறுவ‌ன‌ங்க‌ளின்

இய‌க்குன‌ர் ப‌த‌விக‌ள் உள்ளிட்ட‌

ப‌ல‌ப‌ல‌ப்ப‌ரிசுக‌ள்

உங்க‌ள் திற‌மையைச் சோதியுங்க‌ள்!

உங்க‌ள் அதிர்ஷ்ட‌த்தைச் சோதியுங்க‌ள்!

ந‌வீன‌ திருட்டில், கொள்ளையில் போட்டியிட்டு

வெற்றி கிரீட‌த்தை சூட்டிச்செல்ல‌லாம்!

ந‌வீன‌ திருடர்களிலும், கொள்ளைக்காரர்களிலும்

த‌லைசிற‌ந்த‌ ஏழுபேரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி!

‘ந‌ர‌க‌த்தின் தூதுவ‌ர்க‌ள்’குழுவின‌ரின் இன்னிசை விருந்து!

கையொப்ப‌ம்: விழாத்த‌லைவ‌ர்

மே/பா. திருட‌ர்க‌ள் ம‌ற்றும் கொள்ளைய‌ர்க‌ளின் குகை

இல்மொராக் கோல்ட‌ன் ஹைட்ஸ்

அடிப்படை தகுதி – வெறும் நூறும், ஆயிர‌மும் திருடுப‌வ‌ர்க‌ள் சிர‌ம‌ப்ப‌ட்டு மேடைக்கு வ‌ந்து எங்க‌ள் பொறுமையை சோதிக்க‌ வேண்டாம் , ஒரு முறையாவ‌து கோடிக்க‌ண‌க்கில் திருடி இருக்க‌ வேண்டும்.”

ngugicross

மேற்சொன்ன‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ முத‌ல் போட்டியாள‌ன் மண்ணையும், காற்றையும் விற்க‌ வேண்டும் என்ற‌ த‌ன‌து எதிர்கால‌ திட்ட‌த்தை ப‌ற்றி சொல்வான், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ந‌ம்மிட‌ம் யாராவ‌து வ‌ந்து குடிநீருக்கு விலை வைத்து விற்பார்க‌ள் என்று சொன்னால் நாம் சிரித்திருப்போம், ஆனால் இன்றைய‌ நிலைமை என்ன‌? அர‌சே குடிநீரை விற்கின்ற‌து. அதை போல‌ தான் மேலே சொன்ன‌ காற்றை விற்கும் திட்ட‌மும், அத‌ற்கான‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌க்க‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌. ந‌க‌ர‌த்தில் போதுமான‌ள‌வு காற்றை மாசுப‌டுத்தியாயிற்று. பூங்கா ந‌க‌ர‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் பெங்க‌ளூரில் தான் சுவாச‌ம் தொட‌ர்பான‌ நோய்க‌ள் அதிக‌மாக‌ உள்ள‌ன‌. மேலும் அந்த‌ போட்டியாள‌னின் சில‌ திட்ட‌ங்க‌ளை இங்கு பார்ப்போம்…

“விவ‌சாயிக‌ளும், தொழிலாளிக‌ளும் பொறுமையிழ‌ந்து, ந‌ம‌து ராணுவ‌ப் ப‌டைக‌ளின் ப‌ல‌த்துக்கு அட‌ங்காம‌ல் திமிறுவார்க‌ளானால், அவ‌ர்க‌ளுக்கு காற்றை விற்க‌ ம‌றுப்ப‌த‌ன் மூல‌ம் சுல‌பமாக‌ ந‌ம் முன் ம‌ண்டியிட‌ச் செய்து விட‌லாம்! ம‌க்க‌ள் ஏதாவ‌து முறையிட்டால், அவ‌ர்க‌ளுக்கு காற்றை வ‌ழ‌ங்க‌ ம‌றுக்க‌லாம்! ம‌க்க‌ள் தாம் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌டுவதையோ, த‌ம் சொத்தை ந‌ம்மிட‌ம் ப‌றிகொடுப்ப‌த‌ற்கு ம‌றுத்தால் பேசாம‌ல் காற்றுக்குழாயைத் திருகி மூடிவிட‌வேண்டிய‌து தான். அவ‌ர்க‌ள் ப‌த‌றி அடித்துக்கொண்டு ந‌ம்மிட‌ம் ஓடிவ‌ந்து “த‌ய‌வு செய்து எங்க‌ளிட‌மிருந்து திருடுங்க‌ள், இர‌க்க‌மின்றி எங்க‌ளிட‌மிருந்து கொள்ளைய‌டியுங்க‌ள்……” என்று ம‌ன்றாடி ச‌ர‌ணாக‌தி அடையும் வ‌ரை ம‌றுப‌டியும் திற‌ந்து விட‌வே கூடாது”

இதை தான் சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் நாம் சென்னையில் பார்த்தோம். குடிநீர் கொடுக்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் சில‌ விதிக‌ளை நிறைவேற்ற‌ வேண்டும் என்று சொல்லி சோத‌னை ந‌ட‌த்திய‌ போது எல்லா நிறுவ‌ன‌மும் வேலையை நிறுத்திவிட்டு ம‌க்க‌ளை த‌ண்ணீரில்லாம‌ல் த‌விக்க‌ விட்ட‌ன‌ர். ம‌க்க‌ளும் எங்க‌ளுக்கு த‌ண்ணீர் கொடுங்க‌ள் என‌ கோரினார்க‌ளே ஒழிய‌ அதை அர‌சு தான் கொடுக்க‌ வேண்டும் என்றோ, இந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை முறைப்ப‌டுத்த‌ வேண்டும் என்றோ கோர‌வில்லை.

இந்தியாவின் இன்றைய‌ நிலைக்கு சிலுவையில் தொங்கும் சாத்தான்க‌ள் நாவ‌ல் எல்லோரும் ப‌டிக்க‌ வேண்டிய‌ ஒரு அருமையான‌ நூல்.

கூகி வா தியாங்கோ

கூகி வா தியாங்கோ

உல‌க‌ இலக்கிய‌ங்க‌ள் எழுத‌ ஒரு இர‌ம்மிய‌மான‌ சூழ‌லும், அமைதியும் வேண்டும் என்று சில‌ர் இப்பொழுது கூறிவருகின்றார்கள், க‌ழிவறை காகித‌த்திலும் கூட‌ உல‌க‌ இல‌க்கிய‌ங்க‌ள் ப‌டைக்க‌லாம், தேவை மக்கள் மீதான அன்பும், புரட்சியின் மீதான நேசமுமே என்பதை நிரூபித்துள்ளார் கூகி வா தியாங்கோ. ஆம் இந்நாவ‌ல் முழுவ‌தும் அவ‌ர் சிறையில் இருந்த கால‌த்தில் க‌ழிவ‌றை காகிதத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌தே. அதே போல‌ இந்நாவ‌லை எளிமையான‌ த‌மிழில் மொழிபெய‌ர்த்து கொடுத்துள்ளார்கள் தோழ‌ர்.அம‌ர‌ந்தாவும், தோழர்.சிங்கராயரும்.இந்நூல் முதலில் கென்ய பழங்குடிகளின் ஒரு மொழியான கிக்கூயூ மொழியில் வந்து மூன்று பதிப்பு கண்டது. பின்னர் நூலாசிரியர் கூகியாலேயே ஆங்கிலத்தில் “Devil on the Cross” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை கூகி வா தியாங்கோ..

பின் குறிப்பு : இது என‌து இர‌ண்டாவ‌து நூல்நோக்கு க‌ட்டுரை. இக்க‌ட்டுரை ப‌ற்றிய‌ உங்க‌ள‌து க‌ருத்துகளை ப‌கிருங்க‌ள்.

சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ
த‌மிழில் – அம‌ர‌ந்தா – சிங்க‌ராய‌ர்
வெளியீடு – தாமரைச் செல்வி பதிப்பகம்
31/48, இராணி அண்ணா நகர்,
கலைஞர் நகர், சென்னை-78
தொலைபேசி – 4728326

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

Advertisements

ம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் !!!!


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த நூலைப் படிக்கும் போதும், படித்து முடித்து, இந்த கட்டுரைக்கான குறிப்பை எடுக்கும் பொழுதும் மன்மோகன் சிங் அவர்கள் தான் என் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார். மன்மோகன் சிங் இந்த பெயர் சமூக வலை தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது போல எந்த ஒரு பெயரும் இந்தியாவில் கிண்டலடிக்கப்பட்டதில்லை. ஆனால் அவை பெரும்பாலும் மன்மோகன் சிங் ஒரு கோமாளி, பொம்மை என்ற வகையில் மன்மோகன் சிங் செய்யும் பணிகளின் வீரியம் தெரியாமல் செய்யப்பட்டவையாகவே உள்ளன. அவர்களின் கூற்றுப்படியே அவரை ஒரு கோமாளியாக‌ எடுத்துக்கொண்டாலும் அவர் சர்க்கசில் வரும் நகைச்சுவை கோமாளி அல்ல, பேட்மேன் படித்தில் வரும் வில்லன் கோமாளி போன்றவர்.

ஏழைகளை, பரம ஏழையாக்கி, நடுத்தர வர்க்கத்தினை இரண்டாக பிளந்து ஒரு பிரிவை ஏழையாக்கி, ஒரு சிறு பிரிவை மட்டும் நடுத்தர வர்க்கமாகவே வைத்து, பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக்கும் முதலாளித்துவ சிந்தனையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொண்டவர் அவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது தோன்றி மறையும் அப்துல் கலாம் போன்றோரும் வந்து செல்கின்றனர். இக்கட்டுரையை ஒரு ஓப்புமை கட்டுரையாக எழுத முயன்றுள்ளேன். முதலில் மன்மோகன் சிங் போன்றோரின் கூற்றும் அதை தொடர்ந்து “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் இருந்து உண்மை நிலையை விளக்கும் கூற்றுகளையும் கொடுத்துள்ளேன், நூலிலிருந்து எடுத்துள்ள கருத்துகளை “வாக்குமூல‌ம்” என்ற‌ பெய‌ரிட்டு கொடுத்துள்ளேன்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு திட்டம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலனளிக்கும் திட்டமாகும் – மன்மோகன் சிங்

264346_418824364841065_1713453294_n

வாக்குமூலம் – ”இந்தத்திட்டங்கள் ஒப்பந்தங்க‌காரர்களுக்கு மிக அதிக இலாபம் பெற்றுத்தரக்கூடியவை. கடன் பெறும் நாட்டிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரக் குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளித் தரக்கூடியவை. அதேநேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடக்கூடியவை என்ற விசயம் வெளியே சொல்லப்படுவதேயில்லை. இப்படி நாடுகளை நம்மை அதாவது அமெரிக்காவை அண்டியிருக்கச் செய்து அதன்மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவது தான் இத்திட்டங்களின் அடிப்படையான நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம், கல்வி போன்ற சேவைகள் தான் இக்கடன்களைக் கட்ட பலிகொடுக்கப்படும் என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றது.”

இந்தியாவின் மொத்த‌ தேசிய‌ உற்ப‌த்தி 6 விழுக்காட்டை இந்த‌ ஆண்டு(2013) தொடும்- ம‌ன்மோக‌ன் சிங்

வாக்குமூலம் – “மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”.

இந்தியாவில் ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் ப‌ற்றி, இதில் எண்ணெய்க்கு ப‌திலாக‌ அணுமின் ச‌க்தி என்று ப‌டித்து பார்த்தால் நூறு விழுக்காடு பொருந்தும்…

வாக்குமூலம் – “ தவிர உங்கள் செய்தி ஏடுகளும் பெருமளவு எண்ணெய் நிறுவனங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதானே! என்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதையே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், முதலாளிகள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதையே எழுதுகிறார்கள்”.

ந‌க்ச‌ல்க‌ள் தான் இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கு மிக‌ப்பெரிய‌ த‌டையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்- ம‌ன்மோக‌ன் சிங், ப.சிதம்பரம்……

வாக்குமூலம் – “உங்கள் அரசாங்கங்கள் இவர்களை கம்யூனிசுட்டுகள், பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என்றழைக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையில் உங்கள் நிறுவனம் அழித்து நாசமாக்கிக் கொண்டிருக்கும் நிலங்களில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் சாதாரண விவசாயிகள்தான்”

“அவன் எப்படி கெரில்லாக்களோடு சேர்ந்தான்? ஒரு எண்ணெய் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வெளியே அவனும், அவனது நண்பர்கள் இருபது, முப்பது பேரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அழியும் தருவாயிலிருந்த ஒரு பழங்குடியினத்திற்குச் சொந்தமான காடுகளில் எண்ணெய்க்காக அந்த நிறுவனம் துளையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களை இராணுவம் தாக்கியது. அடித்து நொறுக்கிச் சிறையில் தள்ளியது. அவர்கள் செய்ததெல்லாம் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நின்று அட்டைகளை வீசியாட்டியதும் பாடியதும் தான், இதில் சட்டவிரோதமானது எதுவுமேயில்லை, அவர்கள் அவனை ஆறு மாதங்கள் சிறையில் அடைத்திருந்தார்கள். அங்கே என்ன நடந்தது என்பது பற்றி அவன் வாயைத்திறக்கவேயில்லை. ஆனால் வெளியே வந்தபோது அவன் முற்றிலும் வேறுவிதமான ஆளாக மாறியிருந்தான்”.

இந்தியா 2020ல் வ‌ல்ல‌ர‌சாகும் – அப்துல் க‌லாம்

வாக்குமூலம் – “குடியரசுக்கு நேரெதிரானது உலகப்பேரரசு. அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு”.

அண்மையில் மாருதியின் தில்லி தொழிற்சாலையிலும், போஸ்கோ எதிர்ப்பு கிராம‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் குண்டு வெடிப்புக‌ளையும், சிங்கூரில் ந‌ட‌ந்த‌ எதிர்ப்பு போராட்ட‌ங்க‌ளையும் உங்க‌ள் நினைவுக்கு கொண்டு வ‌ர‌வும் .

வாக்குமூலம் – “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்.”

தமிழ‌க‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்கும், இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும் கூட‌ங்குள‌ம் போன்ற‌ அணு மின்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் – ம‌ன்மோக‌ன் சிங், ப‌.சித‌ம்ப‌ர‌ம், ஜெய‌ல‌லிதா …..

320763_318742588143086_100000220422896_1467911_1263182729_n

வாக்குமூலம் – “எல்லா புதிய மின் நிலையங்களும், விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும். இப்போதைக்கு உன்வேலை இதுதான். அந்த வகையான முன்னறிவுப்புகள் யு.எஸ்.ஏ.ஐ.டி(USAID) மற்றும் சர்வதேச வங்கிகள் தாங்கல் அளிக்கும் கடன்களை நியாயப்படுத்த உதவும் “.

இந்தியாவின் மின் தேவைக்கு அணுமின்சக்தி கட்டாயம் தேவை – மன்மோகன் சிங் . கூட‌ங்குள‌ம் அணு உலை 100% பாதுகாப்பான‌து – அணு த‌ள‌ப‌தி அப்துல் க‌லாம் . அணு உலைக்கு எதிராக‌ போராடுப‌வ‌ர்க‌ள்தேச‌ துரோகிக‌ள்- ஜெய‌ல‌லிதா.

வாக்குமூலம் – “சீ புரூக் அணுமின் நிலைய விஷயத்தில் என் வேலை அணுசக்தி மின் உற்பத்திக்கு மிகவும் ஏற்றதும் சிக்கனமானதுமாகும் என்று நியூஹாம்ஷயர் பொதுச் சேவை ஆணையத்தை நம்பச் செய்வதாகும். அணுமின் நிலையம் அமைப்பதற்கு இந்த ஆணையத்தின் அனுமதி அவசியமானதாக இருந்தது. துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தை ஆய்வு செய்யச் செய்ய என் வாதங்கள் சரியானவைதானா என்று எனக்கே சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது. அணுசக்தி தொடர்பான கருத்துகள் அக்காலத்தில் தொடர்ந்து மாறிவந்தன. அணுசக்தி தொடர்பான ஆய்வுகளின் வளர்ச்சி அது பற்றிய ஆய்வுகளிலும் பிரதிபலித்தது. அணுசக்தியை விட மற்ற ஆற்றல்கள் தொழில்நுட்பரீதியில் உயர்ந்தவையாகவும், சிக்கனமானவையாகவும் இருப்பது மேலும் மேலும் துலக்கமாகி வந்தது.”

“அணு சக்தி பாதுகாப்பானது என்ற பழைய கோட்பாட்டுக்கு எதிராக தராசு சாயத் தொடங்கியது. அணுமின் நிலையங்களில் உள்ல பாதுகாப்பு வசதிகள், தவறுகள் செய்யக்கூடிய மனித இயல்பு, கருவிகள் தேய்வடையும் வாய்ப்பு, அணுமின் நிலையங்களில் தேங்கும் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வசதிகள் இன்மை போன்றவை குறித்து ஆழமான கேள்விகள் எழுப்பப்பட்டன. தனிப்பட்ட முறையில் நான் மிகுந்த சங்கடமடைந்தேன். அதேநேரத்தில் புதிதாக உருவாகி வந்த சிற்சிலத் தொழில்நுட்பங்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வகையில் மின்னுற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகளை அளிக்கக்கூடியவையாக உள்ளன என்பதில் நம்பிக்கை கொள்ளத்தொடங்கினேன். குறிப்பாக கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருந்தது.”

அர‌சு சொல்வ‌தை எவ்வித‌ கேள்வியும் கேட்காம‌ல் அப்ப‌டியே ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என்று கூறும் ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கு…

வாக்குமூலம் – கேள்விகள் கேட்காமலிருப்பதன் விளைவு நிச்சயம் அபாயகரமானதாகத்தானிருக்கும்.

ம‌ன்மோக‌ன் சிங்கை மாற்றினால் போதும் நாடு வ‌ள‌மாகிவிடும், மோடி வ‌ந்தால் போதும் நாடு வ‌ள‌மாகி விடும், திமுக‌ மாறினால் போதும், அதிமுக‌ ஆட்சி மாறினால் போதும் என்று சொல்லும் எல்லோருக்கும்…..

வாக்குமூலம் – “இந்த அமைப்பின் தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், அதற்குக் காரணமான நபர்களைத் தூக்கியெறிந்து விட்டால் போதும் என்பது போன்ற தொனியை இந்த கட்டுரைகள் கொண்டுள்ளன. இதுபோன்ற கட்டுரைகளின் காரணமாகத்தான் சதிவேலை பற்றிய கோட்பாடுகள் தோன்றுகின்றன. இதன் காரணமாக வரலாறு பற்றிய நமது கண்ணோட்டம் மூன்றாம் தரமானதாக மாறி விடுகிறது. தொலைக்காட்சி பார்ப்பதோடு அனைத்தும் மறந்து போய்விடுகிறது. எல்லாவற்றையும் “அவர்கள்” பார்த்துக் கொள்வார்கள், நாடு என்ற கப்பலின் பயணத்தில் சிறிய குளறுபடிகள் நேர்ந்தாலும், காலப்போக்கில் அது சரியான பாதைக்குத் திருப்பப்பட்டுவிடும். இந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கு நாம் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டி வரலாம். ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என்ற பொய்த்திருப்தியோடு நின்றுவிடுகிறோம்”.

427540_309012565814962_100001186622923_803213_1811463737_n

ஆயுதத்தின் மூலம் மக்களைப் படுகொலை செய்யும் சர்வாதிகாரிகளையும், இனப்படுகொலையாளர்களையும் பற்றி நாம் கண்டும், கேட்டும் உள்ளோம், ஆனால் ம‌ன்மோக‌ன் சிங் போன்ற உலகமய‌ சர்வாதிகாரிகள் வளர்ச்சி என்ற பெயரிலும், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரிலும் செய்த‌ கொலைகள் ஏராளம், ஆனால் இவை முன்னதைப் போல ஊடகங்களில் வெளிவருவதில்லை. வ‌ள‌ர்ச்சி என்ற‌ பெய‌ரால் ம‌ன்மோக‌ன் சிங் எடுத்துவ‌ரும் ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கையும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை த‌ற்கொலை செய்யத்தூண்டியுள்ளது. உய‌ர்ந்து வ‌ரும் விலைவாசியினால் இற‌ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆனால் த‌ன்னை ஒரு பொருளாதார‌ வ‌ல்லுன‌ர் என‌க்கூறும் ம‌ன்மோக‌னோ “விலைவாசி உய‌ர்வு எப்போது க‌ட்டுக்குள் வ‌ரும் என்ப‌தை என்னால் ஆருட‌ம் கூற‌ முடியாது என்றார். இன்றைக்கும் இந்தியாவில் அதிக‌மான‌ ம‌க்க‌ளுக்கு வேலைவாய்ப்ப‌ளிப்ப‌து விவசாய‌மே, ஆனால் ம‌ன்மோக‌ன் சிங்கோ “விவசாயிக‌ள் விவ‌சாய‌ம் ம‌ட்டும் தான் செய்வேன் என்று சொல்ல‌க்கூடாது, வேறு வேலைக‌ளை நோக்கி ந‌க‌ர‌ வேண்டும்” என‌ சொல்கின்றார். ம‌காராசுட்ர மாநில‌ம் வித‌ர்பாவில் நிக‌ழ்ந்த‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ளின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌ம், புதிய‌ பொருளாதார‌க் கொள்கையும், விவசாயித்தில் ப‌ற்றிய‌ அக்க‌றையே அற்ற‌ பிர‌த‌ம‌ரும் தான் என்றால் அத‌ற்கு மாற்று க‌ருத்து இருக்க‌ முடியாது.

அர‌சு உண‌வு காப்ப‌க‌ங்க‌ளில் இட‌மில்லாம‌ல் வெளியில் வைத்து பாழாய் போகும் உண‌வு தானிய‌ங்க‌ளை ஏழைக‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ அர‌சு கொடுக்க‌ வேண்டும் என்று நீதிமன்ற‌ம் சொன்ன‌ பொழுது “அர‌சின் கொள்கை ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் நீதிம‌ன்ற‌ம் த‌லையிட‌க்கூடாது” என்றார் திருவாள‌ர்.ப‌ரிசுத்தம். இதுவே அம்பானி, டாட்டா போன்ற‌ முத‌லாளிக‌ளுக்கு ஒன்று என்றால் ம‌ன்மோக‌னால் தாங்கி கொள்ள‌முடியாது. 4 கோடி மக்கள் வேலை செய்து வரும் சிறு வணிக துறையை அன்னிய முதலீட்டிற்கு திறந்து விட்டு, 4 கோடி வேலையை காலி செய்து சில ஆயிரம் பணிகளை உருவாக்கி உள்ளது மன்மோகன் அரசு.

போட்டி சரியானது தானே என்று தோன்றலாம், வால்மார்ட் இந்த சட்டத்திற்காக இலஞ்சம் கொடுத்துள்ளது, மேலும் பல விதிகளை மீறியுள்ளது என இப்பொழுது வழக்கு விசாரணையில் உள்ளது இன்னும் விளையாட்டு தொடங்கவேயில்லை, அதற்குள் விதிகளை வளைக்க தொடங்கிவிட்டார்கள். தண்ணீரை முழுக்க வணிகமயமாக்கம் செய்யும் “தேசிய நதி நீர் சட்ட வரைவு” பரிந்துரையில் உள்ளது. சென்னையில் த‌னியாரிட‌ம் கொஞ்சம் த‌ண்ணீர் கொடுத்த‌த‌ன் ப‌ல‌னை க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌க்க‌ள் அனுப‌வித்து இருப்பார்க‌ள். முழுக்க‌வே த‌னியார் என்றால் !!!!.

404419_195479473884884_184727461626752_252586_513408901_n

இந்தியாவில் மின்சாரம் ஏழைகளுக்கும், சிறு,குறு வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாளில் எப்பொழுதாவது ஒரு முறை கிடைக்கும் பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதே மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி, மானிய விலையில் கொடுக்கப்படுகின்றது. இதே நிறுவனங்கள் தெற்காசிய‌ முழுவ‌தும் தங்கள் நிறுவனங்களை கடை விரிக்க இருப்பதால் இந்தியாவிலிருந்து மின்சாரத்தையும் தெற்காசிய முழுவ‌திற்கும் ச‌ந்தை ப‌டுத்துவ‌த‌ற்கான‌ வேலையையும் தொட‌ங்கி விட்டார்க‌ள். இத‌ன் ஒரு ப‌குதி தான் பாகிசுதானிற்கு, இல‌ங்கைக்கு மின்சார‌ம்….. இந்த‌ வேலை முழுவதையும் த‌னியார் பார்த்துகொள்வார்க‌ள், த‌மிழ‌க‌த்தில் 18,000 மெகாவாட் அள‌விற்கு க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் த‌னியார் மின்சார‌ நிறுவ‌ன‌ங்க‌ள் எல்லாம் இத‌ற்காக‌ தான், எல்லோருக்கும் விற்றது போக‌ கொஞ்ச‌ம் ம‌க்க‌ளுக்கும் விற்க‌ப்ப‌டும். அதே போல‌ முத‌ல், இர‌ண்டாம் உல‌க‌ நாடுக‌ளில் ம‌திப்பையிழ‌ந்துள்ள‌ அணு உலை இங்கு ச‌ந்தைப்ப‌டுத்திய‌துள்ளார்க‌ள். இதுவ‌ரை கையெழுத்தாகியுள்ள‌ அணு உலை ஒப்ப‌ந்த‌ங்க‌ளின் ச‌ந்தை ம‌திப்பு “6 இல‌ட்ச‌ம் கோடி” ரூபாய் … க‌றைப‌டியா க‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் ஏன் அணு உலையை ஆத‌ரிக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ ப‌தில் இது தான். அதே போல இந்த வளர்ச்சி “வேலையில்லாத‌ வ‌ள‌ர்ச்சி (Jobless Growth)” என‌ ஊட‌க‌ங்க‌ளே ஒப்புக்கொள்ளும் அள‌வில் தான் இங்கு வ‌ள‌ர்ச்சி உள்ள‌து. வேலையில்லா திண்டாட்ட‌ம் அதிக‌மான‌தே த‌விர‌ குறைப்ப‌த‌ற்கான‌ வ‌ழியெதுவும் இல்லாத‌ அர‌சு. என்னே ஒரு பெரிய‌ பொருளாதார‌ விஞ்ஞானி ???? ப‌ண‌க்கார‌ர்க‌ள் பெரிய‌ ப‌ண‌க்கார‌ர்க‌ள் ஆகினார்க‌ள், ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் ஏழை ஆனார்க‌ள், ஏழைக‌ள் ப‌ர‌ம‌ ஏழையானார்க‌ள் இது தான் வ‌ள‌ர்ச்சியா? ஒரு விர‌ல் ம‌ட்டும் வ‌ள‌ர்ந்தால் அது வீக்க‌ம் அல்ல‌து நோய். வ‌ள‌ர்ச்சிய‌ல்ல‌….

மாண்டேக் சிங் அலுவாலியா, ர‌ங்க‌ராஜ‌ன், ப‌.சித‌ம்ப‌ரம், மோடி, இராகுல், ஒவ்வொரு மாநில‌ முத‌ல்வ‌ர்க‌ள் என்று இங்குள்ள‌ பொருளாதார‌ அடியாட்க‌ளின் ப‌ட்டிய‌ல் நீள‌மான‌து, இவ‌ர்க‌ளுக்கெல்லாம் த‌லைம‌க‌ன் தான் ம‌ன்மோக‌ன். ம‌ன்மோக‌ன் ஒரு பொருளாதார‌ அடியாள் ம‌ட்டும‌ல்ல‌ அத‌ற்கும் மேலே… ஆம் தொடக்கத்தில்(90களில்) தாராள‌ம‌ய‌த்தையும், த‌னியார்ம‌ய‌த்தையும் இந்தியாவிற்குள் அவ‌ர் திட்ட‌மிட்டு, மெல்ல‌..மெல்ல‌ வாழைப்ப‌ழ‌த்தில் ஊசி ஏற்றுவ‌து போல‌ கொண்டு வ‌ந்தார். அடுத்த‌ முறை நாம் ஆட்சிக்கு வ‌ருவோமோ என்ற‌ ஐய‌ம் வ‌ந்துவிட்ட‌தோ என்ன‌வோ தெரிய‌வில்லை, இப்பொழுது எல்லா பொருளாதார‌ மாற்ற‌ங்களையும் அடுத்த‌ ஆண்டிற்குள் முடித்து விடும் தீவிர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்.

ம‌ன்மோக‌ன் தான் இப்ப‌டி என்றால் அடுத்து ந‌ம‌க்கு பிர‌த‌ம‌ராக‌ காட்ட‌ப்ப‌டும், மோடியும், இராகுலும், ம‌ன்மோக‌னை விட‌ ஒரு ப‌டி மேலே சென்று ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்திற்கு அவ‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்பே முத‌லாளிக‌ள் ம‌ன்ற‌த்திற்கு சென்று தாங்க‌ள் எவ்வ‌ள‌வு விசுவாச‌மான‌வ‌ர்க‌ள் என்று காட்டியுள்ளார்க‌ள். இந்தியாவிற்கும், த‌மிழ்நாட்டிற்கும் தேவை ஆட்சி மாற்ற‌மோ, க‌ட்சி மாற்றமோ அல்ல‌ இந்த‌ ஒட்டுமொத்த‌ அமைப்பையும் மாற்ற‌க்கூடிய‌ ம‌க்க‌ள் புர‌ட்சியே….

ம‌க்க‌ள் போராட்ட‌ம் ஓங்குக‌… ம‌க்க‌ள் புர‌ட்சி வெல்க‌….

குறிப்பு :
இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூலிது. மூல நூல் ஆங்கிலத்தில் “Confessions of an Econamic Hit Man – By John Berkins”. இந்த நூலை தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் தோழர்.இரா.முருகவேள்.

ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம் – ஜான் பெர்கின்ஸ்
த‌மிழில் – இரா.முருக‌வேள்.
வெளியீடு – விடிய‌ல் ப‌திப்ப‌க‌ம், கோய‌ம்புத்தூர், தொலைபேசி எண்- 0422-2576772

நன்றி- கார்ட்டூனிஸ்ட்.பாலா, வீரா.

இக்கட்டுரை சேவ் தமிழ்சு இயக்க வலைப்பூவில் பதிவிடப்பட்டது

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்


சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌?

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திர திட்டமாகும்(பார்க்க-படம்). 300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌ கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணி தான் சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகின்ற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை(மேற்கு), கொச்சின்(தென் மேற்கு) ப‌குதியிலிருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டுமெனில் அவை இல‌ங்கை சுற்றிக்கொண்டு தான் வ‌ரும், இனி அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அவை இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். உச்ச‌நீதிம‌ன்ற‌ம் இராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவ‌தற்கு த‌டை விதித்த‌தின் மூல‌ம் 17-09-2007ல் இந்த ப‌குதியில் கால்வாய் தோண்டும் ப‌ணி நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. பாக் நீரிணையில் கால்வாய் தோண்டும் ப‌ணி இந்த‌ திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்தி வ‌ரும் இந்திய‌ அக‌ழ்வாய்வு நிறுவ‌னத்தினால் (Dredging Company of India) 16-07-2009 அன்று நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.

sethu_map

sethu_map

தோண்ட வேண்டிய மணலின் அளவு = 82.5 Million Cubic Meter(82.5 இலட்சம் மீட்டர்)

இதுவரை தோண்டியுள்ள மணலின் அளவு = 33.99 Million Cubic Meter (33.99 இலட்சம் மீட்டர்) (1)

இதை முழுமையாக‌ முப்ப‌து விழுக்காடு ப‌ணிக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ க‌ருத‌முடியாது. தொட‌ர் க‌ட‌ல்நீரோட்ட‌த்தின் கார‌ண‌மாக‌ இந்த‌ ப‌குதியில் 12.8 மீட்ட‌ரில்(தோண்ட‌ப்ப‌ட்ட‌ ஆழ‌ம்) ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ண‌ல் மூடியிருக்கும். 2004ல் இந்த‌ கால்வாய் தோண்டுவ‌த‌ற்கான‌ திட்ட‌ ம‌திப்பு 2,400 கோடிக‌ளாகும், 2010லேயே இது இர‌ண்டு ம‌ட‌ங்காகி விட்டது(2). இன்றைய நிலையில் இந்த திட்டத்தை முடிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.

இப்பொழுது நாம் சேது சமுத்திர திட்டத்தில் உள்ள சில கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.

சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தினால் இந்தியாவிற்கு என்ன‌ ப‌ய‌ன்?

இந்தியாவிற்கு ஒரு புதிய‌ க‌ட‌ல்வ‌ழி கிடைக்கும். இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் இனி இலங்கையை சுற்றி செல்லும் நிலை மாறி மேற்கு ப‌குதிக்கும், கிழ‌க்கு ப‌குதிக்கும் இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் நேராக‌வே செல்லும்.

சேது சமுத்திர திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சியடையுமா?

இந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ‌க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம‌ற்றும் கிழ‌க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க‌ல்க‌த்தாவிலிருந்து – மும்பைக்கு) ந‌டைபெறும் க‌ட‌ல் வ‌ழி வர்த்தகம் கொழும்பு மூல‌மாக‌வே ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. இந்நிலை மாறி இனி இந்த‌ க‌ட‌ல்வ‌ழி வர்த்தக‌‌ம் தூத்துக்குடி துறைமுக‌ம் மூல‌மாக‌ ந‌டைபெறும், அத‌ற்காக‌ தூத்துக்குடி துறைமுக‌த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க‌ வேண்டும். அவ்வாறான‌ ஒரு புதிய‌ இடைநிற் மையம் உருவாக்க‌வில்லையெனில் “சேது ச‌முத்திர‌ திட்ட‌ம்” எவ்வித வர்த்தக ப‌ய‌னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த‌ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய‌ இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க‌வேண்டும் என்ற‌ கோரிக்கைக்கு இன்னும் ஒப்புத‌ல் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை, அத‌னால் தூத்துக்குடி துறைமுக‌ம் பெரிய வ‌ள‌ர்ச்சிய‌டையாது என்பதே உண்மை. இல்லை இது பொய் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கவும். ஒரு தெளிவான‌ க‌ட‌ல்வ‌ர்த்த‌க‌ம் அற்ற‌ இந்தியாவில் உள்ள‌, வ‌ரவி‌ருக்கும் க‌ப்ப‌ற்துறைமுக‌ங்க‌ள். உங்க‌ள் வீட்டுக்கு பின்னால் க‌ட‌ல் இருந்து உங்க‌ளுக்கு ஒரு துறைமுக‌ம் வேண்டுமென்றால், அதை உங்க‌ளால் க‌ட்ட‌முடியும் என்றால், நீங்க‌ள் கேட்டாலும் அனும‌தி கொடுக்கும‌ள‌விற்கு தான் உள்ள‌து இந்தியா. அதே நேர‌த்தில் இல‌ங்கையை க‌வ‌னியுங்க‌ள் ஏற்க‌ன‌வே கொழும்பு துறைமுக‌ம் 5 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை (Container)கையாளும் வ‌கையில் இருக்கும் பொழுது அவ‌ர்க‌ள் அடுத்து ஹ‌ம்ப‌ன்தோட்டாவில் 20 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை(Container) கையாளும் வ‌கையில் க‌ட்டி முடிக்கும் நிலையில் உள்ள‌து துறைமுக‌ம். அப்ப‌டியே இந்தியாவில் க‌ட்ட‌ப்ப‌டும் துறைமுக‌ங்க‌ளையும், அவ‌ற்றின் சரக்கு பெட்டகங்க‌ளை கையாளும் திற‌னையும் பாருங்க‌ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.

indian ports

indian ports

மேலும் சேது கால்வாயில் அதிக‌ப‌ட்ச‌மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க‌ட‌ல் வ‌ழி போக்குவ‌ர‌த்து செல‌வை குறைக்க‌ எல்லா க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செலவை குறைக்க பெரிய‌ க‌ப்ப‌ல்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. 30,000 DWT அதிக‌மான‌ எடை கொண்ட‌ க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ர்த்த‌க‌ம் ந‌டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக‌ம் வ‌ழியாக‌ ந‌டைபெறும்.

இதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம்,கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப‌ன்னாட்டு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம் கொழும்பு மூல‌ம் ந‌டைபெற்ற‌து, இது மாறுமா?

முதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத‌ற்கு முன்னால் சில‌ வார்த்தைக‌ளை ப‌ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள‌க்க‌த்தை தெரிந்து கொள்ள‌ வேண்டியது அவ‌சிய‌ம்.

சிறிய கப்பல் (Feeder Vessal ) – அதிக‌ப‌ட்ச‌ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற‌ குறிப்பிட்ட‌ இட‌ம் வ‌ரை ம‌ட்டுமே செல்லும்.

shipping_routes

shipping_routes

பெரிய கப்பல் (Mother Vessal) – ஆயிரத்திற்கும் அதிகமான‌ சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.

இடைநிற் மையம் (Trans-shipment Hub) – தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க‌ள் இங்கு நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ப்ப‌ல்க‌ளிலுள்ள‌ சரக்கு பெட்டகங்க‌ள் அங்குள்ள துறைமுகத்தில் இற‌க்க‌ப்ப‌ட்டு பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். மேற்கூறிய‌ நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க‌ள் உள்ள‌ன‌. ஒன்று சிங்க‌ப்பூர், ம‌ற்றொன்று கொழும்பு. சிங்க‌ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க‌ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக‌ளுக்கு செல்லும் பொருட்க‌ளுக்கான‌ இடைநிற் மையங்க‌ளாக‌வும் உள்ள‌து.

இந்தியா, இலங்கை,வ‌ங்க‌ தேச‌ம், சீனா, ஜ‌ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட‌ நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க‌ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும். இதுவே ஐரோப்பிய‌ நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.

இதில் இந்தியாவில் உள்ள‌ மும்பை துறைமுக‌ம் போன்ற‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு வில‌க்கு இந்த‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு பெரிய க‌ப்ப‌ல்க‌ளே வ‌ந்து செல்லும். ச‌ரி ஒரு துறைமுக‌ம் பன்னாட்டு துறைமுக‌மாக‌ மாற‌ என்ன‌ வேண்டும்? ஒன்று பெரிய க‌ப்ப‌ல்க‌ள் வ‌ரும‌ள‌விற்கு க‌டலின் த‌ரைத்த‌ள‌ம் ஆழ‌மாக‌ இருக்க‌ வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக‌ள‌வு சரக்கு பெட்டகங்கள் அந்த‌ துறைமுக‌த்திற்கு வ‌ர‌ வேண்டும்.

இந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த‌விர்த்து கிழ‌க்கிலும், தெற்கிலும் எந்த‌ ஒரு பன்னாட்டு துறைமுக‌மும் இல்லாத‌தால் இந்த‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளிலுருந்து சிறிய‌ க‌ப்ப‌ல்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்து செல்கின்ற‌ன‌. சென்னையிலும், கொச்சினில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ வள்ளார்படம் துறைமுக‌த்திலும் ஒரு பெரிய கப்பல் ம‌ட்டுமே வ‌ந்து போகின்ற‌து.

சேது கால்வாய் பணி முடிந்தாலும் மேற்சொன்ன‌வையே ந‌ட‌க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற‌ம் ம‌ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைக‌ளிலிருந்தும், வ‌ங்க‌தேச‌ க‌ட‌ற்க‌ரையிலிருந்தும் கிள‌ம்பும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையின் கிழ‌க்கு ப‌குதியை சுற்றி கொழும்பு செல்லாம‌ல் தூத்துக்குடி க‌ட‌ல் வ‌ழியாக‌ கொழும்பு செல்லும், இதனால் பயண‌ தூரம் குறையும். அதே ச‌ம‌ய‌ம் மூன்று முக்கிய‌ கார‌ணிக‌ளையும் நாம் க‌ண‌க்கில் கொள்ள‌ வேண்டும்.

1. அதிகபட்சமாக 30,000 DWT (Dead Weight in Tons) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். ஏனென்றால் சேது சமுத்திர கால்வாயின் ஆழ‌ம் 12.8 மீட்ட‌ரே. மேலும் க‌ப்ப‌ல்க‌ள் இந்த‌ கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கு இந்திய‌ அர‌சிற்கு ஒரு குறிப்பிட்ட‌ தொகையை செலுத்த‌ வேண்டும் (தேசிய‌ நெடுஞ்சாலையில் சுங்க‌ வ‌சூல் மைய‌ம் போல)

2.இந்த‌ கால்வாய் ப‌குதியில் அந்த‌ க‌ப்ப‌லின் மாலுமி க‌ப்ப‌லை இய‌க்க‌ கூடாது, இந்த‌ கால்வாய் ப‌குதியின் நீரோட்ட‌ங்க‌ளை அறிந்த‌ ஒரு உள்ளூர் மாலுமி தான் க‌ப்ப‌லை ஓட்ட‌ வேண்டும். இந்த‌ உள்ளூர் மாலுமி ந‌டைமுறைதான் எல்லா துறைமுக‌ங்க‌ளிலும் நடைமுறையில் உள்ளது. ஆக‌வே இந்த‌ உள்ளூர் மாலுமிக்கும் ஒரு குறிப்பிட்ட‌ தொகையை இந்த‌ கால்வாய் வ‌ழி செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் கொடுக்க‌ வேண்டும்.

3.இந்த‌ கால்வாயின் வ‌ழியே ஒரு குறிப்பிட்ட‌ வேக‌த்தில் தான் செல்ல‌ வேண்டும். இலங்கையை சுற்றி கொண்டு செல்லும் போது செல்லும் வேகத்தை விட 30 விழுக்காடு குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.

மேற்கூறிய‌ மூன்றில் முத‌ல் இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளினால் இல‌ங்கையை சுற்றி செல்வ‌த‌ற்கும், சேது கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கும் பெரிய‌ அள‌வில் பொருட் செலவில் வித்தியாச‌ம் இருக்காது என‌ முன்னால் க‌ப்ப‌ற் ப‌டை மாலுமியான‌ பால‌கிருஷ்ண‌ன் கூறியுள்ளர்(3,4,5). மேலும் இவர்‌ பொருட் செலவிற்கான கணக்கீட்டிற்காக‌ சேது கால்வாய் திட்டத்தின் தொடக்க மதிப்பை வைத்திருந்தார். இன்று சேது கால்வாய்‌ திட்ட‌ செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு கூடியுள்ள‌து, அந்த‌ செல‌வை எல்லாம், இந்த‌ கால்வாயில் செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் செலுத்தும் ப‌ண‌த்தின் மூல‌மாக‌வே அடைய‌ வேண்டியிருப்ப‌தால் ஒரு க‌ப்ப‌ல் இந்த‌ கால்வாயில் செல்லுவ‌த‌ற்காக‌ இந்திய‌ அர‌சிற்கு செலுத்த‌ வேண்டிய‌ தொகை அவ‌ர் க‌ண‌க்கிட்ட‌தை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிகமாக‌ இருக்கும். மேலும் சேது கால்வாய் வழியாக செல்வதால் பயண நேரத்திலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது, குறைந்த‌ வேகமும், உள்ளூர் மாலுமியை ஏற்றி, இற‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌மும் ப‌ய‌ண‌ நேரத்தை வெகுவாக‌ பாதிக்கின்ற‌ன‌.

இதை க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ண‌க்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவ‌ர்க‌ள் இல‌ங்கையை சுற்றிக் கொண்டு கொழும்பு செல்வார்க‌ளே த‌விர‌ சேது கால்வாய் வ‌ழியாக‌ அல்ல‌ என்றே அறிய‌ முடிகின்ற‌து. மேலும் தொட‌ர்ச்சியான‌ க‌ட‌ல் நீரோட்ட‌த்தினால் கொண்டு வ‌ந்த‌ கொட்ட‌ப்ப‌டும் ம‌ண‌லை வெளியேற்ற‌ தொடர்ந்து பராமரிப்பு தேவையும் இந்த கால்வாய்க்கு உள்ளது (பொதுவாக எல்லா கடல் கால்வாய்களுக்கும் இந்த பராமரிப்பு தேவை உண்டு) இந்த பராமரிப்புக்குக்காக தூரெடுப்பு(De-Silting) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய வேண்டும். பெரிய‌ அள‌வு வ‌ருவாயே இல்லாம‌ல் ந‌ட்ட‌த்தில் இய‌ங்க‌ப்போகும் ஒரு கால்வாய்க்கு இது மேலும் பொருள் ந‌ட்ட‌த்தையே ஏற்ப‌டுத்தும். இத‌னால் சேது சமுத்திர‌ திட்ட‌ம் பொருளாதார‌ ரீதியாக‌ இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் ஒரு திட்ட‌மே.

தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் வ‌ள‌ம் பெருகுமா ? சூழிய‌லுக்கு என்ன‌ பாதிப்பு ?

சேது சமுத்திரம் திட்டம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளரும், இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் கூறினாலும், உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. நாம் முன்னரே பார்த்தது போல தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது அதிகபட்சமாக 10 விழுக்காடு அளவிற்கு சரக்கு பெட்டகப் போக்குவ‌ர‌த்து அதிக‌ரிக்கும். அதே நேர‌த்தில் தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளின் பெரும் ப‌குதி வருவாய் மீன‌வ‌ர்க‌ள் மூலமாக‌ வ‌ருப‌வையே. சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு க‌ப்ப‌ல்க‌ள் அவ்வ‌ழியாக‌ செல்ல‌த் தொட‌ங்கினால் முத‌லில் அந்த‌ ப‌குதியில் மீன்பிடிப்ப‌து சில‌ வ‌ரைமுறைக‌ளுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டும். அதாவ‌து க‌ப்ப‌ல்க‌ள் போக்குவ‌ர‌த்தினால் மீன‌வ‌ர்க‌ள் சில‌ குறிப்பிட்ட‌ தூர‌ம் வ‌ரை ம‌ட்டுமே சென்று மீன் பிடிக்க‌ நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌டுவார்கள்.

sethu-map

sethu-map

சேது கால்வாய் தோண்ட‌ப்ப‌டும் பாக் நீரிணை ப‌குதியில் 54 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 12.8 மீட்டர் ஆழத்திற்கு ம‌ண‌ல் தோண்ட‌ வேண்டும். இவ்வாறு தோண்ட‌ப்ப‌டும் ம‌ண‌ல் மீத‌முள்ள‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் நாக‌ப்ப‌ட்டின‌த்தில் இருந்து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ரையிலான‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ நுண்ணுயிரிக‌ள் முத‌லில் இற‌க்கும், உணவு ச‌ங்கிலியில் முத‌ல் க‌ண்ணியாக இருக்கும் நுண்ணுயிரிக‌ளின் இற‌ப்பு க‌ட‌லின் உண‌வு ச‌ங்கிலி ச‌ம‌த்துவ‌த்தை கெடுத்து கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ ம‌ற்ற‌ க‌ட‌ல் வாழ் உயிரினங்கள் இற‌ப்ப‌த‌ற்கு வ‌ழி ச‌மைக்கும். அடுத்து இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரையுள்ள‌ ம‌ண‌ல் திட்டுக‌ளை ஒட்டியே ம‌ன்னார் வளைகுடா ப‌குதி உள்ள‌து. இந்த‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியான‌து அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், ப‌வ‌ள‌ப்பாறைகளும்(இது ஒரு‌ க‌ட‌ல் தாவ‌ரம்) இருக்க‌க்கூடிய‌ ஒரு ப‌குதி.இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளே அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், மீன்க‌ளும் இந்த‌ ப‌குதியில் இருக்க‌க்கார‌ண‌ம். இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ள் சூரிய‌ ஒளியின் மூல‌ம் வாழ்ப‌வை. சேது கால்வாய் திட்ட‌த்தில் வ‌ரும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக்க‌ளுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைக‌ள் உள்ள‌ன‌. இந்த‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌மாக‌வே கால்வாய்க்கான‌ வ‌ழிய‌மைக்க‌ முடியும். இந்த‌ திட்ட‌த்தின் அக‌ல‌ம் 300 மீட்ட‌ர்க‌ளே என்றாலும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக‌ளுக்கு கீழே வ‌லுவாக‌ அமைந்துள்ள‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் ஏற்ப‌டும் க‌ல‌ங்கள் த‌ன்மை (Turbidity)என்பது அருகிலுள்ள‌ ம‌ன்னார் வ‌ளைகுடாவையும், அங்குள்ள‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளையும் வெகுவாக‌ப் பாதிக்கும். இத‌னால் அத‌னை சார்ந்து வாழும் எல்லா அரிய வ‌கை உயிரின‌ங்க‌ளையும், மீன்வ‌ள‌த்தையும் பாதிக்கும். அதும‌ட்டுமின்றி வெடி வைத்து ப‌ல நூற்றாண்டு கால‌மாக‌ இருக்கும் சுண்ணாம்பு பாறைக‌ளை அக‌ற்றுவ‌து என்ப‌து ம‌ன்னார் வ‌ளைகுடாவின் அடித்த‌ள‌த்தை வெகுவாக‌ பாதிக்கும்.

கால்வாய் தோண்டுவ‌தினால் ஏற்ப‌டும் சூழ‌ல் பாதிப்பினாலும், தொட‌ர் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்தினாலும் (மேற்கு – கிழ‌க்கு , கிழ‌க்கு- மேற்கு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம்) நாக‌ப்ப‌ட்டின‌ம் முத‌ற்கொண்டு தூத்துக்குடி வ‌ரையிலான‌ மீன்வ‌ள‌ம் அழிவ‌தால், இத‌ன் மூல‌ம் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ அழியும் நிலை ஏற்ப‌டும். இதை மன்மோகன் சிங் அமைத்த அறிவியலாளர் பச்சூரி தலைமையிலான குழு தெளிவாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளது. வழமை போலவே இந்த அறிக்கையை அரசு பரணில் எறித்து விட்டது.(6,7,8,9) தென் மாவ‌ட்ட‌ம் வ‌ள‌மாவ‌த‌ற்கு ப‌திலாக‌ அழியும் நிலைதான் ஏற்ப‌டும், த‌மிழ‌க‌த்தில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ இருக்கும் க‌டும் மின்வெட்டால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ தொழிற்வ‌ளைய‌ங்க‌ளில் உள்ள‌ தொழிற்சாலைக‌ள் மூடும் நிலையில் உள்ள‌ன‌. இந்த‌ நிலையில் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் அழிவ‌தால் ஒட்டுமொத்த‌மாக‌ தென் மாவ‌ட்ட‌ம் பாதிக்க‌ப்ப‌டும்.

இந்த‌ திட்ட‌த்தின் இப்போதைய‌ நிலை என்ன‌? த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளின் இந்த‌ திட்ட‌த்தை ப‌ற்றிய‌ நிலை என்ன‌?

இந்த‌ திட்டத்திற்கு 2007ல் உச்ச‌நீதிம‌ன்றம் இடைக்கால‌ த‌டை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த‌ ஆண்டு ஜெ தலைமையிலான த‌மிழ‌க‌ அர‌சு சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தை நிறுத்த‌க்கோரி ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌து(10). மதமாற்ற தடை சட்டம் போன்ற‌வை மூலம் ஜெய‌ல‌லிதாவின் இந்துத்துவ‌ பாச‌ம் எல்லோருக்குமே வெளிப்ப‌டையாக‌ தெரிந்த‌து தான். அதே போல‌ இங்கும் இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரை உள்ள‌ ம‌ண‌ல் திட்டை இந்துக‌ள் இராம‌ர் பால‌ம் என்று புராண கதைகளை ஆதாரமாகக் கொண்டு மூடநம்பிக்கை (இதை ஆதாம் பாலம் என்றும் சிலர் நம்புகின்றனர்) கொண்டிருப்பதே இந்த‌ திட்ட‌த்தை இப்பொழுது ஜெ கைவிட‌ சொல்ல‌க்காரணம், அதை வெளிப்ப‌டையாக‌ சொல்லாம‌ல் மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்தையும், சூழ‌லையும் கார‌ணமாக‌ காட்டியுள்ளார். கூட‌ங்குள‌த்தில் சூழ‌லையும், மீன‌வ‌ர்க‌ளையும் எப்ப‌டி ஜெய‌ல‌லிதா காத்துவ‌ருகின்றார் என்ப‌து நாம் அறியாத‌த‌ல்ல‌… தி.மு.க‌ இந்த‌ திட்ட‌த்தை ஆத‌ரிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம் இது த‌மிழ‌னின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வு என்று கூறி வந்தாலும், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சேது கால்வாய் வழி செல்லக்கூடிய சிறிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு முத‌லாளிகளாக‌ இருப்பதும் ஒரு காரணம்.

மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்திற்கும், சூழ‌லுக்கும் பேர‌ழிவையும், பொருளாதார‌ அள‌வில் எந்த‌ ஒரு ப‌ய‌னும் அற்ற‌ சேது கால்வாய்த்‌ திட்டத்தை ஒட்டுமொத்த‌மாக‌ கைவிட‌ வேண்டும் என்பதே இதுவே சனநாயக சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

நன்றி – ஆர்.ஆர்.சிறீனிவாசன், இராகேஷ், விஜய்.

நற்றமிழன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

இந்த பதிவு சேவ் தமிழ்சு இயக்க வலைப்பூவில் முன்னரே வெளியிடப்பட்டது

தரவுகள்:

1) http://sethusamudram.gov.in/projectstatus/status.htm
2) http://www.business-standard.com/article/economy-policy/shipping-ministry-to-double-cost-estimates-of-sethusamudram-project-110010500015_1.html
3) http://sethusamudram.info/content/view/62/30/
4) http://timesofindia.indiatimes.com/home/opinion/sa-aiyar/swaminomics/150-year-dream-for-150-year-old-ships/articleshow/2393766.cms?
5) http://sethusamudram.info/content/view/50/30/
6) http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2285503/Pachauri-committee-punctures-holes-government-claims-controversial-Sethusamudram-canal-project.html
7) http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/pachauri-warns-of-ecological-consequences-on-sethusamudram/article4591153.ece
8) http://sethusamudram.info/content/view/36/27/
9) http://sethusamudram.info/content/view/30/27/
10) http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-plea-to-scrap-sethusamudram-project/article4667030.ece

பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..


சென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் திமுக எதிர்ப்பலை). இந்த தேர்தலுக்கு பின்னர் திராவிட கட்சிகளை சாடுவதும், தமிழன் இங்கே ஆளவில்லை என்று கூறுவதுமாக இருந்து வந்தது பா.ம.க. சென்ற ஆண்டு சித்திரை முழு நிலவு விழாவில் தான் சாதிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கான “நாடக காதல்” அரசியலை கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது. நாடக காதல் என்றால் என்ன? பா.ம.க, மற்ற சாதி சங்கங்கள், கட்சிகளை பொறுத்தவரை ஒரே வர்க்க, சாதி நிலையில் இல்லாத எல்லா காதலுமே நாடக காதல், குறிப்பாக தலித் ஆண்கள் வன்னியர் சாதி பெண்களை காதலிப்பது தான் நாடக காதல். எல்லா வேடமும் போட்டு பார்த்து ஒன்றும் பயனில்லை என்ற பின்னர் தான் தனது உண்மை முகமான சாதீயத்தை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது பா.ம.க.

சாதீய கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? வன்கொடுமை சட்டமும், காதல் திருமணமும் தான் இன்றும் ஆதிக்க சாதிகளுக்கு வேப்பங்காயாக கசப்பது, ஆகவே அந்த இரண்டையும் கையில் எடுப்பதன் மூலம் சாதீய கட்சிகளை ஒன்று சேர்க்க தொடங்கினார் இராமதாஸ். அதற்கு பிறகு ஊர் ஊராக சென்று காதல் திருமணங்களை குறிப்பாக மாற்று சாதியில் குறிப்பாக தலித்களுடன் நடக்கும் திருமணங்களை எல்லாம் “நாடகக் காதல்” என்றும், அவர்கள் சொத்தை மட்டுமே காதலிக்கின்றார்கள் என்றும், பெண்களை ஏமாற்றிவிடுகின்றார்கள் என்றும், வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார் இராமதாஸ். இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு கூட்டத்தில் காடு வெட்டி குரு, இராமதாஸ் பேசிய வன்முறையை தூண்டும் பேச்சுகளின் வழியே தூண்டப்பட்ட பா.ம.கவினரும், வன்னிய சாதி சங்கத்தை சேர்ந்தவர்களும் தர்மபுரி, நாயக்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தலித் வீடுகளை திட்டமிட்டு தாக்கினார்கள்.இதற்கு காதல் திருமணம் தான் காரணம் என்ற காரணம் கற்பிக்கின்றனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. அதற்குள் இந்த ஆண்டு கூட்டமும் அவர்கள் திட்டமிட்ட படியே நடந்தேறி விட்டது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மட்டுமில்லாமல் அவர்கள் ஏற்கனவே திரட்டிய மற்ற சாதி சங்கங்களின், சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சாதீய நஞ்சை கக்கியுள்ளார்கள். இது ஒருபுறம் என்றால் இந்த கூட்டத்திற்கு வரும் வழியிலேயே பா.ம.க உறுப்பினர்கள் மரக்காணம் தலித் காலணியிலும், இஸ்லாமியர் பெருன்பான்மையாக வாழும் கூனிமேடு பகுதியிலும் திட்டமிட்டு வன்முறையை தூண்டியுள்ளார்கள். இந்த இரண்டையும் விரிவாக பார்ப்போம்.

மாமல்லபுரம் சித்திரை திருவிழா –

சென்ற ஆண்டு காடு வெட்டி குரு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதை சுட்டிக்காட்டி இந்த கூட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இந்த மனுவை விசாரித்த் நீதிமன்றம் முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க, காவல்துறை 18 விதிமுறைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கி இந்த ஆண்டும் சாதீய பிரச்சனை தொடர அச்சாரம் அளித்தது. இந்த மாநாட்டில் காடு வெட்டி குருவும், இராமதாஸீம் சென்ற ஆண்டை போலவே தலித் எதிர்ப்பு பேச்சுகளையும், காதல் திருமண எதிர்ப்பு பேச்சுகளையும் பேசியுள்ளனர். இதோ சில உதாரணங்கள்….

காடு வெட்டி குருவின் நஞ்சைக் கக்கும் பேச்சு-

“கலவரம் செய்வது எங்கள் நோக்கமல்ல, நாங்கள் கலவரம் செய்தால் இந்த தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்கு காவல்துறையும் பத்தாது”….

“நான் என்ன மோளம்(பறை) அடிக்கிற சாதியா? மோளம் அடிச்சுட்டு உட்காந்து இருக்க”….

“உண்மையிலே கேட்கிறேன் உனக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் வன்னியன்ட இருக்கா, இருந்துச்சுன்னா வீச்சருவாள்ல காட்டாத, வாக்கு சீட்டுல காட்டு, 2016ல் தமிழகத்தில் வன்னியர்கள் ஆட்சியமைக்க வேண்டும். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”

ramdoss copy

இராமதாஸின் நஞ்சைக் கக்கும் பேச்சு-

“நாங்க அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்திற்கு கருப்பு கொடி காட்டும் போது அரசகுமார் கண் சிமிட்டினால் என்னாகும். எஸ்.அலங்காரம் கண் சிமிட்டினால் என்னாகும், கலவரம் தான். நாங்க கலவரம் பண்ணினா தாங்க மாட்டிங்க……”

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.

காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது.”

இதுவரை இராமதாசோ, பாட்டாளி மக்கள் கட்சியினரோ தமிழகத்தின் பிரச்சனைகளான காவிரி பிரச்சனைக்கோ, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கோ, கூடங்குளம் பிரச்சனைக்கோ கண்ணசைத்திருக்கிறார்களா, அல்லது இந்த வீரியத்துடன் அரசை எதிர்த்திருக்கின்றார்களா? அல்லது தமிழீழத்தில் தினம், தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடினார்களா?. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடலூர் மாவட்டத்தில் பல வேதியியல், சாராய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்குள்ள வளங்களையும், மக்களையும் பாழாக்குகின்றனரே அதை எதிர்த்தோ, அல்லது இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாய தொழிற்சாலையை எதிர்த்து போராடியிருக்கின்றனரா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. பா.ம.க, வன்னியர் சங்கத்தின் நோக்கம் ஒன்று தான் அவர்களுக்கு தேவை ஒரு அமைச்சர்/மந்திரி பதவி அது இந்த மாநாட்டில் குரு, இராமதாஸ் பேசியதில் இருந்து நன்றாகவே தெரிகின்றது. அதற்காக தான் இன்று சாதீ அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை பெரும்பான்மையான வன்னிய மக்கள் புரிந்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

சாதீ அரசியலை கண்டு கண்ணை மூடிக்கொள்ளும் தமிழக அரசு –

தமிழக அரசு இன்னும் குரு, இராமதாஸ் போன்றவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல், கூட்டத்தை தாமதமாக நடத்தினார்கள் என்று ஒரு வழக்கு போட்டு கைது செய்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த சாதீ அரசியல் விளையாட்டை அரசே ஊக்குவித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் இராமதாஸ் மேல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று ஒரு வழக்கும் போட்டுள்ளது, உண்மையில் இராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விதைக்கும் வன்முறையையும், தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அவர்கள் உருவாக்கும் காழ்ப்புணர்ச்சியை தடுத்து அரசு எதிர் பிரச்சாரம் செய்யாமல் (கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அரசு பிரச்சாரம் செய்ததை நினைவில் கொள்க), அவர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என வழக்கு பதிவு செய்து சாதீ அரசியலுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்து, மக்கள் விரோத போக்கை ஒரே நேரத்தில் கடைபிடித்து வருகின்றது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. கூடங்குளத்தில் 55,000த்திற்கும் அதிகமான வழக்குகளையும், இந்திய வரலாற்றிலேயே அதிகமான தேச துரோக வழக்குகளையும் போட்டுள்ள காவல்துறைக்கு, காடு வெட்டி குரு, இராமதாஸின் மேல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வது இதுவரை இயலாமலே உள்ளது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆமையை விட மோசமான வேகத்தில் சென்று கொண்டுள்ளது, இதை கூட தடை செய்ய வேண்டும், அல்லது திருத்த வேண்டும் என்று கோருகின்றது இராமதாஸ் தலைமையிலான சாதிய கூட்டணி.

மரக்காணம் வன்முறையும், கண்ணை மூடிக்கொண்ட தமிழக அரசும்

இது ஒருபுறம் என்றால் இந்த சித்திரை முழு நிலவு விழாவிற்கு வந்த பா.ம.க-வினர் உருட்டு கட்டை(களி), அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர், மேலும் வரும் வழியெங்கும் மது அருந்திவிட்டு பெண்கள் முன்னர் கைலியை தூக்கிகாட்டி ஆபாசமாக நடந்துள்ளனர், அதுமட்டுமின்றி திட்டமிட்டு மரக்காணம் தலித் காலணியிலும், கூனிமேடு இசுலாமியர்கள் வாழும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி, வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளார்கள். இந்த ஆண்டு நடக்க இருக்கும் கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசிற்கு வழங்கியது நீதிமன்றம். இந்த கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதற்கு முன்னால் நடந்த கூட்டங்களை கணக்கில் வைத்து எவ்வளவு பேர் வருவார்கள், என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதை காவல்துறை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் இவை எதையுமே செய்யவில்லை என்பதையே நடந்த வன்முறை காட்டுகின்றது.

ஒரு கூட்டத்திற்கு செல்வோர் உருட்டு கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் செல்வதை ஒரு காவல்துறை சோதனை சாவடி வைத்து எல்லா வாகனங்களையும் சோதனை செய்ய முடியாதா? இல்லை இப்படி ஒரு வன்முறை நடக்கவேண்டும், மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்த வேண்டும் என காவல் துறையும், அதை வழிநடத்தும் அரசும் விரும்புகின்றதா?. கூடங்குளத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டு, அதிரடி படை, துணை இராணுவம், கடலோரக் காவல் படை, வான் படை போன்றவற்றை களத்தில் இறக்கும் தமிழக காவல்துறைக்கு இந்த திட்டமிட்ட கூட்டத்தை ஒழுங்கப்படுத்த முடியாது என ஜெயலலிதா அவர்கள் கூறுவதும், உணர்ச்சி கொந்தளிப்பால் கொலைகள் நடைபெறுவதால் அவற்றை காவல்துறை தடுக்க முடியாது என அவர் அறிக்கை விடுவதும், காவல்துறை மக்கள் போராட்டங்களை தடுக்கவும், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மட்டுமே,மற்ற படி திட்டமிட்டு சாதிய, மத வன்முறைகளை தடுக்கவோ, மக்களை பாதுகாக்கவோ கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஆளும் கட்சி ஆதரவு படையே காவல்துறை, மக்களை காப்பதற்கல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் காவல்துறையால் கொலைகளை தடுக்க முடியாது என கூறுவது பலத்த ஐயங்களை எழுப்புகின்றது, கொலையை தடுக்க முடியாத, மக்களை காவல் காக்க முடியாத ஒரு அமைப்பை(காவல் துறை) எதற்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தி நடத்த வேண்டும்? வெறுமனே மக்கள் போராட்டங்களை கலைக்கவும், மக்களை அடித்து துன்புறுத்துவதற்காகவுமா? என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றது.

Koodankulam-

சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இயற்கை வளத்தை,தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ,மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்தும் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை மக்கள் மேல் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவான 55,000த்திற்கும் அதிகமான வழக்கும், அவர்கள் மீது தொடர்ச்சியாக வன்முறையும், அடக்குமுறையும் ஏவும் அரசு அதே சமயம் சமூகத்தை பின்னிழுக்கும் சாதீய அரசியல்வாதிகளின் மேல் கரிசனம் காட்டுகின்றது. அரச நிறுவனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள முன்னுக்கு செல்வதை தடுக்கவும் செய்யும், அதே சமயம் பின்னுக்கு இழுப்பதை ஆதரிக்கவும் செய்யும். அரசுக்கு தேவை தன்னை பாதுகாத்து கொள்வது மட்டுமே.

மேலும் சென்ற ஆண்டு பசும்பொன்.முத்துராமலிங்கம் நினைவேந்தலுக்கு சென்றவர்கள் கொல்லப்பட்டதாகட்டும், தர்மபுரி வன்முறையாகட்டும், இந்த மரக்காணம் வன்முறையாகட்டும் எல்லாவற்றையுமே காவல்துறையால் தடுத்திருக்க முடியும் என்பதையே அந்த வன்முறைகளை ஆராய சென்ற எல்லா உண்மை அறியும் குழு அறிக்கைகளும் காட்டுகின்றது. ஆகஸ்டுக்கு பின்னரான நான்கு மாதங்களும் தெற்கு மாவட்டங்களான சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்கள் எல்லா ஆண்டுமே பதட்டம் நிறைந்ததாகவே உள்ளது. இங்கு பதட்டத்தை தணிக்கவும் , சமூக நல்லிணக்கம் நிகழும் இதுவரை ஏதாவது நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதா என்றால் இல்லை என்றால் பெயருக்கு அமைதி கூட்டங்களையும், நல்லிணக்க கூட்டங்களையுமே நடத்தியுள்ளன என்ற பதிலே வருகின்றது. சாதிய அடிப்படையில் வன்முறைகள் நிகழ காவல் துறையின் அலட்சிய போக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.மக்களிடையே சாதி அடிப்படையிலான பகை, பதட்டமான சூழல் நிலவுவது,மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி,மக்கள் எந்த ஒரு பொது பிரச்சினைக்கும் ஒன்று படுவதை தடுக்க என அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே போன்றதொரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வரும் பா.ம.க-வின் சாதீய அரசியலை கண்டிக்காமல், அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல் இங்கும் அது போல ஒரு பதட்டமான சூழ்நிலையை அரசு திட்டமிட்டே ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகின்றது. சமூகம் நல்லிணக்கமாக இருந்தால் மக்கள் இங்கு உள்ள உண்மையான பிரச்சனைகளான மின்வெட்டு , விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்றவற்றில் ஒன்று சேர்ந்து போராடி தங்களுக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அரசு திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான வேலைகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.

நடந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சுருங்க கூறுவது என்னவென்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ம.க-வும் சாதி கட்சிகளும் சாதீய அரசியலை கையில் எடுத்துள்ளன. ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. இல்லை அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என கருதுவோருக்காக இறுதியாக ஒரே ஒரு தகவல் சென்ற ஆண்டு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த வன்முறை மீதான குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்ட பல முதன்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகவும், மேலும் பல வன்முறைகளை அந்த பகுதியில் தூண்டியும் வருகின்றனர் என்பது தான் கள நிலவரம். அரசியல் அதிகாரத்திற்காக சாதீ அரசியலை பயன்படுத்தும் பா.ம.க போன்ற கட்சிகளை இங்குள்ள இயக்கங்கள்ம் அரசியல் கட்சிகள் தனிமைப்படுத்த வேண்டும். இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள தமிழீழ, மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நன்றி – வினவு, ஆனந்த விகடன், Dia Nuke.

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்

This post is already published in Savetamil blog.

http://save-tamils.blogspot.in/2013/05/blog-post_7.html

அணு உலையில் ஊழல் !!!!


 

 
இந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் முதல் ஊழலில் காட்டிய அக்கறையை இரண்டாவது ஊழலில் எந்த ஒரு ஊடகமும் காட்டவில்லை. வழமை போல ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த முதல் ஊழலைப் பற்றி மட்டுமே பொது மக்களும், பாராளுமன்றமும் பேசியது, விவாதம் செய்தது…. இரண்டாவது ஊழல் மெல்ல, மெல்ல இப்பொழுது தான், அதுவும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர். திரு. கோபால கிருஷ்ணன் பேசிய பின்னர் தான் இந்தியாவில் உள்ள சில இணைய ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன(1). ஆனால் இன்னமும் எந்த ஒரு 24×7 செய்தி ஊடகமோ, அச்சு ஊடகமோ இந்த ஊழல் பற்றிய செய்தியை வெளியிடவில்லை(சில நாளிதழ்கள் மட்டும் திரு.கோபால கிருஷ்ணன் பேட்டியை மட்டும் வெளியிட்டுள்ளது(2)). அது என்ன ஊழல், ஏன் இதுவரை எந்த ஒரு ஊடகமும் அந்த ஊழல் செய்தியை வெளியிடவில்லை என நாம் பார்ப்போம்…..

கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும்  முதலிரண்டு அணு உலைகளும் இரசியாவினால் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அணு உலையை கட்டிவரும் இரசிய நிறுவனம் “ரோசாடாம்”(Rosatom) பல பாகங்களை தனது துணை நிறுவனமான சியோ-பொடல்ஸ்க்(Zio-Podalsk) என்ற நிறுவனத்தில் இருந்து வாங்குகின்றது. இந்த நிறுவனம் தான் தயாரிக்கும் பாகங்களுக்காக தரக்குறைவான இரும்பை வாங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் அதிக இலாபம் பார்க்க முயன்றுள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள இரசிய தேசிய ஊழல் தடுப்பாணையம் இந்த சியோ-பொடல்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநரை கைது செய்து விசாரித்து வருகின்றது.(3) இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இந்தியா, சீனா, பல்கேரியா, இரான் நாடுகளில் கட்டப்படும் அணு உலையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என இதுவரை நடந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி முதன்மை நிறுவனமான “ரோசாடாமும்” பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.(4)

இந்த ஊழல் செய்தியைத் தொடர்ந்து சீனா தன்நாட்டில் இரசியாவால் கட்டப்பட்டுவரும் அணு உலைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய அணு உலை ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் நிர்வாக தலைவரான திரு.கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்(2). அதே போல இந்தியாவும் கூடங்குளம் அணு உலையை ஒரு சுயாதீன குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நம் வாசகர்களுக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். “இப்பொழுது தான் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடக்குதே, இதை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு பெரிதாக சொல்கின்றீர்கள்”. இந்தியாவில் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடந்தாலும், பாதுகாப்பு துறையில், மக்களுக்கான பாதுகாப்பில் ஊழல் என்பது மிகப்பெரிய விளைவை உண்டாக்கும். வாகனம் ஓட்டும் பொழுது நாம் போடும் தலை கவசம் தரமற்றதாக இருந்தால் நம் உயிரையே காவு வாங்கக்கூடியது. அதுவே அணு உலையில் உள்ள பாகங்கள் தரமற்ற இரும்பினால் தயாரிக்கப்பட்டவையாக இருந்தால், அது அணு உலை வெடிப்பு வரை இட்டுச்செல்லக் கூடியது. அது சிறுவெடிப்பாயினும் அதன் விளைவுகள் வாகன விபத்து போலன்று, சொல்லிலடங்கா….

(செர்னோபில் அணு உலை விபத்தினால் மனிதர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட அதை சுற்றியுள்ள பகுதிகள்)
இங்கே பலர் அணு உலை விபத்துகளை தினமும் நிகழும் கார், பேருந்து விபத்துடன் ஒப்பிடுகின்றார்கள். ஒரு சிறு அணு உலை வெடிப்பினால் உண்டாகும் அணுக் கசிவு அணு உலை, அதனை சுற்றியிருக்கும் பகுதியையும் சேர்த்து குறைந்தது 20 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை மனிதர்களால் பயன்படுத்த முடியா நிலைக்கு ஆளாக்கும். இந்தியா போன்ற சன நெருக்கடி மிகுந்த நாட்டில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி என்பது மிகப்பெரியது.  அது மட்டுமின்றி அணு உலை வெடிப்பு மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அப்பொழுது வாழும் உயிர்களை மட்டுமில்லாமல், தலைமுறை தாண்டி அதற்கு பின்னால் பிறக்கும் தலைமுறைகளையும் பாதிக்கும். இவை எதுவும் தினமும் நிகழும் பேருந்து அல்லது கார் விபத்தினால் ஏற்படாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் அணு உலை வெடிப்பு இந்திய ஒன்றியத்தின் தென் தமிழக,கேரள பகுதி மட்டுமன்றி அண்டை தேசமான இலங்கையின் வட பகுதி வரை வாழும் மக்களை பேரழிவிற்குள்ளாக்கும். மேலும் சென்னையில் குப்பைகள் சேகரிக்கும் இடமான பள்ளிக்கருணையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ, சிவகாசி வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ தொழில்நுட்பம் இல்லாமல் மழை வந்தால் தான் தீ அணையும் என்று சொன்ன நம் அரசின் அதிகாரிகளிடம் அணு உலை வெடித்தால் எடுக்க வேண்டிய பேரழிவு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வோ, தொழில்நுட்பமோ இருக்காது என்பது தான் உண்மை(6), போபாலில் நச்சு வாயு கசிந்த பொழுது அதன் இயக்குநர். ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அரச விமானத்தில் பறந்தது போலவே, அணு உலையில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் இரசிய அணு விஞ்ஞானிகளும் பறந்து விடுவார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிபேரலை(T-Sunami)எச்சரிக்கை விடப்பட்ட போது கூடங்குளம் அணு உலையில் இருந்து இரசிய விஞ்ஞானிகள் முதல் ஆளாக வெளியேறியதை அன்றைய நாளிதழ்களில் நாம் எல்லோரும் படித்தோம். இந்த நிலையில் இன்னமும் அணு உலை பேரழிவு பாதுகாப்பு சட்டத்தில் இந்த இரண்டு அணு உலைகளையும் சேர்க்கக்கூடாது என்றும், இனி வரும் அணு உலைகளும் இந்த சட்டத்தில் சேர்க்கப்படாது என்றும் இரசிய அரசு தெளிவாக கூறியுள்ளது. அதாவது இலாபம் வந்தால் அவர்களுக்கு, இழப்பு என்று ஏதாவது வந்தால் அது மக்களுக்கு. அதாவது “வெல்லம் திங்கறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்” என்பது போல…

இனி ஊடகங்கள் இந்த ஊழல் பிரச்சனையை ஏன் மற்ற ஊழல்களைப் போல பெரிது படுத்தவில்லை என பார்போம். சில நேரங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் சில உண்மைகளும் வரும், அது போல “2012” என்ற அறிவியல் அடிப்படை சார்ந்த ஹாலிவுட் திரைப்படத்தை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், அந்த படத்தில் வரவிருக்கும் இயற்கை பேரழிவுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம் வரிசையாக அமெரிக்க ஐக்கிய அரச நிர்வாகத்தால் திட்டமிட்டு கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் விபத்துகளாக நாளிதழ்களில் செய்தியாக வரும். அதே போல இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துவருகின்றார்கள்(5). இதையும் கூட சூழியல் ஆதரவாளர்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தான் வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கின்றது. அணு உலை மேல் காதல் கொண்டுள்ள எந்த ஊடகமும் இதுவரை இந்த விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக எந்த ஒரு பெரிய ஊடகமும் கேள்வியையோ, ஒரு விவாதமாகவோ எழுப்பவில்லை. ஒரு வேளை காதல் அணு உலை மீது மட்டும்தானோ, அணு விஞ்ஞானிகள் மீது இல்லையோ ? இந்த விஞ்ஞானிகளும் “2012” திரைப்படத்தில் காட்டப்பட்டது போல வரவிருக்கும் பிரச்சனைகளை முன்னுணர்ந்து வெளியில் கொண்டு வர எண்ணியிருக்கலாம் ?.  அதுமட்டுமின்றி இந்திய அளவில் கடந்த 600 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அணு உலை தொடர்பாக அவர்கள் எழுப்பிவரும் கேள்விகளை மையமாக வைத்தும் எந்த செய்தி ஊடகமும் விவாதத்தை நடத்தவில்லை (சில செய்தி நாளிதழ்கள் தவிர). இவர்கள் செய்வது எல்லாம் அரச நிர்வாகத்தை இயக்கி வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது மட்டுமே . இந்தியாவில் இதுவரை கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.ஆறு இலட்சம் கோடி என்பதையும், அந்த சந்தைக்காக அணு உலை மாஃபியாவும், முதலாளிகளும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதனது தொடர்ச்சியாகவே இந்திய, தமிழக ஊடகங்களும், ஆளும், எதிர் கட்சிகளும் இந்த அணு உலை ஊழலில் கள்ள மௌனத்தை கடைபிடிக்கின்றன. ஊடகங்கள் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதிலிருந்து விலகி அரசு செய்யும் தவறுகளை மறைப்பதில் முதலாவது தூணாக இருக்கின்றது.
மீண்டும் இந்த அணு உலை ஊழல் பிரச்சனைக்கு திரும்புவோம். ஊழலில் சிக்கியுள்ள இரசிய நிறுவனங்களால் கட்டிமுடிக்கப்பட்ட கூடங்குளம் அணு உலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய “ஒரு இந்திய சுயாதீன குழு”(Indipendant Indian Team) (இந்த குழுவில் முன்னாள் அணு உலை ஒழுங்காற்று ஆணையத்தின் இயக்குநர் திரு.கோபால கிருஷ்ணன் போன்றோர்களையும் சேர்த்தால் அந்த குழுவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அரசு அமைத்த குழுக்களில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய அணு உலை நிர்வாகத்தை சேர்ந்தவர்களாகவும், அணு உலைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுமாக இருந்தார்கள்) அமைத்து, அணு உலையை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அணு உலையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இந்த கட்சி, அந்த கட்சி என்ற பேதமின்றி எல்லோரும் முன்வைக்க வேண்டும், அதே போல ஏன் ஊடகங்கள் அனைத்தும் இந்த ஊழலை மறைத்தன என்ற கேள்வியை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், இல்லையெனில் இலங்கை அரசு 2009ல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பொழுது எப்படி கண்மூடி, வாய் பொத்தி, செவி கேளாமல் இருந்தார்களோ அதே போல, நாளை இந்த ஊழலினால் அணு உலை வெடித்து ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அதையும் இவர்கள் நிலநடுக்கம் அல்லது புவியதிர்ச்சி ஏற்பட்டே விபத்து நடந்தது என மறைக்கக்கூடும். ஊழல் புரிந்தவர்களுக்கு துணை போகின்றவர்களும் ஊழல் குற்றவாளிகளே…

மக்கள் போராட்டம், மனித நேயம் ஓங்குக…

ப.நற்றமிழன்
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)
 
This post is already published in Save Tamils Movement Blog spot.

2G மறு ஏலமும், சில கேள்விகளும்…….


       

அண்மையில் நடந்த முடிந்துள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2G) மறு ஏலத்தில் வெறும் 22 உரிமம் மட்டுமே(முன்பு விற்ற 122 உரிமத்திற்கான மறு ஏலம்) விற்பனையாகி அரசுக்கு ரூபாய்- 9,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது(1). இதனால் இன்று பலரும் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். முதலில் 2G ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க-வும், கழக உடன்பிறப்புகளும் 1,74,000 கோடி ஊழல் என்பது பொய், கட்டுக்கதை. அன்று எங்கள் மேல் குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் இன்று எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள், நாங்கள்(திமுக) அன்றே கூறியது போல 2G ஏலத்தில்(2008ல்நடந்த முதல் ஏலம்) ஊழலே நடைபெற வில்லை என்கிறார்கள். அடுத்ததாக மத்திய அரசை (காங்கிரசு) சார்ந்த அமைச்சர்கள் எல்லாம் நாங்கள் முன்னரே கூறியது போல மத்திய தலைமை த‌ணிக்கை அலுவலகம் செய்த கணக்கீடு தவறானது அவர்கள் இன்று மன்னிப்பு கேட்க வேண்டும், பொன் முட்டையிடும் வாத்தை அவர்கள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்கள். அடுத்த‌தாக ஊட‌க‌ங்க‌ள் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமும்(TROI), ம‌த்திய த‌ணிக்கை அலுவ‌ல‌க‌மும், உச்ச நீதிம‌ன்றமும் சேர்ந்து இந்திய ம‌ண்ணிற்கு வ‌ர‌விருந்த மூல‌த‌ன‌த்தை த‌டுத்து விட்டார்க‌ள் என குற்ற‌ம் சாட்டுகின்றார்க‌ள்.

   ச‌ரி, இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைப்பற்றி நாம் இனி பார்ப்போம்.

  2008ல் 2G ஏல‌ம் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி.  22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும்? இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான வ‌ருவாய் ரூ.431.81 கோடி(9,500/22). இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக ரூ.52681(431×122 =  2008ல் 2G ஏல‌ம் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி.  22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும்? இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான‌ வ‌ருவாய் ரூ.431.81 கோடி. இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக‌ ரூ.52681 கோடி(122×431.81=52681) அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும்.

 

இதில் அன்று 2G-க்கு இருந்த சந்தை தேவை(Demand) (அன்றே 43விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்கப்பட்டன என்பதை நினைவுகூறவும்), இன்று 3G-யே மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின் 2G-க்கு உள்ள சந்தையின் தேவை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் அன்று ஏன் தலைமை தணிக்கை அலுவலகம் 1,76,500 கோடி இழப்பீடு என்ற சொன்னதன் காரணம் புரியும். ஆனால் திமுகவினரும், காங்கிரசும் கூறுவது போல இழப்பீடே இல்லை, ஊழலே நடக்கவில்லை என்பது “வெள்ளை காக்கா” வானத்தில் பறப்பது போன்றதே. ஏனென்றால் நாம் முன்பே பார்த்தது போல 2008 ஏலத்தில் உரிமங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் இன்னொரு சான்றையும் நாம் பார்க்கலாம். சுவான் நிறுவனம் அன்று ரூ1,531 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை(45%) ரூ4,200 கோடிக்கு விற்றது ! இதே போல யுனிடெக் ரூ.1661 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை(60%) ரூ6,000 கோடிக்கு விற்றது !(4,5,6). இதிலிருந்து ந‌ம‌க்கு தெரிய‌ வ‌ருவ‌து 2G ஏல‌த்தில் ஊழ‌லே ந‌ட‌க்கவில்லை, ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கை அலுவ‌ல‌க‌த்தின் க‌ண‌க்கீடு த‌வ‌று என திமுகவும், காங்கிரசும் கூறிவருவது முழு பொய், தாங்க‌ள் செய்த‌ குற்ற‌ங்க‌ளை ம‌றைக்க‌ செய்யும் முய‌ற்சியே.

இப்பொழுது ஊடகங்களின் குற்றச்சாட்டைப் பார்ப்போம். 2008ல் 122 உரிமம் விற்றது, இப்பொழுது வெறும் 22 பகுதிகளுக்கான உரிமம் மட்டும் விற்றுள்ளது, இதற்கு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான விலைநிர்ணயமே காரணம், என்பதே அக்குற்றச்சாட்டு. நாம் முன்னரே பார்த்த படி 2008ல் நடந்த முதல் ஏலத்திலே வெறும் 43விழுக்காடு உரிமங்களே விற்றன, அதாவது மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள். இன்று மறு ஏலம் நடைபெற்றது முன்னர் விற்ற 122 உரிமங்களுக்கு மட்டுமே. 2008ல் 481கோடி மதிப்புள்ள உரிமத்தை(மறு ஏலத்தில் ஒரு உரிமம் விற்பனையான தொகை. தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் இதை விட அதிகமான தொகையை நிர்ணயிக்க கோரியிருந்தது)வெறும் 76கோடிக்கு (9281/122 = 76) விற்ற பொழுதே 43விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 2008ற்கு பிறகு 2G-யின்  சந்தை தேவை குறைந்து விட்ட இன்றைய நிலையில், உரிமத்தின் உண்மையான விலையில் விற்கும் பொழுது இந்த அள‌விற்கு விற்றது, ஒப்புமை அடிப்படையில் சரியான ஒன்றே.

 

அன்று(2008ல்) ஊழல், ஊழல் என்று சொன்ன ஊடகங்கள், இன்று அப்ப‌டியே நேர்மாறாக‌ ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌த்தையும், தொலைபேசி ஒழுங்குமுறை ஆணைய‌த்தையும் எந்த‌ வித‌ அடிப்ப‌டையுமே இல்லாமல் குற்ற‌ம் சாட்டுவ‌து, அவ‌ர்க‌ளின் முத‌லாளித்துவ‌ சார்பை அப்ப‌ட்ட‌மாக‌ வெளிப்ப‌டுத்துகின்ற‌து. இந்த ஊழ‌ல் செய்த திமுக‌வை அப்ப‌ழுக்க‌ற்ற‌வ‌ர்க‌ளாக காட்டும் உடன்பிறப்புகளின் த‌ன்முனைப்பு அவ‌ர்க‌ளின் நேர்மையின்மையை ப‌றைசாற்றுகின்றது, இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்குண்டு என்பது தனிக்கதை. அதே போல அன்றிலிருந்து இன்று வரை ம‌த்திய தலைமை த‌ணிக்கைய‌க‌த்தின் கணக்கீடு எல்லாம் தவறு என பாயும் காங்கிர‌சு(ம‌த்திய அர‌சு) அரசின் ப‌ரிசுத்த‌த்தை ப‌றைசாற்றுகின்ற‌து. அதுமட்டுமின்றி காங்கிரசில் உள்ளவர்கள் இந்த மறு ஏலத்திற்கு பின்னர் கூறும் கருத்தான “பொன் முட்டையிடும் வாத்தை” கொன்றுவிட்டீர்களே என்ற ஆதங்கத்தின் உண்மையான பொருள் இதோ,

“ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MOU – Memorundom of Understanding) கட்சியில்(அரசில்) உள்ளவர்களின் சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பின்னரே இங்கு கையெழுத்தாகின்றது” – முன்னாள் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர். இராம் மோகன்.

   இக்க‌ட்டுரையில் பெரும்பாலும் திமுக‌, காங்கிர‌சு க‌ட்சிக‌ளை ம‌ட்டுமே கூறியுள்ள‌தால் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளான‌ பா.ஜ‌.க‌, அ.தி.மு.க….. போன்ற‌வையெல்லாம் உத்த‌ம‌ர்க‌ள் என்ப‌தான‌ பொருள‌ல்ல‌, இந்த‌ க‌ட்சிக‌ளும் ப‌ல‌ ஊழல்களை செய்த‌வையே. 1990-க‌ளுக்கு பிற‌கு இந்தியாவில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌ல் கொள்கையை இன்று தேர்த‌ல் க‌ள‌த்தில் உள்ள பெரும்பான்மையான‌(இடதுசாரிகளாக அறியப்படுபவர்களை தவிர்த்து) க‌ட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ள‌ன. இந்த தாராளமயமாக்கல் கொள்கை என்பது இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு பந்தி வைப்பதேயாகும். பார்வையில் நேரெதிராக தோன்றும் எல்லா கட்சிகளுமே(அதிமுக, திமுக, காங்கிரசு, பா.ஜ.க) இதில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. இதில் யார் விரைவாக இந்திய வளங்களை விற்கின்றார்கள் என்பதில் தான் இவர்களுக்குள்ளான போட்டியே உள்ளது. சில்லறை வ‌ர்த்த‌க‌த்தில் அன்னிய‌ நேர‌டி முத‌லீடு, மின்சார‌த்துறையை த‌னியாருக்கு தாரை வார்த்த‌ல், அணு உலைக‌ளை இந்தியா முழுவ‌தும் நிறுவுவ‌து, த‌ண்ணீர், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை வ‌ணிக‌ பொருளாக‌ மாற்றி தனியாருக்கு கையளித்தல் ……. என நீண்டு கொண்டே செல்கின்ற‌ன மக்களுக்கு எதிராக இவ‌ர்க‌ள் இந்தியாவில் இதுவ‌ரை கொண்டுவ‌ந்துள்ள‌ திட்ட‌ங்க‌ள். இந்த திட்டங்கள் எல்லாவ‌ற்றையும் குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு விற்கும் போது ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌ம் போன்ற சில அமைப்புகள் சில‌ உண்மைக‌ளை க‌ண்டுபிடித்து ம‌க்க‌ளுக்கு தெரிவிக்கின்ற‌ன. இவையே ந‌ம் முன்னால் கூற‌ப்ப‌டும் ஊழ‌ல்க‌ள். ந‌ம் க‌ண்ணுக்கு தெரியாம‌ல் திரைம‌றைவில் ஒவ்வொரு நாளும் ப‌ல‌ ஊழ‌ல்க‌ள் ந‌டைபெற்றுக் கொண்டிருக்கின்ற‌ன‌. ஊட‌க‌ங்க‌ளும் அர‌சுக்கு சார்பான‌ (முத‌லாளித்துவ‌) நிலையையே பெரும்பாலும் எடுத்து வ‌ருகின்ற‌ன‌. இந்நிலையில் இந்த‌ ஊழ‌ல்க‌ளை க‌ளைய முய‌ற்சிக்கும் எவ‌ரும் செய்ய‌ வேண்டிய‌ முத‌ற்ப‌ணி இத‌ன் ஊற்றுக்க‌ண்ணான‌ 1990க‌ளில் இந்தியாவில் திணிக்க‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து போராடுவ‌தேயாகும். அதை விடுத்து விட்டு ஊழ‌ல்க‌ளை க‌ளைய‌ முய‌ற்சிப்ப‌து வேரை விட்டுவிட்டு இலைக‌ளையும், கிளைக‌ளையும் வெட்டுவ‌தில் தான் சென்று முடியும்.

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

தரவுகள்

1) http://www.thehindu.com/news/national/blame-game-begins-as-2g-auctions-end-in-disaster/article4095259.ece

2) http://www.reuters.com/article/2012/02/02/us-india-telecoms-factbox-idUSTRE8110QI20120202

3) http://cag.gov.in/html/reports/civil/2010-11_19PA/Telecommunication%20Report.pdf

4) http://articles.economictimes.indiatimes.com/2009-05-06/news/28394897_1_s-tel-bahrain-telecommunications-telecom-licences

5)  http://news.in.msn.com/national/what-is-2g-what-is-2g-scam

6) http://www.ndtv.com/article/india/what-is-2g-spectrum-scam-66418

ஆனந்த விகடனின் ஆயிரம் மெகாவாட் பொய்…..


    மின்வெட்டுக்கு தீர்வாகுமா சூரிய ஒளி மின்சாரம் என்ற தலைப்பில் சென்ற‌ வார (24.10.2012) ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதன் இறுதி பத்தி பின்வருமாறு உள்ளது.

“சூரிய மின்சாரம் சரியான தீர்வா”

சூரிய சக்தி மின்சாரம்தான் இருப்பதிலேயே சாத்தியமானது என்று பலரும் கை காட்டினாலும், சூரிய மின்சாரத்தை மட்டுமே முழுமையான தீர்வாகக் கருதிவிட முடியாது. உதாரணமாக, இதை ஒரு தனி நபர் அமைக்க குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் பணமும், சொந்த வீடு இட வசதியும் வேண்டும். மூன்று வேளை உணவுக்கே வழியற்ற ஏழை மக்கள் இவ்வளவு பணத்துக்கும், இடத்துக்கும் எங்கே செல்வார்கள்? ஆகையால் நடுத்தர வர்க்க மக்களுக்கும், உயர் வர்க்க மக்களுக்கும் இது ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.

   இதே நிலைமை தான் அரசாங்க அளவிலும் உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சார உற்பத்தி நிலையம் சீனாவில் இருந்தது. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 220 மெகாவாட். கடந்த ஆண்டு சீனாவை விட பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் அமைத்தார் நரேந்திர மோடி. அதன் உற்பத்தி திறன் 214 மெகாவாட். ஆனால் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலைய உற்பத்தியுடன் ஒப்பிட்டால் இது சொற்பம் தான். ஆகையால், நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான மின் தட்டுபாட்டுக்கு முன் சூரிய மின்சார உற்பத்தி என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். ஆனால் கோரமான பசியில் இருக்கும் போது சோளப் பொரியை யாராலுமே அலட்சியப்படுத்த முடியாது.”////

 பொய்கள் பலவகைப்படும், முழு பொய்கள், பாதி உண்மை, பாதி பொய்கள் என்பன அதில் சில… இதில் ஆனந்தவிகடனின் மேற்கூறிய கட்டுரை இரண்டாம் வகையைச் சேர்ந்தது. கட்டுரையில் 90 விழுக்காடு வீடுகளில் பயன்படுத்தும் சூரிய மின்னுற்பத்தியை பற்றி பேசி விட்டு, இறுதி ஆறு வரிகளில் மட்டும் அரசு உற்பத்தி செய்யும் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை கூறி இறுதியாக “சூரிய மின்னுற்பத்தி யானை பசிக்கு சோளப்பொறி” என்ற உண்மைக்கு புறம்பான முடிவை எட்டியுள்ளது ஆனந்த விகடன். இந்த இதழ் வெளிவந்த சில தினங்களில் தமிழக அரசு தனது சூரியஒளி மின்திட்டத்தை வெளியிட்டது. இது யதேச்சையான ஒன்றாகவும் இருக்கக்கூடும். 

க‌லிபோர்னியாவின் மொசாவோ பாலைவ‌ன‌த்தில் உள்ள‌ சூரிய‌ ஒளி மின்னுற்ப‌த்தி நிலைய‌ம்

     ஆனந்த விகடன் கட்டுரையில் கூறியுள்ளது போல சூரிய மின்சாரம் என்பது தற்போதுள்ள மின்தேவைக்கு முன் “யானை பசிக்கு சோளப்பொறி” போன்றதா என இங்கு ஆராய்வோம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தின் முதல் கண்டுபிடிப்பு 1860களில் தொடங்கினாலும், 1970-80 காலகட்டத்தில் தான் வர்த்தக ரீதியாக சூரியஒளியின் மூலம் மின்னுற்பத்தி செய்வது பரவலாகத் தொடங்கியது. இந்த தொழில்நுட்பத்தை தொடக்கத்தில் வளரவிடாமல் தடுத்ததில் எண்ணெய் மாபியாக்களின் பங்கு அதிகமாக இருந்தது. தற்சமயம் அப்பணியை அணுசக்தி மாபியாக்கள் செய்து வருகின்றன. மேற்கூறிய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே சூரிய ஒளி மின்னுற்பத்தியை நாம் ஆராயத்தொடங்க வேண்டும். 1970-80களில் தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. இதை செர்மணியின் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்துடன் ஒப்பு நோக்கினால் மிக தெளிவாக விளங்கும்.                                                                  

1991ல் வெறும் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியிருந்த செர்மணி 2011ல் 24,800 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.(1,2) மேலும் பல சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்களை அமைத்தும் வருகின்றது.  கடந்த மே(2012) மாதத்தின் ஒரு நண்பகலில் செர்மணி 22,000 மெகாவாட் (30க்கும் மேற்பட்ட அணு உலை மின்னுற்பத்திக்கு சமம்) மின்சாரத்தை உற்பத்தி செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. (3)இது ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. இதற்கு செர்மணி சூரிய ஒளி குறைவாக கிடைக்கும் பகுதியில் இருப்பதே காரணமாகும். இதே  சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு , 365 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கும் இந்தியா போன்ற  வெப்ப மண்டல நாட்டில் இருந்தால் 22,000 மெகாவாட் மின்னுற்பத்தி தொடர்ச்சியாக கிடைக்கும். இந்திய அரசும் தார் பாலைவனத்தில் சூரிய ஒளி பூங்கா அமைக்கும் திட்டத்தை வைத்திருந்தது. 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே நாம் 3,00,000 மெகாவாட் மின்னுற்பத்தி பெற முடியும். 2020ல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் மின்சாரத்தின் அளவாக கணிக்கப்பட்டுள்ளது  4,00,000 மெகாவாட் !. ஆனால் வழமை போலவே இந்த திட்டமும் பரணில் எறியப்பட்டது.  

இந்தியாவின் சூரிய‌ ஒளி வீச்சை காட்டும் வ‌ரைப‌ட‌ம்

மேலும் ஆனந்த விகடனின் கட்டுரையில் கூறியுள்ளது போல குசராத்தில் அமைந்துள்ள சூரியஒளி மின்னுற்பத்தியின் மொத்த உற்பத்தி 214 மெகாவாட் அல்ல, அது சரங்கரா என்ற சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காவின் உற்பத்தி மட்டும் தான். குசராத்தில் செயல்படத் தொடங்கியுள்ள மொத்த சூரிய மின்னுற்பத்தியின் அளவு 689 மெகாவாட் 2013ற்குள் இது 1000 மெகாவாட்டை கடந்துவிடும்.(4,5) உலக அளவில் தற்பொழுது மிகப்பெரிய சூரிய ஒளிமின்னுற்பத்தி பூங்காக்கள் கட்டப்பட்டுவருகின்றன. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முறையே 968மெ.வா , மூன்று 550மெ.வா, 354 மெ.வா உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி பூங்காக்கள் கட்டப்பட்டு வருகின்றது(6,7,8,9,10). தற்பொழுது உலக நாடுகளில் மொத்தமாக 17,000 மெகாவாட்டிற்கும் அதிகமான அளவிற்கு சூரிய ஒளிமின்னுற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த தகவல்கள் எதுவும் ஆனந்த விகடனின் கட்டுரையில் வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால் நாளேடுகளில் வெளிவந்த இந்திய அறிவியல் தொழிநுட்பகழகத்தைச் சேர்ந்த இரு அறிவியலாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில் இந்தியாவில் உள்ள 4.1விழுக்காடு தரிசு நிலங்களை பயன்படுத்தி சூரிய ஒளி, காற்றாலை மூலம் மட்டுமே இந்தியாவின் மொத்தத்திற்குமான மின்னுற்பத்தியை செய்ய முடியும், அணு உலைகள் தேவையே இல்லை என்ற ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது!(11)  

மேலும் சூரிய ஒளி மின்னுற்பத்தியை கணக்கில் கொள்ளும் போது அதன் குறைபாடுகளாக சுட்டிக்காட்டபடும் மின்னுற்பத்திக்காக ஆகும் செலவை பற்றியும் நாம் ஆராய‌வேண்டும். நான் முன்னரே கூறியது போல சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் 1970-80 களில் தான் வர்த்தகமயமாகத் தொடங்கியதால் தொடக்கத்தில் அதற்கான உற்பத்தி செலவு என்பது அதிகமாக இருந்தது, ஆனால் மேற்குலகில் அதிகரிக்க தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தியின் மூலம் உற்பத்திக்கான செலவு குறையத் தொடங்கியது. மேலும் 2020களில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு நிலக்கரி, எண்ணெய் மூலம் மின்னுற்பத்தி செய்யும் செலவை விட குறைந்ததாக இருக்கும் என்று தரவுகளுடன் விளக்குகின்றது ஒரு கட்டுரை(12). இதன் மூலம் சூரிய ஒளி மின்னுற்பத்தி என்பது அவ்வளவு செலவு மிகுந்ததல்ல என்று நமக்குத் தெரியவருகின்றது. அதே சமயம் அணு உலை மின்னுற்பத்திக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், அணு உலை ஆயுட்காலம் (40-60 ஆண்டுகள்) முடிந்த பிறகு அதை மூடுவதற்கு ஆகும் செலவு, அணு உலைக்கழிவுகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவு, அணு உலை விபத்து ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்காகும் செலவுகள் என்ற எல்லா செலவுகளையும் சேர்த்தால், இன்றைய நிலையில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு என்பது மிகக்குறைவான ஒன்றே. கோடைக் காலம் வந்தால் வேலூரில் சிலர் சூரியவெப்பத்தினால் இறந்தனர் என்ற செய்தி என்பது இங்கு வழமையான ஒன்றாக இருக்கின்றது. சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தேவையான தரிசு நிலங்களும், தேவைக்கு அதிகமாகவே சூரிய ஒளியும் கிடைக்கின்றது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் அதிகப்படியான வாசகர்களைக் கொண்டுள்ள ஒரு வார இதழ் குழுமம் இதுபோன்ற பாதி உண்மை தகவல்களை கொண்டு உண்மைக்கு புறம்பான ஒரு கட்டுரையை வெளியிட்டு அதிகார வர்க்கத்திற்கு ஆதரவளிப்பது “ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண்” என்ற நிலை மாறி அதிகார வர்க்கங்களின் பிரச்சார பீரங்கியாகி விட்டது என்ற முற்போக்காளர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல் உள்ளது. அடுத்து வருகின்ற இதழில் தாங்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைக்கு மறுப்பு வெளியிட்டு மேற்கூறிய முற்போக்காளர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இக்கட்டுரையை அனுப்புகின்றேன். அதேசமயம் இக்கட்டுரையை பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடுகின்றேன்.

பி.கு – இக்கட்டுரை ஆனந்த விகடனின் மின்னஞ்சலிற்கும்  அனுப்பப்பட்டுள்ளது.

இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

நற்றமிழன்.ப

தரவுகள்:

1)      http://www.zeitnews.org/applied-sciences/energy/germany-added-543-megawatts-solar-power-capacity-july

2)      http://en.wikipedia.org/wiki/Solar_power_in_Germany

3)      http://www.reuters.com/article/2012/05/26/us-climate-germany-solar-idUSBRE84P0FI20120526

4)      http://articles.economictimes.indiatimes.com/2012-04-19/news/31367545_1_gujarat-solar-park-solar-project-solar-power-policy

5)      http://en.wikipedia.org/wiki/Gujarat_Solar_Park

6)      http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/02/22/AR2010022204891.html

7)      http://www.nrel.gov/docs/legosti/fy98/22589.pdf

8)      http://en.wikipedia.org/wiki/Solar_power_plants_in_the_Mojave_Desert

9)      http://www.renewableenergyworld.com/rea/news/article/2011/06/the-rise-of-concentrating-solar-thermal-power

10)   http://en.wikipedia.org/wiki/List_of_solar_thermal_power_stations

11)   http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/india-can-meet-energy-needs-sans-npower-study/article3964452.ece

12) http://www.dianuke.org/solar-energy-in-india-now-costs-38-less/

Advertisements
%d bloggers like this: